ங்கில இந்து (16-07-2021) நாளிதழில் விவேக் கட்ஜு என்கிற முன்னாள் தூதரக அதிகாரி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ‘வலுமிக்க இந்திய அரசு மனிதாபிமானத்துடனும் இருக்க வேண்டும்’ என்பது தலைப்பு.

அந்தக் கட்டுரையில், ஸ்டான் சுவாமியின் அரசு பயங்கரவாத படுகொலையில் நடந்தவற்றைப் பற்றி முதலில் விவரிக்கிறார். அதன் பின் முதலாளித்துவ நாடுகளிலுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் ஸ்டான் சுவாமியின் மரணத்தை எப்படி அணுகுகின்றனர் எனப் பட்டியலிடுகிறார்.

ஐ.நா மனித உரிமை அமைப்பு எப்படிப் பார்க்கிறது என்பதை விவரிக்கிறார். ஸ்டான் சுவாமியை சமூக செயல்பாட்டாளர் என்பதைவிட, ஜெசூட் பாதிரியாராகப் பார்ப்பதாகவும் வெளி விவகாரத்துறை அமைச்சகம் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது ஐ.நா. மனித உரிமை அமைப்பை ஏற்கச் செய்யாது எனவும் விளக்குகிறார். ஸ்டான் சுவாமி, சமூக செயல்பாட்டாளர் அல்ல, ஜெசூட் பாதிரியார் என்பதை வலியுறுத்திக் கூறுகிறார். கட்டுரை முழுவதும் இவ்வாறே உள்ளது. மொத்தக் கட்டுரையிலும் தனது கருத்தாக எதனையும் கூறவில்லை.

படிக்க :
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
♦ கேரள சிறையில் மற்றுமொரு ஸ்டான் சுவாமி – ஆறாண்டு அநீதிக்கு பதில் சொல்வாரா பினராயி ?

இந்த கட்டுரையின் இறுதியில் வயதான, பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட, கையால் கோப்பையைக் கூட பிடிக்க இயலாத ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட உறிஞ்சிக் குடிக்கும் டம்ளரோ, ஸ்ட்ராவோ, குளிர்கால உடைகளோ தராமல் ஒரு மாதம் இழுத்தடித்ததை கிறித்தவ நாடுகள் கவனத்தில் கொள்ளும் என்று எழுதுகிறார். இது பற்றி தனது கருத்தாக மறந்தும் கூட எதையும் எழுதவில்லை.

இந்தியாவில் நிலவும் ’பயங்கரவாத’ நடவடிக்கைகளால் அப்பாவிகள் கொல்லப்படுவது பற்றி அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதைக் கட்டுப்படுத்த நிலவுகின்ற கிரிமினல் சட்டங்கள் போதாது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை. ஆனால் சமூக செயல்பாட்டாளர்களின் கணிணிக்குள் ஹேக் செய்து பொய்யான கடிதத்தை வைத்து, அந்த பொய்க் கடிதத்தை வைத்து அவர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தது பற்றி எந்த இடத்திலும் மறந்தும் கூட குறிப்பிடவில்லை.

ஸ்டான் சுவாமி

உண்மை இவ்வாறு இருக்க கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அந்த வெண்ணெய் உருகி கொக்கின் கண்ணை மறைக்கும் போது லபக்கென கொக்கைப் பிடிக்க ஆலோசனை சொல்வது போல, இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்கிறார். ஸ்டான் சுவாமி அரசு பயங்கரவாதப் படுகொலையில் கூட்டாளியாக இருந்த நீதித்துறையிடமே, இன்னும் ’நீதி’ வழங்கச் செய்ய ஆலோசனை கூறுகிறார்.

இப்படிப்பட்ட ஆள் தூக்கிச் சட்டங்கள் இயற்கை நீதிக்கு எதிரானவை, முரணானவை. இந்த கருப்புச் சட்டங்களே கூடாது என்று முடிவுக்கு வருவதற்கு மாறாக, ஆள்தூக்கிச் சட்டங்கள் தேவை. ஆனால் அதை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும் என்று முடிக்கிறார்.

