யங்கரவாதம், பயங்கரவாதிகள் குறித்து ஓட்டுக்கட்சிகள், குறிப்பாக, பா.ஜ.க., காங்கிரசும்; துக்ளக், தினமணி, தினமலர் உள்ளிட்ட தேசிய ஊடகங்களும் உருவாக்கியிருந்த கதையாடல்கள் அனைத்தையும் கலைத்துப் போட்டுவிட்டது சாத்தான்குளம் கொட்டடிக் கொலைகள். அரசு பயங்கரவாதம் எனக் கூறப்படுகின்ற போலிசு பயங்கரவாதத்தை மிஞ்சிய பயங்கரவாதம் வேறொன்றுமில்லை என்பதை ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் பரிதாபகரமான சாவு எடுத்துக்காட்டியிருக்கிறது.

ஜெயராஜ் கொட்டடிக் கொலைகள் போலிசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியிருக்கும் அதேவேளையில், கரோனாவிற்கு எதிராக போலிசு துறையே உயிரைக் கொடுத்துப் போராடிவரும் வேளையில், அதற்குக் களங்கம் கற்பிப்பது போல இந்தச் சம்பவம் நடந்துவிட்டதென்று கூறி, இப்படுகொலையைச் சில போக்கிரி அதிகாரிகளின் தவறாகவும் விதிவிலக்கான ஒன்றாகவும் காட்டிவிடும் முயற்சியும் நடந்து வருகிறது.

இப்படுகொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையைக் கண்காணித்துவரும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அடங்கிய அமர்வும் கூட, “போலிசார் மன அழுத்தத்துடனேயே பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், கரோனா காலத்தில் அவர்களின் மன அழுத்தம் இன்னும் அதிகரித்திருப்பதாகவும், அத்தகைய மன அழுத்தம் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்துவிடுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது” என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இவ்வழக்கில் மட்டுமல்ல, எப்பொழுதெல்லாம் போலிசின் மனித உரிமை மீறல்கள் பொதுவெளியில் விவாதப் பொருளாகிறதோ, அப்பொழுதெல்லாம் போலிசின் பணிச் சுமை, மன அழுத்தங்கள், அவர்களின் இன்ன பிற சங்கடங்கள் குறித்தெல்லாம் பேசப்பட்டு, அத்துறை மீது பொதுமக்கள் மத்தியில் எழும் கோபத்தை மட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலிசாருக்கு மனவளப் பயிற்சி கொடுத்தும், அத்துறையில் சீர்திருத்தங்களைச் செய்தும் போலிசைப் பொதுமக்களின் சேவகனாக, நண்பனாக மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கைப் பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.

***

போலிசு நிலையங்களில் நடந்திருக்கும் ஒவ்வொரு அக்கிரமும், அநீதியும் மன அழுத்தம் காரணமாக நடைபெறுவதில்லை; மாறாக, போலிசிற்கு வழங்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் காரணமாகவும், அதனால் உருவாகும் திமிரின் காரணமாகவும், எத்தகைய மனிதத் தன்மையற்ற குற்றத்தைச் செய்தாலும் அதிலிருந்து உயர் அதிகாரிகளும், அரசும், ஏன் பல்வேறு சமயங்களில் நீதிமன்றமும்கூடத் தண்டனையிலிருந்து தம்மைக் காப்பாற்றிவிடுவார்கள் என போலிசின் மூளையில் பதிந்துவிட்ட தைரியம் காரணமாகவும்தான் நடைபெறுகின்றன என்பதை அவ்வழக்குகளை மேலோட்டமாகப் பார்த்தாலே யாரும் புரிந்துகொள்ள முடியும்.

ஜெயராஜ் கொட்டடிக் கொலை வழக்கை எடுத்துக் கொண்டால், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடையைத் திறந்து வைத்திருந்தனர் என்பதுதான் அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் பிரதான குற்றச்சாட்டு. எனினும், அவ்விருவரும் உடனடியாகப் பிணையில் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது மேலும் இரண்டு வழக்குகள் புனையப்படுகின்றன. தந்தையும் மகனும் அன்றிரவு முழுவதும் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டதால் எழுந்த அலறல் போலிசு நிலையம் இருந்த தெரு முழுவதும் எதிரொலித்திருக்கிறது.

மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் குற்றவியல் நடுவரிடம் அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கும் உத்தரவு பெறப்படுகிறது. தொடர்ச்சியான உதிரப் போக்கின் காரணமாக எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர் சான்று பெறப்படுகிறது. அவர்கள் இருவரையும் அருகிலுள்ள கிளைச் சிறைகளுக்குக் கொண்டு செல்லாமல், சாத்தான்குளத்திலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள, தங்களுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் பணியாற்றும் கோவில்பட்டி சிறைக்கு சாத்தான்குளம் போலிசார் கொண்டு செல்கின்றனர். அச்சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வரவே, அவர்கள் காயங்களைப் பதிவு செய்துகொண்டு ஜெயராஜையும், பென்னிக்ஸையும் சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டாவது நாளில் பென்னிக்ஸும், ஜெயராஜும் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் மன அழுத்தம் காரணமாக நடைபெற்றிருப்பதாக யாராலும் சொல்ல இயலுமா? மாறாக, இவை அனைத்திலும் ஒரு சதி இழை ஊடும் பாவுமாகப் பின்னியிருப்பதை நிச்சயமாக யாரும் காண முடியும்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் இறந்தவுடனேயே அவர்களைக் கொட்டடிக் கொலை செய்த போலிசாரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி சாத்தான்குளத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தந்தையையும் மகனையும் மிருகத்தனமானச் சித்திரவதை செய்த சாத்தான்குளம் போலிசாரை விட்டுவிடுவோம். சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் எந்த அழுத்தத்தின் காரணமாக அவர்கள் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்? உதிரப் போக்கோடு வந்த அவர்களுக்கு உடல்தகுதிச் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவருக்கு என்ன அழுத்தம் இருந்தது?

இப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோதே தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன் கிஞ்சித்தும் மனச்சான்று இல்லாமல், “சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துவிட்டதாக”க் கூறினாரே; இவை லாக்கப் படுகொலைகள்தான் என அம்பலமான பிறகும் போலிசு துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பென்னிக்ஸும், ஜெயராஜும் “மூச்சுத் திணறலாலும், உடல் நலக் குறைவாலும் இறந்து போனதாக” முதலைக் கண்ணீர் வடித்தாரே இவர்களின் பச்சைப் புளுகுக்கும் மன அழுத்தம்தான் காரணமா?
இப்படுகொலைகள் தொடர்பான சாட்சியங்கள் எதுவும் விசாரணையில் சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் சாத்தான்குளம் போலிசு நிலையத்தில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் தினந்தோறும் அழிந்துவிடும்படி செட்டிங்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

அப்போலிசு நிலையத்திற்குச் சாட்சியங்களைச் சேகரிக்கச் சென்ற கோவில்பட்டி குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டும் தொனியில் கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் குமாரும், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபனும் நடந்துகொண்டுள்ளனர். காவலர் மகாராஜன் அந்நீதிபதியிடம், “உன்னால் ஒன்னும் புடுங்கமுடியாது” எனத் திமிராகக் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் போலிசின் கிரிமினல்தனத்தைக் காட்டுகிறதா அல்லது அவர்களின் மன அழுத்தத்தைக் காட்டுகிறதா?

சாத்தான்குளம் போலிசு நிலையத்தில் நடந்த மற்றொரு கொட்டடிச் சித்திரவதையில் பலியான மகேந்திரன்.

இன்றைய பணிச்சூழலில் யாருக்குத்தான் மன அழுத்தம் இல்லை? உண்மையில் போலிசிடம் காணப்படுவது மன அழுத்தம் அல்ல; அது பொதுமக்களைப் புழுக்களைவிடக் கேவலமாகக் கருதும் அதிகாரத் திமிரெடுத்த பாசிச மனப்பாங்கு. தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை, தனக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுப்பவர்களை இந்த பாசிச மனப்பாங்கு கிஞ்சித்தும் சகித்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பாடம் புகட்டவே போலிசின் பொதுபுத்தி வேலை செய்கிறது.

