டந்த ஆண்டு ஜூலை மாதம், “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டியே தீருவோம்; இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை” என கூறியது எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு. திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிக்கத் தொடங்கியது.
சட்டத்திற்கு புறம்பாக பிரச்சினையை கிளப்பிவரும் கர்நாடக அரசின் அடாவடியை நிறுத்தாமல், அணை கட்டுமானப் பணிகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தனது தமிழின பகைமையை காட்டியது மத்திய மோடி அரசு.
“இது சட்ட நெறிமுறைகளை மீறிய செயல், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பா.ஜ.க. தவிர்த்த தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
படிக்க :
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
கர்நாடக அரசையும் மத்திய மோடி அரசையும் கண்டித்து விவசாய சங்கத்தினர் உட்பட பலரும் போராடினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தருமபுரி மண்டலம் சார்பாக மேக்கேதாட்டு நோக்கி பேரணியும் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது மேக்கேதாட்டு அணை.
இந்நிலையில், அகில இந்திய அளவில் பாசிச பா.ஜ.க.விற்கு எதிரான ஒரே மாற்று எனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் கார்நாடக பிரிவு, ஓட்டு பொறுக்கும் அரசியலுக்காக மேக்கேதாட்டு அணை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
000
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு நீர்த்தேக்கக் கட்டுமானப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி மேக்கேதாட்டிலிருந்து பெங்களூரு நோக்கி “எங்கள் தண்ணீர் எங்கள் உரிமை” என்ற முழக்கத்தின் கீழ் பத்து நாட்கள் பாதயாத்திரையை நடத்த திட்டமிட்டது கர்நாடக காங்கிரஸ்.
அதன்படி, கடந்த ஜனவரி 9 அன்று காலை, ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில், காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் புடைச்சூழ, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முரசு கொட்டி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் உட்பட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையைத் தொடங்கிவைத்து பேசிய எம்.மல்லிகார்ஜூன கார்கே, “இரு மாநிலங்களுக்கும் (கர்நாடகா-தமிழகம்) உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது” என்றார்.
கனகபுரா எம்.எல்.ஏ.வும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “இந்த பாதயாத்திரை மக்களுக்கானது; காங்கிரஸ் கட்சிக்காகவோ, பதவிக்காகவோ அல்ல” என்றார். தொடர்ந்து, “அன்று இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் போராடியதுபோல, இன்று தண்ணீருக்காக பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறோம்” என்று இழிவான இனவெறியை தங்களின் போலி விடுதலைப் போராட்டத்தோடு இணைத்தார்.
சித்தராமையாவோ, தனது தலைமையிலான காங்கிரஸ் அரசால்தான் மேக்கேத்தாட்டு அணை திட்டம் தொடங்கப்பட்டது என்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மாநில மக்களுக்கு, ஆளும் பா.ஜ.க. துரோகம் இழைத்துள்ளதாகவும் தமிழகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் சாடினார்.
இதன் மூலம் தமிழினத்தை வஞ்சிப்பதில் பா.ஜ.க.வை விட கர்நாடக காங்கிரஸ்தான் முன்னோடியாக இருக்கிறது என்று பறைசாற்றிக் கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்த பா.ஜ.க. முதல்வர் பசவராஜ் பொம்மை, “தனது ஆட்சிக்காலத்தில் மேக்கேதாட்டு திட்டத்தை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களுக்கு துரோகமிழைத்தது காங்கிரஸ்தான்” என குற்றம்சாட்டினார்.
மேலும், கிருஷ்ணா நதிநீர் திட்டத்திற்கு காங்கிரஸ் அறிவித்த ரூபாய் 10 ஆயிரம் கோடியில் வெறும் 7 ஆயிரம் கோடிதான் செலவு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டு, எந்தவொரு நீர்ப்பாசனத் திட்டத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக நின்று செயல்படவில்லை என்றார்.
