காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான 50 ஆண்டுகால விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாகவே, காவிரி மேலாண்மை ஆணையமானது அமைக்கப்பட்டது.

தற்போது அந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமே, நம் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான வேலையை மோடி அரசு திரைமறைவில் செய்துவருகிறது. மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுத்து தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

***

தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மொத்தம் 11 மாவட்டங்கள் காவிரி நீரையே விவசாயத்திற்கான ஆதாரமாகவும் குடிநீர் தேவைக்கும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், காவிரிக்கு நடுவே கர்நாடகாவின் மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் முயற்சியை அம்மாநிலத்தின் அரசுகள் பல காலமாக மேற்கொண்டுவருகின்றன. 11 மாவட்டங்களையும் பாலைவனமாக்கும் இம்முயற்சியை எதிர்த்து தமிழக மக்களும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனால், அவர்களின் முயற்சி இதுவரை கைகூடவில்லை.

ஆனால் இன்றைய பா.ஜ.க. தலைமையிலான கர்நாடக அரசு மிகுந்த இனவெறியோடு மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. அதற்கு மத்தியில் உள்ள அவர்களது ஆட்சியும் அனுசரணை செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏவியுள்ளார்கள்.


படிக்க: மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!


இம்முறை நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்டம் விவாதிக்கப்பட இருக்கிறது என்று ஆணையம் தகவல் வெளியிட்டது.

இத்தகவல் வெளியான உடன் தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய போதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தபோதும் “மேக்கேதாட்டு தொடர்பாக விவாதிக்க எங்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது” மிகுந்த ஆணவத்தோடு அறிவித்தார் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்.

இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தை விவாதிக்கக் கூடாது என தமிழக அரசானது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதா என விசாரிக்கப் போவதாகவும் இதுதொடர்பாக ஆணையத்தின் கருத்தையும் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தது.

நான்கு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைக் கண்காணித்து, வழிகாட்ட அமைக்கப்பட்டதே மேலாண்மை ஆணையம். இந்த நடுவர் வேலையைத் தாண்டி அதற்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது. மேலும் நதிநீர் பங்கீட்டில்கூட மாநில அரசுகளுக்கு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, அவைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு கிடையாது.

இவ்வாணையம் அமைக்கப்பட்டபோதே, இது “பல்லில்லாத ஆணையம்” என்று புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதையெல்லாம் உச்சநீதிமன்றம் நன்கறியும். இருந்தும் தீர விசாரிக்க வேண்டும் என்று சொல்வதும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரத்தைப் பற்றி ஆணையத்திடமே கருத்தறிய விரும்புவதாகக் கூறுவதும் நீதிமன்றம் காவிகளின் திரைமறைவு சதிக்கு துணைபோவதை அப்பட்டமாக காட்டுகின்றன.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை இழுப்பதானது, அணை கட்டுவதற்கான அனுமதியை மோடி அரசு நேரடியாக வழங்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்குவதற்கான நோக்கத்தின் வெளிப்பாடே.

மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை ஆதரித்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதித்தால், மோடி அரசானது நேரடியாக அனுமதி கொடுத்த மாதிரி இருக்காது. காவிரி மேலாண்மை ஆணையம்தான் அனுமதி கொடுத்தது. அது தன்னிச்சையானது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம்.

***

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் மோடி அரசானது நடுநிலையாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கோண்டே கர்நாடகாவிற்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவுமே செயல்பட்டுவந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ, இதை மக்கள் முன் அம்பலப்படுத்தி தமிழகத்தைக் கிளர்ச்சியூட்டாமல் சந்தர்ப்பவாதமாக மூடி மறைத்தது.

கர்நாடக முதலமைச்சர் டெல்லி சென்று பேசும்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அணையை கட்ட உத்திரவாதம் அளித்திருக்கிறார் என்று கூறுவார். தமிழக அமைச்சர்களும் போவர், டெல்லி சென்றுவந்து “தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணையைக் கட்டவிட மாட்டோம்” என்று மத்திய அரசு உறுதியளித்ததாகச் சொல்வர்.

ஆனால், முன்னர் மேக்கேதாட்டு அணைக் கட்டுமானம் பற்றி, கர்நாடக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லிக் கேட்டுப் பெற்றது மோடி அரசு. திட்டத்திற்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான் விரிவான திட்ட அறிக்கை கேட்பது வழக்கம். எனவே தமிழக மக்களின் தரப்பில் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அப்போது டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்த துரைமுருகன், “மேக்கேதாட்டு அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை. எனவே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்று பதிலளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை ஏன் கேட்டுப் பெற்றீர்கள் என சட்டையைப் பிடித்துக் கேட்காமல், மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என ‘வலியுறுத்தினோம்’ என்று கூறினார் துரைமுருகன்.

மோடி அரசின் நயவஞ்சகமான அணுகுமுறை தெரிந்தும், “மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்”, “அணையைக் கட்ட விடமாட்டோம்” என்று சவடாலாகப் பேசுவது தமிழக மக்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.

***

50 ஆண்டுகாலம் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு அரசுகளுமே காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் ஒரே நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இக்காலத்தில் நமது நீர் உரிமையை நாம் படிப்படியாக இழந்துவந்துள்ளோம்.


படிக்க: மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


தமிழ்நாடு 1970-ல் அமைக்கக் கோரிய நடுவர் மன்றத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகே அமைத்தது, அப்போதைய காங்கிரஸ் அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக 2007-ல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை தமிழக மக்களின் விடாப்பிடியான போராட்டங்களுக்குப் பிறகே 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

இக்கால கட்டத்தில் தமிழகத்தின் நீர் ஒதுக்கீடானது படிப்படியாக குறைக்கப்பட்டு, தமிழக மக்களுக்கு துரோகமிழைக்கப்பட்டது. 1924-ல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரியாக 361 டி.எம்.சி, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் இறுதியாக 177.25 டி.எம்.சி என கடுமையாகக் குறைந்துவிட்டது.

கர்நாடகாவானது கடந்த காலங்களில் மத்திய அரசின் முறைப்படியான எந்த ஒப்புதலும் பெறாமல் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கபிணி அணை, ஹேரங்கி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி என பல நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் காரணமாகவே தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் வரத்து குறைந்தது. இதற்கு மத்திய அரசுகளும் உடந்தை.

கடந்த பத்தாண்டுகளில் கர்நாடக அரசானது தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், திறந்துவிடப்பட்ட காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்கி வைக்க முடியாத உபரி நீரைத்தான் கர்நாடகாவானது தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது என்ற உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக தமிழகத்தை மாற்றியுள்ளது என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.

தற்போது மேக்கேதாட்டு அணையை கட்டுவதன் மூலம் குறைந்த அளவாக வரும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி, தமிழகத்தைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. இதன் மூலம் தமிழகத்தின் மீதான தன் இனப்பகைமையைக் காட்டிக் கொள்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் மோடி அரசு மறைமுகமாக செய்துவரும் சதித்தனங்களை அம்பலப்படுத்திப் போராடாவிட்டால், தமிழக டெல்டாவில் இனி நாம் பச்சை வயல்களைப் பார்க்கவே முடியாது.


அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க