Friday, February 26, 2021
முகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் - போராட்ட செய்தித் தொகுப்பு

திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு

-

லஞ்சம் – வழிப்பறி – படுகொலை ! போலீசின் ரவுடித்தனத்தை எதிர்த்து எழுந்து நின்றது திருச்சி !

திருச்சியில் ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கர்ப்பிணிப்பெண் உஷா உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் வழிப்பறி கொள்ளையை எதிர்த்துக் கேட்ட உய்யக்கொண்டான் பகுதி பொதுமக்கள் – இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்! போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற முழக்கத்தின் கீழ் 06.03.18 அன்றுதான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்திருந்த மறுநாளே இக்கொடூர செயலை அரகேற்றியது திருச்சி போலீசு. தற்போது உஷா கர்ப்பிணி இல்லை என பிரதேப் பரிசோதனை அறிக்கையை வைத்து திசைதிருப்ப பார்க்கிறது போலீசு. ஒரு வேளை அப்படியே உஷா கர்ப்பிணி இல்லை என்பதால் கொலைகார காமராஜ் எட்டி உதைத்துக் கொன்றது சகிக்க கூடியதா?

இக்கொடூரத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், அக்கம் பக்கத்து இளைஞர்கள் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உடனடியாக போராட ஆரம்பித்தனர். அவ்வழியாக சென்றவர்கள், சமூக வலைதளங்களில் செய்தியைப் பார்த்து ஆத்திரமடைந்த மாணவர்கள் – இளைஞர்கள் என 3,000 பேருக்கு மேல் திரண்டு வரவே அது, அரசு மற்றும் போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் மிகப்பெரும் மறியல் போராட்டமாக மாறியது. தகவலறிந்து களத்திற்கு சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் போலீசின் வழிப்பறியை அம்பலப்படுத்தியும், கொலைகாரன் காமராஜை கைது செய்து, கொலைவழக்கு பதிவு செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

மறியல் நடந்தது திருச்சி – தஞ்சாவூர் பிரதான நெடுஞ்சாலை என்பதால் அரை மணிநேரத்தில் போக்குவரத்து முற்றாக முடங்கி வாகனங்கள் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்றது. செய்வதறியாது திகைத்துப் போன வட்டாட்சியரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு வந்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (DC) சக்தி கணேஷ் உள்ளிட்ட சில காவலர்கள் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று சமாதானம் பேச முற்பட்டனர். கோபத்திலிருந்த இளைஞர்களும் பொதுமக்களும் DC சக்திகணேஷுக்கு செருப்படி கொடுத்து வரவேற்றனர்.

இதே சக்திகணேஷ்தான் உய்யகொண்டான் பகுதி இளைஞர்கள் காவல்துறையால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பகுதி பெண்களுடன் சென்று சந்தித்த போது, ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரத்திற்கு கூட அனுமதி மறுத்தார். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட பேரணி நடத்தக் கூடாது என்றார். பகுதி பெண்களை பேச அனுமதிக்காமல் தான் மட்டுமே மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டிருந்தார். “சார், நீங்கள் பேசுவதை கேட்க நாங்கள் வரவில்லை. நாங்கள் பேசுவதற்காக வந்திருக்கிறோம்” என மக்கள் அதிகாரம் தோழர்கள் கண்டித்த பிறகே பகுதி பெண்களை பேச அனுமதித்தார். பகுதி மக்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் இறுதிவரை பேரணி நடத்தக்கூடாது என மறுத்தார்.

அப்படிப்பட்ட ‘சிங்கம் ஸ்டைல்’ சக்தி கணேஷ்தான் இன்று செருப்படி, கல்லடி, தண்ணீர் பாக்கெட் வீச்சு என அத்தனையும் பொறுத்துக்கொண்டு “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா… இவன் ரொம்ப… நல்லவண்டா…” என்பது போல் இளைஞர்கள் முன் ‘பணிவாக’ நின்றார். “இப்படிப்பட்ட நபர்களை தூக்கில் போடுவதுதான் தீர்வு. அந்த தண்டனையை காமராஜ்-க்கு பெற்றுத்தருவோம். SP தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிப்போம்” என இளைஞர்களிடம் உதார் விட்டும் நைச்சியமாகப் பேசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றார்.

