“இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?”: அல் ஜசீரா ஆவணப்படத்திற்குத் தடை!

‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை.

0

ஜூன் 14 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் அல் ஜசீராவின் “இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?” (India… Who lit the fuse?) என்ற செய்தி ஆவணப்படத்தை ஒளிபரப்பவோ வெளியிடவோ தடை விதித்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவில் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் வன்முறை தொடர்பான செய்தி ஆவணப்படமாகும். இது ஏற்கெனவே அரபு மொழியில் ஜூன்‌ 3 அன்று அல் ஜசீரா அரபி (@AJArabic) டிவிட்டர் பக்கத்தில்  வெளியாகிவிட்டது.

‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து இத்துறை தொடர்பான அதிகாரிகள் அங்கீகரிக்கும் வரை ஒளிபரப்போ வெளியீடோ செய்யப்படாமல் இருப்பதை மத்திய அரசும் அதன் கீழ் செயல்படும் உரிய அதிகாரிகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் சமூக நல்லிணக்கத்தையும் தேசப் பாதுகாப்பையும் இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைத் தொடுத்துள்ள ‘சமூக ஆர்வலர்’ என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சுதிர் குமார், இந்த ஆவணப்படத்தை நீதிமன்றம் தடை செய்யும் பொருட்டு பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளார். அதில் முதன்மையானதாக அவர் கூறியதாவது: “இந்த ஆவணப்படம் பல்வேறு மதப் பிரிவுகளிடையே வெறுப்பை விதைத்து இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அழிவை ஏற்படுத்தக்கூடும். சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி பொது ஒழுங்கு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும்.”

“இந்தியாவின் சிறுபான்மை முஸ்லீம்கள் அச்ச உணர்வுடன் வாழ்வதாகவும் பொது மக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் விதத்திலும் ஒரு சீர்குலைவு நோக்கம் கொண்ட கதையாடலை முன்வைக்கிறது. இந்திய அரசை சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானதாக எதிர்மறையாகச் சித்தரிக்கிறது” என்று சுதிர் குமார் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் தான் நீதிமன்றம் இந்த ஆவணப்படத்திற்குத் தடை விதித்துள்ளது. “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமையாக பேச்சுரிமையை அங்கீகரிக்கிறது. ஒளிபரப்பும் உரிமையும் பேச்சுரிமை – கருத்துரிமையில் அடங்கும். ஆனால் சரத்து 19(2)-இல் அதற்கான எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அல் ஜசீராவுக்கு 48 மணி நேரத்திற்குள் ‌நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 6 அன்று விசாரிப்பதாகக் கூறியுள்ளது.


படிக்க: முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை. ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்த பி.பி.சி-இன் செய்தி ஆவணப்படம் கடந்த ஜனவரியில் வெளியான போது அவசரநிலை காலகட்டத்தில் பயன்படுத்தும் ஐ.டி சட்ட விதிகளைப் பயன்படுத்தி பாசிச மோடி அரசு அதைத் தடை செய்தது. அந்த ஆவணப்படம் தொலைக்காட்சியில் திரையிடப்படவில்லை; அதேபோல அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அது முடக்கப்பட்டது.

இந்தியாவில் பாசிச தாக்குதல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் அவல நிலையைப் பற்றி பேசுவதென்பது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும்; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க‌ பாசிஸ்டுகள் குறித்துப் பேசுவது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும். ஆனால், தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற ‌ இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படங்கள் வெளியாவதென்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதாகும். இதுதான் ‘இந்து ராஷ்டிர நீதி’.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க