உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! கொலைக்கான காரணத்தை சாதி ஆணவத்தில் இருந்து விடுதலை செய்தது அநீதி !

பத்திரிக்கை செய்தி

நாள் : 24.06.2020

“எனது பெற்றோர் தண்டனைக்குரியவர் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பார். இந்த வழக்கே தேவைபட்டிருக்காது. என் பெற்றோர்களான அன்னலட்சுமி, சின்னசாமி தண்டனை பெற்றால்தான் சங்கருக்கான நீதி கிடைத்தாக அமையும். சங்கர் கொலைக்கு நேரடி பொறுப்பானவர்கள் விடுதலை செய்ய பட்டவர்களா? சிறை தண்டனை பெற்றவர்களா?. “ – உயிர்பிழைத்த கௌசல்யாவின் கேள்விகளுக்கு நீதிமன்றத்தை நம்புவர்கள் பதில் சொல்லட்டும்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கின் மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் முதன்மைக்குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்ததுடன், சாதி ஆணவத்தினை நிலைநாட்டும் சதிக் குற்றத்தை இரத்து செய்து மற்றவர்களின் தண்டனையையும் குறைத்திருக்கிறது. விடுதலையான கவுசல்யாவின் தந்தை உள்ளிட்டோரை ஆதிக்க சாதிவெறியர்கள் சிறைவாசலில் பொன்னாடை போர்த்தி வரவேற்கின்றனர்.

ஆணவக்கொலை செய்யும் கூலிப்படையினர் இனி சாதி ஆதிக்கத்தை காக்கும் தியாகிகளாக கருதப்படுவார்கள். சாதியத்தை பேணிக்காக்கும் உடுப்புப் போடாத கலாச்சாரப் போலீசாக போற்றப்படுவார்கள்.

கண்முன்னே கொலை செய்யப்பட்ட சங்கரின் கொலைக்கு கவுசல்யாவின் நேரடி சாட்சியம் இருந்தும் அவர் அடையாளம் காட்டிய கொலையாளிக்கும் கவுசல்யாவின் தந்தைக்கும் கொலைக்கு முன்பு தொடர்ச்சியாக தொலைப்பேசி தொடர்பு இருந்த போதிலும் முக்கிய முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார். சதிக் குற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதை வைத்து தண்டிக்கப்பட்டோரும் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலை ஆக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழகமே சாதி ஆணவப் படுகொலையாகப் பார்த்த உடுமலை சங்கர் வழக்கை சாதாரண கொலை வழக்காக மாற்றி கொலைக்கு காரணமான சாதி ஆணவக்காரர்களை விடுதலை செய்துள்ளது உயர்நீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்பு.

சாதித் தீண்டாமை ஏற்றத்தாழ்வு என்பது சட்டப்படியான பாதுகாப்பில் உள்ள இந்திய சாதிய சமூகத்தில் இதுவரை உள்ள வன்கொடுமை தடுப்புசட்டங்கள், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் செயல் படுவதற்கு தடையாக இருக்கக்கூடிய சாதீய மனநிலை, ஆதிக்க சாதி மத வெறிக் கட்டமைப்பு என்பது ஆணவப்படுகொலைக்கு புதிய சட்டம், சிறப்பு சட்டம் போன்றவற்றுக்கும் தடைகளாகவே இருக்கும்.

ஆணவப் படுகொலைகளுக்கும் சாதீயப்படுகொலைகளுக்கும் எதிராக வழக்கு போடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் கடைசியாக தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து களப் போராட்டம், சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.
கண்ணகி – முருகேசன் போன்ற எண்ணற்ற வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான எல்லா செயல்களையும் அரசும் நீதிமன்றமும் சேர்ந்தே செய்கின்றன. இதையெல்லாம் மீறி ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தண்டனை வாங்கித்தர முடியுமா? கீழ்வெண்மணியில் 44 உயிர்களை எரித்துக்கொன்றவனை விடுதலை செய்த இந்தக் கட்டமைப்பில் நீதி தானாக கிடைக்குமா?

படிக்க:
ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

பெரும் போராட்டங்களுக்குப் பின் தண்டனை பெற்ற மேலவளவு குற்றவாளிகள் எல்லாம் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றால் சாதீயப்படுகொலைகளுக்கு அரசே லைசென்ஸ் கொடுத்துவிட்டது போலாகின்றது. இருக்கின்ற அரசு கட்டமைப்பில் குற்றவாளிகள் தண்டிப்பது இருக்கட்டும். நாம் இனி எத்தனை சங்கர், இளவரசன், கோகுல்ராஜ் முருகேசன்களை இழக்க முடியும்?
பெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே நீதிமான்களுக்கு நீதியின் அரிச்சுவட்டினை பார்க்கும் வகையில் கண்களை திறக்க வைக்க முடியும் போல.

சாதியத்தை பாதுகாக்கும் அசரமைப்புச்சட்டத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்து தந்தை பெரியாரின் தலைமையில் அதனை தீயிட்டு ஆயிரக்கணக்கானோர் சிறைசென்றனர் – பலர் சிறையிலேயே இன்னுயிர் ஈந்தனர். அரசியல், கலாச்சார தளங்களில் சாதியத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் இயக்கங்கள் உருவாக வேண்டும். ஆணவப்படுகொலைக்கு மட்டுமல்ல திருமண உறவுகளில்
பெண்களின் சுதந்திர உரிமைக்காவும், சாதி ஆதிக்க வெறுப்புணர்வை தூண்டும் நாசகார செயல்களுக்கு எதிராகவும் சமத்துவமாகவும், அமைதியாகவும் வாழ விரும்பும் அனைவரும் களத்தில் நின்று போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி. இராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க