தங்களது கடந்தகால அனுபவங்களிலிருந்து காவல்துறை எப்படி நடந்துகொள்ளும் என்பதை உணர்ந்திருந்த இளைஞர்களும், பொதுமக்களும் சக்திகணேஷின் உளறல்களுக்கு மயங்காமல், “காமராஜை நேரில் கொண்டு வா, இங்கயே – இப்பவே FIR போடு,” என்றனர். பொய் வாக்குறுதி கொடுத்த DC-யால் இதை எப்படி நிறைவேற்ற முடியும்? அப்படி நிறைவேற்றினால் அது காவல்துறைக்கு அவமானமாகிவிடும் என்பதோடு, எதிர்மறையான முன்னுதாரணமாகி விடுமே! “இந்தப் பக்கம் சிக்கலு, அந்தப் பக்கம் செதறலு…” என வடிவேலு போல திணறினார்.

பேச்சுவார்த்தை நீண்டதால் மேலும் மேலும் ஆத்திரமடைந்தனர் இளைஞர்கள். ஒரு இளைஞர் தனது T-Shirt-ஐ கழட்டி, கூடியிருந்தவர்களிடம் சில்லரை காசை வசூலித்து “இந்த பிச்சைக்காசுக்குதானடா அந்த பொண்ணக் கொலை பண்ணுனீங்க, இந்தாங்கடா” என DC சக்திகணேசிடம் கொடுத்தார். “100 ரூவா போலீசு” என காவல்துறையின் எச்சக்கலத்தனத்தை இளைஞர்கள் எள்ளி நகையாடினர். இதுக்கு செருப்படியே பரவாயில்லை என சக்திகணேஷ் சிந்தித்திருப்பார். இதுவே போராட்டத்தின் ஹைலைட். இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக்குமுறல்.

பேச்சுவார்த்தை என இழுத்தடித்துக் கொண்டே போராட்டத்தைக் கலைப்பதற்கான அனைத்து தயாரிப்பு வேலைகளையும் போலீசார் செய்தனர். தங்கள் தயார் நிலையை உறுதிப்படுத்திய மறுகணமே தடியடியைத் துவங்கியது அரசின் கூலிப்படை. இதை சற்றும் எதிர்பாராத நிராயுதபாணியான இளைஞர்களும் பொதுமக்களும் கலைந்து ஓடினர். துரத்தி வந்த காவல்துறையினர் கொலைவெறியுடன் தாக்கினர். பெரும்பாலான இளைஞர்கள் BHEL டவுன்ஷிப் -க்குள் ஓடினர்.

சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே கிடந்த கற்களைக் கொண்டு போலீசாரை திருப்பித்தாக்க ஆரம்பித்தவுடன் பின்வாங்கி ஓடியது போலீசு. அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறையின் இரண்டு Bolero வாகனங்கள் மீது 4, 5 இளைஞர்கள் அருகில் இருந்த பேரி கார்டை தூக்கி வந்து மோதி சேதப்படுத்தினர். கற்களைக் கொண்டு தாக்கி சல்லடையாக்கியதுடன், இரண்டு வாகனங்களையும் தலைகீழாக கவிழ்த்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர், அவர்களும் கற்களால் தாக்கியதுடன் லத்தியுடன் விரட்ட ஆரம்பித்தனர். அவமானம் தாங்க முடியாமல், உடனடியாக வண்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தாமத்திருந்தால் தீக்கிரையாகியிருக்கும்! பின்வாங்கிய இளைஞர்கள், மீண்டும் கற்களைக்கொண்டு ஏறித்தாக்க காவல்துறை பின்வாங்கியது.

மாறி மாறி நடந்த இந்த நிகழ்வு, இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான காஷ்மீர் இளைஞர்களின் போர்க்குணமான போராட்டத்தை நினைவுபடுத்தியது. இதற்கிடையில் கையில் கிடைத்த இளைஞர்கள் – பொதுமக்களை பிடித்து கொலைவெறியுடன் தாக்கி மண்டையை உடைத்தது போலீசு. ஆத்திரம் தீராத இளைஞர்கள், அவ்வழியே சென்ற அரசுப் பேருந்துகளை தாக்க ஆரம்பித்தனர். கொலைவெறியோடு திரிந்த போலீசு அவ்வழியே வருவோர், போவோர் என 50 -க்கும் மேற்பட்டோரை பிடித்துச் சென்றது. இதில் பள்ளி மாணவர்களும் அடக்கம். இவர்களில் 25 -க்கும் மேற்பட்டோர் மீது ‘பொது சொத்துக்களை சேதம்’ விளைவித்ததாக வழக்கு பதிந்துள்ளது. இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், மக்கள் அதிகாரம் தோழரும் அடக்கம்.

