2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நிறைவடையப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியபோது இருந்த களநிலவரமும் தற்போதைய களநிலவரமும் பெரியளவில் மாறியிருக்கிறது. இந்துத்துவ சித்தாந்தம் செல்வாக்கு செலுத்துகிற பசுவளைய மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் சந்தித்துவரும் நெருக்கடிகளானது, இம்மாநிலங்களில் கடந்தமுறை பெற்ற வெற்றியைக் கூட தக்கவைக்க முடியுமா என்ற அச்சத்தை மோடி-அமித்ஷா கும்பலுக்கு உருவாக்கியுள்ளது. ஊதிப் பெருக்கப்பட்ட விஸ்வ குரு பிம்பம், அயோத்தி ராமர் கோயில் திறப்பு, சி.ஏ.ஏ. அமலாக்கம் போன்றவை தேர்தலில் ஓட்டுகளாக மாறும் என்ற பா.ஜ.க.-வின் கணக்கு மக்கள் போராட்டங்களால் பயனளிக்கவில்லை. வேலையின்மை, குறைந்தபட்ச ஆதாரவிலை, அக்னிபாத் திட்டம், இடஒதுக்கீடு கோரிக்கைள் ஆகியவற்றால் வடமாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறையும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், அதேசமயத்தில் இத்தேர்தலில் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கூடுதல் தொகுதிகளை பெறும் வகையில் பா.ஜ.க. தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது. குறிப்பாக, ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, இம்மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது. மேலும், இம்மாநிலங்களை ஆளும் கொள்கைகளற்ற பிழைப்புவாத கட்சிகள் முன்னிறுத்தும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியலானது, அம்மாநிலங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் சித்தாந்த ரீதியாக வளர்வதற்கான அடிநிலமாக மாற்றி வருகிறது.
பாசிசக் கும்பலுக்கான பாதையை செப்பனிடும் நவீன் பட்நாயக்
சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய இந்திய மாநிலங்களில் ஒன்றுதான் ஒடிசா. அம்மாநிலத்தில் இரண்டில் ஒரு பெண் இரத்தசோகையாலும், மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்படுமளவிற்கு வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதிகளின்மை, பசி, பட்டினி கோரத் தாண்டவமாடுகிறது. அதேசமயம், இரும்பு, பாக்சைட், மாங்கனீசு, கிராபைட், டோலோமைட், நிலக்கரி என பல்வேறு கனிம மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலமாகவும் ஒடிசா திகழ்கிறது.
இம்மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் (BJD) ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதியைப் போலவே, காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மூத்த குடிமக்களுக்கான மாத நிதி ரூ.1000 போன்ற 60 கவர்ச்சிவாதத் திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார், நவீன். ஒடிசாவில் பி.ஜ.த. வேட்பாளர்களுக்கு பதிவாகும் ஓட்டுகள் நவீனுக்காக போடப்படுபவையே என்று சொல்லப்படுமளவிற்கு சமூக-பொருளாதார-அரசியல் ரீதியாக பின்தங்கிய கணிசமான ஒடிசா மக்கள் நவீனை ஆதரிக்கின்றனர்.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!
ஆனால், நவீனின் இந்த கவர்ச்சிவாத அரசியலை எதிர்த்து அரசியல் செய்வதற்கோ, சித்தாந்த ரீதியாக மக்களைத் திரட்டுவதற்கோ அங்குள்ள சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகளும், அம்பேத்கரிய இயக்கங்களும் திராணியற்று உள்ளன. மேலும், கிட்டத்தட்ட 23 சதவிகிதம் பழங்குடி மக்களும் 18 சதவிகிதம் தலித் மக்களும் வாழும் ஒடிசாவில் சரியான அரசியலை முன்வைத்து அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அமைப்புகளும் இல்லை. இந்தப் பின்னணியில்தான் நவீனால் தொடர்ந்து ஐந்து முறை முதலமைச்சராக முடிந்திருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன், ஒடிசாவின் சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடைபெற்று வருகிறது. நான்கு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற-நாடாளுமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளத்திற்கும் பா.ஜ.க-விற்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் இக்கூட்டணி களத்தில் இல்லாத நிலைமைதான் இருக்கிறது.
எனவே, தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் நவீன் பட்நாயக்-இன் பிஜூ ஜனதா தளமே மீண்டும் வெற்றிபெற்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது ஒடிசாவில் கூடுதலான மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
கடந்த 2000-ஆம் ஆண்டு, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துதான், நவீன் முதன்முறையாக ஒடிசாவின் முதல்வரானார். ஒடிசாவில், 1947 போலி சுதந்திரத்திற்குப் பிறகான காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். வேலை செய்து வந்தாலும், பா.ஜ.க-பி.ஜ.த. கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.