அத்துடன் “மேக்கேதாட்டு திட்டத்தை பா.ஜ.க.தான் மேற்கொண்டுவருகிறது. நான் முதலமைச்சரான பிறகு, திட்டம் குறித்த முழு அறிக்கையும் மத்திய நீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இம்மாதம் இத்திட்டம் குறித்த கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
000
ரூபாய் 9 ஆயிரம் கோடி செலவில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதன் நோக்கம், குடிநீர் நீர்த்தேக்க கட்டுமானம் அமைத்து உபரி நீரைத் தேக்கிவைப்பதும், அதன் மூலம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் மின் உற்பத்தி செய்வதும்தான் என்கிறது கர்நாடக அரசு.
ஆனால், இது தமிழகத்தின் நீர் உரிமையை பறிக்கும் கர்நாடக கட்சிகளின் இனவெறித் திட்டம் என்பதோடு, பெங்களூருவிலுள்ள ஓட்டல், ரியல் எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காகவே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டப்படுகிறது. கர்நாடகத்தின் நீர் ஆதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கர்நாடக மக்களின், விவசாயிகளின் நலனுக்கான திட்டம் என புளுகி வருகிறது கர்நாட இனவெறிக் கட்சிகள்.
கர்நாடகாவில், ஏற்கெனவே காவிரியின் துணையாறுகளின் குறுக்கே நான்கு பெரிய அணைகளும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளன. கர்நாடகவிலுள்ள பெரிய அணைகள் மூலம் மட்டுமே 104.55 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்கப்படுகிறது. அதனால், கர்நாடகத்தின் தேவைக்குப் போக மீதமான நீர்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், இந்த உபரி நீரும் தமிழ்நாட்டிற்கு வராது.
காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழ்நாட்டின் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலைவனமாகிவிடும். சென்னை, ராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு குடிநீரும் கிடைக்காது.
ஏற்கெனவே, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் தர மறுத்துவரும் கர்நாடக அரசு, மேக்கேதாட்டில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாகச் சமாதிகட்ட முயற்சிக்கிறது.
000
பல வகைகளில் பா.ஜ.க. உடன் கொள்கை வேறுபாடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு விரோதமாக கன்னட இனவெறியை கிளப்பிவிடுவதில் பா.ஜ.க.வுடன் போட்டி போட்டுவருகிறது.
பலவீனமாக இருந்தாலும் தேசிய அளவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு மாற்று காங்கிரஸ்தான். அதுதான் மதச்சார்ப்பற்ற கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி. எனவே அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசை ஆதரிக்கலாம் என்று சிந்திக்கக்கூடிய முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அறிவுத்துறையினரும் மேக்கேதாட்டு விசயத்தில், கர்நாடக காங்கிரஸின் செயல்பாடுகளை தேசியத் தலைமை கண்டுகொள்ளாமல் வாய்பொத்திக் கொண்டிருப்பதை சற்று காண வேண்டும்!
படிக்க :
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
ஓட்டுப் பொறுக்கிகளுக்கு, ஓட்டுப் பொறுக்குவதற்கு உட்பட்டதுதான் கொள்கை-கோட்பாடுகள். இனவெறியை தூண்டினால் ஓட்டு கிடைக்குமென்றால் காங்கிரசு அதற்கு தயாராகவே இருக்கும் என்று காட்டுகிறது.
இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வைப் போல அல்ல, காங்கிரஸ் ‘மென்மையானது’ என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்த ‘மென்மை’ காவி பாசிசத்தின் ‘வன்மை’யிடம் அடிபணிந்துவிடும் என்பதைக் குறிப்பிட்டுதான் நாம் சாடுகிறோம்.
எனவே பாசிச எதிர்ப்போ, அடிப்படை ஜனநாயக கோரிக்கைகளோ; அவற்றை வென்றெடுக்க வேண்டுமானால் மக்கள்திரளை அரசியல்படுத்துவதும் ஜனநாயக சக்திகளின் களப் போராட்டங்களும்தான் தீர்வளிக்குமே ஒழிய, ஓட்டுக்கட்சிகளில் ‘சாத்தியமான மாற்று’ தேடுவது அபத்தம் என்பதை மேக்கேதாட்டு விசயமும் நமக்கு சொல்லுகிறது.
வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க