டுமலை சங்கர் ஆணவப் படுகொலை மேல்முறையீட்டு வழக்கில், அவ்வாணவக் கொலையின் முதன்மைக் குற்றவாளியும் சங்கரின் காதல் மனைவி கௌசல்யாவின் தந்தையுமான சின்னசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மற்றைய குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, அவரை விடுதலை செய்திருக்கும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு சம்பிரதாயமான எதிர்ப்புகளைத் தாண்டி, வேறெந்த சலனத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தவில்லை.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு எந்தளவிற்கு அநீதியானதோ, அந்தளவிற்கு தமிழகத்தின் மௌனமும் அநீதியானதுதான். சமூக நீதியைச் சாதித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் தமிழகத்திற்கு, அத்தகைய அருகதையுண்டா என்ற கேள்வியை முன்நிறுத்துகிறது, இந்த மௌனம்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர்-கௌசல்யா இணையர், மணக்கோலத்தில். (கோப்புப் படம்)

மற்றைய ஆணவப் படுகொலைகளைப் போல, சங்கர் படுகொலை கமுக்கமாக, காதும் காதும் வைத்தாற்போல நடக்கவில்லை. உடுமலைப்பேட்டை நகரின் முக்கிய கடைவீதியில், பகலில், பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். கூலிப்படையால் திரும்பத் திரும்ப வெட்டப்பட்டதால் ஏற்பட்ட 33 வெட்டுக்காயங்களால் துடிதுடித்து உயிரிழந்தார், சங்கர்.

சங்கரை மட்டுமல்ல, வீட்டை எதிர்த்து, சாதியை மறுத்து அவரைக் காதல் மணம் புரிந்துகொண்ட கௌசல்யாவையும் கொல்ல வேண்டும் என்பதும் இந்த ஆணவக் கொலையின் இலக்கு. கூலிப்படையால் வெட்டப்பட்ட கௌசல்யா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துக்கொண்டார்.

சங்கர் படுகொலையும் கௌசல்யா மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலும் ஆதிக்க சாதி பயங்கரவாதத்தின் வெளிப்படையான எடுத்துக்காட்டு. சாதிக் கட்டுமானத்தை மீறித் திருமணம் செய்துகொள்ளத் துணிவோருக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான எச்சரிக்கை, அச்சுறுத்தல். அதனால்தான் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, விடுவிக்கப்பட்டவர்களையும் உயர்நீதி மன்றம் தண்டிக்க வேண்டுமெனத் தாழ்த்தப்பட்ட அமைப்பினர் மட்டுமின்றி, ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

படிக்க:
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலெட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை உள்ளிட்டு 11 பேர் மீது சதி, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கௌசல்யா உள்ளிட்டு 163 பேர் சாட்சியம் அளித்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன் இந்த சாட்சியங்களின் அடிப்படையில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்குத் தூக்கு தண்டனையும்; 9- குற்றவாளி தன்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 11- குற்றவாளி மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் அளித்த அதேசமயம், கௌசல்யாவின் தாய் அன்னலெட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கூலிப் படையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு சங்கர் படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்கவில்லை என்றபோதும், பத்துக்கு ஒன்பது பழுதில்லை என்ற விதத்தில் அமைந்தது.

அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, விடுதலை செய்யப்பட்ட கௌசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரையும் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்கும் சங்கர். (கோப்புப் படம்)

தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை கோரி மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ விசாரணை நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்ட குறைந்த பட்ச நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. அத்தீர்ப்பு இவ்வழக்கில் சதிக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை எனக் கூறி, முதன்மைக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்துவிட்டது. மேலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கௌசல்யாவின் தாய் அன்னலெட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதி செய்திருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜும், ஐந்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டனும் விடுதலையாகியுள்ளனர்.

எஞ்சியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஐவரின் தூக்கு தண்டனை, அவர்கள் 25 ஆண்டு காலம் தண்டனைக் குறைப்பின்றிச் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
சின்னச்சாமி சதி செய்யவில்லை எனில், சங்கர் எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்? கூலிப்படையை ஏவிவிட்டது யார்? இந்தக் கேள்விகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பில் பதில் இல்லை. எய்தவர்களை விடுதலைசெய்துவிட்டு அம்புகளைத் தண்டித்திருக்கிறது, உயர்நீதி மன்றம்.

திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு ஏதோ மேம்போக்காக விசாரணை நடத்தித் தூக்கு தண்டனை அளித்துவிடவில்லை. சங்கர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் மார்ச் 12 (2016) அன்றும் அதற்கு மறுநாள் மார்ச் 14 அன்றும் கௌசல்யாவின் தாய் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.80,000/- பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.50,000/ சங்கரைப் படுகொலை செய்த கூலிப்படைக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.

படிக்க:
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !
நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!

சங்கரைப் படுகொலை செய்த கூலிப் படையினரோடு சின்னச்சாமி ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்ணால் பார்த்த இரண்டு பேர் விசாரணை நீதிமன்றத்தில் அது குறித்து சாட்சியம் அளித்தனர்.

இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது குற்றவாளி மணிகண்டன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகள் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை சின்னச்சாமி செய்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக, மணிகண்டனும் சின்னச்சாமியும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இது தொடர்பான சாட்சியத்தை குற்றவாளிகள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் விசாரணை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சின்னச்சாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோரை சிறை வாசலுக்கே சென்று வரவேற்கும் ஆதிக்க சாதி சங்கத் தலைவர்கள்.

மேலும், சின்னச்சாமி கூலிப்படை கும்பலுடன் பலமுறை கைபேசி வழியாகப் பேசி வந்திருப்பதும் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான நேரடி மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் கூட்டுச் சதி மற்றும் வன்கொடுமைக் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சின்னச்சாமிக்குத் தூக்கு தண்டனை விதித்தது விசாரணை நீதிமன்றம்.
இந்த சாட்சியங்கள் அனைத்திலும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து சின்னச்சாமியை சதிக் குற்றச்சாட்டிலிருந்தும் கொலைக் குற்றத்திலிருந்தும் விடுவித்திருக்கிறது உயர்நீதி மன்றம்.

சின்னச்சாமி சங்கரைக் கொலை செய்ய சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பல்வேறு சாட்சியங்களுள், பிப்ரவரி 6, 2016 தொடங்கி மார்ச் 6, 2016 வரையிலான இடைப்பட்ட நாட்களில் சின்னச்சாமி கூலிப்படையினரோடு கைபேசியில் உரையாடி வந்திருக்கிறார் என்ற சாட்சியத்தைத் தவிர, வேறு எந்தவொரு சாட்சியத்தையும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறுகிறது, உயர்நீதி மன்றத் தீர்ப்பு.

“சங்கர் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த இடத்தில் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியும் இருந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.”

“கூலிப்படையினர் தங்க சின்னச்சாமி தனியார் விடுதியில் அறை எடுத்துக் கொடுத்தார், அவர்களுள் ஒருவருடன் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அளிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண சாட்சியங்கள் போதுமானதாக இல்லை.”
சின்னச்சாமிதான் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தார், சின்னச்சாமிதான் அந்தப் பணத்தைக் கூலிப்படையினரிடம் கொடுத்தார் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்காததால், அச்சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக, “ஏ.டி.எம். மெஷினிலிருந்து சின்னச்சாமி பணம் எடுத்ததற்கான சி.சி.டி.வி. காட்சிப் பதிவை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை என்பதால், அரசு தரப்பின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.”

“சின்னச்சாமி கூலிப்படையினருடன் சேர்ந்து சதி செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறும் இரண்டு சாட்சியங்களும் சந்தேகத்திற்கிடமானவை.”
இவையெல்லாம் சதிக் குற்றச்சாட்டை மறுக்க நீதிமன்றம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கும் காரணங்கள். குறிப்பாக, கொலை நடந்த இடத்தில் சின்னச்சாமி இல்லை; விடுதியில் கூலிப்படையினர் தங்கியிருந்ததற்கான ரசீது சின்னச்சாமி பெயரில் இல்லை; சின்னச்சாமி கூலிப்படையினருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறும் சாட்சியங்கள், சின்னச்சாமி கூலிப்படையினருடன் சங்கரைக் கொலைசெய்வது குறித்துத்தான் பேசிக் கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்கவில்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தர்க்கம் செய்திருக்கிறார்கள்.

