privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஜிக்னேஷ் மேவானியை ஆதரிப்போம் - அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை விரட்டுவோம் !

ஜிக்னேஷ் மேவானியை ஆதரிப்போம் – அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை விரட்டுவோம் !

-

 

சென்னையில் கடந்த 17-01-2018 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், குஜராத் சட்டமன்ற உறுப்பினரும், இளம் தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த ஆங்கில ஊடகங்களில் அர்னாப் கோஷ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டியளிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிற பத்திரிக்கையாளர்கள், சக ஊடகவியலாளரை (ரிபப்ளிக் டிவி செய்தியாளர்) ஜிக்னேஷ் மேவானி புறக்கணித்ததைக் கண்டித்து அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜிக்னேஷ் மேவானி வெளியேறினார்.

தங்களை நடுநிலையாளர்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சில பத்திரிக்கையாளர்கள் இந்த புறக்கணிப்பை ஆதரித்து எழுதியிருக்கின்றனர். இதை பத்திரிக்கையாளர்களின் ஒற்றுமை என உச்சி முகர்கின்றனர்.

ஹிட்லரின் கோயாபல்சை ஒரு ஊடகம் என ஆதரிப்பவர்கள் மட்டுமே அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை ஆதரிக்க முடியும். இதில் பத்திரிகையாளர் ஒற்றுமை எங்கே வந்தது. சொல்லப்போனால் பத்திரிகையளார்களை பிரித்து ஆதாயம் அடையும் இந்துத்துவாவின் சதியே அரங்கேறியிருக்கிறது.

இதை புரிந்து கொண்டு பத்திரிகையாளர்களின் புறக்கணிப்பை கண்டிக்கும் பதிவுகளை இங்கே தொகுத்து வெளியிடுகிறோம். இவற்றில் பல பத்திரிகையாளர்களின் கருத்துக்கள் என்பது நமக்கு உற்சாகமளிப்பவை.

******

Rajathi Salma

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பிற்காக ஜிக்னேஷ் மேவானி அறைக்குள் நுழைந்த போது நானும் அங்கே இருந்தேன். ரிபப்ளிக் இடம் பேச இயலாது மற்றவர்கள் மட்டும் கேள்வி கேளுங்கள் என்றார் . அதற்கு தம்பி சபீர் அதெல்லாம் இயலாது என்று பத்திரிகையாளர்களது ஒற்றுமை உரிமை என்று சொல்ல ஜிக்னேஷ் வேறொரு அறைக்குள் சென்று விட்டார்.

தன்னை எந்த நேரமும் படு மோசமாக வன்மமாக சித்தரிக்கும் ஒரு ஊடகத்தை புறக்கணிப்பதில் உள்ள நியாயம் எனக்குப்புரிந்தது.
ஆனால் ஆப்டர் ஆல் எம் எல் ஏ வுக்கு இவ்வளவு அகங்காரமா ஜெயலலிதாவோ கலைஞரோ இந்த மாதிரி சொன்னதில்லை என்று சொல்லி வாதாடினார்கள்.

ஒரு தனி மனிதனாக எந்த ஊடகத்தோடு பேச வேண்டும் என்கிற உரிமை ஜிக்னேசிற்கு உண்டு தன்னை தொடச்சியாக டார்கெட் செய்கிற அசிங்கம் பிடித்த ஒரு ஊடகத்திடம் அவர் பேச மறுப்பதில் என்ன தவறு?
ஜெயல்லிதாவிடம் பிரஸ் மீட் கேட்கவே தைரியம் இல்லாத ஊடகங்கள் விசயகாந்திடம் காறி உமிழும்போது அமைதிகாத்த ஊடகங்கள் எச் ராஜாவினால் ஒரு பத்திரிகையாளர் தேசதுரோகி ஆக அடையாளம் காட்டப்பட்ட போது அமைதி காத்த ஊடகங்கள்
இன்று பத்திரிகையாளர்களது ஒற்றுமை என்கிற வித்த்தில் நேற்று நடந்து கொண்டது வேடிக்கையின்உச்சம்.

