எல்கார் பரிஷத் வழக்கு விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிகர கலைக் குழுவினைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளது. மேலும் விசாரணைக்கு நேரில் மும்பைக்கு வந்து ஆஜராகக் கூறி இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என மூவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து செயல்பட்டு வரும் கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிகர கலைக்குழுவைச் சேர்ந்த கோர்கே மற்றும் கைச்சோர் ஆகிய இருவரை நேற்று (07-09-2020) கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. ஒரு வாரத்திற்கு முன்னரே விசாரணைக்காக அவர்களை அழைத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணையின் போது ”தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த தவறுக்காக மன்னிக்குமாறும்” கோரிக்கை எழுதிக் கொடுக்குமாறும் வலியுறுத்தியதாக அவர்கள் இருவரும் கடந்த செப்டெம்பர் 5-ம் தேதியன்று ஒரு காணொளி பதிவு வெளியிட்டுள்ளனர்.
Kabir Kala Manch activists Sagar Gorkhe & Ramesh Gaichor have alleged that they're being forced by the NIA to give confessional statements claiming they are a part of Maoist organization. The two refused, and were arrested today.
(This video was recorded on Sep 5.)@thewire_in pic.twitter.com/1YytI1CGXs— Sukanya Shantha (@sukanyashantha) September 7, 2020
என்.ஐ.ஏ.-வின் இந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்றும், மன்னிப்புக் கேட்க தாம் சாவர்க்கரின் வாரிசுகள் இல்லை – அம்பேத்கரின் பிள்ளைகள் என்றும் அதில் கூறியுள்ளனர். போலி ஒப்புதல் கொடுக்க மறுத்ததன் காரணமாக, தாம் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதே போல நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் பல்கலைக்கழகத்தில் (EFLU) பணிபுரியும் பேராசிரியர் சத்திய நாராயணா, கொல்கத்தாவில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவிப் பேராசிரியரான பார்த்தசாரதி ரே மற்றும் ‘தி இந்து’ பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே.வி.குர்மநாத் ஆகியோருக்கும் எல்கார் பரிஷத் மாநாடு தொடர்பான விசாரணைக்காக மும்பைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது என்.ஐ.ஏ.
தற்போது விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளவர்களில் சத்யநாராயணாவும், குர்மநாத்தும் எல்கார் பரிஷத் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள, செயற்பாட்டாளர் வரவர ராவின் மருமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
ஜனவரி 2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கும் எல்கர் பரிஷத் மாநாட்டுக்கும் சம்பந்தமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 2018-ல் வரவர ராவின் மருமகன்களான சத்யநாராயணா மற்றும் குர்மாநாத் ஆகியோரின் வீடுகளில் அப்போது வழக்கை நடத்தி வந்த புனே போலீசு தேடுதல் நடத்தியது. அந்த தேடுதலில் அவரது வீட்டை கபளீகரம் செய்தது மட்டுமின்றி அவரது ஆய்வு மற்றும் வெளியிடக் காத்திருக்கும் புதிய நூல் உள்ளிட்டவற்றின் தரவுகளைக் கொண்ட கணிணியைக் கைப்பற்றிச் சென்றது போலீசு. தேடுதலுக்கு வந்த போலீசு, சத்யநாராயணாவை தலித் என்று அடையாளப்படுத்தி பேசியதோடு, அவரது துணைவி பாவனாவிடம் “நீங்கள் ஒரு பிராமணர், உங்கள் கணவர் ஒரு தலித், நீங்கள் ஏன் பாரம்பரியத்தை கடைபிடிப்பதில்லை? திருமணமான பெண்கள் அணியும் பாரம்பரிய அணிகலன்களை ஏன் அணிவதில்லை?” என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறது. குர்மநாத்தின் வீட்டிலும் இத்தையை தேடுதலும் கைப்பற்றல்களும் அரங்கேறின.

கொரோனா சூழலில் மும்பைக்கு இவர்களை வரவழைத்துள்ளது என்.ஐ.ஏ. இது ஒரு துன்புறுத்தல் வழிமுறை என்கிறார் பார்த்தசாரதி ரே. இவர் குடிமையியல் உரிமைச் செயற்பாட்டாளர். மேலும் அவர் இடதுசாரி பத்திரிகையான “சன்ஹதி”-யின் நிறுவனர்களில் ஒருவர். உயிரி தொழில்நுட்பப் பேராசிரியரான ரே, கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கும் அறிவியலாளர் குழுமத்தைச் சேர்ந்தவர். மேற்குவங்கத்திலிருக்கும் நாடியா மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வசதிகள் மேற்கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தகது.