“விலையுயர்ந்த செல்போனை இலவசமாகத் தரும்படி சாத்தான் குளம் போலிசார் ஜெயராஜிடம் கேட்டதற்கு, அவர் மறுத்திருக்கிறார். இதற்குப் பாடம் புகட்டுவதற்குத்தான் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாக” ஜெயராஜின் மகள் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

இது உண்மையாகவே இருக்கக்கூடும். போலிசின் எச்சக்கலை புத்தி நாம் அறியாததா? தான் கேட்ட கைபேசியைத் தர மறுத்த ஜெயராஜை ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்று சித்திரவதை செய்வதற்கு போலிசார் உருவாக்கிய சாக்குதான், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் கடையைத் திறந்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு.
“எனது தந்தையை ஏன் கூட்டி வந்தீர்கள் எனத் தைரியமாகக் கேட்டதற்கும், தன்னைத் தாக்க வந்த போலிசைத் தற்காப்புக்காகத் தடுக்க முயன்றதற்கும்” பென்னிக்ஸைச் சட்டவிரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்திருக்கிறது, சாத்தான்குளம் போலிசு.

எல்லா போலிசாரும் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்வதில்லை என வாதிடப்படுகிறது. உண்மையில், போலிசுத் துறையில் எத்துணை நல்லவர்கள் இருக்கிறார்கள், எத்துணை கெட்டவர்கள் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பதல்ல இந்தப் பிரச்சினை. சல்லடைப் போட்டுத் தேடினாலும் நல்லவர்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு என்ற கருத்தின் அடிப்படையில் ஜூனியர் விகடன் 08.07.2020 தேதியிட்ட இதழில் கட்டுரையொன்று வெளியாகியிருக்கிறது.

போலிசு நிலையத்தில் ஒரு கிரிமினல் குற்றம் நடந்துவிட்டால், அதற்குச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்காமல், போலிசு மந்திரி தொடங்கி கீழ்நிலை போலிசுக்காரன் வரை அனைவரும் அக்குற்றச் செயலை மூடிமறைக்கவும், குற்றமிழைத்த போலிசாரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றவும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறார்களே, அதுதான் இங்கு விவாதத்திற்குரிய விடயம்.

***

ஜெயராஜ் கொலைகளைத் தொடர்ந்து போலிசு துறையைச் சீர்திருத்தப் பரிந்துரைக்கப்பட்ட உச்சநீதி மன்ற உத்தரவுகளை அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. இது மட்டுமின்றி, இந்திய போலிசு துறை இன்னமும் காலனிய காலச் சட்டத்தின்படி இயங்கி வருகிறதென்றும், அதனைக் கைவிட்டுப் புதிய காவல்துறை சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரால் கோரப்படுகிறது.

உச்சநீதி மன்றம் டி.கே.பாசு வழக்கில் வழங்கிய தீர்ப்பில் ஒருவரைக் கைது செய்யும்போது போலிசு கடைப்பிடிக்க வேண்டியவை குறித்துப் பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது. குறிப்பாக, ஒருவர் தான் ஏன் கைது செய்யப்படுகிறோம் என்பது தொடங்கி அவர் கைது செய்யப்பட்டுக் காவலுக்கு அழைத்துச் செல்லப்படும் பட்சத்தில் அக்கைது குறித்து அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனடியாக போலிசார் தகவல் அளிக்க வேண்டும் என்பது வரை உச்சநீதி மன்றம் வழிகாட்டுதல் தந்திருந்தது.

காவல்துறை நிலை ஆணை எண்.722, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யக்கூடாது எனக் கூறுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, மானபங்கம் ஆகிய வழக்குகளில் மட்டுமே எதிரிகளைக் கைது செய்யலாம் எனத் தீர்ப்பு அளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.

“பிரகாஷ் சிங் எதிர் மைய அரசு” வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், அத்தீர்ப்பில் ஒவ்வொரு மாநில அரசும் போலிசு துறையை நிர்வகிக்க புதியதொரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. மேலும், அத்தீர்ப்பிலேயே போலிசின் நடத்தை குறித்து விசாரிப்பதற்குத் துறைசார்ந்த கமிட்டிகளை உருவாக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டியிருந்தது.

