கொரெகான் பீமா வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வந்த புனே போலீசு, கடந்த 31 டிசம்பர் 2017 அன்று நடைபெற்ற எல்கார் பரிசத் என்ற பொதுக்கூட்டத்தில் தலித் முன்னணியாளர்கள் பேசிய பேச்சுக்கள்தான் மறுநாள் நடந்த கலவரத்துக்குக் காரணம் என்று கூறி அக்கூட்டத்தை ஒருங்கிணைத்த முன்னணியாளர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. அவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனடிப்படையில் ஊபா சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தது போலீசு.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது வீட்டில் இருந்து மாவோயிஸ்டுகளின் கடிதம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, அக்கடிதத்தையும் கசிய விட்டது போலீசு. அதில் மாவோயிஸ்டுகள் மோடியைக் கொல்வதற்கு சதி செய்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அக்கடிதம் வெளியானதிலிருந்து இரண்டு நாட்களுக்கு ஊடகங்களெங்கும் ஒரே பேச்சு – “மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி” என்பதுதான்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மோடிக்கு “இன்னொரு கட்ட” பாதுகாப்பை அதிகரிக்கிறது உள்துறை அமைச்சகம். சங்க பரிவாரங்கள் சமூக வலைத்தளங்களில் பொங்குகின்றன. பணமதிப்பழிப்பின் போது மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய்வந்து முதலைக் கண்ணீர் விட்டது போல, தற்போதும் கண்ணீர் விட்டுக் கதறாதது மட்டும்தான் பாக்கி.

மாவோயிஸ்டுகள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக சமூக வலைத்தளங்களில் பலரும் பிரித்து மேய்ந்து, அது நம்பகத்தன்மையற்றது என காறி உமிழ்ந்துவிட்டனர். இருப்பினும் இக்கடிதம் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் பின்னணியைப் பற்றி விரிவாகப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

***

ராட்டியத்தில் உள்ள பீமா கொரெகான் என்னும் இடத்தில், 1818-ம் ஆண்டு நடைபெற்ற போரில், பேஷ்வா மன்னனின் மிகப்பெரிய படையை, குறைந்த எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் படையிலிருந்த மகர்கள் (தலித்துகள்) புறமுதுகிட்டு ஓடச்செய்தனர். தம்மை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கிவந்த ஆதிக்கசாதி வெறிக்கு எதிரான அவ்வெற்றியின் இருநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாட, கடந்த ஜனவரி 1, 2018 அன்று கொரெகான் கிராமத்தில் இலட்சக்கணக்கான தலித் மக்கள் திரண்டனர்.

இலட்சக்கணக்கில் திரண்டு வந்த மக்கள் கூட்டம்

அங்கு அமைதிப் பேரணியாக சென்ற தலித் மக்களுக்கு மத்தியில் ஹிந்து மதவெறியர்களான, மிலிந்த் ஏக்போடே மற்றும் சாம்பாஜி பிண்டே ஆகியோரின் தலைமையிலான இந்துத்துவக் காலிகள் கலவரத்தைத் தூண்டிவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் (31.12.2017) நடைபெற்ற  எல்கார் பரிசத் கூட்டத்தில் தலித் முன்னணியாளர்கள் பேசிய பேச்சுக்கள் தான் வன்முறைக்குக் காரணம் எனக் கூறி வழக்குப் பதிவு செய்தது போலீசு. எல்கார் பரிசத் கூட்டத்தில் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, ப்ரகாஷ் அம்பேத்கர், சோனி சோரி, முன்னாள் நீதிபதி கோல்சே பாட்டில், பீம் ஆர்மியின் வினய் ரதன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எல்கார் பரிசத் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள்

எல்கார் பரிசத் கூட்டம் நடைபெற்ற அன்றே முன்னணியாளர்கள் மீது 2 வழக்குகளும், மறுநாள் வன்முறை சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் முன்னணியாளர்கள் மீது மேலும் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பாக, எல்கார் பரிசத் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான  சுதிர் தவாலே, ரோனா வில்சன், காட்லிங் ஆகியோரது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சோதனை மேற்கொண்டது போலீசு. மேலும் மராட்டியத்தைச் சேர்ந்த முற்போக்கு கலாச்சார அமைப்பான கபீர் கலா மஞ்ச் கலைக் குழுவைச் சேர்ந்த ஒருவரது வீட்டிலும் சோதனை நடத்தியது.

