ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் ஹனி பாபு ஆகியோருக்கு சொந்தமான மின்னனு சாதனங்களை புனே போலீசுத்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூறியுள்ளது. இச்செய்தியை அமெரிக்காவில் உள்ள வயர்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.
வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோர் 2018-ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் சாதி வன்முறையைத் தூண்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பீமா கோரேகான் வழக்கில் வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் உட்பட 16 பேரை கைது செய்தது புனே போலீசு.
கடந்த பிப்ரவரி 2021-ல், அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் என்ற நிறுவனம், வில்சனின் மடிக்கணினிக்குள் ஊடுருவி malware-ஐ (ஒரு கணினி அமைப்பை சீர்குலைக்கவும், சேதப்படுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறவும் வடிவமைக்கப்பட்ட மென்பொருள்) பயன்படுத்தியதாகவும், அதில் குறைந்தது 10 குற்றஞ்சாட்டக்கூடிய கடிதங்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறியது.
படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு மாவோயிஸ்ட் போராளிக்கு எழுதப்பட்ட கடிதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சொல்லி ஓர் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவை இதில் அடங்கும்.
ஹேக்கிங்கை நடத்திய குழுக்களில் ஒன்று, வில்சனின் சாதனத்தில் ஆவணங்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. இப்போது, பீமா கோரேகான் வழக்கில் நெருக்கமாக தொடர்புடைய புனே போலீசு அதிகாரி ஒருவர் ஹேக்கிங்குடன் தொடர்புடையவர் என்று வயர்டு தெரிவித்துள்ளது.
