வாஞ்சிநாதன் கைது : மக்கள் வழக்கறிஞர்களின் இந்தியக் கூட்டமைப்பு (IAPL) கண்டனம் !

வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் கைதும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வழக்குகள் தொடர உதவிய வழக்கறிஞர்களை தமிழக போலீசு அச்சுறுத்துவதும் கோழைத்தனமான நேர்மையற்ற பழிவாங்கும் நடவடிக்கையாகும். IAPL பத்திரிகை செய்தி!

டந்த 21-06-2018 அன்று அதிகாலையில் (00:15) வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை போலீசால் கைது செய்யப்பட்டதை ”மக்கள் வழக்கறிஞர்களின் இந்தியக் கூட்டமைப்பு( IAPL ) கண்டிக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட போலீசு தாக்குதலில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக போலீசு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை எதிர்ப்புப் போராட்டத்தோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பு மக்களின் மீதும் தாக்குதல் தொடுத்து வந்தது.

மக்கள் வழக்கறிஞர்களுக்கான இந்தியக் கூட்டமைப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் வழக்காடும் வழக்கறிஞர்களும் இத்தாக்குதலுக்கு இலக்காகினர். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களின் மீது கடும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு, மக்களின் குரலை முடக்கும் தமிழக அரசின் சர்வாதிகார, மக்கள் விரோத நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மேலும் இத்தகைய நடவடிக்கைகள் எந்த ஒரு நாகரிக ஜனநாயக ஆட்சிமுறைக்கும் பொருத்தமற்றவை.

தூத்துக்குடி மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுக்களின் சார்பில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஆலோசகராக இருந்தவர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். தூத்துக்குடி சிப்காட் போலீசு நிலையத்தின் குற்ற எண் 190 / 2018-இன் படி, இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 188, 353, 506[2] மற்றும் தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல் மற்றும் அழித்தல் தடுப்புப் பிரிவு 3 ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை விமான நிலையத்தில் வைத்து வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு கைது செய்தது.

நிராயுதபாணி மக்களை சுட்டுக் கொன்ற பின், தமிழக அரசு ஒருபடி மேலே சென்று, கடந்த மே 22 அன்று நடைபெற்ற (வன்முறைச்) சம்பவங்களுக்கான பழியை தூத்துக்குடி மக்களுக்கு சட்ட உதவி செய்த இரண்டு வழக்கறிஞர்களின் மீது போட்டுள்ளது.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் மற்றும் அரிராகவன் ஆகியோரின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் வரையில் போலீசு அவர்களைக் கைது செய்ய தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அவர்கள் இருவரும்தான் வன்முறைச் சம்பவங்களை கட்டமைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என போலீசிடம் கேட்டிருந்தது.

சட்ட உதவி வழங்கவும், அரசாங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைக்கு வசதி செய்து தரும் பொருட்டும் வாஞ்சிநாதன் மற்றும் பிற வழக்கறிஞர்கள் (100ஆம் நாள் போராட்டம் நடந்த) அன்றைய தினத்தில் தூத்துக்குடியில் இருந்தனர். ஆனால் நீதிமன்றமோ, ”விசாரணையை உங்களால் தவிர்க்க முடியாது” என வெறுமனே கூறி வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் வழக்கறிஞர் அரிராகவனும் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கடந்த ஜூன்18, 2018 அன்று தள்ளுபடி செய்தது.

மேற்கு வங்கத்தில் பாங்கொர், தமிழகத்தில் தூத்துக்குடி, ஒடிசாவில் ஜகத்சிங்பூர், சட்டீஸ்கரில் ராய்கர், குஜராத்தில் சனாந்த், ஜார்கண்டில் சிங்பம், மராட்டியத்தில் கட்சிரோலி என இந்தியா முழுவதும் கார்ப்பரேட்டுகளின் நில ஆக்கிரமிப்பு மற்றும் சுற்றுச் சூழல் விதிமுறை மீறலுக்கு  எதிராகப் போராடும் பாதிக்கப்பட்ட மக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தாக்கப்பட்டு, பொய் வழக்குகளில் சம்பந்தப்படுத்தப்பட்டு, கருப்புச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.

தொழிலாளர் நல வழக்கறிஞர்களாயினும் சரி அல்லது சுற்றுச் சூழலியல் வழக்கறிஞர்களாயினும் சரி அல்லது நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான வழக்கறிஞர்களாயினும் சரி அல்லது பழங்குடியின மக்களுக்கான வழக்கறிஞர்களாயினும் சரி, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ”மக்கள் வழக்கறிஞர்களின் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதுதான் இவ்விவகாரத்தில் காணப்படும் சமீபத்திய போக்கு.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் கைதும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வழக்குகள் தொடர உதவிய வழக்கறிஞர்களை தமிழக போலீசு அச்சுறுத்துவதும் கோழைத்தனமான நேர்மையற்ற பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதமான, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய வழக்குகளில் இனி வழக்கறிஞர்கள் யாரும் வழக்காட முன்வராத வகையில் அவர்களை பயமுறுத்தும் நோக்கம் கொண்டவையாகவே இக்கைதுகள் இருக்கின்றன.

மக்கள் வழக்கறிஞர்களின் இந்திய கூட்டமைப்பு (IAPL), வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் கைதை தெளிவாகக் கண்டிக்கிறது. மேலும்,  அவரை உடனடியாக விடுவிக்க கேட்டுக்கொள்கிறது.

ஒப்பம்
வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், துணைத் தலைவர்,(IAPL)
வழக்கறிஞர் சுரேஷ்குமார், இணைச் செயலர், (IAPL)

Counter Currents இணையதளத்தில் வெளியான அறிக்கையின்  தமிழாக்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க