டந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் மேலும் 4 மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை, மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்தது புனே போலீசு. சுதா பரத்வாஜ் மாவோயிஸ்ட் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்காகவே அவரைக் கைது செய்வதாகவும் தெரிவித்தது புனே போலீசு.

புனே போலீசு தற்போது கைது நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அப்படி ஒரு கடிதத்தை கடந்த ஜூலை 5-ம் தேதியன்று தனது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் ’லபோதிபோ’ அர்னாப் கோஸ்வாமி.

இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ம் தேதியன்று ‘தி வயர்’ இணையதளத்தின் பத்திரிகையாளர் ஜானவி சென், அர்னாப் கோஷ்வாமியின்  இக்குற்றச்சாட்டு குறித்து சுதா பரத்வாஜிடம் நேர்காணல் எடுத்தார். அந்த காணொளி அன்றே ’தி வயர்’ இணையதளத்தில் வெளியானது.  அதே நேர்காணலை, சுதா பர்த்வாஜ் கைது செய்யப்பட்டதையடுத்து ’தி வயர்’ இணையதளம் மீள்பதிவிட்டது.

அந்த நேர்காணல் காணொளியின் தமிழாக்கம்:

சுதா பரத்வாஜ் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர். குறிப்பாக சட்டீஸ்கரில் தனது பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஜூலை 5, 2018 அன்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த விவாதம் குறித்த பேட்டி இது.

ஜானவி சென் : அர்னாப் கோஸ்வாமி நீங்கள் எழுதியதாக, ஒரு குறிப்பான கடிதத்தைக் காட்டி உங்கள் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் நீங்கள் அதனை மறுத்துள்ளீர்கள். அவரது குற்றச்சாட்டின் பிரதானமான விசயம், நீங்கள் மாவோயிஸ்ட் தலைவராகக் கூறப்படும் தோழர் பிரகாஷ்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பதுதான்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களை (மாவோயிஸ்டுகளை) நீங்கள் சந்தித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியிலிருந்து உங்களது கருத்துக்களைக் கேட்டனரா? இது குறித்து உங்களது கருத்தென்ன?

சுதா பரத்வாஜ் : வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில், காலையில் எனக்கு மும்பை எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசுபவர், தாம் ரிபப்ளிக் தொலைக்காட்சியிலிருந்து பேசுவதாகக் கூறினார். அவர்களது  நிகழ்ச்சியில் அன்று மாலை பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நான் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை எனக் கூறி தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன்.

பீமா கோரேகான் குறித்து ஏதேனும் விவாத நிகழ்ச்சிக்குதான் அழைக்கப்படுகிறேன் என்று நினைத்தேன். நான் அவ்வப்போது பார்க்கும் ’ரிபப்ளிக் தொலைக்காட்சி’யின் விவாத நிகழ்ச்சி அனைத்திலும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து, வேறு சிலரின் மூலமாக ரிபப்ளிக் தொலைக்காட்சியினர், ’நான் மாவோயிஸ்ட் தோழர் பிரகாஷ் என்பருக்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை’ ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருப்பதாகக் கூறினார். அது குறித்த தொடர்புச் சுட்டியையும் அனுப்பியிருந்தனர். அதனையும் நான் பார்த்தேன். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹிந்தியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தை அவர்கள் திரையில் காட்டினர். அந்தக் கடிதம் வழக்கறிஞர் தோழர் சுதா பரத்வாஜ்-ஆல் தோழர் பிரகாஷுக்கு எழுதப்பட்டதாக அவர்கள் கூறினர்.

அனைத்து விதமான குற்றச்சாட்டுகளும் அங்கு வைக்கப்பட்டன. காஷ்மீருடனான தொடர்பு குறித்தும், எனக்கு நிதி தேவை என்றும் எழுதியிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் அதில் நிறைய வழக்கறிஞர்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். அதில் கணிசமான வழக்கறிஞர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்தான். அவர்கள் தலைசிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். சிலரைக் குறித்து எனக்குத் தெரியவே தெரியாது. அந்த வழக்கறிஞர்களை, நான் ’தோழர்’ என விளித்ததாகவும், அவர்களுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அக்கடிதத்தில் காட்டப்பட்டிருந்தது.

நான் செய்த முதல் விசயம் என்னவென்றால், உடனடியாக அந்தக் கடிதத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிடக் கூறியதுதான். முதலில் எனக்கு அப்படி ஒரு கடிதம் என ஒன்று இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சியில் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் அது சில பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து கிடைத்ததாகக் கூறப்பட்டது.

arnab go sami
அர்னாப் கோஸ்வாமி

இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட தவறான அவதூறு பரப்பும் கடிதம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது எனக்கு தனிப்பட்டரீதியிலும், தொழில்ரீதியாகவும் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பல்வேறு ’டுவீட்டுகள்’ வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமாக  வெறுப்பைத் தூண்டி விடும் செயலே ஆகும். நான் இதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்பதை தெளிவாகக் கூறிவிட்டேன். எனது வழக்கறிஞர்களை ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிராக குடிமையியல் மற்றும் குற்றவியல் அவதூறு வழக்கு அறிவிப்பு அனுப்பக் கூறியிருக்கிறேன். நான் அனைத்து சாத்தியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன்.

