பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக பத்திரிகையாளர் ஒருவர் இந்தியா டுடே குழுமத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஷியாம் மீரா சிங் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்தியா டுடே குழுமத்தில் ஒன்றான ஆஜ்தக் செய்தி சேனலின் ஆன்லைன் பிரிவில் வேலை செய்து வருகிறார். மோடியை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகள் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டிற்காக ஜூலை 19-ம் தேதியன்று ஆஜ்தக் செய்தி சேனலில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார் ஷியாம் மீரா சிங்.

படிக்க :
♦ ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !
♦ தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

அவர் எழுதிய முதல் ட்விட்டர் பதிவில் “யார் பிரதமரை மதிக்கும் படி சொல்கிறார்களோ, அவர்கள் முதலில் [நரேந்திர] மோடியிடம் பிரதமர் பதவியை மதிக்கும்படி கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இரண்டாவது ட்விட்டர் பதிவில் “நான் இங்கே ட்விட்டரில் ஏதாவது எழுதும்போது, சிலர் எனது நிறுவனத்தை டேக் செய்கிறார்கள். அடுத்த ட்விட்டை இன்னும் திடமாக எழுதுகிறேன். ஆனால், மோடி வெட்கமில்லாத பிரதமர் என்று எழுதுவதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.

“இந்த இரண்டு ட்விட்டர் பதிவிற்காக நான் எனது நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விருப்புகிறேன் ஆம்! மோடி வெட்கமில்லாத பிரதமர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ஷியாம் மீரா சிங்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங்

இந்த பதிவிலேயே, நிறுவனத்தில் கடிதத்தையும் இணைத்துள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியா டுடே குழுமத்தின் சமூக ஊடகம் மற்றும் நடத்தை நெறிமுறைகளை தாங்கள் அறிவீர்கள். அவை செய்தி ஊடகத்தில் வெளியிடும் செய்தியின் பார்வை இல்லாமல் வேறு எதும் எழுதக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதமே, தனது ஊழியர்கள் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை எழுதுவதற்கு தடைவிதித்துள்ளது, இந்தியா டுடே குழுமம்.

அதிலும், இந்தியா டுடே குழுமத்தில் வேலை செய்பவர்கள் தனது தனிப்பட்ட சமூக ஊடகங்களில் இந்த குழுமத்தின் செய்திகளை மட்டுமே இடுகையிட வேண்டும் என்று கூறுகிறது.

இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் குற்றம்சாட்டுகிறார். இந்தியா டுடே மட்டுமல்ல வேறு எந்த நிறுவனமும் நடத்தை விதிமுறை என்ற பெயரில் கருத்துரிமை சுதந்திரத்தை பறிக்க முடியாது என்று சாடுகிறார் சிங்.

இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். குறிப்பாக, எஸ்.வி.சேகர் பெண் ஊடகவியலாளர்களை ஆபாசமாக பேசியதற்கு எதிராக போராடியதற்காக நியூஸ் 18 தொலைக்காட்சி நிர்வாகம் பல ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்தது.

இந்தியா டுடே குழுமத்தில் ஒன்றான ஆஜ் தக் செய்தி சேனல்

ஒரு பத்திரிகையாளரோ, ஊடகவியலாளரோ தன் சொந்த கருத்தை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு ஏன் ஊடக நிறுவனங்கள் நெறிமுறைகளை வகுக்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை பொது வெளியில் பேசவோ எழுதவோ கூடாது என்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே தவிர வேறல்ல. ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தை பொதுவெளியில் தெரிவிப்பதை சம்பளம் கொடுக்கும் ஒரே காரணத்திற்காக கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் ஊடகங்களின் இலட்சணம் இதுதான்.

இது எங்கோ வட இந்திய ஊடகங்களில் நடக்கும் விவகாரம் என்று ஒதுக்கித்தள்ள முடியாது. தமிழகத்தில் ஏற்கெனவே ஊடகங்கள் அடிபணிந்த நிலையில், மேலும் தாக்குதலை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூலை 15-ம் தேதியன்று திருச்சியில் தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை “6 மாதத்துக்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரு எல்.முருகன் தற்போது தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராகியுள்ளார். அனைத்து ஊடகங்களும் அவரின் கீழ்தான் வரும்” என்று தமிழக ஊடகங்களுக்கு மிரட்டல் விடும்தொனியில் பேசியுள்ளார்.

இது தமிழக மக்களுக்கு பாசிச கும்பல் விடுக்கும் எச்சரிக்கை.

மக்கள் பிரச்சனைகளை வெளிகொண்டு வர முற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதல்களை முறியடிக்க ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டிய தருணமிது.


சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க