சாத்தான்குளம் படுகொலையும், அதைத் தொடர்ந்த மக்கள் போராட்டமும் பேரதிர்வை உருவாக்கி, தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. அதன் விளைவாக தானாக முன்வந்து தலையிட்ட உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து, கொலைவழக்கு உள்ளிட்டு 4 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அடுத்தடுத்து பத்து போலீசாரை கைது செய்துள்ளது. தற்போது, குற்றவாளிகளுக்கு சாதகமாக வழக்கை தாமதிக்கும் சதி நோக்கில் (தடயங்களை அழித்தல், சாட்சியங்களை கலைத்தல்) முன்பு, எடப்பாடியால் கோரப்பட்ட, சி.பி.ஐ விசாரணை தொடங்கியுள்ளது. உலகமே அறிந்த போலீசாரின் பச்சைப் படுகொலையை, “சந்தேக மரணம்” எனக் குறிப்பிட்டு அயோக்கியத்தனமான முறையில் விசாரணையைத் துவங்கிய சிபிஐ, வேறுவழியின்றி கொலை உள்ளிட்டு 4 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதிலும், தன் சாதி பின்புலம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதரை வழக்கிலிருந்து விடுவிக்க ஏதுவாக நான்காம் குற்றவாளியாக சேர்த்துள்ளது.

சாத்தான்குளம் படுகொலை பற்றிய நியூஸ்7 தொலைக்காட்சி விவாதமொன்றில், “இந்திய காவல்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது காவல்துறைக்கும், அரசுக்கும் களங்கமில்லையா?” என நெறியாளர் கேட்க அதிமுக-வின் புகழேந்தி, “வருவாய்த்துறை எங்கிருந்து வந்தது சீனாவில் இருந்தா? அல்லது அமெரிக்காவில் இருந்தா? அதுவும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது” என, நீதித்துறையின் ‘அதிரடி’ நடவடிக்கையை சுக்குநூறாக நொறுக்கினார்.

சாத்தான்குளம் காவல்நிலையம் மிக விரைவிலேயே மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அங்கு, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இன்ஸ்பெக்டர் சேவியர், கன்னியாகுமரி அதிமுகவினர் மற்றும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி ரவுடி கும்பல்களின் காட்ஃபாதர் என தோலுரிக்கிறது நக்கீரன் இதழ் (2020 ஜூலை 1-3).

சாத்தான்குளம் படுகொலை தொடர்பாக, சிபிசிஐடி-ன் நடவடிக்கை திருப்தியளிப்பதாக பாராட்டிய நீதிபதிகள், ஒரு சில போலீசாரின் நடவடிக்கையைக் கொண்டு ஒட்டு மொத்த துறையையும் எடைபோடக்கூடாது என போலீசாருக்கு நற்சான்றிதழ் – பாராட்டுப்பத்திரம் வழங்கியுள்ளனர். காவல்துறையினர், மக்களிடம் எவ்வாறு கனிவாக நடந்துகொள்ள வேண்டுமென்ற, கருணாநிதி போன்ற முன்னாள் காவல்துறையினரின் அறிவுரைகளும், போலீசாரின் உடல் – மனநலம் பேண திட்டங்கள் வகுக்கப்படுவதும், துறைரீதியான பயிற்சி பற்றிய அறிவிப்புகளும் அன்றாட செய்திகளாகிவிட்டன.

படிக்க:
உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
மக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