வடகிழக்கு மாநிலங்களைப் போலவே ஒடிசாவிலும் பழங்குடி மக்களை இந்துமயப்படுத்துவதற்காக விஸ்வ இந்து பரிஷத், வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், விவேகானந்தா கேந்திரா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 2007-இல் இராமர்-சேது பாலத்தை இடிக்கக்கூடாது என்று பழங்குடிகளைத் திரட்டி ராம் தனு யாத்திரையை நடத்தியது விஸ்வ இந்து பரிஷத்.
இதன் தொடர்ச்சியாக, தனது பலத்தை பரிசோதிக்கவும் கிறித்துவ பழங்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் நடத்தப்பட்டதுதான் 2008-இல் காவி குண்டர்படையால் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்ட கந்தமால் கலவரம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த இக்கலவரத்தில் இந்துமதவெறியர்களால் 600 கிராமங்கள் சூறையாடப்பட்டன, 6000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, 300-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான கிறித்துவர்கள் கொல்லப்பட்டனர், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒடிசாவையே உறைய வைத்த இந்த கலவரத்திற்குப் பிறகான 2009 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க-வுடனான 11 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் நவீன் பட்நாயக்.
அதற்கடுத்து 2014-இல் ஒன்றியத்தில் அமைந்த மோடி ஆட்சியானது, இந்தியா முழுவதும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பலுக்கான மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தது. ஒடிசாவிலும், திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் காவிக் கும்பல் வேகமாக வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து மூன்று ஐந்தாண்டுகளுக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் ஆட்சி நடத்திவந்த நவீனிற்கு 2019-இல் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
தற்போது நடப்பதை போலவே 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருசேர நடத்தப்பட்ட ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் முந்தைய தேர்தலைவிட பா.ஜ.க. 13 இடங்கள் கூடுதலாக பெற்று 23 இடங்களை கைப்பற்றியது. அதேபோல், மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 2014 தேர்தலில் ஒற்றை தொகுதியில் வெற்றிபெற்ற பா.ஜ.க. 2019 தேர்தலில் 8 இடங்களில் வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட 17 சதவிகிதம் வரை வாக்குவிகிதம் உயர்ந்திருந்தது.
எனவே, பா.ஜ.க-வுடன் போட்டியிட வேண்டுமென்பதற்காக தனது கவர்ச்சிவாத அரசியலுடன் மிதவாத இந்துத்துவ அரசியலையும் முன்னெடுத்தார் நவீன் பட்நாயக். குறிப்பாக 2019-க்குப் பிறகான, தனது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் பல்வேறு இந்துத்துவ நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் அரசியலையும் தீவிரமாக மேற்கொண்டார்.
பட்டினி, வளர்ச்சியின்மை, வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, உடல்நலக் குறைபாடுகள், சூழலியல் நெருக்கடிகள் என பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒடிசா மக்களுக்காக சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாமல், கிராமப்புறங்களில் உள்ள கோயில்களைப் பாதுகாப்பது- புனரமைப்பது போன்றவற்றில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்தது, நவீன் அரசு.
2018-இல் அறிவிக்கப்பட்ட “நமது கிராமம், நமது மேம்பாடு” என்ற திட்டத்தையே பூசி மெழுகி “நமது ஒடிசா புதிய ஒடிசா” என்ற பெயரில் கவர்ச்சிகரமாக அறிவித்தது ஒடிசா அரசு. கிராமப்புற வழிப்பாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது, பாரம்பரிய இடங்களைப் பராமரிப்பது, கிராமப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் இந்தத் திட்டத்திற்காக மட்டும் ரூ.4000 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. பவானி பாட்னாவில் உள்ள கால்கண்டி பல்கலைக்கழகத்தின் பெயரை காலகண்டியின் இந்து தெய்வமான மணிகேஸ்வரியின் பெயரால் மாமணிகேஸ்வரி என பெயர் மாற்றியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நவீன் முன்னெடுத்த மிதவாத இந்துத்துவ நடவடிக்கையின் உச்சமே ரூ.973 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட பூரி ஜெகன்நாதர் ஆலய மறுகட்டுமானத் திட்டமும் அதன் பிரம்மாண்டத் திறப்பு விழாவுமாகும். மோடியின் 3.0 ஆட்சிக்கும் இந்துராஷ்டிரத்திற்குமான அடித்தளத்திற்கும் அயோத்தியில் ராமன் கோயில் திறப்பை பா.ஜ.க. கும்பல் அரங்கேற்றியது என்றால், பூரி ஜெகன்நாதர் ஆலயத் திறப்பு நவீனின் 6.0 ஆட்சிக்கான அடித்தளம் எனலாம். மேலும், மோடியின் இராமர் கோயில் திறப்பிற்கு 5 நாட்களுக்கு முன்பாக பூரி ஜெகன்நாதர் கோயில் திறக்கப்பட்டது.
