டந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதோதண்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ஆதிக்க சாதிவெறியர்கள் இருவர் வீட்டிற்குள் நுழைந்து அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அச்சிறுமியின் தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மகளைக் கண்டு, கதறியழுதபடி அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட, 80 சதவிகித தீக்காயங்களுடன் இருந்த அச்சிறுமி சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

செப்டம்பர் 14 ஆம் தேதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தமோலிபுர்வா என்ற கிராமத்தில் 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதைப் பார்த்துக் கோபமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிகளின் பிரேதப் பரிசோதனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது அம்லபமாகியுள்ளது.

***

இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரச் சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்க்காதவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான உத்தரப்பிரதேசத்தில்தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 2020-ஆம் ஆண்டில், ஹதராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண்ணை ஆதிக்கச் சாதி வெறியர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, கை கால்களை உடைத்து, நாக்கை அறுத்து, முதுகெலும்பை உடைத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். ஆதிக்கச் சாதி வெறியர்களைக் காப்பாற்றுவதற்காகக் கொலை செய்யப்பட்ட பெண்ணை, போலீசே இரவோடு இரவாக எரித்து சாம்பலாக்கியது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த சம்பவமும் 2014-இல் நடந்த பதாவுன் மாவட்டத்தில் நடந்த தலித் சகோதரிகளின் மரணத்தைப் போன்றே உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட NCRB அறிக்கையில், 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,28,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்  பெண்களுக்கு எதிரான அதிகக் குற்றங்களுடன் 56,093 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் 218 கூட்டுப் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன. இதிலும் உ.பி. தான் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் நடைபெறும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் 26 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில்தான் நடக்கின்றன.

யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக முன்னிறுத்தப்படும் உ.பி.-இல், பெண்கள், தலித்துகள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்களைக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்வது, வீடு புகுந்து சிறுமிகளைத் தூக்கிச் செல்வது, அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்கவிடுவது என சர்வசாதாரணமாக நடக்கின்றன.

பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களிலும் இந்த நிலை வேகமாக வளர்ந்து வருகிறது. அண்மையில், உத்தரகாண்டில் பா.ஜ.க தலைவரின் மகன் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததற்காக இளம்பெண்ணைக் கொலை செய்தது அம்பலமாகியது ஒரு சான்றாகும். தென்னிந்தியாவின் இந்துராஷ்டிர சோதனைச் சாலையாக மாறிவரும் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தில் இரண்டு சிறுமிகள் (ஒரு தலித் சிறுமி) மூன்றாண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், அந்த மடத்திற்கு பா.ஜ.க ஆதரவு அளித்து பாதுகாத்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் போதே, பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றால், இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இவை உணர்த்துகின்றன.


அறிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க