நீதிபதிகள் சொல்வது போல் அங்கொன்றும், இங்கொன்றும் என ஒரு சில போலீசார் தவறிழைத்து விட்டதாகவும் அல்லது அவர்களின் தனிப்பட்ட நடத்தைதான் குற்றத்திற்கு காரணம் எனவும் ஒரு பொய்யான கருத்து பரப்பப்படுகிறது. சாட்சியமாக மாறியுள்ள ரேவதிக்கு பாராட்டுகள் குவிகிறது. நாமும் பாராட்டலாம். ஆனால், ரேவதி எனும் தனிநபரின் மீதான பாராட்டுகளாக மட்டும் அவை நின்றுவிடவில்லை. காவல்துறையில் ரேவதி போன்றோரும் இருக்கின்றனர் எனக்கூறி, ஒட்டுமொத்தமாக காவல்துறை எனும் காக்கி மிருகத்துக்கு மனித முகமூடி மாட்டுகின்றனர். மக்களின் போராட்ட ஒளியில்தான் ரேவதி இன்று சாட்சியளிக்க முன்வந்துள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் போலீசை கணவர் எதிர்த்து பேசியதால் கர்ப்பிணி உஷாவை எட்டி உதைத்து கொலை செய்தது நினைவில்லையா? சந்தேகம், விசாரணை என அழைத்துச் சென்று கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம். இதில், பெரும்பாலும் போலீசாரின் இலக்குக்கு உள்ளாவது இசுலாமியர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் அடித்தட்டு பிரிவினரே. இந்திய சிறைகளில், விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளாக நிரம்பி வழியும் அப்பாவிகள் இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளே அதற்கு சாட்சி.

பணிச்சுமை அல்லது மன அழுத்தம் காரணமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறை கூறுவதில் உண்மையில்லை. ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், கொரோனா காலத்தில் பணிச்சுமை, மன அழுத்தத்தின் காரணமாக ஒரு மருத்துவரோ, சுகாதார பணியாளரோ இப்படி நடந்துகொண்டால் ஏற்றுக்கொள்வீர்களா?

கனிவான பயிற்சிகள் மூலம் போலீசாரை திருத்தமுடியும் என கதையளக்கிறார்கள். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? போலீசுத்துறையே லஞ்சம், வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் – விற்பனை, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, லாக்கப்படுகொலை… என அத்துனை கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணமாக, தற்போது உபியில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஷ் துபே கடந்த 30 வருடமாக ரவுடி ராஜ்ஜியம் நடத்தியுள்ளார். இவர் மீது, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட 62 கிரிமினல் வழக்குகள் உள்ளது. சம்பவத்தன்று ரவுடி துபே-வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சவுபேபூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை கைது செய்துள்ளனர். 68 போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடியின் ராஜ்ஜியத்திற்கு உடந்தையாக இருந்த போலீஸ் உயரதிகாரிகள், அரசியல்வாதிகளை தப்புவிக்க, துபேவையும் அவனது நெருங்கிய கூட்டாளிகள் அனைவரையும் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்து சாட்சியங்களை அழித்துள்ளது உபி பாஜக அரசு. இந்தியா முழுவதும், ஒட்டுமொத்த காவல்துறையின் இலட்சணம் இப்படி இருக்க, குற்றங்களில் ஈடுபடும் போலீசை விசாரிக்க போலிஸ் கம்ப்ளைனிங் அத்தாரிட்டி (Police Complaining Authority) எனும் கமிட்டியை சரியாக உருவாக்கினால் பிரச்சினை தீர்ந்துவிடும். #ImplementPCA என்பதை ட்ரெண்ட் செய்யுங்கள் என்கிறார்கள்.

ஐதராபாத் போலி எண்கவுண்டருக்கான ஆதரவும், காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்துவிட்டு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர்’ என்ற போலீசின் கதைகளும், அதை அங்கீகரிக்கும் நீதித்துறையின் செயலும் உணர்த்துவதென்ன? இந்தியாவில் 90 சதவிகிதம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது காவல்துறையினரே. அத்துறையிடம் அதிகாரம் குவிக்கப்படுவதன் விளைவைத்தான் நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம்.

ஒரு சான்று பார்ப்போம்.1998-ல் நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அங்கம்மாளையும், அவரின் கணவர் குருவையாவையும் கைது செய்த போலீசார், இருவரையும் கொடூரமாக சித்ரவதை செய்ததில், அங்கம்மாளின் கை உடைக்கப்பட்டது. இருவரையும் அம்மணமாக்கி, குருவையாவின் கண்ணெதிரிலேயே அங்கம்மாளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர் சித்ரவதையில் குருவையா மரணமடைந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு போராடியதில் கண்துடைப்புக்காக 9 பேர் மீது வழக்கு பதிந்து, 17 போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பின், 2016-ல் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசு தரப்பு வழக்கை நிரூபிக்கவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளது (நக்கீரன் 2020 ஜூலை 04-07, 08-10). இதேபோல், தமிழக போலீசாரின் வாச்சாத்தி பழங்குடி பெண்கள் 18 பேர் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை எளிதில் மறந்துவிட முடியாது.

ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள், தெருவோரம் கடைநடத்துபவர்கள், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள், திருநங்கைகள், வியாபாரிகள் என ஏழை, எளிய மக்கள், ‘போலீசு உங்கள் நண்பன்’ என்ற போலி முகத்திரையை கிழித்தெரிவார்கள்.

போலீசு மட்டுமல்ல, அதிகாரிகள், நீதிபதிகள் என அதிகாரத்தில் இருக்கும் எவரும் மக்களை மதிப்பதில்லை. மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இவர்கள்தான் ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும், எச்ச ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் போன்ற பார்ப்பன பொறுக்கிகளிடமும் நாய் போல் வாலைச் சுருட்டிக்கொள்கின்றனர்.

வரம்பு மீறிய அதிகாரத்தால், தாங்கள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் போலீசாரின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம். அத்தகைய தைரியத்தைத்தான் சாத்தான்குளம் படுகொலையில் எடப்பாடியும், சாதிபாசத்தோடு கடம்பூர் ராஜூவும் உருவாக்கினர்.

இக்கொலைகார காவலர்களுக்கு நீதிவேண்டி, பசும்பொன் சித்தர் சேனை எனும் பெயரில் தென்மாவட்டங்களில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் முனைப்பில், போஸ்டர்களை ஒட்டுகிறது சங்கி (ஆர்.எஸ்.எஸ் – பாஜக) கும்பல். கொலைகாரனுக்கு நீதி கேட்டு பாயும் சேனைகள், தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதும், தூத்துக்குடியில் 13 அப்பாவி மக்கள் போலீசின் துப்பாக்கிக்கு இரையாகும் போதும், எந்த சந்துக்குள் பதுங்கியிருந்தார்கள் எனத்தெரியவில்லை. உ.பியில், “போலிஸ் மித்ரா”வுக்குள் “ஹிந்து யுவ வாகினி”யை நுழைத்தது போல் தமிழகத்தின் “போலிஸ் நண்பர்கள் குழு”(FOP)-வுக்குள் ஆர்.எஸ்.எஸ்-சின் துணை அமைப்பான “சேவா பாரதி” ஊடுருவ வைக்கும் வேலை நடந்துள்ளது. சட்டப்பூர்வ அடியாள் படையான போலீஸ்துறைக்குள், சங்கிகளின் சட்டவிரோத அடியாட்களை ஊடுருவ வைப்பது, தமிழகத்தில் சாதி-மதக் கலவரங்களை தூண்டவும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவுமே என்பது அம்பலமாகி கண்டனத்துக்கு உள்ளானதால், தமிழகத்தில் FOP தடை செய்யப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை உள்ளிட்டு இந்த அரசமைப்பின் தோல்வி அம்பலமாகிவிட்டதை மூடி மறைக்கவே உப்புசப்பு பெறாத இந்த ‘அதிரடி’ நடவடிக்கைகள்.

அங்கம்மாளின் மகனும் வழக்கறிஞருமான மலைச்சாமி, “பதினெட்டு வருடங்களாக நீதிக்காக போராடியதெல்லாம் வீணாப்போச்சு. எங்களைப் பொறுத்த மட்டிலும் நீதி செத்துப்போச்சு” என்றார். அங்கம்மாளுக்கு மட்டுமல்ல பாபர் மசூதி இடிப்பு முதல் உடுமலை சங்கர் படுகொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு வரை ரத்தமும், சதையுமாக சாட்சியங்கள் இருந்தும் மக்களுக்கு கிடைத்த நீதி என்ன?

– செங்கொடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க