இத்தீர்ப்பு வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலான பிறகும் பெரும்பாலான மாநிலங்கள் புதிய சட்டத்தை உருவாக்கவில்லை. தமிழக அரசு 2013-இல் இயற்றிய போலிசு சீர்திருத்தச் சட்டம் பழைய கள்ளு புதிய மொந்தை என்ற பாணியிலேயே உருவாக்கப்பட்டதோடு, அதனையும் 2017-ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருந்தது.

மாநில அளவிலான துறை சார்ந்த விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் உருவாக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றப் பரிந்துரையைக் கேலிப்பொருளாக்கும் விதத்தில், அக்குழுவை உள்துறைச் செயலரையும் போலிசு அதிகாரிகளையும் கொண்டு உருவாக்கியிருக்கிறது, தமிழக அரசு.

போலிசு நிலையத்திற்குள் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட வேண்டும் என்ற சீர்திருத்தம் எந்தக் கதிக்கு ஆளானது என்பதை சாத்தான்குளம் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.

ஒருவரைக் கைது செய்வது குறித்து உச்சநீதி மன்றம் அளித்த பரிந்துரைகளை எந்தவொரு போலிசுக்காரனும் கழிப்பறைக் காகிதம் அளவிற்குக்கூட மதிப்பதேயில்லை. இந்தத் தீர்ப்புகள், குடிமக்களுக்குரிய சட்டபூர்வ உரிமைகள் குறித்து போலிசிடம் வாதாடினால், “எங்கிட்டேயே சட்டம் பேசுறியா?” என்ற எகத்தாளம்தான் போலிசின் பதிலாக இருக்கிறது. ஆயுதம் ஏந்தவும், கைது செய்யவும், காவலில் வைக்கவும் போலிசிற்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரமும், போலிசார் அனுபவித்துவரும் தனிச் சலுகைகளும் தம்மைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதிச் செயல்படும் மனோநிலையை அவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு சாமானியன் மீது புகார் கொடுக்கப்பட்டால், உடனே அவரை போலிசு நிலையத்திற்கு இழுத்துவந்து காவலில் அடைத்துவிட்டுப் பிறகுதான் விசாரணையே நடத்துகிறார்கள். போலிசு குற்றமிழைத்தால், இந்த நடைமுறைகள் செல்லுபடியாவதில்லை.

சாத்தான்குளத்தில் நடந்தது கொட்டடிக் கொலைதான் என்பது அம்பலமான பிறகும்கூட குற்றமிழைத்த போலிசுக்காரர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. அவர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைக்க பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இத்தாமதம் குறித்து கேள்வி எழுப்பினால், வழக்கைக் கண்காணிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதிகள், “மக்களின் கோபத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் செயல்பட முடியாது” எனப் பதில் அளித்திருக்கிறார்கள்.

சாமானியனான அப்சல் குருவைத் தூக்கில் ஏற்ற சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்த வேண்டும் எனக் காரணம் சொன்ன நீதிமன்றம், போலிசுக்காரன் என்றால் தட்டைத் திருப்பிப் போடுகிறது.

சாத்தான்குளம் கொட்டடிக் கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரனை நடத்திய கோவில்பட்டி குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பாரதிதாசன் (இடது) மற்றும் அக்கொலை தொடர்பாக சாட்சியம் அளித்திருக்கும் காவலர் ரேவதி.

குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரித்து வாக்குமூலங்களைப் பெற சித்திரவதைகளைப் பயன்படுத்தக்கூடாது என உயர் போலிசு அதிகாரிகளும், நீதிமன்றங்களும் சொல்லிவந்தாலும், அது சம்பிரதாயமான அறிவுரை என்பதைத் தாண்டி, அதற்கு எந்தவொரு மதிப்பும் கிடையாது. மேலும், (ரத்து செய்யப்பட்ட) தடா, பொடா சட்டங்களின்படியும்; பெருநகர மாஃபியா கும்பலின் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இயற்றியிருக்கும் சட்டங்களும் குற்றம் சுமத்தப்பட்டவர் போலிசு அதிகாரிகளிடம் அளிக்கும் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதை அனுமதிக்கின்றன. இது கொல்லைப்புற வழியாகக் கொட்டடிச் சித்திரவதைகளை அனுமதிப்பதற்கு ஒப்பானது.