இளைஞர்களின் எதிர்தாக்குதலால், அவமானம் தாங்க முடியாத காவல்துறையினர் நேற்று 10.03.18 அன்று, “CCTV கேமரா மூலம் அடையாளம் கண்டு மேலும் 50 பேரை கைது செய்வோம்” என அறிக்கைவிட்டு பொதுமக்களை அச்சுறுத்த முயல்கிறது. காவல்துறை, வருவாய்த்துறை வாகனங்களைத் தாக்கி பொதுசொத்துக்களை சேதப்படுத்திவிட்டார்கள் என்று சொல்லி இளைஞர்கள், பொதுமக்கள் மீதான தடியடியை நியாயப்படுத்துகிறது காவல்துறை.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது அதிமுக கும்பலால் ஏற்படுத்தப்பட்ட பொது சொத்து அழிப்புக்கு எத்தனை வழக்கு பதிவு செய்தது காவல்துறை? கோவையில் சசிகுமார் மரணத்தின் போது பிஜேபி காலிகள் நடத்திய கலவரத்தை தடியடி நடத்தி கலைக்காமல் இதே அமல்ராஜ் தலைமையிலான போலீசுதானே வேடிக்கை பார்த்தது.

அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் காலித்தனத்துக்கு துணைநின்ற ஆணையர் அமல்ராஜ், தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாமல் ஒடுக்கியதுடன் தீவிரவாத பூச்சாண்டி காட்டி பா.ஜ.க-வுக்கு போட்டியாக அறிக்கை விட்டார். தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் அளித்தார். தற்போது, தனது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு ஆய்வாளர், அவன் அநீதியாக ஒரு கொலையே செய்திருந்தாலும் அதற்கெதிராக மக்கள் போராடுவதை சகித்துக்கொள்ளாமல் கொடூரமாக தாக்கி ஒடுக்குகிறார். பார்ப்பானும் படைவீரனும் கொலையே செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற மனு நீதியை நிலைநாட்டுகிறார்.

பொதுமக்களோ, காவல்துறைக்கெதிரான இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரித்தனர். அருகில் இருந்த டவுன்ஷிப் பெல் தொழிலாளர் குடியிறுப்புவாசிகள் சிதறி ஓடிய மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு தண்ணீரும் அடைக்கலமும் கொடுத்து ஆதரித்தனர். காவல்துறையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்தனர். எங்கு போராட்டம் நடந்தாலும் அதனால் பாதிக்கப்படும் பேருந்து பயணிகளும் கடைக்காரர்களும் போராடுபவர்கள் மீது எரிச்சலடைந்து புலம்புவதையும் எதிர்ப்பதையும் பார்க்க முடியும்.

ஆனால், இந்த போராட்டம் காவல்துறையின் கொடூர கொலைக்கு எதிரானது என்று அறிந்ததால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் மற்றும் காரில் வந்தவர்கள் கூட “எங்களுக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், போலீசை எப்படி தட்டிக் கேட்பது?, போலீசு ரொம்ப பண்றாங்க” என்றே கூறினர். தள்ளுவண்டி கடை நடத்தும் பெண்மணியிடம் கேட்டபோது, “கார்ல, பஸ்ல வந்தவங்க எல்லாரும் இங்க தான் சாப்பிட்டாங்க. எல்லாரும் போலீசத்தான் கண்டிச்சாங்க.” என்றார்.

08.03.18 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட உஷாவின் உடலை வாங்க மறுத்து மக்கள் அதிகாரம் தலைமையில் புதிய தமிழகம், விசிக, சிபிஐ, சிபிஎம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க ஆகிய கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மகளிர் தினத்தன்று ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு போலீசாரால் இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினர்.