பார்த்தசாரதிக்கு ஏற்கெனவே தொலைபேசி மூலம் விசாரணைக்கு என்.ஐ.ஏ விடுத்த அழைப்பை முறையான சம்மன் அனுப்பாத காரணத்தால் நிராகரித்திருந்த சூழலில் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டளர்களின் கணிணியில் ‘மால்வேர்’ எனப்படும் ஒற்று பார்க்கும் செயலிகள் மூலம் வேவு பார்க்கப்படுவதை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு வெளிக் கொண்டுவந்தது. அப்படி வேவு பார்க்கப்பட்ட செயற்பாட்டாளர்களில் பார்த்தசாரதி ரே-வும் ஒருவர்.
“எல்கார் பரிஷத் வழக்கு குறித்து பத்திரிகையில் வாசிக்கும் முன்பு வரை அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை துன்புறுத்துவதற்காகவே போடப்பட்ட வழக்கு இது” என்கிறார் பார்த்தசாரதி ரே
சாட்சிகளாக விசாரிப்பதற்காகவே அழைப்பதாக மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தாலும், அப்படி சாட்சிகளாக விசாரிக்க அழைக்கப்பட்ட டெல்லி பல்கலைப் பேராசிரியர் ஹனிபாபு பின்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்கார் பரிஷத் வழக்கில் இதுவரை 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 9 பேர் புனே போலீசாலும், இந்த ஆண்டு என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் மேலும் 5 பேர் என்.ஐ.ஏ.-வாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்சுற்று கைதுகள் கடந்த ஜூலை 2018-ம் ஆண்டில் துவங்கியது. அந்த சமயத்தில் மும்பையைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, நாக்பூரைச் சேர்ந்த ஊபா சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான சுரேந்திரா காட்லிங், இடப்பெயர்வு பிரச்சினைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான மஹேஷ் ரவுத், நாக்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோமா சென், சிறைக் கைதிகள் உரிமைச் செயற்பாட்டாளரான ரோனா வில்சன் ஆகியோரைக் கைது செய்தது புனே போலீசு.
அடுத்தகட்டமாக ஆகஸ்ட் 2018-ல் வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், புரட்சிகர எழுத்தாளர் வரவர ராவ் மற்றும் வெர்னான் கன்சால்வேஸ் ஆகியோரை புனே போலீசு கைது செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கல்வியாளர் ஆனந்த் தெல்டும்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோரையும் ஜூலை மாதத்தில் ஹானிபாபுவையும் கைது செய்தது என்.ஐ.ஏ. அதன் பின்னர் நேற்று கபீர் கலா மஞ்சை சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.
இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த புனே போலீசு, கைது செய்யபட்டவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களது உதவியைப் பெற்றுதான் எல்கார் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகவும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது.
2019 பிப்ரவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த புனே போலீசு அதில் மாவோயிஸ்ட் தலைவர் கணபதிதான் எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றியவர் எனக் குற்றம்சாட்டியிருந்தது. அடுத்ததாக தாக்கல் செய்யவிருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் வரவர ராவ் மற்றும் கவுதம் நவல்காவையும் இணைத்து தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டை வைத்துக் கொண்டு அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளையும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தி முடக்கப் பார்க்கிறது பாஜக-வின் அடியாளான என்.ஐ.ஏ.. மேலும் அறிவுத்துறையைச் சேர்ந்தவர்களை மிரட்டும் விதமாக விசாரணைக்கு அழைப்பதையும், தமக்கு அடிபணியாத அறிவுத் துறையினரை மாவோயிஸ்ட் என முத்திரை குத்தி சிறையிலடைப்பதையும் நடைமுறைத் தந்திரமாக கையாண்டு வருகிறது என்.ஐ.ஏ. !
நந்தன்
செய்தி ஆதாரம் :
Waht is elkar parishith conference? What is the basic idea of this conference? Please tell me why the government arrest a religious in secular case?