சைபர் கிரைம் எனப்படும் இணையக் குற்றங்கள் 21-ஆம் நூற்றாண்டின் புதிய இயல்புநிலையாகியுள்ளன. யாரையும் எங்கும் எந்த நேரத்திலும் இடம், பொருள், ஏவலின்றி ஏதேனும் ஒரு கும்பல் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. இணையதள வளர்ச்சி, நமது அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் பெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ளது. ஆனால், இது புதிய வகையிலான சைபர் குற்றவாளிகளை உருவாக்கியுள்ளது. இவ்வகைக் குற்றங்களில், அவற்றின் புவியியல் வரம்புகளும் எல்லைகளும் தகர்க்கப்பட்டுள்ளன.
இணையக் குற்றங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில், தேசிய குற்றப் பதிவுக் காப்பகத் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான இணையக் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 4.52 இலட்சம் ஆகும். இது 2022-இல் 9.66 இலட்சமாகவும், 2023-ஆம் ஆண்டில் 15.56 இலட்சமாகவும் இருந்தன. இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கே மாதங்களில் 7.4 இலட்சம் புகார்கள் வந்துள்ளன. இவையனைத்தும் புகார்களாக பதிவானவை மட்டும்தான்.
இத்தகைய குற்றங்கள் இந்தியாவிற்குள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் நடக்கும் 45 சதவிகித சைபர் குற்றங்கள் இந்தோனேஷியா, லாவோஸ், கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து நிகழ்த்தப்படுகின்றன என்று இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் இந்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் இயக்கப்படும் 17,000 வாட்ஸ் அப் கணக்குகளையும் சமீபத்தில் தடைசெய்துள்ளது.
மோசடிகளின் வகைகள்
சிறிய அளவில் பணம் தேவைப்படும் சாதாரண மக்களை இலக்கு வைத்து நடத்தப்படுவது கடன் மோசடியாகும். ஆன்லைன் செயலிகள் மூலம் எளிதான தவணைகளில் கடன் பெறலாம் என்ற விளம்பரங்கள்தான் இதன் தொடக்கம். இவ்வாறு கடன் பெறுபவர்கள் தங்களது போனில் ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதுடன், அந்தச் செயலி மூலமாக தங்களது செல்போனில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் – காணொளிகள் உள்ளிட்ட தரவுகள், இருப்பிடம், மைக் போன்றவற்றை அணுகுவதற்கு (access) அனுமதியளிக்க வேண்டும்.
கடனை வாங்கிய பிறகு, அதில் கூறப்பட்டிருக்கும் தவணைக்காலம் முடிவதற்கு முன்பாகவே, ஒரு வாரத்திலோ அல்லது பத்து நாட்களுக்குள்ளோ கடனைத் திருப்பிச் செலுத்துமாறு பல்வேறு எண்களில் இருந்து தொலைபேசி வாயிலாக முதலில் மிரட்டல் விடுப்பார்கள். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கட்ட வேண்டிய தொகையை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்வர். இதன் காரணமாக, 13 ஆயிரம் கடன் பெற்ற ஒருவர், தனது வீடு வாசலை விற்று 17 இலட்சங்கள் வரை திருப்பிச் செலுத்திய நிகழ்வுகள் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளன.
செல்போனில் உள்ள அனைத்துத் தரவுகளையும் இந்தக் கும்பல் சேகரித்துக் கொள்ளும். கட்ட மறுத்தாலோ அல்லது போலீசில் புகார் தெரிவிப்பதாகச் சொன்னாலோ தங்களது மொபைலில் உள்ள புகைப்படங்களை மார்பிங் செய்து சம்பந்தப்பட்ட நபரின் தொடர்புப் பட்டியலில் உள்ள எண்களுக்கு அனுப்புவதாக மிரட்டல் விடுக்கப்படும். இதன் விளைவாகத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.
பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன. இவற்றை கிளிக் செய்து உள்ளே சென்றால் தொடக்கத்தில் அவர்களது கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டப்படும். அதன் பிறகு, அந்தப் பணத்தை எடுக்க உங்களது வங்கித் தரவுகள் வேண்டும் என்று கோருகின்றனர். அவற்றை அனுப்பியவுடன் வங்கியில் இருக்கும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு விடுகின்றனர்.