ஜிக்னேசைப்போல கலைஞரையோ்ஜெயல்லிதாவையோ ஒரு முறை அசிங்கப்படுத்தி விட முடியுமா ரீப ப்ளிக்கோ அர்னாப்போ?
இந்த கேள்விகள் கடும் வாக்குவாதமாக எனக்கும் சபீருக்கு இடையில் பத்து நிமிட நேரம் அந்த இடத்தில் நடந்து கொண்டிருந்த போது ஊடக கேமராக்கள் அவற்றை பதிவு செய்து கொண்டிருந்ததை இறுதியாகத்தான் கவனித்தேன். அது ஊடக தர்மமா என்ன?

காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல் காட்ட முடிகிற இடத்தில் காட்டுவது நிச்சயமாக சுதந்திரம் கிடையாது.

ஜிகரனேசிற்கு ரிப ப்ளிக் செய்வதைப்போல இங்குள்ள ஏதேனும் ஒரு அரசியல் தலைவரை செய்து பார்த்து விட்டு பிறகு வாருங்கள் பார்ப்போம். உங்கள் தைரியத்தை.

இறுதியாக ஒன்று ஜிக்னேஷ் மோடியைப்போல காலி பெருங்காய டப்பா கிடையாது ஊடகங்கள் வீழ்த்திவிட.

******

Kavitha Muralidharan

நேற்று ஜிக்னேஷ் மேவானி-பத்திரிக்கையாளர்கள் பிரச்னையில் இதுவரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தாத நரேந்திர மோடியை எதிர்த்து இவர்கள் இப்படி செய்வார்களா என்று பல பதிவுகளை பார்த்தேன்.
மோடி வரையில் ஏன் போக வேண்டும்? எச்.ராஜாவுக்கு எதிராக என்ன செய்து கிழித்துவிட்டோம்?

அசௌகர்யமாக கேள்வி கேட்ட பல ஊடகவியலாளர்களை சமூக விரோதி என்று அந்த சந்திப்புகளின் போதே திட்டியிருக்கிறார் ராஜா. நாம் சும்மாதானே இருந்தோம்?

கடந்த வருடம் மார்ச் மாதம் தஞ்சாவூரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் விவசாய நெருக்கடி பற்றி ராஜாவிடம் கேள்வி எழுப்பினார். அவரை தேசத் துரோகி, மோடி எதிரி என்று வசை பாடியதோடு “எவ்வளவு வரி கட்டியிருக்கிறீர்கள், அதை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று மிரட்டினார் ராஜா. அதன் பிறகு தமிழக ஊடக சூழலில் ஒரு சிறு அதிர்வு கூட ஏற்படவில்லை.

தஞ்சாவூரில் (அநேகமாக) ஒரு தமிழ் பத்திரிக்கையாளருக்கு அவமானம் நேர்ந்தால் அது எச்.ராஜாவின் சுதந்திரம். சென்னையில் தன்னை வன்மத்தோடு தொடர்ந்து வரும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி தரமாட்டேன் என்று சொன்னால் அது ஜிக்னேஷ் மேவானியின் திமிர். எவ்வளவு மேட்டிமைத்தனம் நம்மிடம்?

நம் அதிகாரம், சுதந்திரம் எல்லாம் ஜிக்னேஷ் மேவானியை மட்டுமே புறக்கணிக்க உதவும். எச்.ராஜாவின் நிழலை கூட தொடாது.

******

Arul Ezhilan

ஊடக உலகின் குப்பை வண்டி.. #Republic_TV

சில இடதுசாரி சிந்தனையாளர்களும்,சில ஊடகவியலாளர்களிடம் ஜிக்னேஷ் மேவானி தொடர்பாக ஒரு நடுக்கம் காணப்படுகிறது.
எங்கே இதை கண்டிக்கா விட்டால் ….ஊடகங்களை, ஊடகவியலாளர்களை பகைத்துக் கொண்டால் நம்மை தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைக்காமல் விட்டு விடுவார்களோ என்ற பதட்டம். அந்த பதட்டத்தில் ரிபப்ளிக் சானலை புறக்கணித்த ஜிக்னேஷ் மேவானிக்கு அட்வைஸ் அளிக்கும் நோக்கில் வழக்கமான தங்கள் இட்லி, வடாம் தோசை மாவை அட்வைஸுகளாக ஊற்றத் தொடங்கி விட்டார்கள்.
ஜிக்னேஷ் மேவானி புறக்கணித்தது ஒரு கலாச்சார பாசிச ஊடகத்தை, அது தலித் மக்களை,பெண்களை, கம்யூனிஸ்டுகளை, முற்போக்காளர்களை, இடது ஆதரவாளர்களை தொடர்ந்து கருத்தியல் படுகொலை செய்து வந்ததது, தொலைக்காட்சி விவாதங்கள் நாய் குரைக்கும் விவாதங்களைப் போல உருமாற்றம் அடைந்தது அர்னாப் என்ற ஆஃபாயிலிடம் இருந்து உருவான மரபுதான்.

நாய்க்கு ரேபிஸ் இருக்கிறது என்று தெரிந்த பிறகு அருகில் செல்வது சரியல்ல. அதனிடம் கடிபட்டால் நாமும் நாய் மாதிரி குரைத்தே சாக வேண்டியிருக்கும். இதை புரிந்து கொண்ட ஜிக்னேஷ் மேவானி ரேபிஸ் வைரஸான ரிபப்ளிக் சானல் இருந்தால் நான் பேச மாட்டேன் என்றிருக்கிறார். தமிழகத்தில் வைத்து ரிபப்ளிக் சானலுக்கு சரியான உதை கொடுத்திருக்கிறார். இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.

வேண்டாம் என்று சொல்லி பழக்கமில்லாத நமக்கு ஒருவர் வேண்டாம் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ரிபப்ளிக் சானலை வேண்டாம் என்று சொனன் அந்த புறக்கணிப்பை நாம் கொண்டாடி தீர்த்திருக்க வேண்டும். மிகச்சிறந்த அரசியல் கலகம் அது. காரணம் ரிபப்ளிக் ஒரு சானலே அல்ல…
அது, இந்திய ஊடக உலகின்… இந்துத்துவ கலாச்சார பாசிசத்தின் ஒரு நேரடியான குப்பை வண்டிதான் ரிபப்ளிக் அதை எந்த வடிவத்திலும் நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடக நண்பர்கள் நமக்கிருக்கும் முற்போக்கான அடையாளங்களை தொலைத்து விடக்கூடாது…!

******

Mathava Raj

இன்று ஜிக்னேஷ் மேவானி ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொல்லியதும், மற்ற ஊடகங்களும் வெளியேறி இருக்கின்றன.

இவர்களின் ஊடக தர்மம், அறம் சர்ந்தது. இல்லை என்பது தெரியும். ஆனால் தொழில் சார்ந்து கூட இல்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

காவிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷும் ஒரு பத்திரிகையாளர்தான். அந்தக் கொலையை ரிபப்ளிக் டிவி எப்படி சித்தரித்தது என்பதை நாடே பார்த்தது. அதனைக் கண்டித்து ரிபப்ளிக் டிவியில் பணிபுரிந்த இளம் பெண் ஊடகவியலாளர் சுமந்தா நந்தி கோபம் கொண்டு அந்த நிறுவனத்தை விட்டு மனசாட்சியுடன் வெளியேறினார், எந்த ஊடகமும் குரல் கொடுக்கவில்லை. தார்மீக கோபத்தை வெளிப்படுத்தவில்லை,

அதிகாரத்தின் குரலுக்கு அடங்கிப் போகிறவர்கள், உண்மையை உரக்க பேச முடியாதவர்கள், மக்களின் நாயகன் ஜிக்னேஷ் மேவானியை புறக்கணித்தது அவர்களின் அடிமைத்தனத்தையே காட்டுகிறது.

சென்ற வருடம் ஜே.என்.யூ போராட்டத்தின் போது செய்தியாக்க வந்த ரிபப்ளிக் டிவி குழுவினரை மாணவர் தலைவர் ஷீலா ரஷித் வெளியேறுங்கள் என்று சொன்னபோது, அதனை முற்போக்காளர்களும், நல்ல சிந்தனையாளர்களும் கொண்டாடினர்.

இன்றும் கொண்டாடுவோம் ஜிக்னேஷ் மேவானி உடன் இருந்து!

******

Arul Ezhilan

இந்துத்துவ எதிர்ப்பு பழைய அணுகல் முறையை கைவிடுவோம்..!

ஊடக எதிர்ப்பு என்ற ஒன்றையும் உங்கள் அரசியல் பண்பாக்கிக் கொள்ளுங்கள்.காரணம் சரி பாதி ஊடகங்களுக்கு காவி பெயிண்ட் அடித்து விட்டார்கள். அவர்களை நீங்கள் குண்டு மணி அளவுக்குக் கூட பயன்படுத்திக் கொள்ள முடியாது.ஆனால் உங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.இந்துத்துவத்தை எதிர்க்க 20 ஆண்டுகள் பழைய அணுகல் முறைகளை குறைத்துக் கொண்டு மேவானி உருவாக்கியுள்ள புதிய அணுகுமுறைக்கும்.உங்களை பழக்கிக் கொள்ளுங்கள்

******

Vijayasankar Ramachandran

எதிர்வினையாற்றுபவர்களை எதிரிகளாக்காதீர்கள்

இரு வாரங்களுக்கு முன் டெல்லி பிரஸ் கிளப்பிற்கு எங்களுடைய டெல்லி சகாக்களுடன் சென்றிருந்தேன். மேவானியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்த பிறகு கூட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சி கேமராக்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பிரஸ் கிளப்பிற்குள் இருக்கும் அறைக்கு அவர் சென்றபோதும் விடவில்லை. எல்லா கேமராக்களும் மேவானியை நோக்கியிருக்க அங்கு ஏதோ ஒரு கலவரச் சூழல் நிலவுவது போல் காட்டும் நோக்கில் ரிபப்ளிக் டிவி கேமரா மட்டும் கூட்டத்தை நோக்கியே இருந்தது. அப்போதே எங்கள் குழுவின் இளம் பத்திரிக்கையாளர் இதை எனக்குச் சுட்டிக் காட்டினார். அந்த நேரத்தில் தோழர் த ஜீவலட்சுமி ரிபப்ளிக் டிவியில் அந்த நிகழ்வினைத் தவறாக சித்தரிக்கும் முயற்சி நடப்பதாக முகநூலில் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல. ரிபப்ளிக் டிவி மேலும் இரண்டு பொய்களை பரப்பிக் கொண்டிருந்தது.
1. காங்கிரஸ் காரர் ஒருவர்தான் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் என்று சொல்லி அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த காங்கிரஸ் பிரமுகரை ரிபப்ளிக் டிவி கேமராமேன் துரத்திச் செல்வது போன்ற காட்சியைக் காட்டியது. இது தவறான தகவல் என பிறகு நிரூபிக்கப்பட்டது. அதற்கான இணைப்பை கமெண்டில் தருகிறேன்.
2. மேவானியின் கூட வந்திருந்த ‘குண்டர்கள்’ ரிபப்ளிக் டிவி பெண் நிருபரைச் சீண்டியதாகக் கூறி கூட்டத்தில் இருந்த சிலரை வட்டமிட்டுக் காட்டியிருந்தது.அதில் ஒருவர் ஏபிபி செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளர். அந்நிறுவனம் மேதகு அர்னாபிடம் புகார் செய்தது. ரிபப்ளிக் டிவி பகிரங்க மன்னிப்புக் கேட்டது.

பிரஸ் கிளப்பிற்கு வெளியிலும் தேவைக்கு அதிகமாக போலீஸ் படை குவிக்கப் பட்டிருந்தது. வேண்டுமென்றே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. ஒரு கட்டத்தில் பிரஸ் கிளப்பிற்குள்ளும் போலீஸ் வந்தது. மான ரோஷம் நிறைந்த பிரஸ் கிளப் செயலாளர் இங்கு உறுப்பினர்கள் மட்டுமே வரலாம். வெளியேறுங்கள் என்று ஆக்ரோஷமாகச் சொன்னார். சிறிது நேரம் அவருடன் காரசாரமாகப் பேசிய போலீசார் கோபமாக வெளியேறினர்.
இதற்கிடையில் அமைதியாக பத்திரிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் மேவானி. நானும் அவருடன் சில நிமிடங்கள் பேசினேன்.

நியாயம்மாரே எதிர்வினையாற்றுபவர்களை எதிரிகளாக்காதீர்கள்.

******

Arul Ezhilan

அந்த ரிபப்ளிக் ஊழியர் வெறும் ஊதியம் பெறும் ஊழியர் மட்டுமே தானா?

ஜிக்னேஷின் பத்திரிகைச் சந்திப்பில் எந்த ஊடகம் கலந்துக் கொள்ளக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை ஜிக்னேஷ் மேவானியின் தனி நபர் சுதந்திரம் தொடர்பானது. அவர்தான் ரிபப்ளிக் சானலுக்கு நோ சொல்லியிருக்கிறார். அது ரிபப்ளிக் சானலின் ஊழியர்களுக்கு எதிரானது அல்ல ஒரு பாசிச குப்பைத் தொட்டிக்கு எதிரான மிகச்சிறந்த எதிர்ப்பு நடவடிக்கை.

சரி ரிபப்ளிக் ஊழியருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவே வைத்துக் கொள்வோம். இந்த மாதிரி சம்பளம் பெறும் நபர்கள்தானே அணு உலை போராளி உதயகுமார் வீட்டில் போய் கேமிரா வைத்தார்கள். ரிபப்ளிக் சானலின் அடியாட்களைப் போல தொழிற்படும் இந்த நபர்கள் வெறும் அப்பாவி பத்திரிகையாளர்களா?

ஒரு வேளை ரிபப்ளிக் சானலை அவர் அனுமதித்திருந்தார். இந்த சந்திப்புக்கு வந்த அந்த அப்பாவி ஊடகவியலாளர் மேவானியின் சந்திப்பு தொடர்பாக நேர்மையான செய்தி தொகுப்பை வழங்கியிருப்பாரா? அப்படியே வழங்கினாலும் அதை ரிபப்ளிக் சானல்தான் வெளியிட்டிருக்குமா?

ஊடக நிறுவனங்களில் ஊதியத்திற்கு பயிற்று விக்கப்படும் மூளை சுதந்திரமாக செயல்படுமா? செயல்பட முடியுமா?

எச்.ராஜாவின் நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள், இந்துத்துவ கும்பலின் டிபன் பாக்ஸ் குண்டுகளுக்கு அஞ்சி நடுங்குகிறவர்கள். எத்தனையோ ஊடகவியலாளர்கள் ஜெயலலிதாவின் அநாகரீக தாக்குதலுக்கு உள்ளான போது அதை மவுனமாக சகித்துக் கொண்டவர்கள் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்று பேசுவது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது?

******

இர.இரா. தமிழ்க்கனல்

நெறிப்படி செயல்படாத ஊடகத்தைக் கண்டிக்கத் துப்பில்லாமல், அதைப் புறக்கணிக்கும் மக்கள்தலைவரது முடிவை விமர்சிக்க எந்த ஊடகத்தவனு/ளுக்கும் அருகதை இல்லை! …………. எம்மைப் போன்ற ஊடகத்தவரையும் சேர்த்து, ‘மேவானி புறக்கணிப்பு’ என மோசடி செய்வதைக் காறி உமிழ்கிறேன்.

******

Shehla_Rashid

We respect journalists. We let them into our homes. We take their calls even at midnight. That’s because there are ground rules. You can’t demand all these privileges while disrespecting all ethics of journalism. If you work only for TRP, expect to be treated as salesmen.

******

Mahalingam Ponnusamy‏ @mahajournalist

சன் டிவி, தினகரன், நக்கீரன் நாட் அலோவ்டு. கெட்டவுட் அப்படீன்னு சொல்லும் போது ஏன் புறக்கணிக்கவில்லை?

******

noushad ksk‏ @noushadksk

மேவானி செய்தது வரவேற்கத்தக்கது. ஆட்சியாளர்களுக்கு ஊதுகுழலாய் இருப்பதல்ல ஜனநாயகத்தின் 4 வது தூணான ஊடகங்களின் பணி. மேவானியை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள் ஊடகங்களை விபச்சாரிகள் என்று சொன்ன பாஜக தலைவர்களை என்றைக்காவது புறக்கணித்ததுண்டா..?

******

Kural

ஜிக்னேஷ் மேவானி -ரிபப்ளிக் டி.வி: நெறிபிறழ் இதழியலை நிராகரிப்போம் -பத்திரிகையாளர்களின் குரல்!

ஜிக்னேஷ் மேவானி- ரிபப்ளிக் டி.வி. பிரச்னை, அதைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர்களின் எதிர்ப்பு, இதைத் தொடர்ந்து வரும் எதிர்வினைகள்… என கடந்த ஓரிரு நாட்களாக பத்திரிகையாளர்களை முன்வைத்து தமிழ் சமூக ஊடக வெளியில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு வகையில் இது நன்மைகே. இதுவரை பேசாப்பொருளாக இருக்கும் ஊடக ஜனநாயகத்தின் உள்ளடக்கம் குறித்து பேசுவதற்கு இது ஒரு பொருத்தமான தருணம். பத்திரிகையாளர்களின் உரிமை என்பது எது, செய்தியாளர்கள் ஒற்றுமை என்பது என்ன… என்பது போன்ற அடிப்படையான அம்சங்களை பேசுவதற்கு இது ஒரு நல்வாய்ப்பு.

ஜிக்னேஷின் எதிர்ப்பு தனிப்பட்ட பகையால் வருவதல்ல. அதேபோல ரிபப்ளிக் டி.வி.யின் வன்மமும் தனிப்பட்ட பகை அல்ல. ரிபப்ளிக் டி.வி. நேரடியாக மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கை பரப்பும் குரலாக இருக்கிறது. அதனாலேயே பல சதிவேலைகள், பொய் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அது ஒரு தரப்பில் தெளிவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல, அதன் எதிர்தரப்பாக, இந்துத்துவ கும்பலின் பாசிஸ செயல்பாடுகளை துல்லியமாக அம்பலப்படுத்தும் நபராக மேவானி இருக்கிறார். மேவானி என்ற தனிநபரை அவர்கள் எதிர்க்கவில்லை. மேவானி முன்வைக்கும் அரசியலைதான் எதிர்க்கிறார்கள். அதுவும் பிரதமர் மோடியின் பெருமைக்குரிய குஜராத்தில் இருந்து துணிச்சலாக கிளம்பியிருக்கிறது மேவானியின் குரல். இந்த அடிப்படை வேறுபாட்டை பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்ளாமல் கருத்து சுதந்திரம், பத்திரிகையாளர்களின் உரிமை என பேசுவது அபத்தம்; திசைதிருப்பும் முயற்சி.

ஜிக்னேஷ் மேவானி, ரிபப்ளிக் டி.வி.யின் மைக்கைதான் எடுக்கச் சொல்கிறார். அந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளரை வெளியேறச் சொல்லவில்லை. ‘ரிபப்ளிக் டி.வி. மைக்கை எடுங்கள்’ என்று சொல்வது ரிபப்ளிக் டி.வி.க்கு எதிரானதே தவிர, அந்த தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு எதிரானது அல்ல. இது ஒரு எளிய புரிதல். ஆனால் அதை எதிர்த்த செய்தியாளர்களுக்கும், அதை அங்கீகரிக்கும்; வழிமொழியும் மற்றவர்களுக்கும் இது புரியவில்லை. அவர்கள், இதை செய்தியாளருக்கு நேர்ந்த அவமானமாகப் பார்க்கிறார்கள். ஒருவேளை அவர் மட்டும் வெளியேற நேர்ந்தால், அவர் தனித்து விடப்பட்டதாக உணர்வாரோ என அச்சம் கொள்கின்றனர். சக பத்திரிகையாளர் மீதான இந்த நேசம் புரிந்துகொள்ளக்கூடியது என்றாலும் இந்த இடத்தில் பொருத்தமற்றது.

நெடுவாசல் அல்லது கதிராமங்கலம் போராட்ட களத்துக்கு உள்ளூர் தாசில்தார் போகிறார் எனக்கொள்வோம். மக்கள், அவரை ஊருக்குள் நுழையவிடாமல் வெளியேறச் சொல்கின்றனர் என்றால், அவர்களுக்கு தாசில்தார் மீது தனிப்பட்ட பகை என்று பொருள் அல்ல. அது அரசின் மீதான கோபம். அதை அரசின் பிரதிநிதி மீது காட்டுகின்றனர். ரிபப்ளிக் டி.வி.யின் மைக்கை வெளியே எடுங்கள் என்றால், அது அந்த தொலைக்காட்சியின் மீதான கோபம். இதை இந்தக் கோணத்தில் புரிந்துகொள்ள நாம் தவறுவது ஏன்?

பத்திரிகையாளர்கள் பல சந்தர்ப்பங்களில், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும், நிலைபாடுகளுக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லும் நிலை உருவாகிறது. ஒரு கட்சி உறுப்பினர் தன் கட்சியின் தவறுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று பதில் சொல்லலாம். அதன் கொள்கையை ஏற்றவர் என்ற அடிப்படையில் அது அவருடைய கடமை. ஆனால், ஒரு நிறுவனத்தின் ஊழியரை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கச் சொல்ல முடியுமா?

முடியாது என பொதுவில் சொல்லலாம். ஆனால் அது நிபந்தனைக்குட்பட்டது. ஏனெனில் பத்திரிகையாளர் என்பவர் வெறும் அஃறிணைப் பொருட்களை உற்பத்தி செய்யவில்லை. அவர் கருத்துக்களை, கண்ணோட்டங்களை, செய்திகளின் மூலம் தருகிறார். ஒரு பத்திரிகையாளரின் செய்தியை வைத்து இத்தகைய வலதுசாரி ஊடக நிறுவனங்கள் மதவெறியை தூண்டி விடுகிறது என்றால் அதற்கு நிறுவனம் முதன்மையான பொறுப்பு என்றாலும், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் தனது கைகளை வெறுமனே கழுவிக் கொள்ள முடியுமா? சொல்லப் போனால் ஒரு ஊடகவியலாளரின் அறத்திற்கான போராட்டம் இங்கேதான் விதை கொள்கிறது.

ஊடக நெறி என்பதை காலில் போடும் செருப்பாக மதிப்பவரும், இந்திய ஊடகத் தரத்தை சீரழிக்கும் ஊடக மாஃபியாவாக வலம் வரும் அர்னாப்கோஸ்வாமியையும், அவருடைய ரிபப்ளிக் டி.வி.யையும் ஏன் செய்தியாளர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டும்? சொல்லப்போனால் அந்த அர்னாப்பின் ஊடக அவதாரத்தை கலைப்பதல்லவா நமது கடமை? இனி, இத்தகைய நெறிபிறழ் இதழியலுக்கு துணைபோகாமல் நிராகரிக்கும்படி கோருகிறோம்; விமர்சிக்குமாறு வேண்டுகிறோம். அப்படி நிராகரிப்பதும், விமர்சிப்பதும் நமது கடமை. இதழியல் துறையை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டிய அடிப்படை பணி.

இது பத்திரிகையாளர் ஒற்றுமை என்பது இன்னொரு அபத்தமான வாதம். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்துக்கு ஜிக்னேஷ் மேவானி எந்த கேடும் விளைவித்துவிடவில்லை. இது ரிபப்ளிக் டி.வி.க்கு ஆதரவான ஒற்றுமை என்பதே சரியானது. ’சிறுமை கண்டு பொங்குவோம்’ என்றால், அப்படி பொங்குவதற்கு உரிய சந்தர்ப்பங்களை வரலாறு நெடுக ஜெயலலிதா வழங்கிக்கொண்டே இருந்தார். ஹெச்.ராஜா வரை அந்த லெகசி தொடர்கிறது. இதற்கு எதிராக இதுவரை பத்திரிகையாளர் ஒற்றுமை ஏற்பட்டது இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்வோம். அது ஏன் ஏற்படவில்லை என்பதை பரிசீலிப்போம்.

ஊடக நிறுவனங்களின் சுதந்திரம் என்பது அவற்றின் வர்த்தகத்திற்கு கட்டுப்பட்ட விசயம். ஊடகவியலாளர்களின் சுதந்திரம் என்பது அவர்களின் மக்கள் சார்பில் இருந்து வருவது. இந்தியாவில் சுதந்திர ஊடகங்கள் இல்லை என்ற பிரச்சினை இந்திய ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இல்லை என்பதிலிருந்தே வெடிக்க வேண்டும். சுதந்திரம் என்பது யாரோ ஒரு சூப்பர்மேன் தடைகளை தாண்டிவந்து தருவது அல்ல. அது தன்மானம், சுயமரியாதை, மக்கள் நலனிலிருந்து முகிழ்ந்து வரும் உரிமைக்கான போராட்டம்.

ஒக்கி புயலின் போது குமரி மீனவர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம், அவர் கூறிய விவரங்கள் தவறானவை என்று ஒரு மீனவ இளைஞர் தைரியமாகக் கேட்கிறார். பத்திரிகையாளர்களாகிய நாமோ ஒக்கி புயல் குறித்து அரசு தரும் புள்ளி விவரங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் தொகுத்து தரும் பணியை மட்டும் செய்கிறோம். மனசாட்சியுள்ள ஊடகவியலாளர்கள் அவர்களது ஃபேஸ்புக் பக்கங்களில் மட்டும் ஒக்கியின் உண்மைகளை முன்வைக்கின்றனர். இந்த உண்மை வலிமையாய் நமது ஊடகப் பணிகளில் இடம்பெற வேண்டாமா?

இவையெல்லாம் சாத்தியமா? ஜனநாயகத்தின் பெயரால் நமக்கு மறுக்கப்படும் ஊடக ஜனநாயகத்தை மீட்க முடியுமா? தொடர்ந்து பேசுவோம். நம்மிடமிருந்து மறைந்து போன அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இதழியல் அறத்தை தேடி எடுப்போம்.

– குரல்
Journo’s voice for the masses
For contact: journosvoice@gmail.com