பீமா கொரேகான் வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறி டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு வீட்டில் ஆறு மணி நேர சோதனையை நடத்தியுள்ளது புனே போலீசு.
2017-ம் ஆண்டு நடந்த எல்கர் பரிசத் நிகழ்வில் வன்முறையை தூண்டுவிதமாக பேசியதாகவும், அங்கு பேசியவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறி மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பத்து பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி பல்கலையில் ஆங்கில துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹனி பாபு வீட்டில் செவ்வாய்கிழமை (10-09-2019) அன்று காலை 6 மணி முதல் சோதனை செய்துள்ளது புனே போலீசு.
போலீசாரின் சோதனை குறித்து விளக்கமளித்துள்ள ஹனி பாபு, “15-லிருந்து 20 பேர் காலை 6.30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். உ.பி.போலீசு சீருடையிலும் புனே போலீசு சாதாரண உடையிலும் வந்திருந்தார்கள்.
சோதனை செய்வதற்கு அவர்களுக்கு ஆணை எதுவும் தேவையில்லை என ஒரு அதிகாரி சொன்னார். ஆசிரியராக உள்ள என்னுடைய மனைவி, பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. எலக்ட்ரானிக் பொருட்களை உபயோகிக்கவும் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. முக்கியமான இசை பயிற்சிக்கு என்னுடைய மகள் செல்ல வேண்டும் என வலியுறுத்தி கேட்டதால், அவரை மட்டும் வெளியே விட்டார்கள். ஆனால், பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
“அவர்கள் முழு வீட்டையும் சோதனையிட்டார்கள். சமீபத்தில் மகளுடன் ஒரு இசை நிகழ்ச்சிக்கு மும்பைக்கு விமானம் மூலம் சென்றிருந்தேன். அதன் போர்டிங் பாஸை கேட்டனர். ஏதேனும் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறீர்களா எனக் கேட்டனர். வேறு எதையும் அவர்கள் கேட்கவில்லை. எதைத் தேடுகிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.” என நடந்த சோதனைகள் குறித்து தெரிவித்துள்ள அவர், தன் வீட்டில் இருந்த இரண்டு லேப்டாப்புகள், தன்னுடைய மொபைல் போன், பென் டிரைவ்கள், சாய்பாபா ஆதரவு கமிட்டியின் இரண்டு சிறு வெளியீடுகள், நக்ஸலைட் தலைவர் நவீன் பாபு எழுதிய “From Varna to Jati – Political Economy of Caste in Indian Social Formation” என்ற எம்ஃபில் ஆய்வுக்கட்டுரை, என். வேணுகோபால் எழுதிய “Understanding Maoists” ஆகிய நூலையும் புனே போலீசு கைப்பற்றிச் சென்றதாகக் கூறுகிறார்.
படிக்க:
♦ பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
♦ பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?
அதோடு, தன்னுடைய இமெயில் மற்றும் சமூக ஊடக கணக்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் புனே போலீசு எடுத்துக் கொண்டதாக பாபு தெரிவித்துள்ளார்.
“இது ஆதாரங்களை ஜோடிப்பதற்கும் மிரட்டுவதற்கும் எதிர்க்குரல்களை நசுக்குவதற்கும் மேற்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சி” என அவர் கூறியுள்ளார்.
சோதனைகளையெல்லாம் முடித்துக்கொண்ட பிறகு கைப்பற்றுவதற்கான ஆணையை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பேராசிரியரிடம் வழங்கியுள்ளது புனே போலீசு.
This is my statement regarding the police raid at my apartment this morning. @jennyrowena pic.twitter.com/aQBKoI38rp
— Hany Babu MT (@hany_babu) September 10, 2019
மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் கூறி சிறையில் உள்ள பேராசிரியர் சாய்பாபா ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஹனி பாபு உள்ளார். பேரா. சாய்பாபாவின் வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் இதே வழக்கில் சிறையில் உள்ளார். மேலும் சாய்பாபா ஆதரவாளர் குழுவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ரோனா வில்சனும் சிறையில் உள்ளார்.
ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாய்பாபா ஆதரவு குழுவின் எந்த செயல்பாட்டிலும் தான் கலந்துகொள்ளவில்லை என ஹனி பாபு கூறுகிறார். எல்கர் பரிசத் நிகழ்வில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம் ஹைதராபாத் பல்கலை பேராசிரியர் கே. சத்தியநாராயணா மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சாமி ஆகியோரின் வீடுகளிலும் இதேபோன்று புனே போலீசு சோதனைகளில் ஈடுபட்டு, எலக்ட்ரானிக் பொருட்களையும் புத்தகங்களையும் கைப்பற்றியது.
பேரா. ஹனி பாபுவின் வீட்டில் நடந்த சோதனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது டெல்லி பல்கலை ஆசிரியர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர் ரஜீப் ராய், கல்வி சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் பாபு தொடர்ந்து செயல்பட்டவர் என தெரிவித்துள்ளார்.
படிக்க:
♦ செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு !
♦ டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34
“அவர் மிகச்சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, பல்கலைகழகம் சட்டப்படி, ஜனநாயகப்படி இயங்க வேண்டும் என்பதிலும் பல்கலைக்கழக கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் சமூக நீதியிலும் ஆர்வம் கொண்டிருந்தவர், செயல்பட்டவர்” என தெரிவித்துள்ள அவர்,
“சோதனைக்கான ஆணைகள் எதுவும் இல்லாமல் நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகள் ஜனநாயகத்தின் சாரத்துக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானவை. ஆதாரங்களை அவர்களே உருவாக்கவும் வழிவகுக்கக்கூடியவை.
துன்புறுத்துவதற்கும் மாற்றுக்குரலை அச்சுறுத்துவதற்கும் அரசு அமைப்புகளை தன்னிச்சையாகப் பயன்படுத்துவது மன்னிக்க முடியாதது ஆகும்” என்கிறார் அவர்.
பாசிச மோடி அரசு, மக்களின் மீது தாம் நடத்தும் ஒவ்வொரு மிகப்பெரிய பொருளாதாரத் தாக்குதலையும் எதிர்த்துப் போராடும் முற்போக்காளர்களை பல்வேறு பொய் வழக்குகளில், நீதித்துறையின் துணை கொண்டு முடக்கி வருகிறது. இவை இனி வரும் நாட்களில் நம் மீது தொடுக்கப்படவிருக்கும் கடும் தாக்குதல்களுக்கான முன் அறிவிப்புகளே. அந்த தாக்குதல்கள் நடத்தப்படும்போது, அதற்கு எதிராக கருத்துத் தளத்திலும் களத்திலும் குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம் ?
அனிதா
நன்றி: டெலிகிராப் இந்தியா.