பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் தெலுங்கானா அரசு!

பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளைத் தனது பாசிசக் கொடுங்கரங்களால் ஒடுக்கவே ஊபா எனும் கொலை ஆயுதத்தை ஏவியுள்ளது தெலுங்கானா அரசு.

0

ரிமை ஆர்வலரும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ஜி.ஹரகோபால், செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 152 பேர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் – சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் ஆகஸ்ட் 19, 2022 அன்று முலுகு மாவட்டத்தில் உள்ள தட்வாய் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூன் 15 அன்று மக்கள் ஜனநாயக இயக்கத்தின் (பி.டி.எம்) தலைவர் சந்திரமௌலி ரங்காரெட்டி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தபோது, இந்த சட்டவிரோத வழக்குப் பதிவு ‘தற்செயலாக’ தெரிய வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரமௌலி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த ரங்காரெட்டி நீதிமன்றம், சந்திரமௌலிக்கு எதிரான அனைத்து எஃப்.ஐ.ஆர்.களையும் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. சந்திரமௌலிக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்.களில், பேராசிரியர் ஹரகோபால் மற்றும் பிறரின் பெயர்கள் இருந்தன.

படிக்க : திருச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது பா.ஜ.க குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! பு.மா.இ.மு கண்டன அறிக்கை

மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் புல்லூர் பிரசாத் தலைமையில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் மாவோயிஸ்ட் கட்சியில் மக்களைச் சேர்ப்பது என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பேராசிரியர் ஹரகோபால் மீது கூறப்பட்டுள்ளது.

போலீசு ஜோடித்த கதை என்னவென்றால், ஆகஸ்ட் 19, 2022 அன்று பெரெல்லி கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் கூட்டம் நடத்துவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, போலீசுதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவோயிஸ்ட்டுகள் கிராமத்தில் இருந்து தப்பிச் சென்றபோது, மாவோயிஸ்ட்டுகள் விட்டுச்சென்ற புத்தகங்களில் பேராசிரியர் ஹரகோபால் மற்றும் பிறரின் பெயர்களைப் போலீசு கண்டுபிடித்ததாகக் கூறுகிறது. இதையடுத்து 152 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தெலுங்கானா போலீசு.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஹரகோபால், தன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த சம்பவம் ஜூன் 15 அன்று வெளிவரும் வரை தனக்குத் தெரியாது என்று கூறினார். அவர் 42-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

“இல்லை, எங்களுக்கு முன் அறிவு இல்லை. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 10 மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவுசெய்திருப்பது எங்களுக்கு தெரியாது.” என்று பேராசிரியர் ஹரகோபால் கூறினார். மேலும், போலீசுத்துறையிடம் இருந்து தனக்குச் சம்மன்களோ, நோட்டீஸ்களோ வரவில்லை என்றும் அவர் கூறினார்.

படிக்க : “இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?”: அல் ஜசீரா ஆவணப்படத்திற்குத் தடை!

“எப்.ஐ.ஆர்.களில் என் பெயர் இருப்பது பிரச்சினை இல்லை. மேலும் 151 பேரின் பெயர்கள் எஃப்.ஐ.ஆரில் இடம் பெற்றிருப்பது வேதனையான விஷயம். அவர்கள் அனைவரும் சமூக அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் அறிவேன்” என்று பேராசிரியர் ஹரகோபால் கூறினார். தன் மீதான வழக்கு ‘தற்செயலாக’ தெரிய வந்தது என்றார். அவரது பெயர் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடையது குறித்து பேராசிரியர் ஹரகோபால், “போலீசுத்துறை கற்பனை கதைகளை எழுதுவதில் பெயர் பெற்றது. சிறந்த புனைகதை எழுத்தாளர்கள் என்பதால் போலீசுத்துறைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கலாம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.” என்று கூறினார்.

பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளைத் தனது பாசிசக் கொடுங்கரங்களால் ஒடுக்கவே ஊபா எனும் கொலை ஆயுதத்தை ஏவியுள்ளது தெலுங்கானா அரசு. குறிப்பாக, இவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதே ஓராண்டுகளாகத் தெரியாமல் மறைந்துவைத்து அதிரடியாகக் கைது செய்து அவர்களையும், போராடும் பிற ஜனநாயக சக்திகளையும் அச்சுறுத்த எத்தனித்திருக்கிறது போலீசு. இந்தியா முழுவதும் உள்ள முற்போக்காளர்கள், புரட்சியாளர்கள், ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரளவேண்டிய தருணமிது.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க