ஜானவி சென்: அந்தக் கடிதத்தில் அவர்களது தொலைக்காட்சித் திரையிலும், இணையதளத்திலும் பெரிதுபடுத்திக் காட்டிய பகுதியில், 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு குறிப்பான சந்திப்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு வழக்கறிஞரும் அந்த கூட்டத்தில் உங்களுடன் கலந்து கொண்டதாகவும், நீங்கள் ஒரு மிகப்பெரிய சதியின் பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ”நகர்ப்புற நக்சல்கள்” போன்ற புதுவிதமான வார்த்தைப் பதங்களும் உபயோகக்கிப்படுகின்றன. காஷ்மீர் விவகாரமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறியது போல இது இட்டுக்கட்டப்பட்ட கடிதம் எனும் பட்சத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சி உங்களைப் போன்ற குறிப்பான நபர்களைக் குறிவைப்பதற்கான அவசியம் என்ன? மேலும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த சந்திப்பு நிகழ்வு குறித்த விவரங்கள் குறித்து உங்களது கருத்து என்ன?

சுதா பரத்வாஜ்: முதலில் அவர்கள் எந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. சுரேந்திர காட்லிங்-ஐ எனக்கு வெகுநாட்களாகத் தெரியும். அவர் ஒரு பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர், தலித்திய வழக்கறிஞர். கட்சிரோலியிலோ, ஜக்தல்பூரிலோ வழக்குகள் கொண்டுள்ள வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

மக்களுக்கான வழக்கறிஞர்களின் இந்திய சங்கம் (ம.வ.இ.ச) என்ற அமைப்பில் நானும் அவரும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம். சுரேந்திர காட்லிங் – அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ஓய்வுபெற்ற மும்பை நீதிபதி சுரேஷ் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் இருக்கிறோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம்.

தற்போது, தனிப்பட்டரீதியில் என் மீதான தாக்குதலுக்குக் காரணமாக நான் நினைப்பது என்னவெனில், ஜூன் 6, 2018 அன்று சுரேந்திர காட்லிங் உட்பட பல்வேறு செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட போது, முதல் எதிர்வினை எங்களிடமிருந்துதான் வந்தது.

நான் ஜூன் 7, 2018 அன்றே எங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன்.  ராமகிருஷ்ணன், பி.யூ.சி.எல் தலைவர் ரவி கிரண் ஜெயின், பஞ்சோலி இன்னும் பிற வழக்கறிஞர்கள் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தற்போது மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்பதை நாங்கள் தெளிவாகப் பதிவு செய்தோம். சந்திரசேகர் ராவண், சமீபத்தில் பிணையில் வெளிவந்த வழக்கறிஞர் குபேந்திர நாயக், ஸ்டெர்லைட் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என தற்போது தொடர்ச்சியாக வழக்கறிஞர் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதன் காரணமாக பரவலாக அறியப்படாத  மக்களை இடம்பெறச் செய்யும் திட்டங்களுக்கு எதிராகவும், விசாரணைக் கைதிகளாக சிறையிடப்பட்டுள்ள ஆதிவாசி மக்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்டோருக்காக வாதிடுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இது அச்சுறுத்தக் கூடிய நிலைமையாகும். இது தனிநபர்களின் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி, விளிம்புநிலை மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த நீதித்துறையையே நிலைதிரிவுறச் செய்கிறது.

வழக்கறிஞர்கள் ஓரணியில் திரள்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. நாக்பூரில் கூட, நாக்பூர் பார் கவுன்சில், சுரேந்திர காட்லிங்கின் கைதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. ஏனெனில் பீமா கொரேகான் வன்முறை வழக்கில் கடந்த ஜனவரியில் போடப்பட்ட முதல் தகவலறிக்கையில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் நீதிபதி சோதனைக்கு உத்தரவிட மறுத்த பின்னும் நடத்தப்பட்ட சோதனை அது. ஏப்ரலில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் மாதத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். இந்தக் குறுகிய காலத்தில் அபாயகரமான ஏதோ சிலவிசயங்கள் நடந்திருக்கின்றன. வழக்கறிஞர்களை இதுபோன்ற விவகாரங்களில் நிறுத்துவது ஏற்கத் தக்கதல்ல.

