பீமா கோரேகான் வழக்கில் கடந்த ஜனவரி 1, 2018 அன்று புனேயில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து மராட்டிய போலீசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் பெருமளவிலான முரண்பாடுகள் உள்ளன.

வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் உள்ளிட்ட 4 பிரமுகர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற கைது நடவடிக்கையை, ”போலீசின் அதிகார துஷ்பிரயோகம்” என்று குறிபிட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு புனே நகரப் போலீசு, கடந்த செப்டம்பர் 3 அன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைபெற்ற எல்கார் பரிஷத் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்தான் மறுநாள் பீமா கோரேகானில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்று குறிப்பிட்டது.

இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட எல்கார் பரிஷத் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களோடு அம்பேத்கரிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்தது அந்த மாநாடு. போலீசோ, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினரும் சேர்ந்துதான் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர் என தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், வன்முறை சம்பவங்களுக்கு முற்றிலும் வேறானதொரு காரணத்தைக் கூறியுள்ளது மராட்டிய போலீசு. புனே புறநகர் போலீசு கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று தாக்கல் செய்த மனுவில் ”சமஸ்தா ஹிந்து அகாடி” என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடேதான் ஜனவரி 1 நெருங்குவதற்கு முன்னாலிருந்தே வன்முறையைத் தூண்டும் விதமாக நோட்டீசுகள் கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட, ”சமஸ்தா ஹிந்து அகாடி” என்ற அமைப்பின் தலைவன் மிலிந்த் ஏக்போடே.

புனே நகரின் துணை மேயர் அளித்துள்ள அறிக்கையும், பீமா கோரேகான் மற்றும் அதனருகில் உள்ள ஒரு கிராமம் குறித்து அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ள வரலாறு தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், விசாரணையின் போது, மிலிந்த் ஏக்போடே, இக் குற்றச் சதியில் உத்வேகமாகப் பங்கேற்றிருக்கிறார் என்பது அம்பலமாகி இருக்கிறது… ————- …மேலே கூறப்பட்ட குற்றங்களைச் செய்ய ஏக்போடே திட்டமிடுகையில்….. ——– …..சமூக ஒற்றுமை மற்றும் சட்ட ஒழுங்கை அபாய நிலைக்குத் தள்ளியுள்ளார். இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொது மற்றும் தனியார் உடைமைகள் சேதமடைந்திருக்கின்றன.” என்று போலீசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவரது பிணை மனுவை எதிர்த்ததோடு, விசாரிப்பதற்காக அவரை போலீசு காவலில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், இந்த வன்முறை, குற்றங்களோடு வேறெந்த இந்து தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது போலீசு.

ஏக்போடே கடந்த மார்ச் 14 அன்று கைது செய்யப்பட்டார். மற்றும் அவரது முன்பிணை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். ஆனால் புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 4 அன்று பிணை பெற்று வெளியே வந்துவிட்டார் ஏக்போடே.

உச்சநீதிமன்றத்தில் முற்றிலும் முரணான இரண்டு மனுக்களை மராட்டிய போலீசு எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் என்பது புரியவில்லை.

மேலும், கடந்த ஜூலை மாதம் நீதி விசாரணைக் குழுவின் முன்னால் இந்த இரண்டு முரணான மனுக்களுக்கும் முரணான வேறொரு காரணத்தைக் கூறியுள்ளது மராட்டிய போலீசு. பீமா கோரேகானில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த சண்டைகளின் விளைவாகவே நிகழ்ந்தது எனக் கூறியுள்ளது. போலீசின் சார்பாக வாதிட்ட ஷிஷிர் ஹிரே, எந்த ஒரு அமைப்பையோ, எந்த ஒரு குழுவையோ வன்முறைக்கான காரணகர்த்தாவாக குற்றம்சாட்டும் நிலையில் தாங்கள் இல்லை என்றே கூறியிருக்கிறார்.

நீதி விசாரணைக்காக, கடந்த பிப்ரவரி மாதம் அரசால் நியமிக்கப்பட்ட இரு நபர் கமிசன், மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சாட்சியங்கள் மனுத்தாக்கல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மராட்டிய போலீசு சுமார் 10,000 பக்கங்கள் உள்ள 110 மனுக்களை தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட 490-க்கும் அதிகமான மனுக்களில் 10-க்கும் குறைவான மனுக்கள் மட்டுமே புனே அல்லது மும்பையைத் தவிர பிற இடங்களிலிருந்து வந்திருந்தன. மற்றவையனைத்தும் புனே மற்றும் மும்பையிலிருந்து வந்தவையே. இந்த விசாரணைக் கமிசன் தமது விசாரணையின் முதல் சுற்றை கடந்த வாரம் மும்பையில் தொடங்கியுள்ளது. ஸ்க்ரோல் இணையதளம் இந்த விசாரணையில் மொத்தம் மூன்று நாட்கள் பார்வையாளராகக் கலந்து கொண்டது.