இவைபோக, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்துகின்றனர். இதனை நம்பி, அந்தச் சமூக வலைதளக் குழுவில் இணைந்து, அந்த மர்ம நபர்கள் அனுப்பிய லிங்கில் கணக்குத் தொடங்கி அவற்றில் முதலீடு செய்து தங்களது பணத்தை பலரும் இழந்து வருகின்றனர்.
மேலும், சுங்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என்று பேசி, தாங்கள் அனுப்பிய கொரியரில் போதைப் பொருள் இருக்கிறது என்றும், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விடுவோம் என்றும் மிரட்டி, அவர்களது தொலைபேசியில் ஊடுருவி அனைத்துத் தரவுகளையும் கையில் வைத்துக்கொண்டு மிரட்டுவதுடன், டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாரையும் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
டேட்டிங் ஆப்கள் மற்றும் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளைத் தொடங்கி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் காதல் வலையில் விழ வைத்து, ஏதாவது இணையதளத்தில் முதலீடு செய்ய வைப்பது, செல்போனில் உள்ள தரவுகளை வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பது போன்றவற்றைச் செய்கின்றனர். இவ்வளவு ஏன், தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் போன்றே போலியான போர்ட்டலை உருவாக்கி மோசடி செய்துள்ளது ஒரு மர்மக் கும்பல்.
2024-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.20.30 கோடியும், வர்த்தக மோசடியில் ரூ.1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ.222.58 கோடியும், காதல்/டேட்டிங் செயலிகளில் ரூ.13.23 கோடியும் ஏமாற்றப்பட்டுள்ளதாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மணி மியூல் கும்பல்
‘மணி மியூல்’ (Money Mule) என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இணையவழி குற்றத்தின் ‘மறைமுக வேலைவாய்ப்பாகும்’. அதாவது, இணையவழி குற்றங்கள் மூலமாகக் கொள்ளையடிக்கப்படும் கோடிக்கணக்கான பணத்தை, சட்டப்பூர்வமாக்குவதற்காக இந்தக் குற்றக் கும்பல்களுக்கு உதவுபவர்களே இந்த ‘மணி மியூல்’ கும்பல்.
ஒருபுறம், வங்கிக் கணக்கு இல்லாதவர்களின் ஆதார் உள்ளிட்ட தரவுகளைப் பயன்படுத்தி போலிக் கணக்குகளை உருவாக்கி, அவற்றில் இந்தக் கொள்ளையர்கள் பரிவர்த்தனை செய்கின்றனர். மேலும், சில செயலி நிறுவனங்களே தனிநபர் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடி, இந்த சைபர் குற்றவாளிகளுக்கு வழங்குகின்றன. அதன் மூலமாக சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவருக்கே தெரியாமல், அவரது வங்கிக் கணக்கை தங்களது பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மற்றொருபுறம், கடன் பிரச்சினை உள்ளவர்கள், பணத்தேவை உள்ளவர்களைக் குறிவைத்து, கொள்ளையடித்த பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் வைத்திருந்து திருப்பித் தருவதற்கு, இலட்சக்கணக்கில் கமிசன் தொகை கொடுத்து இத்தகைய வேலைகளில் ஈடுபட வைக்கின்றனர். மியூல் என்பது கழுதையைக் குறிப்பதாகும். இணையக் குற்றவாளிகளுக்காக பொதி சுமக்கும் இவர்கள்தான் ‘மணி மியூல்’ கும்பல் எனப்படுகிறார்கள்.