இதன்படி பார்த்தால், சின்னச்சாமியும் அன்னலெட்சுமியும் அரிவாளைத் தூக்கிக்கொண்டு சங்கரைக் கொலைசெய்ய பாய்ந்திருந்தால்தான் நீதிபதிகளின் சட்டப் புத்தி அதனை ஆணவக் கொலை என ஏற்றுக்கொண்டிருக்கும் போலும்!

இரகசியமாகத் திட்டமிடப்படுவதுதான் சதி எனும்போது, சின்னச்சாமி சங்கரைக் கொலை செய்வது பற்றித்தான் கூலிப்படையினரோடு பேசினாரா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் நீதிபதிகள். பிறகென்ன, சின்னச்சாமியும் கூலிப்படையினரும் சாதி ஒழிப்புப் பற்றியா பேசியிருப்பார்கள்?

கூலிப்படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.50,000/ சின்னச்சாமி தந்ததுதான் எனக் கூலிப்படையினரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும், அதனைச் சாட்சியமாக ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள், நீதிபதிகள். இதற்கெல்லாம் கையெழுத்திடப்பட்ட ரசீதை அல்லது புகைப்பட ஆதாரத்தையா காட்ட முடியும்?
கூலிப்படை தங்க அறை எடுத்துக் கொடுத்தற்கான ரசீது சின்னச்சாமி பெயரில் இல்லையாம்! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கித் தந்தார் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளனுக்குத் தண்டனை கொடுத்த நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும், அதற்கான ரசீதை, அதுவும் பேரறிவாளன் பெயரில் உள்ள ரசீதைப் பார்த்த பிறகுதான் தண்டனை அளித்தனவா?

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், அக்குற்றத்தோடு அப்சல் குருவைத் தொடர்புபடுத்த போதுமான சாட்சியங்கள் இல்லை என்ற நிலையில், சட்டத்தைப் புறந்தள்ளி, இந்து சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காகவே தூக்குத் தண்டனையை உறுதி செய்வதாகப் பச்சையாகக் கூறியது, உச்சநீதி மன்றம்.
சங்கர் படுகொலை வழக்கிலும் ஆதிக்க சாதிவெறியர் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தாழ்த்தப்பட்ட மக்களின், ஜனநாயக சக்திகளின் மனசாட்சி விரும்பியது. ஆனால், உயர்நீதி மன்றமோ ஆதிக்க சாதிவெறியர்களை விடுவிக்க சட்டத்தின் சந்துபொந்துகளைத் தேடி அலைந்திருக்கிறது.

இன்னொருபுறத்திலோ, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்திற்குப் பொருளாதார உதவி செய்வது குறித்துப் பேசும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 8 மற்றும் 8 ஆகிய இரண்டையும் ஒதுக்கிவைத்துவிட்டு இத்தீர்ப்பை அளித்துள்ளனர், நீதிபதிகள். மேலும், 300 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட இத்தீர்ப்பில் ஒரு இடத்தில்கூட இக்குற்றத்தைச் சாதி அடிப்படையில் அமைந்த ஆணவக் கொலை என நீதிபதிகள் பதிவு செய்யவில்லை.

இவை அனைத்தும் இத்தீர்ப்பின் நடுநிலை குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றன. சனாதனக் கருத்துக்களையும் ஆதிக்க சாதிவெறியர்களையும் ஆதரித்துப் பாதுகாக்கக்கூடிய இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இவ்வேளையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, சாதிரீதியாகப் பிளவுண்டு கிடக்கும் இச்சமூகத்திற்குச் சொல்லும் செய்தி என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒரு சின்னச்சாமியை விடுதலை செய்திருக்கும் இத்தீர்ப்பு, அதன் வழியாக நூறு சின்னச்சாமிகள் உருவாகிட வழிவகுத்துக் கொடுத்துவிட்டது.

மேலும், ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதற்கும் இந்தத் தீர்ப்பு இன்னுமொரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் இந்தச் சட்டவரம்புகளுக்கு அப்பால், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காகப் போராடக்கூடிய ஓர் அமைப்பை மக்கள் மத்தியிலிருந்து உருவாக்கி வளர்க்க வேண்டிய தேவையை இத்தீர்ப்பு சாதி, தீண்டாமையை எதிர்த்துப் போராடிவருபவர்களுக்கு மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறது.

– வேலன்
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க