கொட்டடிச் சித்திரவதைகளுக்கு எதிராக 1997-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், அதனை இந்திய அரசு இன்றுவரையிலும் சட்டமாக்க முன்வரவில்லை. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி நழுவிக் கொண்டது அந்நீதிமன்றம்.

போலிசு சீர்திருத்தங்கள் குறித்து இந்திய நீதித்துறை அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலிசாரைத் தண்டிப்பதில் நீதித்துறை எப்பொழுதுமே நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. உச்சநீதி மன்றத்தால் கண்காணிக்கப்பட்ட வழக்குகளில் (சொராபுதின் மற்றும் இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்குகள்) மட்டுமா குற்றமிழைத்த போலிசு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர் இறுதிவரை போராடிய வழக்குகளில்கூட குற்றமிழைத்த போலிசு அதிகாரியை உச்சநீதி மன்றமே விடுவித்திருக்கிறது. (உ.ம். நல்லகாமன் வழக்கு)

“ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் போலிசின் சித்திரவதையால் ஏற்பட்ட காயங்களால்தான் உயிர் இழந்தார்கள் என அவர்களது உடற்கூராய்வு தெரிவிக்கவில்லையென்றால், கைது செய்யப்பட்டிருக்கும் போலிசாரைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்க முடியாது” என எச்சரிக்கிறார், முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன். இவையனைத்தும், சட்டமும் நீதிமன்றமும் தம் கடமையைச் செய்ய முடியும் என நம்பி நாம் அமைதியாக இருந்துவிட முடியாது, கூடாது என்பதைத்தான் உணர்த்துகின்றன.

***

நாய் வாலை நிமிர்த்திவிட முடியும் என்றால் இந்திய போலிசையும் சட்டங்களைப் போட்டுத் திருத்திவிடலாம் எனக் கூறலாம். ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுமே, போலிசைத் தமது ஏவல் நாயாகப் பயன்படுத்துவதால்தான், ஆளுங்கட்சிகள் போலிசை சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி அமல்படுத்த மறுக்கின்றன எனக் குற்றஞ்சுமத்தப்படுகிறது. இக்குற்றச்சாட்டு உண்மை என்றபோதும், அது இப்பிரச்சினையின் ஒரு பகுதிதான்.

சாதி, மத ரீதியாகவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தை போலிசு கண்காணிப்பின் வழியாகத்தான் அடக்கி ஆட்சி செய்ய முனைகின்றன, ஆளுங் கட்சிகள். அதனால்தான் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காகத் தெருவுக்கு வந்து பொதுமக்கள் நடத்தும் மிகச் சாதாரணமான போராட்டங்களைக்கூடச் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகச் சித்தரித்து, அதனைக் கலைப்பதற்கு போலிசு படை அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமல்ல, தொழிலாளர்களோ, விவசாயிகளோ தமது வாழ்வாதாரத்துக்காகச் சட்டப்படி நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்வதற்கும் போலிசுதான் முதலில் வருகிறதேயொழிய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை.

இரண்டாவதாக, இப்படி ஒவ்வொரு வர்க்கமும் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவோ, வாழ்வாதாரத்துக்காகவோ நடத்தும் போராட்டங்களை வளர்ச்சிக்கு எதிரானதாகவும், தேச விரோதமானதாகவும் சித்திரித்து, அவற்றை போலிசைக் கொண்டு மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கும் போக்கு சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. மேலும், இந்த அடக்குமுறையைச் சட்டபூர்வமாக நியாயப்படுத்திக் கொள்வதற்கு புதுப்புது அடக்குமுறைச் சட்டங்களோ, நிர்வாக நடைமுறைகளோ உருவாக்கப்பட்டு, அவற்றை அமல்படுத்தும் உரிமை போலிசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு வழங்கப்படுகிறது.