முதல் நாளில் 44 வயதான மனிஷா கோப்கர் விசாரணையில் கலந்து கொண்டார். அவரும் அவருடன் சேர்ந்து ஒரு குழுவினரும் தானேவிலிருந்து ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பீமா கோரேகானிற்கு வந்ததை விவரித்தார். மனிஷா கோப்காரும் அவருடன் வந்தவர்களும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து நினைவிடத்திற்கு நடந்து செல்கையில், அங்கு வன்முறை நடப்பதாக சிலர் தெரிவித்ததால் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் ஒதுங்கியிருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து பலரும் தங்கள் மீது கற்களை எரிந்தனர் என்றும், தனது மகளைக் காப்பாற்ற எத்தனித்த தமக்கும் காயம் ஏற்பட்டதையும் கோப்கார் குறிப்பிட்டுள்ளார். தமது வாகனத்திற்கு வந்து சேர்ந்ததும், தங்களை அம்பேத்கரியர்களாக அடையாளப்படுத்தும் நீலக் கொடியை தமது வாகனங்களிலிருந்து உடனடியாக நீக்கியதாகவும், அப்போது அங்குவந்த மஞ்சள் சட்டை அணிந்த நபர்கள் தங்களது வாகனத்தின் மீது கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் நாளில் அவரை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷிஷிர் ஹிரே கேள்வி கேட்கையில், தாம் ஜூலை மாதம் பேசியதை அப்படியே மாற்றிப் பேசினார். “இந்த வன்முறையை நிகழ்த்த காவி அல்லது நீலத்தைத் தவிர வேறு ஒரு மூன்றாவது சித்தாந்தம் இருக்க வாய்ப்பிருக்கிறதா?” என கோப்காரிடம் இருமுறை கேள்வி கேட்டார். இங்கு காவி என ஹிந்துத்துவாவை அவர் குறிப்பிடுகிறார்.

கோப்கார் பதிலளிக்கையில், இவையிரண்டையும் தவிர, அன்று வன்முறையில் ஈடுபடுவதற்கு மூன்றாம் சித்தாந்தத்திற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் தான் என்ன பார்த்தேனோ அதுமட்டுமே தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

இவ்விசாரணையின் போது ஹிரே, ”மூன்றாம் சித்தாந்தமானது பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் அராஜகத்தை உருவாக்கக்கூடிய சித்தாந்தமாகும்” என்று கூறினார். ஆனால் அதனை மேலதிகமாக விளக்கவில்லை.

அவர் குறிப்பாக என்ன சொல்கிறார் என்பதையும், அவரது நிலைப்பாட்டின் மாற்றத்திற்கான காரணம் குறித்த விளக்கத்தையும் ஸ்க்ரோல் இணையதளம் கேட்கையில் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஹிரே.

”கோப்காரின் மனுவிலேயே நீலம் மற்றும் காவிக் கொடிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மூணாவது சித்தாந்தம் எது என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். ஏதேனும் மூன்றாம் சித்தாந்தம் ஒன்று இருக்கிறதா என அனைத்து வகையான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். அனைத்து காரணங்களையும் விசாரணைக் கமிசனின் முன்னால் கொண்டுவந்து சேர்ப்பது எங்களது கடமை” என்று ஹிரே கூறினார்.

மேலும், “கமிசனின் முன்னால் வந்த சாட்சிகள் பீமா கோரேகான் வன்முறைக்கான காரணம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த புனே புறநகர் போலீசின் விசாரணைக்குப் பொருத்தமான சாட்சிகளாவர். புனே நகர போலீசின் விசாரணை முற்றிலும் வேறானது. விசாரணைக் கமிசனுக்கு முன்னால் புனே புறநகர் போலீசு தமது அறிக்கையை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்கும். புனே நகர போலீசு தமது அறிக்கையை எப்போது வழங்குவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கிறார் ஹிரே.

இன்னும் சொல்லப்போனால், மோடியின் குருநாதர் சாம்பாஜி பீடே மீதான வழக்கை, திசை திருப்புவதோடு, மோடியின் மீதான ரஃபேல் ஊழல், சனாதன் சன்ஸ்தா கொலைக்கும்பல் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலிருஎது காவிக் கும்பலை மீட்க, ரெட்டை நாக்கு என்ன ரெண்டாயிரம் நாக்குகளாகவும் பேசத் தயங்காது காவிமயமாகிப் போன போலீசு

நன்றி: scroll
தமிழாக்கம்: – வினவு செய்திப்பிரிவு.

மூலக் கட்டுரை: Many voices of Maharashtra police: Contradictory claims on Bhima Koregaon violence in SC and outside

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க