மக்களுக்கான வழக்கறிஞர்களின் இந்திய சங்கம் (ம.வ.இ.ச) – சமீபத்தில் காஷ்மீருக்குச் சென்று அங்கு உண்மை அறியும் குழுவாகச் செயல்பட்டனர். அங்கு சென்று காஷ்மீர் வழக்கறிஞர்களிடம் பேசுவதற்காக சென்றனர்.. ஏனெனில் அங்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஏனெனில் வழக்கறிஞர்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பி.எஸ்.ஏ) பாய்ச்சப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள அவர்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை. பிரச்சினைக்குரிய பகுதிகளில் மக்களைப் பாதுகாத்து அவர்களுக்காக வாதாடுவதற்குக் கூட, அனைத்து விதமான சிரமங்களையும் சந்திக்கின்றனர்.

இந்நிலைமையை ஆவணப்படுத்த ம.வ.இ.ச (IAPL) அங்கு சென்றது. பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அவர்களோடு கலந்தாலோசித்தனர். இன்னும் சிறிது நாட்களில் அவர்கள் தங்களது அறிக்கையை சமர்ப்பித்திருப்பார்கள். நான் அங்கு செல்லவில்லை. ஆனால் ம.வ.இ.ச (IAPL), உண்மையறியும் குழுவை அங்கு அனுப்பியது.

காஷ்மீருடன் இவர்களுக்கு சட்டவிரோதமான தொடர்பு இருக்கிறது என அவர்கள் சொல்வதற்கு அநேகமாக இதுவே ஒரு முக்கியக் காரணமாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குரிய பகுதியில் வழக்கறிஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது குறித்த விவகாரம் இது. அது மிகவும் சிரமமானது. அநேகமாக இதுவேதான் இத்தகைய தனிப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உடனடி காரணமாகவும் இருக்க முடியும். பெருமெண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள், என்னால் தோழர்கள் என விளிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அவர்களில் சிலரை எனக்குத் தெரியும், அவர்கள் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள். வேறு சிலரை எனக்குத் தெரியாது. இது வழக்கறிஞர்கள் சமூகத்தையும், மக்களுக்கான வழக்கறிஞர்களையும் பற்றி தவறான பிரச்சாரம் செய்வதற்கான வழியாக இருக்கிறது.

ஜானவி சென் : கூடுதலாக, மற்றுமொரு விசயம் அர்னாப் கோஷ்வாமி தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பீமா கோரேகான் வழக்கில் வில்சனின் கணிணியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில், பிரதமரைக் கொல்ல சதி நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதோடு நீங்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் உருவாக்கிவரும் திட்டம் குறித்து நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா ?

சுதா பரத்வாஜ் : இவ்வளவு பெரிய சதித் திட்டம் நடைபெற்றிருக்குமென்றால் ஏன் மாராட்டிய போலீசு மட்டும் இவ்வழக்கை விசாரிக்கிறது என்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஏற்கனவே அந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து அது போலியானதாகத் தெரிகிறதுஎன்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறியிருக்கின்றனர்.

இக்கடிதம் குறித்து முதலில் நான் செய்தது ஒரு அறிக்கையை வெளியிட்டதுதான். ராஜீவ் காந்தி கொலை போன்ற நிலைமைகள் என்றும், காஷ்மீர் போன்ற நிலைமைகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்? வழக்காடும் வழக்கறிஞராக, ஒரு தொழிற்சங்கவாதியாக, இருக்கும் என்னைப் போன்றவர்களை – மிகவும் பொறுமையாக சமரசப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தல், உயர்நீதிமன்றங்களில் வழக்காடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர்களை – காஷ்மீரோடு எப்படிக் கோர்க்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

அவர்களது நோக்கம், இத்தகைய ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைப்பதுதான். ஏனெனில் கைது செய்யப்பட்ட அனைவரும் பல பத்தாண்டுகள் பொது வேலைகளில் ஈடுபட்டவர்கள்.  யாரையும் இவர்கள் பொதுமக்களிடையே நம்பகத்தன்மை இல்லாதாவர்கள் எனக் கூற முடியாது. ஆனால், இப்படி ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை நீங்கள் அவர்கள் மீது வைக்கும் போது, பய பீதியில் மக்கள் அமைதியாக்கப்படுகிறார்கள். நாம் உண்மையில் அதனைக் கேள்வி கேட்க வேண்டும்.

ஒருவேளை அவ்வளவு பெரிய சதித்திட்டம் இருந்திருந்தால், நான் எப்போதுமே தொலைபேசியிலும், நேரிலும் அணுகக் கூடிய இடத்தில்தானே இருக்கிறேன். என்னை இதுவரை யாரும் இதுகுறித்து விசாரிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இந்த புலனாய்வு எவ்வகையைச் சேர்ந்தது எனப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது செயல்பாட்டளர்களை / மக்களை வாயடைக்கச் செய்வதற்கான ஒரு வழி.  குறிப்பாக கடினமான கேள்விகளைக் கேட்பவர்களை வாயடைக்கச் செய்வதற்கான வழி.

ஜானவி சென்: நன்றி ! எங்களோடு இன்று கலந்து கொண்டதற்கு.

செய்தி ஆதாரம் :

தமிழாக்கம்:வினவு செய்திப்பிரிவு