போலிசையும், இராணுவத்தையும் நவீனப்படுத்த வேண்டும், அவற்றைப் பலப்படுத்த வேண்டும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் அவற்றின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதை மட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறப்படுவதையெல்லாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.

அதாவது, இந்திய சமூகத்தை, அதன் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை ஜனநாயகரீதியாக நிர்வகிக்க முடியாது. போலிசின் கண்காணிப்பு, அடக்குமுறைச் சட்டங்களின் வழியாகத்தான் நிர்வகிக்க முடியும் என்ற நிலைக்கு ஆளுங்கட்சிகள் வந்துவிட்டன. மேலும், இது அக்கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டும் அல்ல. ஆளுங்கட்சிகளைப் பின்னிருந்து ஆட்டுவிக்கும் ஆளுங்கும்பலான இந்தியத் தரகு முதலாளிகளும் அவர்களின் எஜமானர்களான ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமும் இதைத்தான் விரும்புகின்றன.

தூத்துக்குடியில் பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் அடக்குமுறைகளும் ஆளும் அ.தி.மு.க.வின் நலனுக்காகவா நடத்தப்பட்டது? நிச்சயமாக இல்லை. அந்த அடக்குமுறைகளின் முதன்மையான நோக்கம் ஸ்டெர்லைட் முதலாளியின் நலன்களைக் காப்பாற்றுவதுதான். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அம்மாவட்ட நிர்வாகமே, குறிப்பாக, போலிசுத் துறை ஸ்டெர்லைட்டின் சம்பளப் பட்டியலில் இருந்து வருவது எந்தளவிற்கு கார்ப்பரேட் அதிகாரம் மக்களின் மீது நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதையும், அதற்கு போலிசு அடியாட்படையாகச் செயல்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றன.

தூத்துக்குடி மட்டுமல்ல, அரியானா மாநிலம் மானேசரில் இயங்கும் சுசுகி கார் ஆலை நிர்வாகத்தை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளும், குற்றஞ்சுமத்தப்பட்ட தொழிலாளர்களைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு வாதாடியதும் கார்ப்பரேட் அதிகாரத்தின் எடுத்துக்காட்டுதான்.

இந்த கார்ப்பரேட் அதிகாரத்தின் இன்னொரு பக்கமாக, அதனின் மிகவும் விசுவாசமான, நம்பகமான கூட்டாளியாக மோடியின் ஆட்சி விளங்குகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையும், எட்டுவழிச் சாலைத் திட்டத்தையும் ஆதரித்து பா.ஜ.க. கும்பல் வாதாடியதை எண்ணிப் பாருங்கள், காவிகளும், கார்ப்பரேட்டுகளும் ஈருடல் ஓர் உயிராகச் செயல்பட்டு, மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதைப் புரிந்துகொள்ளலாம்.

இத்தகைய அரசியல் சூழலில் போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாதா ஊருக்கு வழி தேடுவதாகும். அப்படிப்பட்ட சட்டங்களின் மூலமாக போலிசைத் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்களின் மத்தியில் உருவாக்க முயலுவது அபாயகரமானதாகும்.
எனவே, கார்ப்பரேட்காவி பாசிசம் நாட்டைக் கவ்வி வரும் சூழலில், போலிசைச் சீர்திருத்த அல்ல, அவ்வமைப்பையே கலைக்கக் கோரும் கோரிக்கையை முன்வைத்துப் போராடுவதுதான் பொருத்தமானதாகும்.

இதுவொன்றும் மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கையல்ல. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலையை அடுத்து நடைபெற்று வரும் போராட்டங்களில் போலிசு துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்க வேண்டும், அவ்வமைப்பைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்நாட்டுத் தெருக்களில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நாமும் அத்தகைய அதிகபட்ச ஜனநாயகக் கோரிக்கையை ஏன் எழுப்பக் கூடாது?

போலிசைக் கலைத்துவிட்டால் குற்றங்களைத் தடுப்பது எப்படி, அதற்கு மாற்று என்ன என்ற கேள்விகள் எழுவே கூடும். அதற்கான மாற்று அமைப்பை, மக்கள் தமது போராட்டங்களின் வழியாகத் தீர்மானிக்கட்டுமே!

– இளங்கோ
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.