பீமா கொரேகான் வழக்கில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முன்னணி சமூகச் செயற்பாட்டாளர்கள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதன்முதலில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளரான ரோனா வில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதங்கள் அனைத்தும் திட்டமிட்டு திருட்டுத்தனமாக அவரது கணிணிக்குள் நுழைக்கப்பட்டவை என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பழங்குடியின மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் , விவசாயிகள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட நசுக்கப்படும் பிரிவினைச் சேர்ந்தவர்களுக்காக குரல் கொடுத்து வந்த சுமார் 16-க்கும் மேற்பட்ட சமூகச் செயறபாட்டாளர்களை பீமா கொரேகான் வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகிறது மோடி அரசு.

மகாராஷ்டிராவில் மாநில ஆட்சியில் பாஜக இருந்த வரையில் மாநில அரசின் கையில் இருந்த அந்த வழக்கு, கடந்த 2020-ம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக ஆட்சி கலைந்த நிலையில், என்...-வுக்கு மாற்றியது மத்திய மோடி அரசு. இதுவே இந்த வழக்கு தனது கையை விட்டு சென்று விடக் கூடாது என்ற பாஜகவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

படிக்க :
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?
♦ அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்

இந்த வழக்கை என்..ஏ கையில் எடுத்த பின்னர், கூடுதலாக பல்வேறு அறிவுஜீவிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தது. தலித் மக்களின் வரலாற்று வெற்றிச் சின்னமான பீமா கொரேகானில் அவர்கள் மரியாதை செலுத்தச் சென்றபோது, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஆதிக்க சாதிக் கிரிமினல்கள் திட்டமிட்டு நடத்திய கலவரத்தை முதன்முதலில் மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்புபடுத்தியது புனே போலீசு.

இவ்வழக்கில் முதல் சுற்றில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டளர் ரோனா வில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கடிதத்தைக் காட்டி அவரை மாவோயிஸ்ட் என்றும், “பாசிஸ்ட்” நரேந்திரமோடியினை கொல்ல திட்டமிட்டார் எனவும் குற்றம்சாட்டியது புனே போலீசு. ரோனா வில்சன் “அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின்” மக்கள் தொடர்புச் செயலாளராக செயல்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வளவு வெளிப்படையாக பெயரைப் போட்டு மாவோயிஸ்ட்டுகள் கடிதங்களை எழுதுவதில்லை என போலீசு, சி.பி.ஐ ஆகிய அரசு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகித்த அதிகாரிகளே காறித் துப்பிய அந்தக் கடிதத்தையே நீதிமன்றத்தில் ஆதாரமாக வைத்து இன்றுவரை அந்த வழக்கின் பெயரில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தி வந்தது அரசுத் தரப்பு.

ரோனா வில்சன்

இந்நிலையில் ரோனா வில்சனின் வழக்கறிஞர் அந்தக் கணிணியின் வன்தகட்டை (Hard Disk) ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் மசாச்சுவெட்சைச் சேர்ந்த நிறுவனமான “ஆர்செனல் கன்சல்ட்டிங்” எனும் நிறுவனத்திற்கு வழங்கினார்.

அந்த நிறுவனம் ஆய்வு செய்து முடித்த நிலையில் தனது அறிக்கையை கடந்த பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிட்டது. அதில், ரோனா வில்சனின் கணிணி 22 மாத காலத்திற்கும் மேலாக எதிரிகளால் (ஹேக்கர்கள்) கையாளத்தக்கதாக இருந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனைச் செய்தவர்களின் நோக்கம், அவரது கணிணியின் செயல்பாட்டைக் கண்காணிப்பதும், அதற்குள் ஆவணங்களை உட்செலுத்துவதும் தான் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த இந்த குறிப்பான ஹேக்கர் பயன்படுத்திய வேவு மென்பொருள் உட்கட்டமைப்பும், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பலரது கணிணியைத் தாக்குவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது.