சைபர் அடிமைகள்
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுத்துவதற்காக, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, வேலைவாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இந்தோனேஷியா, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளுக்கு சில ஏஜெண்டுகள் அனுப்புகின்றனர். சமீபத்தில், கம்போடியாவில் இணையக் குற்றக்கும்பல் ஒன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரம் இளைஞர்களை அடிமைகளாக்கி இயக்கி வந்தது கண்டறியப்பட்டு, அந்த இளைஞர்கள் மீட்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு ஏமாற்றப்பட்டு குற்றவேலைகளில் ஈடுபடுத்தப்படுவோருக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு தொகையை ஏமாற்றி முதலீடு செய்ய வைக்கிறார்களோ, அதற்கு ஏற்பத்தான் சம்பளம் கொடுக்க முடியும் என்று இவர்களுக்கு இலக்கு வைத்து விடுகின்றனர். இவர்களது பாஸ்போர்ட் முதலான ஆவணங்களையும் கல்விச் சான்றிதழ்களையும் தங்களது பிடியில் வைத்துக் கொண்டு, மிரட்டி அடிமைகளாக்கி இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
இதுபோன்று தொழில்நுட்பப் பிரிவு, உளவுப் பிரிவு, தரவுகள் சேகரித்தல், குண்டர் படைகள், வேலைக்கான ஆட்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டுகள் என்ற ஒரு சமூக விரோத வலைப்பின்னலை வைத்துக் கொண்டுதான், இத்தகைய இணையக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
000
டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியானது, இதுபோன்ற இணையக் குற்றவாளிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இதுபோன்ற இணையக் குற்றங்கள் ஆளும்வர்க்கத்தால் திணிக்கப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும்.
ஆரம்பக்காலத்தில், இது போன்ற மோசடியில் ஈடுபட வேண்டுமென்றால், ஒருவரது தொலைபேசி எண் அல்லது முகவரியைத் தெரிந்துகொள்ள பலவகைப்பட்ட தந்திரங்களைக் கையாள வேண்டியிருக்கும்.
தற்போதோ, ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்தவுடன்; ஒரு விளம்பரத்தைச் சொடுக்கியவுடன்; ஒரு குறுஞ்செய்தி அல்லது மெயிலை கிளிக் செய்தவுடன் அல்லது செல்போனுக்கு வரும் ஒரு அழைப்பை ஏற்றவுடன் செல்போனிலுள்ள அனைத்து தரவுகளும் ஒரு கும்பலால் அல்லது தனிநபரால் அபகரிக்கப்படுகின்றன. அப்படியென்றால், இதுபோன்ற பாதுகாப்பற்ற செயலிகள், தளங்கள் எப்படி இணையத்தில் உலவ முடிகிறது? தனிநபர் தரவுகள் இந்த வகைகளில் மட்டும்தான் திருடப்படுகின்றனவா என்றால் அதுதான் இல்லை. மேற்சொன்னவைகள் எல்லாம் சட்டவிரோதத் திருட்டுகள்.
சட்டப்பூர்வத் திருட்டுகளோ பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. சான்றாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெக்யூரிட்டியின் அறிக்கையானது, ஆதார் தரவுகளை உள்ளடக்கிய 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க்வெப்பில் விற்பனைக்கு உள்ளன என்னும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாக ஆதார் மாற்றப்பட்டுள்ள சூழலில், வங்கிக் கணக்குகள், பள்ளி-கல்லூரிச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை போன்ற அனைத்து அத்தியாவசிய, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் இராணுவ இரகசியம் போல பாதுகாக்கப்பட வேண்டியவை. இத்தகைய தரவுகள் விற்பனைக்கு வந்துள்ளன என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகும்.
தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு குறித்து பேசுவது ஒருபுறம் இருந்தாலும், இந்தத் தரவுகள் ஏன் சேகரிக்கப்படுகின்றன? தரவுகள் ஏன் ஒன்று குவிக்கப்படுகின்றன என்பதைப் பரிசீலிப்பது முக்கியமான அம்சமாகும்.
21-ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவப் பண்டமயமாக்கல் என்பது அதன் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, மனிதர்களுக்கு வெளியில் உள்ளவற்றைப் பண்டமாக்கி வந்த நிலை மாறி, மனித உடல் உறுப்புகள் அனைத்தும் பண்டமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ‘புனித’ங்களாக கருதப்பட்டு வந்த கருப்பை, தாய்ப்பால் உள்ளிட்டவையும் விற்பனைக்கான பண்டமாக்கப்பட்டன. அதன் உச்சக்கட்டமாக, மனித சிந்தனைகள், விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், அன்றாட நடவடிக்கைகள், என்ன வகையான நோயால் பாதிக்கப்பட்டவர், என்ன உணவை விரும்பி உண்பார், எந்த நிறம் அவருக்குப் பிடிக்கும், எந்த ஓட்டலுக்கு அடிக்கடி செல்வார், எந்த நண்பருடன் நெருக்கமாக இருப்பார், இடதுசாரியா, வலதுசாரியா உள்ளிட்ட அனைத்துத் தரவுகளும் தற்போது பண்டமாக்கப்பட்டு விட்டன.
