“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!

ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.

0
பீமாகோரேகான் வெற்றித் தூண்.

“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை”
– வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மூத்த போலீசு அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்!

புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் ஜனவரி 1, 2018 அன்று வெடித்த வன்முறைக்கும், எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி நீதித்துறை ஆணையத்திடம் கூறியதாக தி வயர் டிசம்பர் 27 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் 16 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கைதுசெய்யப்பட்டு தற்போது வரை பெரும்பாலானோர் சிறையில் உள்ளனர்.

பீமா கோரோகான் போரின் 200-வது ஆண்டு நினைவுக்கான நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை இந்த 16 ஆர்வலர்கள் தான் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று போலீசுத்துறை குற்றம் சாட்டியது. அந்த நிகழ்வில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், அந்த காரணமாகவே நிகழ்ச்சிக்கு அடுத்தநாள் மிகப்பெரிய வன்முறை வெடித்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியது.

படிக்க : பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான ஒன்பது வன்கொடுமை வழக்குகளை விசாரித்து வந்த துணைப் பிரிவு போலீசுத்துறை அதிகாரி கணேஷ் மோர், அவர் அதிகார எல்லைக்குட்பட்ட ஒன்பது வழக்குகளையும் விசாரித்ததில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும், வன்முறைக்கும் எந்த தொடர்புமில்லை என்பதைக் காட்டுகிறது என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.என்.படேல் தலைமையிலான இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்திடம் கூறினார்.

சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மோரே ஜனவரி 1, 2018 அன்று அப்பகுதியில் ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான மூத்த அதிகாரியாக இருந்ததாக Rediff தெரிவித்துள்ளது. “பீமா கோரேகான் கிராமத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலையில் இருக்கும் வடு புத்ருக் என்ற கிராமத்தில் தான் பணியில் இருந்தபோது, காவிக் கொடிகளுடன் சுமார் 1,200 பேர் கொண்ட கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலைத்ததாக அவர் கமிஷனிடம் கூறியுள்ளார். இதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த சம்பவத்திற்கு முன்பு வெறுப்பு பேச்சு மூலம் இந்துமதவெறி அமைப்பின் தலைவர்களான மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் வன்முறையை தூண்டியதாக தலித் குழுக்களும் அரசியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டினார்கள்.

கடந்த 31 டிசம்பர், 2017 அன்று புனேவில் உள்ள ஷானிவார் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடத்தியதன் விளைவாக, அடுத்தநாள் ஜனவரி 1, 2018 அன்று கலவரம் நடந்ததற்கு எந்த ஆதாரமும், தகவலும் எனக்கு கிடைக்கவில்லை” என்று வன்முறையில் வழக்கு விசாரணையில் ஒருவரான வழக்கறிஞர் ராகுல் மகரே தெரிவித்தார்.

டிசம்பர் 27, 2022 அன்று, ஆணையத்திடம் இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு ஆதாரங்களை நசுக்குவதாக மகரே குற்றம் சாட்டினார். “வன்முறையில் மிலிந்த் எக்போட் மற்றும் மனோகர் குல்கர்னி என்கிற சாம்பாஜி பிடே ஆகியோரின் நேரடிப் பங்கை தெளிவாகக் காட்டும் ஆதாரங்களை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். அவர்களின் அமைப்பு பீமா கோரேகான் பகுதியில் பணியாற்றதை பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர்.கள் சுட்டிக்காட்டுகின்றன” என்றார்.

படிக்க : பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !

2018 ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களில் ஸ்டான் சுவாமி அதிகார வர்க்கத்தினரின் ஒடுக்குமுறையின் காரணமாக சிறைத் தண்டனையில் இருக்கும்போதே மரணமடைந்தார். அவரது கணினியிலும் ஸ்டான் சுவாமி, ரோனா வில்சன், வரவர ராவ், ஹனி பாபு ஆகியோரின் கணினிகளிலும் பொய்க்குற்றம் சுமத்துவதற்காக வேண்டுமென்றே ஹேக்கர் மூலம் தவறான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கும் அதை தொடர்ந்து நடந்ததாக கூறப்படும் வன்முறை சம்மபவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடைக்கவில்லை என்று அதிகாரவர்க்கத்தில் இருக்கும் ஒரு போலீசு அதிகாரியே கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட காவிக் கும்பலும், அரசு அதிகார வர்க்கமும் பீமா கோரேகான் நிகழ்ச்சியை முகாந்திரமாக வைத்து ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.

கல்பனா
செய்தி ஆதாரம் : The wire, Rediff, Scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க