மேலும் அந்நிறுவனம் தாம் இதுவரையில் சந்தித்த ஆதார உடைப்பு பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு அதிதீவிர பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. முதல் ஆவணம் உள்நுழைக்கப்பட்டதற்கும் கடைசி ஆவணம் உள் நுழைக்கப்பட்டதற்கும் இடையிலான மிகபெரிய காலகட்டம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளைக் கொண்டு இந்த பிரச்சினையில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரோனா வில்சனின் கணிணிக்குள் ஹேக்கர் தனது வேவு மென்பொருளை நுழைத்த நாள் வரை மிகத் துல்லியமாக கண்டுபிடித்துக் கூறியிருக்கிறது இந்த அறிக்கை. சமூகச் செயற்பாட்டாளர் வரவர ராவின் மின்னஞ்சல் முகவிரியை பயன்படுத்திய சிலர் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களைத் தொடர்ந்து கடந்த 13.06-2016 அன்று வெற்றிகரமாக கணிணிக்குள் ஹேக்கர்கள் நுழைந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறது அறிக்கை.

இந்த வழக்கு தொடர்பான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இந்தக் கடிதம் ரோனாவில்சனின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்ட போதும், மராட்டியத்தின் ஆட்சியதிகாரத்தில் இருந்த தேவேந்திர பட்நாவிசிடம் இது குறித்து தற்போது கேட்ட போது, அந்தக் கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

ஹேக்கர்கள் கணிணிக்குள் புகுந்து களேபரம் செய்வது தொழில்நுட்ப உலகில் புதிய விசயமில்லை. அவர்களது நோக்கம் பணம் திருடுவது, முடக்கி வைத்து மிரட்டி பணம் பிடுங்குவது, ஆவணங்கள் திருடுவது போன்றவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

இங்கு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக, அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பேசும் ரோனா வில்சன் மற்றும் பிற சமூகச் செயற்பாட்டாளர்களின் கணிணிகள் கிட்டத்தட்ட நான்காண்டுகளாக கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் அரசுக்குச் சாதகமான ஆவணங்கள் உள் நுழைக்கப்பட்டிருக்கின்றன.

எனில் இந்த வேலையைச் செய்தது பாஜக அரசுதான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. மராட்டியத்தில் ஆட்சியில் இருந்த போது தனது கட்டுப்பாட்டில் இருந்த வழக்கு ஆட்சி முடிந்ததும் தனது கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்...-விற்கு மாற்றப்பட்டது, இதற்கு வலுவான ஆதாரமாக இருக்கிறது.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

மக்களுக்காகப் போராடும் செயல்பாட்டாளர்கள் முடக்கப்படுவதையும் கொல்லப்படுவதையுமே திட்டமிட்டு சங்க பரிவாரக் கும்பல் செய்து வருகிறது. இவர்கள் முடக்கப்பட்டால் மட்டுமே, மக்களை ஒடுக்கிச் சுரண்டுவதும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதும் சாத்தியம் என நன்கு அறிந்து வைத்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

தற்போது கையும் களவுமாக அம்பலப்பட்டிருக்கிறது இந்தக் கிரிமினலின் சதித் திட்டங்கள். இந்த ஆவணங்கள் உள்நுழைக்கப்பட்டவை என்ற இந்த அறிக்கையை முன் வைத்து பிணைக்கு மனுச் செய்துள்ளார் ரோனா வில்சன்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் ரோனா வில்சன். அவருக்கு பிணை கொடுக்காமல் இருக்க புதிய காரணத்தை இந்நேரம் தயாரித்திருக்கும் அரசுத் தரப்பு. அதற்கும் கண்மூடி ஆதரவளிப்பதுதான் நீதிமன்றத்தின் சமகால நடைமுறையாகவும் இருக்கும் பட்சத்தில், இந்த அம்பலப்படுத்தல்களை முன்னிலைப்படுத்தி அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்யக் கோரி பொதுமக்களாகிய நாம் வீதியில் இறங்கிப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும். ‘

இல்லையேல், நாளை மோடிக்கு எதிராக டிவிட்டரிலும் முகநூலிலும் கருத்துச் சொல்லும் நமது கணிணிகளிலிருந்து ஏதேனும் கடிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி நம்மையும் சிறையிலடைத்து அழகு பார்க்கும் இந்த பாசிச அரசு !


சரண்
நன்றி : Deccan Herald

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க