கொலை வழக்கு பதிவு செய்யாமல் காமராஜை தப்பிக்க வைக்கும் நோக்கில், மரணம் விளைவிக்கும் குற்றம் என்கிற – வழக்கமாக சாலை விபத்தின் போது போடப்படும் “அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல்” என்கிற – இந்திய தண்டனைச்சட்டம் 304 (ii), 336 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்தது. எனவே, பேச்சுவார்த்தைக்கு வந்த காவல் துணை ஆணையர் சக்திகணேஷிடம் இதை ஏற்க மறுத்தோம். தொடர்ச்சியாக வாதாடியதால், உயரதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்த போலீசார் Crpc 164-ன் படி நீதிபதி முன் வாக்குமூலம் பதிவு செய்து, பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்போவதாகக் கூறி, அவர்கள் வாகனத்தில் கொல்லப்பட்ட உஷாவின் கணவர் ராஜாவை அழைத்துச் செல்ல முயன்றனர்.

ராஜாவை தனியாக அழைத்துச் செல்ல முயற்சிப்பதன் நோக்கத்தை புரிந்துகொண்ட வழக்கறிஞர்கள், தங்கள் வாகனத்தில் ராஜாவை அழைத்துச் சென்றனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – 6 (JM-VI) நீதிபதியிடம் ராஜாவை அழைத்து சென்று பேசிய போது அந்த நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் (CJM) இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லையென்றார். இது போலீசார் நடத்தும் நாடகம் என்பது அம்பலமானதால், இதை நீதிபதியிடம் தெரிவித்து பதிவு செய்தனர்.

காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்வது, போராட்டத்தில் கைதாகி பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பது, வாகன சோதனையை நிறுத்துவது, ராஜா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். காவல்துறையுடன் பேசி, மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், உஷா சாலை விபத்தில் உயிரிழந்ததாக அயோக்கியத்தனமாக குறிப்பிட்டிருந்தனர். DC சக்திகணேஷிடம் இதை சுட்டிக்காட்டி கண்டித்த பின், “இன்ஸ்பெக்டர் காமராஜால் தள்ளிவிடப்பட்டு வாகனத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்தார்” எனக்குறிப்பிட்டதுடன், ராஜாவின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுத்திட பரிந்துரை செய்வதாகவும் கடிதம் மாற்றித்தரப்பட்டு, தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டது.

இதனடிப்படையில் முதலமைச்சரிடமிருந்து நிவாரண அறிவிப்பும் அப்போதே வந்தது. மேலும், கைதாகியிருந்த பள்ளி – கல்லூரி மாணவர்களை விடுவிக்கின்றோம். மற்றவர்களை பெயில் எடுக்கும்போது காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டோம் எனக்கூறினர்.

காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்வது, கைதானவர்களை விடுதலை செய்வது என்பதில் உஷாவின் கணவர் ராஜா உறுதியாக இருந்த போதிலும், மற்ற பிற சூழல்களைக் கருத்தில் கொண்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 09.03.18 அன்று போலீசை அம்பலப்படுத்தும் முழக்கங்களுடன் உஷாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் சில கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் கூடி மேற்கூறிய சம்பவத்தில் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தது. பொய்வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பிணையில் எடுக்கவும் கைதாகாத மற்றவர்களுக்கு முன்பிணை பெறவும் கட்டணம் பெறாமல் வாதாடுவதாகவும், வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத் தருவதென்றும் தீர்மானம் இயற்றியுள்ளனர். அத்தோடு மட்டுமின்றி கொலைகாரன் காமராஜூக்கு எந்த வழக்கறிஞரும் பிணை மனு தாக்கல் செய்வதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர். எவரேனும் பிணை மனு தாக்கல் செய்தால் குறுக்கிட்டு ஆட்சேபனை தெரிவித்து வாதாடுவது என முடிவு செய்துள்ளார்கள்.

13.03.18 திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட ராஜாவிற்கு உறுதுணையாக நிற்கும் வகையில் தற்போது PRPC வழக்கறிஞர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர் / கண்காணிப்பாளர் என பலதுறைகளுக்கும் காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15.03.18 அன்று அனைத்து கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி – 94454 75157.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க