தரவுப் பகுப்பாய்வு (data analytics) தற்போது தனித்துறையாகவே பரிணமித்திருக்கிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றவை தரவு ஏகாதிபத்தியங்கள் (Data Imperialism) எனும் அளவிற்கு தனிநபர் தரவுகளைத் தங்கள் வசம் வைத்துள்ளன.
இந்த ஏகாதிபத்தியங்கள், பலவீனமான நாடுகளில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக அந்நாடுகளின் தரவுகளைப் பயன்படுத்தி சைபர் தாக்குதல்களை நடத்துகின்றன.
கட்சிகள், நபர்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும் இத்தகைய தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனின் தனிப்பட்ட தரவுகள் தேர்தல் நெருங்கும் தருவாயில் வெளியிடப்பட்டதானது, அவரது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தரவுகளின் மூலம், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்பின் பிரச்சாரத்திற்கு உதவியது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், சொந்த நாட்டு மக்களைக் கண்காணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களே சொந்த நாட்டு மக்களைக் கண்காணிக்கவும், அரசியல் எதிரிகள், ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதற்காகவும் பல வகைகளிலான உளவுச் செயலிகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பெகாசஸ் உள்ளிட்டு பல உளவுச் செயலிகளால், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் கண்காணிக்கப்பட்டும் உளவு பார்க்கப்பட்டும் வருகின்றனர்.
குறிப்பாக, பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு இலக்கானவர்களைக் கண்டறிந்து, சந்தைப்படுத்துவதை எளிதாக்குவதற்கும் புதிய தேவைகளை உருவாக்குவதற்கும் இத்தகைய தனிநபர் தரவுகளைப் பயன்படுத்துகின்றன.
மேற்கூறிய வகையில் தனிநபர் தரவுகளைப் பயன்படுத்துவது ‘சட்டவிரோதம்’ அல்ல. இதற்கு வெளியே, சில தனிநபர்கள், தனிப்பட்ட மாபியா கும்பல்கள் இந்தத் தரவுகளை எடுத்து குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதுதான் இன்று ‘இணைய மோசடியாக’ பரவலாகப் பேசப்படுகிறது.
இவ்வளவு தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன? தரவுகளைச் சேகரிப்பதற்கான வாய்ப்புகளை இந்த ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசாங்கமும் திட்டமிட்டே குவித்து வைத்துள்ளன. தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்துச் செயலிகளும் மிகப்பெரும் அளவில் தனிநபர் தரவுகளைச் சேகரிப்பதற்கான மையங்களாக விளங்குகின்றன. நமது ஒவ்வொரு அசைவையும் தரவுகளாக்குவதும், செயற்கை நுண்ணறிவு – மீத்திறன் கணினிகள் துணையுடன் மிக விரைவாகப் பகுப்பாய்வு செய்து கொள்வதும் தற்போது சாத்தியமாகியுள்ளன. இத்தகவல்களைத் தமது நிறுவனத்தின் தேவைகளுக்கு மட்டுமல்லாது, பணத்திற்காக விற்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழல்தான், இணையக் குற்றக்கும்பல்கள் மட்டுமல்லாது தனிநபர்கள் கூட, எந்தவொரு தனிநபரின் செல்போனிற்குள்ளும் ஊடுருவி ஒட்டுமொத்தத் தரவுகளையும் சேகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்-2023 என்பது, தனிநபரின் தரவுகள் எந்த நாடுகளுக்கு விற்கப்படலாம், எந்த நாடுகளுக்கு விற்கப்படக் கூடாது என்பதை முறைப்படுத்துவதே தவிர, இதனைத் தடுப்பதல்ல. அதாவது இந்தியர்களின் தரவுகள் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்படாத நாடுகளுக்குப் பகிரப்படுவதை இந்தச் சட்டம் தடை செய்வதில்லை.