ஆனால், கலவரத்தை முன்னின்று நடத்திய இந்து மதவெறியனான சாம்பாஜி பிண்டேயை, போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி போலீசு கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட மிலிந்து ஏக்போடே-வையும் உடனடியாக பிணையில் வெளியேவிட்டது போலீசு.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (06-06-2018) அன்று, கொரெகான் பீமா வன்முறை வழக்கில் எல்கார் பரிசத் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களான, ரோனா வில்சன், சுதிர் தவாலே, சுரேந்திரா கட்லிங், சோமா சென். மகேஷ் ரவுத் ஆகிய முன்னணியாளர்கள் 5 பேரை மாவோயிஸ்ட் தொடர்புடையவர்கள் எனக் கூறி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு.

ரோனா வில்சன்

இந்த ஐவரில் மோடியைக் ‘கொல்ல’ சதி செய்து மாவோயிஸ்டுகள் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர் ரோனா வில்சன். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், டில்லியிலிருந்து செயல்படும் “அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி”யின் மக்கள் தொடர்புச் செயலராக செயல்பட்டுவருகிறார். ஊபா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உள்ளிட்ட ஆட்தூக்கி கருப்புச் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

கடந்த மே, 2014-ல் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் நெருங்கிய கூட்டாளி இவர் என்றும் சாய்பாபாவிற்குப் பிறகு மாவோயிஸ்டுகளின் வெளியுலகத் தொடர்பாளராக இவர் இருக்கிறார், என்றும் குற்றம் சாட்டியுள்ளது போலீசு.

சுதிர் தவாலே

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொருவரான சுதிர் தவாலே, மராத்தி பத்திரிகையான ‘விரோதி’-யின் ஆசிரியராகப் பணியாற்று வருகிறார். மேலும்,   “தீவிர அம்பேத்கர்” எனும் அமைப்பு மற்றும் தலித்துகளுக்கான பொதுத்தளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

இவரை ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரியில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளவராகக் குற்றம் சாட்டிக் கைது செய்தது போலீசு. பின்னர், வழக்கை சட்டப்படி முறித்து வெளிவந்தார்.

சுரேந்திர கட்லிங்

கைது செய்யப்பட்ட மற்றொருவரான சுரேந்திரா கட்லிங், நாக்பூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இந்திய ”மக்களுக்கான வழக்கறிஞர் சங்கத்தின்” பொதுச் செயலாளர். பழங்குடியின மற்றும் தலித் உரிமை செயற்பாட்டாளரான இவர் ஏற்கனவே மாவோயிஸ்ட் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானார். சாய்பாபா, தவாலே ஆகியோருக்காக வழக்காடியவர்.

சோமா சென்

நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றுகிறார் சோமா சென்.
இவரது கணவரான துசார்கந்தி பட்டாச்சார்யாவை கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் போலீசு, மாவோயிச நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்தது. பின்னர் அவரை விடுதலை செய்தது போலீசு. தற்போது சோமா சென்-ஐயும் கொரெகான் வழக்கில் மாவோயிச தொடர்பு உள்ளவர் எனக் கைது செய்துள்ளது போலீசு

முந்தைய காங்கிரசு ஆட்சிக்காலத்தில், பிரதமரின் கிராமப்புற வளர்ச்சிப் பணித் திட்டத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த மகேஸ் ரவுத்-ஐயும் ,. ”எல்கார் பரிசத்” கூட்டத்தை ஒருங்கிணைத்த ”குற்றத்திற்காக” இவரையும் மாவோயிஸ்ட் தொடர்புள்ளவர் எனக் கூறி கைது செய்திருக்கிறது போலீசு.

மகேஷ் ரவுட்

குறிப்பாக ரோனா வில்சனையும், சுரேந்திரா கட்லிங்கையும் குறிவைத்துதான் எளிதில் வெளிவர முடியாத ஊபா சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது போலீசு. இதற்கு அடிப்படையான காரணம், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும், அவர்களது ஜனநாயக உரிமைகளுக்குமான அனைத்து வகையான சட்டரீதியான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார், ரோனாவில்சன். அரசியல் எதிர்க்கருத்துக்களை முடக்கும் அடிப்படையில், அரசியல் கைதிகளை பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் முடக்கும் போலீசுக்கு இது மிகப்பெருமளவில் எரிச்சலூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது.

அடுத்ததாக, சுரேந்திரா கட்லிங் அனைத்து சட்டவிரோத கைதுகள், மாவோயிசத் தொடர்பு எனக் கூறி அரசு மேற்கொள்ளும் கைதுகள், ஆள்தூக்கிக் கருப்புச் சட்டங்களின் அடிப்படையிலான கைதுகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களை மேற்கொள்கிறார். இது போலீசுக்கு மேலும் எரிச்சலூட்டக் கூடிய நடவடிக்கையாக இருந்தது. அதனைத் தொடர்ந்தே இவரையும் இவ்வழக்கில் கைது செய்தது போலீசு. இதேபோல, தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் முருகனை கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ம் நாளில், தமிழக போலீசு ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது நினைவிருக்கலாம்.

மதுரை வழக்கறிஞர் முருகன்

இந்தக் கைதுகளில் மாவோயிஸ்டுகளுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரத்தைக் காட்டுகிறேன் என களத்தில் இறங்கிய போலீசுதான் கரடியே காறித்துப்பும் படியான ஒரு கடிதத்தை ஆதாரமாகக் காட்டியிருக்கிறது. அந்தக் கரடி யார் என்று கேட்கிறீர்களா?

பாஜகவின் இளைய பங்காளியான சிவசேனா தனது சாம்னா பத்திரிகை தலையங்கத்தில், அந்தக் கடித்ததை “நகைக்கத்தக்க திகில் படக்கதை” எனக் குறிப்பிட்டு காறி உமிழ்ந்துவிட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல, போலீசு தில்லாலங்கடி வேலைகளைப் பற்றி நன்கு தெரிந்த காங்கிரசு தலைவர்களும், தேசியவாத காங்கிரசு தலைவரான சரத் பவாரும், இக்கடிதம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்றும், இது மக்களின் கரிசனையைப் பெற மோடி நடத்தும் நாடகம் என்றும் கூறியுள்ளனர்.

மாவோயிசக் கருத்தியலாளரும், எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், இக்கடிதத்தை மறுத்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகளை விடுவிக்கப் போராடுபவர்கள். அதனால்தான் அரசு பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், திட்டமிட்டு மக்களின் மீது வன்முறையை செலுத்தியது அரசு. மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பழியை தமது அரசியல் எதிரிகளின் மீது போட்டு அவர்களைக் குற்றவாளிகளாக்கும் முயற்சியை தமிழகத்தில் செய்து வருகின்றன, மத்திய மோடி அரசும் அடிமை எடப்பாடி அரசும். குறிப்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவ்வமைப்பின் தோழர்கள் மீது பாய்ச்சியுள்ளது. அதனடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்கள் மீது ஊபா சட்டத்தைப் பாய்ச்சத் தயாராகி வருகிறது.

அதைப் போலவே தமது அரசியல் எதிரிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தும் போராளிகளை, கொரெகான் பீமா வன்முறைச் சம்பவங்களை காரணமாகக் கொண்டு ஊபா மூலம் முடக்கிவிடத் துடிக்கிறது பாஜக கும்பல்.

அதில் மோடியை வலிந்து கொண்டுவந்து திணித்து, அது தானாகவே அம்பலமாகி நிற்கிறது.

மேலும் படிக்க:
Koregaon Bhima violence case — Among the five picked for ‘Maoist links’: an editor, a lawyer, a professor
Koregaon Bhima violence case: Dalit rights activists among five held for alleged Maoist links

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க