அதாவது இயற்கை நீதிக்கு முரணான, எதிரான கருப்புச் சட்டங்கள் இருக்கும், அதை நடைமுறைப்படுத்தும் போது தவறு நேராமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்டுரையாளர் சொல்ல வரும் கருத்து. கட்டுரை சலிப்புத் தட்டாமல் இருக்க, இடையே நகைச்சுவையாக ’சுதந்திரம்’ அடைந்து 75-ம் ஆண்டை நாடு நெருங்கிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறார்.

இந்த நாட்டில் சுதந்திரமும் இல்லை, ஜனநாயகமும் இல்லை என்பதை அன்றாடம் வரக்கூடிய ஊபா – என்.ஐ.ஏ. கைதுகள் குறித்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய போலீசுத் துறையின், அதிலும் NIA என்கிற சிறப்புப் போலீசு பிரிவின் யோக்கியதை தினமும் சந்தி சிரித்துக் கொண்டுள்ளது. தேசத்துக்கு பாதுகாப்பு தருகிறதோ இல்லையோ, தனது எஜமானர்களின் ஏவிவிட்ட குரலுக்கு அடிபணிந்து, அதை நிறைவேற்ற எந்த கிரிமினல் நடவடிக்கையிலும் இறங்கத் தயங்காத ஒரு ’சிறப்புப்’ போலீசுப் பிரிவு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இன்று அது உலக அளவில் அம்பலப்பட்டு நிற்கிறது. எல்கார் பரிசத் வழக்கில் சமூக செயல்பாட்டாளர்களின் கணினியை ஹேக் செய்து, அதற்குள் ஒரு பொய்யான ஒரு கடிதத்தை வைத்தது சந்தேகத்திற்கிடமின்றி அம்பலப்பட்டுப் போனது. ஒருமுறையல்ல இருமுறை. ஆனால் நமது ’மான்புமிகு’ நீதிபதிகளுக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை போலும்.

ஒரு வேளை இதுபற்றி தெரிந்தது போல காட்டிக் கொண்டாலே, சிபிஐ நீதிபதி லோயாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்த பாசிச ஆட்சியில் ஏற்படும் என்பதும் நமது ‘மாண்புமிகு’ நீதிபதிகளுக்கு தெரியாமலிருக்குமா? எனவே, NIAவின் இத்தகைய கிரிமினல் நடவடிக்கை தெரியாமல் போனதில் வியப்பேதுமில்லை!

அதனால்தான் சமூக செயல்பாட்டாளர் ரோனா வில்சனின் இந்த பொய் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பூனா போலீசு ஹேக் செய்து பொய்யான கடிதம் வைத்தது பற்றி முன்கூட்டியே பேசுவது பொருந்தாது எனக் கூச்ச நாச்சமின்றி கூறியது. நீதிபதியும் தலைகுனிந்து அதை ஏற்றுக் கொண்டு வழக்கை தள்ளி வைத்து விட்டார். சுதந்திரமும், ஜனநாயகமும் இப்படித்தான் கடந்த 75 ஆண்டுகளாக மாண்புமிகுக்களால் ‘காப்பாற்றப்பட்டு’ வருகிறது!

படிக்க :
♦ மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
♦ வர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் !!

’இந்த ஊடகங்களோ, அறிவுத் துறையினரோ மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல மாட்டார்கள்! அப்படி சொல்லும் சில செய்தியாளர்களையும் எங்களது வழிக்குக் கொண்டு வந்து விடுவோம்’ என நமது ஆட்டுக்குட்டி அண்ணாமலை – தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி – பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு பற்றி பார்ப்பன பாசிசக் கும்பல் கவலைப்படப் போவதுமில்லை. ஏனெனில் இவர்கள் எதையுமே முன்னறிவிப்பின்றி செய்வதில்லை என்பது ஊரறிந்த ரகசியம்!

நீதிமன்றங்களையோ, இந்த அரசக் கட்டமைப்பையோ நம்பி நமது சுதந்திரத்தையும் உரிமையையும் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால், அடிமையாகவே வாழ நேரிடும். ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று போராட வேண்டும்! இன்றைக்கு விழித்துக் கொள்ளவில்லை என்றால் பெயரளவுக்கான இந்த போலி சுதந்திரமும் கூட இல்லாமல் போய் விடும்!


நாகராசு
செய்தி ஆதாரம் : THE HINDU (16-07-2021), Indian Express (15-07-2021), தமிழக நாளிதழ்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க