இந்த ஜெகன்நாதர் கோயில் திறப்பை பிரம்மாண்டமாக நடத்திய நவீன் அரசு, கோவில் திறப்பில் மக்களை பங்கேற்க வைப்பதை திட்டமிட்டு மேற்கொண்டது. இதற்காக, ராம ஜென்ம பூமி இயக்கத்தின் போது, உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு செங்கல் தர வேண்டும் என்று காவி கும்பல் கையாண்ட வழிமுறையைப் போல, ஜெகன்நாதர் கோயில் திறப்பின் போது, ஒடிசாவின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெற்றிலை பாக்கையும் கைப்பிடி அளவு அரிசியையும் திரட்டியது நவீன் அரசு. மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கத்திற்கு எதிராக “ஜெய் ஜெகன்நாத்” முழக்கத்தை முன்னிறுத்தினார் நவீன். ஆனால், அந்த “பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர்தான்” “ஜெகன்நாதர் கோவிலுக்கு ஆபத்து” என ஜெகன்நாதர் கோவிலையே தனது தேர்தலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது பா.ஜ.க. கும்பல்.
மேலும், ஒடிசா தேர்தலையொட்டி, மே 10 அன்று பி.ஜ.த. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், புகழ்பெற்ற ஆளுமைகளின் பெயரில் 100 பாரம்பரிய பள்ளிகள் உருவாக்குதல், மாநிலம் முழுவதும் உள்ள பகபத் டுங்கி (Bhagabata Tungi) (கிராமப்புறங்களில் மதம், புனித நூல்கள், கலாச்சாரம் குறித்து உரையாடுவதற்கான சிறுகுடிசை) மேம்படுத்துவதற்கான நிதியை வழங்குவது, பாரம்பரிய இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான பாரம்பரிய மேம்பாட்டு நிதியாக ரூ.1000 கோடி உருவாக்குவது போன்றவற்றை வாக்குறுதிகளாக அளித்திருக்கிறது. ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள 7,200 பகபத் டுங்கிகளை சீரமைப்பதற்காக ஒவ்வொரு டுங்கிக்கும் ரூ.50,000 நிதயுதவி அளிப்பதாக நவீன் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
பா.ஜ.க-விற்கு போட்டியாக, ஒடிசாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்துவதாக நவீன் அரசு முன்னெடுத்திருக்கும் இந்நடவடிக்கைகளானது அப்பட்டமான கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியலாகும். இந்த கவர்ச்சிவாத-இந்துத்துவ அரசியலானது, ஏற்கெனவே வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்களின் ஜனநாயக-அரசியல் உணர்வை மழுங்கடித்து மதப் பிற்போக்கில் அழுத்துவதும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துமதவெறி அரசியலை நோக்கித் தள்ளுவதுமாகும். இவ்வாறு மக்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ மதவெறி அரசியலை நோக்கித் தள்ளுவதன் மூலம் ஒடிசாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ மதவெறி அரசியல் செழித்து வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது நவீன் அரசு.
நவீனின் மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளால், மக்கள் மட்டுமல்ல, பி.ஜ.த. கட்சியினரும், அதன் அணிகளுமே பா.ஜ.க-விற்கு பலியாகியிருக்கின்றனர். இதுவரை பி.ஜ.த-வைச் சார்ந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க-விற்கு தாவியிருக்கின்றனர்.
ஒடிசாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடத் தொடங்கியது முதல் சம்பல்பூர், பலாசூர் என பல இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு சம்பல்பூரில் நடத்தப்பட்ட கலவரத்திற்குப் பிறகு, ஒடிசாவின் ஜெகன்நாத பண்பாட்டில் அனுமன் பணத்திற்கான கடவுளாக வழிபடப்பட்டிருந்தாலும், தற்போது திடீரென அனுமனும், அனுமன் படம் பொறித்த கொடிகளும் பி.ஜ.த. கட்சி இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார், பி.ஜ.த-வின் மூத்த தலைவர். எனவே, பாசிச பா.ஜ.க-வின் இந்துமதவெறிக்கு மாற்றாக மிதவாத இந்துத்துவத்தை முன்னிறுத்துவதானது தனக்குத்தானே குழிப்பறித்துக் கொள்வது என்பதற்கு ஒடிசாவே சான்று.
