ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனம் திறந்த மடல் !
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு,
வணக்கம்.. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம்
( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்கார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் தன் புகைப்படங்களையோ, பெயரையோ குறிப்பிட்டு செய்தி வெளியிடக்கூடாதென கோரிக்கை வைத்து தொடர்ந்த வழக்கு அது.
நீதிமன்றத்தில் முருகன் IPS தொடர்ந்த மனுவிற்கு Writ Petition எண் கொடுக்கப்படவில்லை. வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அந்த மனுவை நீதிமன்ற எண் -10-ல் விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு, மனுதாரர் என்னவெல்லாம் கேட்டிருந்தாரோ அதையே உத்தரவாக பிறப்பித்தது.
படிக்க :
♦ போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?
♦ நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
ஒருவேளை சட்டத்தில் அதற்கு இடமிருக்கலாம்.. நீதிபதிகளுக்கு அப்படி பிறப்பிக்க அதிகாரம் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம். அது சரி அல்லது தவறென்று நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு விநோதம் இருந்தது ! என்ன தெரியுமா ?
நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு 10-09-2018-ம் தேதியன்று இணைந்து பிறப்பித்த உத்தரவு, அது ஒன்று மட்டுமே..
அன்றைய தேதியில் நீதிமன்ற எண் -10-ல் பிறப்பிக்கப்பட்ட மீதி அனைத்து உத்தரவுகளையும் நீதியரசர் கல்யாண சுந்தரம் மட்டுமே பிறப்பித்திருந்தார்.
ஆச்சர்யமாக உள்ளது தானே..
அதெப்படி ஒரே நீதிமன்ற விசாரணை அமர்வில் ஒரே ஒரு மனுவுக்கு மட்டும் இரண்டு நீதிபதிகள் இணைந்து உத்தரவை பிறப்பித்தனர் என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. கொஞ்சம் ஆழமாக தேடிய பின்னர் தான் தெரியவந்தது.
10-09-2018 -ம் தேதியில் இருந்து -14-09-2018 வரை அதாவது நான்கு தினங்கள் நீதியரசர் ஹுலுவாடி ரமேஷ் விடுப்பு என்று தெரியவந்தது. அதாவது விடுமுறையில் இருந்தார். ஆனாலும்,, அவரது பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த ஒரு மனுவிற்கு.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மனுதாரர் முருகன் IPS மீது CBCID வழக்கு பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே முருகன் IPS மீது CBCID வழக்கை பதிவு செய்து விட்டது. அதிகாரம் மிக்க மனிதர்கள் நீதித்துறையில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை இந்த சம்பவம் உருவாக்க வாய்ப்பிருக்கிறது தானே !?
ஆம்.. அந்த எண்ணத்தை சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கியது. 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக இருந்த செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சந்திப்பில் நான்கு நீதியரசர்களும் கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை. தலைமை நீதிபதியுடன் பேசித் தீர்வு காண நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து விட்டன என சொல்லி எழுந்து செல்கிறார்கள்.

அப்படி அவர்கள் கூறிவிட்டு சென்ற 9 மாதங்களுக்கு பிறகு தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து, நீதித்துறை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பேராபத்து, தயவு செய்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என மக்களை நோக்கி கைகூப்பிய பிறகு என்ன செய்வது ?
பின்னர், ஏதோ ஒரு வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் விடுமுறையில் இருந்தபடியே உத்தரவு பிறப்பித்த விஷயம் வெளியில் வந்து விட்டது. அதன் பிறகு, கொலிஜியம் கவனத்திற்கு சென்றதாக கருதுகிறேன். சில நாட்களில் அவரை மத்திய பிரதேச நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து விட்டது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் எத்தனையோ சிறப்பான நல்ல தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர்.
மிகுந்த வருத்தத்துடன் எழுதுகிறேன். சமீப காலத்தில் 160 ஆண்டு காலம் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிஜேபி என்ற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு, விருப்பத்திற்கு ஏற்றவாறு சாதகமான தீர்ப்புக்களை வழங்குகிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்று மக்களிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் வார்த்தைகளின் படி, நேர்மையான இந்திய குடிமகன் என்ற உரிமையிலும் உங்களுக்கு சிலவற்றை தெரியப்படுத்தும் கடமை எனக்கிருக்கிறது.
24-01-2018-ம் தேதியன்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஷயம் சர்ச்சையானது. தமிழகத்தில் இருக்கும் “நாம் தமிழர்” என்ற கட்சியின் நிர்வாகிகள் காஞ்சி மடத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மடத்தின் மேலாளர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் மனு தாக்கல் செய்கிறார்.
நீதியரசர் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் 06-12-2021- ம் தேதியன்று உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது. அதில்..
தமிழக அரசின் குறிப்பாணை எண். 3584/70-4 தேதி 23.11.1970 -ன் படி உள்ளாட்சி அமைப்புக்கள், அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினார்.
தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கம் பாடல் தானே தவிர, பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார். சன்யாசிகள் குறித்து மிக உயர்வான கருத்துகளையும் கூட அந்த உத்தரவில் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் பதிவு செய்திருந்தார்.

ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நான்கு தினங்களில் அதாவது
06-12-2021- ம் தேதியன்று எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.. 10-12-21-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கப்படும் தருணத்தில் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது.
இந்த விஷயம் பார்ப்பதற்கு கொஞ்சம் லேசானது போல தெரியலாம். ஆனால்,,
நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஒரு விதமான மோதல் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறேன்.
மதுரையில் இருக்கும் மாரிதாஸ் என்ற நபர் Maridhas Answers என்ற Youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருடைய ஒரே நோக்கம் இலக்கு எல்லாம் திமுக என்ற கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடு வீழ்த்துவது மட்டுமே. ஆட்சியில் இருந்தாலும்-இல்லாவிட்டாலும் திமுகவை மட்டுமே திட்டி வீடியோ போடுவார். அரசியல் ரீதியாக அவரது வீடியோக்கள் பிஜேபிக்கு ஆதரவானவை. அது அவரது நிலைப்பாடு. தவறொன்றும் இல்லை.
ஆனால்,, கடந்த 2021-டிசம்பர் மாதம் 10-ம் தேதி குன்னூரில் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிறது.
அது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவொன்றை போடுகிறார். அது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
போலீசார் கைது செய்கின்றனர்.
கொரோனா தொற்றின் முதலாம் அலை பரவல் தொடங்கியபோது தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் தான் பரவலுக்கு காரணம் என்று அவர் பேசிய வீடியோ குறித்து கொடுக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுகிறார். மாரிதாஸின் கைதை கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் செயல், என தமிழக பிஜேபியினர் பெரும் அரசியல் யுத்தத்தையே நடத்தி வந்தனர். பிஜேபியின் பல தேசியத்தலைவர்கள் கூட மாரிதாஸின் கைதை கண்டித்தனர். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
சம்பந்தப்பட்ட நபர் முழுக்க முழுக்க பிஜேபியின் அரசியலுக்கு உதவக்கூடியவர்.
ஆனால், விஷயம் அதுவல்ல.. தன் மீது போடப்பட்ட FIR – களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் இரண்டு மனுவும் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பே விசாரணைக்கு வந்தது. மனு தாக்கல் செய்த சில தினங்களில் பதிவு செய்யப்பட்ட FIR –களை ரத்து செய்ய வேண்டுமென்று உத்தரவை பிறப்பிக்கிறது நீதிமன்றம். அந்த உத்தரவு சட்டப்படியே கூட பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.

தோழரே மேற்கண்ட அனைத்து அநியாய கொடூர நடவடிக்கைகள் பற்றி வினவின் கருத்தையறிய காத்திருந்தேன்.முகநூலில் ஒரு பத்திரிக்கையாளர் கருத்துகளில் நீங்கள் மறைந்துகொண்டிருக்கீறீர்களோ என அச்சமாக இருக்கிறது.வினவின் கோட்பாடுகளில் மாறுதல்கள் செய்திருக்கிறீர்களா?அல்லது எழுதுபவர்கள் எண்ணிக்கை எண்ணங்கள் வறட்சியாகிவிட்டதா?
தோழரே கட்டுரைக்கு உரிய சரியான படங்களை தேர்வு செய்திருக்கீறீர்கள்.தயவுசெய்து படத்திலுள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.பல பேருக்கு சுவாமிநாதன் மாரிதாஸ் தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.விஷ ஜந்துக்களை அடையாளபடுத்தாமல் விட்டால் மக்களுக்கு பேராபத்து!அடையாளபடுத்தும்போதுதான் மக்கள் தெளிவுபெறுவார்கள்! என்ன செய்வது என்று தெரிவும் செய்வார்கள்!! மிக ஆழமான தெளிவான படிப்பவர்கள் மனதை கிளர்ந்தெழவைத்த கடிதம்.ரமணா… விற்கும் நெருடல் ஏற்படும் என நினைத்தாலும் குற்றமில்லை.