privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவினவு தளம் மீது அடக்குமுறை - அஞ்சமாட்டோம் !

வினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் !

-

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு தோழர் கோவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் அ.தி.மு.க.வினர், ‘பாடலில் செய்யப்பட்டிருப்பது விமரிசனமே அல்ல அவதூறு’ என்று பேசத்தொடங்குகின்றனர். பிறகு, ‘ஒரு பெண் முதல்வரை இழிவு படுத்தி விட்டார்கள்’ என்று கூறி, டாஸ்மாக் பிரச்சினையை ஜெயலலிதா இழிவு படுத்தப்பட்ட பிரச்சினையாக மாற்றுகின்றனர். பிறகு, ‘ரசனைக்குறைவாகப் பாடியிருப்பது உண்மைதான் எனினும், அதற்காக தேசத்துரோக வழக்கு போடவேண்டுமா’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். உடனே விவாதத்தில் பங்கேற்கும் அம்மாவின் அருள் பெற்ற போலீசு அதிகாரிகள், ‘ஜெயலலிதாவை விமரிசித்தாலே அது தேசத்துரோகக் குற்றம்தான்’ என்று கூறி, இந்தியன் பீனல் கோடுக்கு பதிலாக, அம்மா பீனல்கோடை அறிமுகப்படுத்துகிறார்கள். இறுதியாக, ‘இந்த ஒரு பாட்டை மட்டும் பார்க்கக் கூடாது. வினவு இணையத்தளத்தின் மீது முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இத்தனை நாள் தாமதித்ததுதான் தவறு’ என்று கூறி தங்கள் உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

கோவன்
கோவனைக் கைது செய்தது தவறு என்று தொடங்கிய விவாதம், வினவு தளத்தை இத்தனை காலம் விட்டு வைத்தது தவறு என்ற கருத்தை உருவாக்குவதுடன் முடிக்கப்படுகிறது.

கோவனைக் கைது செய்தது தவறு என்று தொடங்கிய விவாதம், வினவு தளத்தை இத்தனை காலம் விட்டு வைத்தது தவறு என்ற கருத்தை உருவாக்குவதுடன் முடிக்கப்படுகிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாடகத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இது அரங்கேறியிருக்கும் முறையைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

கோவனைக் கைது செய்யக்கோரும் புகாரைக் கொடுத்தவர் வேளச்சேரியில் இருக்கும் குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலிசுத்துறையின் ஒரு உதவி ஆய்வாளர். அவர் தற்செயலாக இணையத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தாராம். அதில் ஜெயலலிதாவை அவதூறாகச் சித்தரித்துக் காட்சிப்படுத்தி பாடியிருந்தார்களாம். அது வினவு இணையதளத்தின் மூலமாகப் பலருக்கும் போயிருக்கிறதாம். ஒரு முதலமைச்சரை குறிவைத்து இப்படியெல்லாமா பாடுவார்கள் என்று அந்த உதவி ஆய்வாளருக்கு கோபம் வந்து ஒரு புகாரை பதிவு செய்தாராம். உடனே சைபர் கிரைம் போலிசார் திருச்சி சென்று நள்ளிரவில் கோவனைக் கைது செயதார்களாம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரத்திற்காக தோழர் கோவன் பாடியிருக்கும் அந்த இரண்டு பாடல்களும் வினவு இணையத்தளத்தின் மூலமாக சமூக வலைத்தளங்களில் பல லட்சம் மக்களிடம் சென்றுள்ளன. ஜெ-வின் அரசியலை விமரிசிக்கும் கட்டுரைகளும் பாடல்களும் வினவு ஆரம்பித்த காலத்திலிருந்து (2008) வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சான்றாக ஜெயா, சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் என்னும் கொள்ளைக் கூத்தை உணர்த்தும் “கல்யாணக் கதை கேளு” எனும் பாடல் (1996-ல் எழுதப்பட்டது) இதே வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை சில லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மட்டுமல்ல , மோடி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் – கட்சிகள், இஸ்லாமிய மதவெறியர்கள், அமெரிக்க ஆதிக்கம், மறுகாலனியாக்கம் என்று ஏராளமான விமர்சனக்கட்டுரைகளும், அதிகாரவர்க்கத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகளும் வினவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எங்களுடன் கொள்கை ரீதியாகத் தீவிரமாக வேறுபடுபவர்கள் கூட எங்களது நேர்மையையும் பக்கச் சார்பின்மையையும் கேள்விக்குள்ளாக்கியதில்லை. எமது விமரிசனங்களின் நோக்கம் மக்கள் நலன் மட்டுமே.

வினவு
ஜெயலலிதா மட்டுமல்ல , மோடி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் – கட்சிகள், இஸ்லாமிய மதவெறியர்கள், அமெரிக்க ஆதிக்கம், மறுகாலனியாக்கம் என்று ஏராளமான விமர்சனக்கட்டுரைகளும், அதிகாரவர்க்கத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகளும் வினவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதனால்தான் வினவு தளத்தின் கருத்தை கடுமையாக விமரிசித்தும், வசை பாடியும், ம.க.இ.க உள்ளிட்ட எமது தோழமை அமைப்புகளை கீழ்த்தரமாக விமரிசித்தும் எழுதப்படுகின்ற பின்னூட்டங்களைக் கூட நாங்கள் அப்படியே வெளியிடுகிறோம். மட்டுறுப்பதில்லை.