மேலும் ஒடிசாவின் கனிம மற்றும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வேதாந்தா, ஜிண்டால், ஆதித்யா பிர்லா, அதானி என பல கார்ப்பரேட் கழுகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதிராக அம்மாநிலப் பழங்குடி மக்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மக்களை மலைகளிலிருந்து விரட்டியடிக்க போலீசையும், துணை ராணுவப் படையையும் பழங்குடி மக்கள் மீது ஏவி வருகிறது ஒடிசா அரசு. பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் போராடும் சமூக ஆர்வலர்களையும் ஊபா போன்ற கருப்பு சட்டங்களில் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. கூடுதலாக, நயவஞ்சகமாக பழங்குடி மக்களின் நில உரிமையைப் பறிப்பதற்கான சட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது ஒடிசா அரசு. தனது இருபத்தைந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பழங்குடிகள் மீது நவீன் அரசு நடத்திவரும் உள்நாட்டுப் போரை மூடிமறைப்பதற்கான திரைச்சீலையும் இந்த கவர்ச்சிவாத அரசியலேயாகும்.
கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்
ஒடிசாவைப் போலவே தெலுங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க-விற்கு போட்டியாக மிதவாத இந்துத்துவ அரசியலையே முன்வைக்கின்றன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில், ஒடிசாவைப் போலவே “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு மாற்றாக “ஜெய் ஹனுமன்” முழக்கம் முன்வைத்தது; ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி 41 நாட்கள் ஹனுமன் பாடல்கள் பாடியது; சுதர்சன, சண்டி மற்றும் ராஜ சியாமள் யாகங்கள் நடத்தியது; ரூ.1800 கோடி செலவில் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம கோவிலை புனரமைத்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவைமட்டுமின்றி, ஆந்திராவிலிருந்து தனித் தெலுங்கானா மாநிலமாகப் பிரிந்த பிறகும், சந்திரசேகர ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி என இருவரது ஆட்சியிலும், ரெட்டி, வேல்மா மற்றும் பிராமணர்கள்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தன்பக்கம் திரட்டிக் கொள்ள பா.ஜ.க. கும்பல் எத்தனிக்கிறது.
ஒடிசாவைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்திலும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், பா.ஜ.க-வைப் போலவே அவரது மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. ஆந்திராவில் நடைபெறும் கோயில் திருட்டுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலுக்கு ஜெகன் கிறித்துவர் என்பதே காரணம் என பா.ஜ.க-வின் அரசியலையே தானும் செய்கிறது தெலுங்கு தேசம் கட்சி.
ஜெகனும் தன்னுடைய கிறித்துவ மதப்பற்றை மறைத்துக் கொள்வதில்லை என்றாலும், தான் இந்து விரோதி இல்லை என்பதை நிரூபிப்பதற்காக திருப்பதிக்கு செல்வது; பசு பூஜையில் கலந்து கொள்வது; சந்திரபாபு ஆட்சிக்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கோவில்களை கட்டுவது என தனது கவர்ச்சிவாத அரசியலுடன் மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இக்கட்சிகளுக்கென தனிக் கொள்கையோ, சித்தாந்தமோ கிடையாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. அடிமை சேவகம் புரிந்த எடப்பாடி பழனிச்சாமியைப் போல, தேர்தலில் ஓட்டுவாங்குகிற கண்ணோட்டத்தில் மட்டுமே இக்கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றனவே தவிர, சித்தாந்த ரீதியாக பா.ஜ.க-வை ஆதரிக்கவே செய்கின்றன. எனவேதான், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெரும்பான்மையின்றி பா.ஜ.க. திண்டாடும் போதெல்லாம் பா.ஜ.க-விற்கு இக்கட்சிகள் தோள் கொடுத்தன. காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய விவசாயத்தையே கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மூன்று வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தும் சி.ஏ.ஏ. என கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க-வால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்கள் பெரும்பாலானவை இக்கட்சிகளின் ஒத்துழைப்பால்தான் நிறைவேற்றப்பட்டன.
எனவே, பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என்று சொல்லிக் கொண்டே, பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற இந்த பிழைப்புவாதக் கட்சிகள் எதிர்காலத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊடுருவலுக்கு களம் அமைத்துக் கொடுக்கிற இக்கட்சிகளைப் புறக்கணிப்பதும், இக்கட்சிகளின் மிதவாத இந்துத்துவ அரசியலை முறியடிப்பதும் பாசிச எதிர்ப்பில் முக்கியமானதாகும்.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube