டந்த மாதம் (ஜூன் 2022) 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிரான மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிராக தமிழ்நாட்டுத் தலைவர்கள் முதல்வர் உட்பட பலரும் எதிரிப்புத் தெரிவித்தனர். அதன் பின்னரும் கூட காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் கூட்டம் ஜூன் 23, 2022 அன்று நடைபெறும் என்றும் அதில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதற்கு முழு உரிமை தங்களுக்கு உண்டென்றும் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.

மேக்கேதாட்டு திட்ட அறிக்கையை விவதிப்போம் என்று அறிவித்த ஹல்தர் காவிரி நீர் இருப்பு குறித்து மேட்டூர் அணையிலும் கல்லணையிலும் ஆய்வு செய்திருக்கிறார். கர்நாடக அரசு காவிரி குறுக்கே அணை கட்ட மும்முரமாக முயற்சி செய்துவரும் நிலையில் மேட்டூர் அணையிலும் கல்லணையிலும் நடைபெற்ற இந்த ஆய்வு தமிழகத்தின் மீது அடுத்த இடியை இறக்குவதாக உள்ளது. கல்லணையில் காவிரி மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தபோது கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மேக்கேதாட்டுவில் அணை அமைப்பதற்காகவே மேலாண்மை குழு ஆய்வு செய்ய வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகளின் கூற்று உண்மைதான். விரைவில் தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் காவிரிக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலைவரும்.


படிக்க : மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியான உடனேயே தமிழ்நாட்டு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதில் “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிப்பதற்குத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக்காட்டப்படும். உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சினைக் குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆகையால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினைக்குத் தீர்வு அளிக்கும் வரை மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்” என கர்நாடக முதல்-மந்திரிக்கு அறிவுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசின் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் எழுதிய கடிதத்தில் “வழக்கு நிலுவையில் இருப்பதால், ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்துப் பேசக் கூடாது என்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை “காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்களை நடத்தியிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு திட்டத்துக்கு எதிராகப் பேசவில்லை. தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் மேக்கேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என எதிர்க்கிறது. தமிழ்நாடு அரசு காவிரியை வைத்து அரசியல் செய்கிறது. ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள் குறித்து ஆணையம்தான் முடிவெடுக்கும். எனவே, இதில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. ஆணையத்தின் சுதந்திரத்தில் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆணையம் தனது அதிகாரத்தை மீறிச் செயல்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு அதி தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி, அணை தொடர்பாக முதற்கட்ட பணிகளைத் தொடங்க, பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது ஆளும் பா.ஜ.க அரசு. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் தரக் கூடாது என்று வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தையும் தமிழ்நாட்டின் ஆளுனர் தனது புட்டத்துக்கு அடியில் வைத்து ஆணவத்துடன் அமர்ந்திருக்கிறார்.

கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் மேக்கேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இனவெறிப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல, ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் இனவெறியைத்தூண்டி மேக்கேதாட்டுவில் அணைகட்டியே ஆக வேண்டும் என்று கூறிவருகின்றன.

இச்சூழலில்தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் எஸ்.கே.ஹல்தரோ “மேக்கேதாட்டு தொடர்பாக விவாதிக்க எங்களுக்கு எல்லாவித உரிமையும் உள்ளது” என்று திமிர் தெனாவெட்டாக அறிவித்தார் என்பதையும் நாம் உணர வேண்டி உள்ளது.

கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வையும் தமிழ்நாட்டு அரசின் இறையாண்மையையும் சல்லிக்காசுக்குக்கூட மதிக்காத ஹல்தரின் பேச்சைக்கண்டித்து தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும் காவிரி நீர் ஆகும். இத்தகைய சூழலில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுக்கவும், நீர்வரத்தைக் குறைக்கவும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது. அதில் மிகமுக்கியமானது, மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம்! மேக்கேதாட்டு அணையைக் கர்நாடக அரசு கட்டுவது என்பது, தமிழகத்தின் காவிரி உரிமையைத் தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாகத் தமிழக விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானதாகும்”

“மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேத்தாட்டு அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பதும்தான் தமிழக அரசின் உறுதியான – இறுதியான நிலைப்பாடு!”

நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பின்னரே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நதிநீர்ப் பகிர்வுக் குறித்த தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது என்றும், அந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீர் தங்கள் எதிர்பார்ப்பிற்கும் தேவைக்கும் போதுமானதாக இல்லை என்ற சூழலில், கிடைக்கும் தண்ணீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கர்நாடக அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான பிரச்சினை என்பதை தெரிவித்து இருந்தார்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே தொடர்ந்த 3 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜூன் 7-ம் தேதி மேலும் ஒரு புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்த முக்கியமான கேள்விகள் இந்த வழக்குகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருந்தன என்பதும் முக்கியமான அம்சமாகும்.

எனவே, மேக்கேதாட்டு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய ஜல்சக்தி துறைக்கு மோடி அறிவுறுத்த வேண்டும் என ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


படிக்க : காவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு !


“காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்” என்று தமிழ்நாட்டு அரசின் முதல்வரே வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் அளவுக்குத்தான் தமிழ்நாட்டின் இறையாண்மை இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. ஆக, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இல்லாத உரிமை ஒரு ஆணையத்தின் தலைவருக்கு இருக்கிறது எனில் எதற்கு சட்டமன்றம்? எதற்கு மாநில அரசு?

ஜூலை 23 அன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம், ஜூலை 6-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. தேதிகள் மாறினாலும் காவிரி நம்மிடமிருந்து பறிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இதனால், காவிரி நடுவர் மன்ற தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி நதியில் கூறப்பட்ட உரிமைகள் எல்லாம் கேள்விக்குறியாகி விட்டன.  ஈராயிரம் ஆண்டுகளாக நம் உடலோடும் உயிரோடும் கலந்து தமிழரின் இலக்கியங்களிலும் மூச்சிலும் பேச்சிலும் வெளிப்பட்ட காவிரியின் மீதான நேசமும் பாசமும் இனி அற்றுப்போய்விடுமா என்பதை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

பல்லாண்டுகளாக தமிழர்களும் தமிழகமும் ஒரே முகமாக தொடர்ந்து விடாப்பிடியாக பல உயிர்களை இழந்து போராடியதன் விளைவாகவே குறைந்த பட்ச அளவிலான காவிரி நீர் உரிமையையாவது நாம் தக்க வைத்து இருக்கிறோம். அப்படி போராடி பெற்ற உரிமைகளுள் ஒன்றுதான் காவிரி மேலாண்மை வாரியம். இதற்காக தமிழகம் கொடுத்த விலையோ மிகவும் அதிகம். எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல்கள், பேருந்து உடைப்புகள், ரயில் மறியல்கள் அத்தனையும் சொல்லி மாளாது. 2018-ல் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு ஒட்டு மொத்த தமிழகமும் GO BACK MODI என்ற முழக்கத்தால் வரவேற்பு அளித்தது. நாட்டின் பிரதமர் சென்னை ஐ.ஐ.டி-க்கு மூத்திர சந்து வழியாகத்தான் செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கியது தமிழ்நாடு. ஆனால், நாம் நடத்திய அத்தனை போராட்டங்களும் தியாகங்களும் வீணாய்ப்போனாதா என்ற கேள்வி நம்மை சுட்டுப்பொசுக்குகிறது.

***

காவிரியின் வரலாற்றை எத்தனை முறை சொல்வது? சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டுவது காவிரிக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்குமான  வரலாற்றுப் பூர்வமான விவரிக்க முடியா உறவை எத்தனை முறை விளக்குவது? இதெல்லாம் ஏதும் அறியாமல்தான் பாசிச மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – அதானி – அம்பானி கும்பலுக்கான ஆட்சி நடைபெறுகிறதா என்ன?

காவிரி நடுவர் மன்ற, இறுதி தீர்ப்பின்படி கே.ஆர்.எஸ்., மற்றும் கபிணி அணைகளில் இருந்து, தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுக்கு, மாதாந்திர அடிப்படையில் 177.25 டி.எம்.சி., தண்ணீர் விட வேண்டும். இந்த தண்ணீரை தேக்க வேண்டுமானால் மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதியளிக்கக் கூடாது என, தமிழகம்  போராடி வருகிறது. மேக்கேதாட்டுவில் அணை கட்ட உரிமை இல்லாத கர்நாடக அரசு வைத்த வாதத்தின் அடிப்படையில் அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து விவாதிக்கலாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது என்றால் தமிழ்நாடு என்ன அவ்வளவு இழிவாகப் போய்விட்டதா என்ன?

இசுலாமியர்களுக்கு இனி இந்தியாவில் கண்ணியமான வாழ்வு இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளதோ அதைப்போல தமிழர்களுக்கும் அவலமான நிலை அல்லவா ஏற்பட்டிருக்கிறது. இசுலாமியர்கள் ஹிஜாப் அணியக் கூடாது, பாங்கு ஓதக் கூடாது, தொழுகை நடத்தக் கூடாது, மசூதிகள் எப்போதும் ஆய்வுக்குள்ளாக்கப்படும், தாடி வைத்திருக்கக் கூடாது, மாட்டுக்கறி உண்ணவோ மாடு வளர்க்கவோக் கூடாது, இசுலாமியன் எப்போதும் இந்தியப்பற்றை வெளிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இசுலாமியன் தன்னை இசுலாமியனாக ஒருபோதும், அடையாளப்படுத்திக் கொள்ளவேக் கூடாது.

அதைப்போலத்தான் தமிழினமும் தமிழகமும் இருக்கின்றது. தமிழர்களின் நிதியில் உருவான மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வால் தமிழர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அந்நியப்பட்டுப்போய் நிற்கிறதே! தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் கூடாரங்களாகிக் கொண்டு இருக்கின்றனவே! தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பும் இடமாக மாறிப்போய் விட்டனவே! இந்தி அரக்கி ஒழிக! என்று ஓங்கி ஒலித்த தமிழகத்தில் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோடாரிக் காம்புகளும் பார்ப்பன பண்டாரங்களும் ஊளையிடத் தொடங்கிவிட்டனவே! தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கெல்லாம் இந்தி படித்தால் பதவி உயவும் உதவித் தொகையும் அளிக்கப்படுகிறதே! தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மாநில முதலமைச்சர்  பகிரங்கமாக மேடையில் சொல்ல வேண்டிய நிலையும் என்னதான் பேசினாலும் பிச்சைக்காசு போல கொடுக்க வேண்டிய நிலுவையை வீசுகிறதே ஒன்றிய அரசு! முல்லைப் பெரியாரிலும் தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை. பாலாற்றிலும் தமிநாட்டுக்கு உரிமை இல்லை. இதோ இப்போது காவிரியிலும் உரிமை இல்லையா? தமிழனும் தமிழ்நாடும் இனி சுயமரியாதையான கண்ணியமான ஒரு வாழ்வை பாசிச மோடியின் இந்தியாவில் இனி எதிர்பார்க்க முடியுமா?


படிக்க : மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !


2018-ல் தமிழ்நாட்டில் GO BACK MODI இயக்கம் நடைபெற்றபோது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருந்தது? இன்றோ எல்லா சாதி சங்கங்களையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, ரவுடிகள் – சமூக விரோத கும்பல்கள் – கொலைகாரர்கள் ஆகியோரை கொண்ட கிரிமினல் கும்பலாக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரிணமித்து இருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் இணை ஆட்சியை நடத்தி வருகின்றார். அதனால், ஆதீனங்கள் முதல் அண்ணாமலை வரையிலான எல்லா கழிசடைகளும் பன்றி சேற்றிலிலிருந்து வெளியேவந்து சேற்றை சிலுப்புவதுபோல நம்மீது சேற்றை சிலுப்பிக்கொண்டு திரிகின்றன. இச்சூழல் தமிழர்களின் சுயமரியாதையையும் சொரணையையும் அதிகமாகவே சுரண்டிவிட்டது.

என்ன ஆனாலும் சரி, நம்முடைய தன்மானத்தை ஒருபோதும் இனி இழக்கலாகாது. ஆடுகளைப்போல பல ஆண்டுகள் வாழ வேண்டுமா? புலிகளாக சில நாட்கள் வாழவேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் அல்லவா நாம் இருக்கிறோம்! காவிரி வேண்டுமா? காவிக்கு பாடைக்கட்டு!  தமிழ்நாடா? மோடியா? என்று நாம் வீதியில் இறங்காதவரை தமிழர்கள் அனாதைகளாக்கப்படுவதும் விரைவில் நடக்கும்.

தமிழ் இனத்துக்கும் தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – பாசிச மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியாய் நின்று போராட வேண்டிய தருணம் இது. இது ஏதோ தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டம் மட்டுமல்ல; தமிழர்களைப் போலவே உரிமைகள் ஏதுமற்ற அறிவிக்கப்படாத ஏதிலிகளாக இருக்கும் இசுலாமியர், கிறித்துவர், வட கிழக்கினத்தவர்கள், சிறுபான்மை மொழி – இன – மத மக்கள் உள்ளிட்டோரின் உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மோடி – அமித்ஷா – அம்பானி – அதானி பாசிச கும்பலின் அதிகாரத்தை வீழ்த்தும் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க