வினவு தளத்தில் பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளையும் விமரிசித்து எழுதியிருக்கிறோமென்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ் – அ.தி.மு.க கும்பல்தான் வினவு தளத்தின்மீது கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் வினவு இணையத்தளத்தின் குரல்வளையை நெறிப்பதற்கு அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே வினவு இணையத்தளம் பற்றி சைபர் கிரைம் போலிசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கிண்டியிலிருந்த சைபர் கிரைம் போலிசு அலுவலகத்திற்கு தோழர் கன்னையன் ராமதாஸை அழைத்து விசாரித்தும் இருக்கிறார்கள். அப்போது, “நீங்களாவது பரவாயில்ல. ஒரு அட்ரஸ், போன் நம்பர் போட்டு அதுல கூப்புட்டா வந்து பதில் சொல்றீங்க! பல பேர் அனானிமஸ் ஐ.டி-யில எதாவது போடுகிறார்கள். புகார் வருகிறது. அதக் கண்டுபுடிக்க நாங்க படாதபாடு படுகிறோம்” என்றார்கள் சைபர் கிரைம் அதிகாரிகள்.

நாங்கள் எங்கள் கருத்தை முகத்தோடும், முகாந்திரத்தோடும் பகிரங்கமாகவே எழுதிவருகிறோம். மேலும் எங்கள் தோழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் அரசை கண்டித்து சுவர்களில் எழுதியதற்காகவும், சுவரொட்டி ஒட்டியதற்காகவும், மேடைகளில் பேசியதற்காகவும் நூற்றுக்கணக்கான முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளனர். எனவே எங்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல!!

ஓராண்டுக்கு முன்பு சைபர் கிரைம் அலுவலகத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் மணற்கொள்ளையன் வைகுண்டராஜன் குறித்து வினவு தளம் வெளியிட்டிருந்த கட்டுரைகளை உடனே நீக்குமாறு மிரட்டல் கலந்த தொனியில் அந்த மின்னஞ்சலை ஒரு அதிகாரி அனுப்பியிருந்தார். அகற்ற முடியாது என்றும் வழக்கை எதிர்கொள்வதாகவும் நாங்கள் பதிலளித்தோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்திற்கு வந்த மோடியை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் மேற்கொண்ட பிரச்சாரத்தில் வினவும் பங்குகொண்டது. அது இணைய வாசகர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோல ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு, குன்ஹா தீர்ப்பின் போதும், பின்னர் குமாரசாமியின் தீர்ப்பின் போதும் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்தன. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்த சில பத்திரிகைகளும் தோலுரிக்கப்பட்டன.

வினவு – ஆயிரம்ஊடக முதலாளிகளும், அண்டிப் பிழைப்பு நடத்தும் அறிவுத்துறையினரும் எங்கள் மீது கொண்டுள்ள மாளா வெறுப்பை நாங்கள் அறிவோம். அந்த வெறுப்புதான் நாங்கள் ஈட்டியிருக்கும் மதிப்பு. மற்றப்படி வினவு தளம் என்பது மக்களுக்கான மாற்று ஊடகம் என்ற கருத்து அசைக்க முடியாமல் நிலைநாட்டப்பட்டிருக்கிறதே, அதுதான் நாங்கள் ஈட்டியிருக்கும் கவுரவம்.

அதனால்தான் கருத்துரிமைக்காகப் பேசத் தொடங்குவது போன்ற தோரணையில் தொடங்கும் தொலைக்காட்சி விவாதங்களின் அரிதாரம் வெறும் ஒரு மணி நேரத்துக்குள் கலைந்து விடுகிறது. ஏன் முன்னமே கைது செய்யவில்லை, ஏன் முன்னரே முடக்கவில்லை என்ற பாசிசக் குரலுடன் அவை முடிகின்றன.

இந்தப் பின்னணியில் தான் கோவன் பாடிய பாடல்களுக்கு எதிரான நடவடிக்கை! இதனால் வினவு தளத்தின் ஆசிரியர், உரிமையாளர் என்ற பொறுப்பிலிருக்கும் தோழர்.காளியப்பன் (கன்னையன் ராமதாஸ்) அவர்களை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறார்கள். மற்ற முன்னணியாளர்களையும் அடுத்தடுத்துக் கைது செய்வதற்கு ஏதுவாக முதல் தகவல் அறிக்கையை வடிவமைத்திருக்கிறார்கள்.

வினவு இப்போது ஒரு தனி நபரல்ல! அது தோழர்கள், வாசகர்கள், மக்களால் பிணைக்கப்பட்ட ஒரு வலிமையான ஊடகம். “வினவு, வினை செய் ஒரு வலைப்பூவாக முதன் முதலில் தொடங்கப்பட்ட போது இதன் பெயர். கேள்வி எழுப்பு, செயல்படு என்பதையே தனது பெயராகக் கொண்ட இந்தத் தளத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது, கேள்வி எழுப்பும் உரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். செயல்படும் உரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இது கோவனுக்கும் வினவுக்கும் எதிரான தாக்குதல் மட்டுமல்ல, நம் அனைவரின் ஜனநாயக உரிமையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்.

தோழர் கோவன் கைதுக்கு எதிராகவும் வினவு தளத்தின் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும் குரல் எழுப்பியிருக்கும் எல்லாக் கட்சியினர்க்கும், ஊடகவியலாளர்களுக்கும், முகநூல், டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு தெரிவித்திருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி.
SUPPORT US