எதுவாயினும், தனிநபர் தரவுகள் சேகரிக்கப்படுவதே அடிப்படையில் மனித உரிமைகளுக்கு எதிரானதும் கிரிமினல் குற்றமும் ஆகும். அந்தத் தரவுகள் சேகரிக்கப்படுவதன் நோக்கமே சுரண்டலும், மேலாதிக்கவெறியும்தான். இதனைத் தடுத்து நிறுத்தாமல், இது போன்ற குற்றங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றதாகும்.
இருப்பினும், இந்தியாவில் மோடி அரசாங்கமானது தனது பாசிச அடக்குமுறைகளுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும் இத்தகைய தனிநபர் தரவுகளைப் பயன்படுத்துவதும் அல்லது பயன்படுத்துவதைத் தடுப்பதையும் செய்துக் கொண்டுதான் இருக்கிறது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டபோது, சீனாவைச் சேர்ந்த 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அப்போது, சீனா இந்தியர்களைக் கண்காணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது மோடி அரசாங்கம்.
இந்தியாவில், பீமா கொரேகான் போன்ற பொய்யாக புனையப்பட்ட வழக்குகளில், சமூகச் செயற்பாட்டாளர்களின் கணினிகளை காவல்துறையே ஹேக் செய்து, சட்டவிரோதத் தரவுகளை உள்நுழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை நாம் கண்முன்னே கண்டோம்.
கள்ள நோட்டுப் புழக்கமோ கள்ளச் சாராயம் – போதைப் பொருட்கள் விற்பனையோ அரசாங்கத்தின் அனுமதி இன்றியோ, அரசு அதிகாரிகளின் துணையின்றியோ நடந்து விடுவதில்லை. அதுபோலத்தான், இப்படிப்பட்ட இணையக் குற்றங்களும் அரசின் கண்காணிப்பை மீறி ஒருபோதும் நடந்து விடுவதில்லை. மேலும், இதுபோன்ற குற்றங்களில் சாதாரண படிப்பறிவற்ற மக்கள் பிரிவினர் ஈடுபடுவதில்லை. படித்த, தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நபர்களே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். படித்த பிரிவினருக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இன்மையும், செல்வ ஏற்றத்தாழ்வு நிலையும் இதற்குக் காரணமாக இருக்கின்றன. மறுபக்கத்தில், பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதும், கல்வி – மருத்துவம் போன்றவற்றுக்கான திடீர்ச் செலவுகளும், எளிதில் அணுக முடியாத வங்கிக் கடன்களும் இத்தகைய மோசடி கடன் வலைகளில் அவர்களை வீழ்த்துகின்றன.
ஆனால் அரசோ, இந்த பிரச்சினைகளுக்கான மூலகாரணங்களைக் களையவோ குறைக்கவோ எதையும் செய்வதில்லை. குறைந்தபட்சம், சமூக வலைதளங்களிலோ வெகுஜன ஊடகங்களிலோ விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கூட மேற்கொள்வதில்லை. இணையக் குற்றங்களை மிகுந்த அலட்சியத்துடன் அரசு அணுகுவதுதான் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணமாகும்.
அதே சமயத்தில், தனிநபர்கள் விழிப்படைவதால் மட்டுமே இத்தகைய குற்றங்களை முற்றாக ஒழித்துவிட முடியாது. சில வழிமுறைகள் அம்பலமாகிவிட்டால், பல்வேறு புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து மக்களை ஏமாற்றுவதை இணையக் குற்றக்கும்பல் தொடரவே செய்யும். இவற்றுக்குப் பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதே அடிப்படைத் தேவை. மக்கள் நலன்சார் அரசும், பொருளாதாரக் கட்டமைப்புமே இதற்கான முன்நிபந்தனைகள். இணையக் குற்றங்களுக்கு எதிராகப் பேசும் ஒவ்வொருவரும் இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் தீர்வுகளை நோக்கி நகர முடியாது.
பாரி
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram