டந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சந்திரன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர் ஒருவர் நந்தி கடற்கரையில் உள்ள முகாமில் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து சந்திரன், ஜாமீன் கோரிய மனுவுடன் புகார்தாரரின் புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி அன்று இவ்வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த கேரள நீதிபதிகள் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போது அப்பெண் உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவு இதற்கு பொருந்தாது. அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறி சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட 74 வயதான காமவெறி பிடித்த சந்திரன், மாற்றுத்திறனாளியாக இருப்பதால் இன்னொரு நபரை எப்படி பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தி இருக்க முடியும் என்றும் நீதிமன்றம் அப்பெண்ணை இழிவுப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டது. ஆனால் குற்றவாளி சந்திரன் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

மேலும், சமீபத்தில் 39 வயதான நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அச்சிறுமியிடம் தவறாக நடக்கமுயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஸ்பா கனேடிவாலா விசாரித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தும்  நோக்கத்துடன் ஒருவர் அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே என்ற ஒரு கேவலமான யாராலும் சகித்துக்கொள்ள முடியாத தீர்ப்பை வழங்கினார்.


படிக்க : உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!


இதேபோல்தான் கடந்த மே மாதம் பாலியல் தொழில் என்பதும் ஒரு தொழிலே. சட்டத்தின்படி பாலியல் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும், சமமாக நடத்தப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதிற்கு மேற்பட்டோரை போலீசுத்துறை தொந்தரவு செய்யவோ, அவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவோக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது அவர்களை மீட்டு எடுப்பதற்கான எந்த வழியையும் சொல்லாமல், பாலியல் தொழில் என்னும் புதைக்குழுயில் அவர்களை இன்னும் ஆழமாக அழுத்தும் வகையிலான தீர்ப்பை வழங்கியது.

உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று முட்டாள்தனமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், காஷ்மீர் ஆஃசிபா வழக்கிற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

காஷ்மீரில் கத்துவா என்ற கிராமத்தை  சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஆடு, மாடு, குதிரை  மேய்த்து பிழைப்பு நடத்தும் குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர். ஒருநாள் மதியம் சிறுமி காட்டில் விடபட்ட குதிரைகளை தேடி சென்றபோது, அச்சிறுமியை ஆதிக்க சாதியை சார்ந்த 7 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொன்றனர். இந்த 8 வயது குழந்தை உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததா? அதனால் தான் அக்குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதா? இந்த கேள்விக்கு இந்த நீதிமன்றங்கள் என்ன பதில் சொல்லும் ?

உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுகொள்ளப்படாது என்றால் இங்குள்ள நீதிமன்றங்கள் என்ன சொல்ல வருகின்றன? இவர்கள் சொல்லும் ‘அடக்க ஒடுக்கமான’ ஆடை அணியும் பெண்களுக்கு மட்டும்தான் இங்கு நீதி கிடைக்கும் என்று சொல்ல வருகின்றனவா? இல்லை, அப்படி ‘உணர்ச்சியை தூண்டாத வகையில்’ ஆடை அணியும் பெண்களை பாலியல் வல்லுறவில் இருந்து பாதுகாக்க முடியும் என்றுதான் இந்த நீதிமன்றங்களால் உத்தரவாதப்படுத்த முடியுமா?

முதலில் உணர்ச்சியை தூண்டும் ஆடை, உணர்ச்சியை தூண்டாத ஆடை என்பதை எதை வைத்து வகைப்படுத்துவது. “இந்த மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் இப்படி தான் நடக்கும்” என்ற ஆணாதிக்கவாதிகளின் கருத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதது தான் கேரள உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு.

இவ்வாறு தொடர்ச்சியாக நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்க்கும்போது இந்த சமூகத்தில் புரையோடி போய் கிடக்கும் ஆணாதிக்க சிந்தனை நீதிமன்றங்களையும் விட்டுவைக்கவில்லை என்பது புரிய வருகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், கேரள நீதிபதி ஏதோ போகிற போக்கில் இத்தீர்ப்பை வழங்கவில்லை. 354 ஏ என்ற சட்டப்பிரிவை கோடிட்டு காட்டிதான் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஏற்கனவே இருக்கின்ற சட்டமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக உள்ளது என்பது முக்கியமான அம்சம்.


படிக்க : மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!


ஒரு பக்கம் இந்த அரசு பெண்கள் பாதுகாப்புக்காக பல சட்டங்களையும் நடவடிக்கைகளையும் எடுப்பதுபோல பொதுவெளியில் வேடம் போட்டுகொண்டு, மறுபக்கம் அரசே நீதிமன்றத்தின் வாயிலாக ஆணாதிக்க சிந்தனையால் பெண்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

இதைதான் உலக தத்துவவாதியான ஏங்கல்ஸ், “முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டபகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும் இப்போது அவை அப்படியே பின்னிலைக்கு தள்ளபட்டுவிட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை இரகசியமாக செயல்பட்டு வந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள் அவற்றைவிட ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின” என்று கூறினார்.

இதுபோல் தொடர்ச்சியாக நீதிமன்றங்கள், முதலாளித்துவ ஆணாதிக்க சிந்தனையை தூக்கி பிடித்து பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளை அதிகரிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கி வருகின்றன. இதை எதிர்த்து நாம் அனைவரும் ஒரே வர்க்கமாய் ஒன்றிணைந்து இந்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பை தகர்த்தெரிந்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கினால் மட்டுமே இதுபோன்று பெண்கள் மீது சட்டரீதியாகவே நடக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியும்.


செழியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க