தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்த மசோதாவை, கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றியது மத்திய மோடி அரசு. அந்த சட்டத் திருத்தம் குறித்து மக்களவையில் கடும் விவாதம் ஏற்பட்டது.

இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார். இச்சட்டதிருத்தம், பயங்கரவாதியின் மதத்தை பேதப்படுத்தாமல், பயங்கரவாதத்தை ஒழிக்கவே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்திற்கு திமுக ஆதரவு அளித்திருப்பது முற்போக்காளர்கள் மத்தியிலும், முஸ்லீம்கள் மத்தியிலும் விமர்சனத்தை  எழுப்பியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமைச் சட்டம், 2008 – மும்பை 26/11 தாக்குதலைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என அமித் ஷா வாக்குறுதி அளித்திருக்கிறார். இச்சட்டப்படியே முறைகேடு நடக்கு முடியும் போது சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையே?

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமைக்கு சிபிஐ-யை விட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த தேசிய புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரமும் உண்டு. இதற்கு குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்குத் தேவையான போலீசுப் படையை அனுப்பவேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

இந்தச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வழக்குகளில், முக்கியமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்குப் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் மட்டுமே தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முடியும்.

படிக்க:
♦ காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

ஆனால், தற்போதைய புதிய சட்ட திருத்தம் கூடுதல் அதிகாரங்களை தேசிய புலனாய்வு முகமைக்குச் சேர்த்துள்ளது. முதலாவதாக, தேசிய புலனாய்வு முகமைக்கு வெளிநாடுகளில் சென்று விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசிற்கு, என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரித்து வரும் செசன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. மூன்றாவதாக, ஏற்கெனவே இருந்த என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உகந்த குற்றங்களின் பட்டியலில் இருக்கும் எட்டுக் குற்றங்களோடு கூடுதலாக நான்கு வகையான குற்றங்களை சேர்த்திருக்கிறது.

முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களோ, அல்லது இந்தியாவின் சொத்துக்களோ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டால் அதனை விசாரிக்க என்.ஐ.ஏ-வுக்கு முழு அதிகாரத்தையும் அளிக்கிறது.

இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், குறிப்பான வழக்குகளில் பல்வேறு தரப்பில் அனுமதி பெற்று சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் 9 மாதங்கள்வரை ஆவதால், மத்திய அரசின் அனுமதியை மட்டும் பெற்றுக் கொண்டு விசாரணை நடக்கும் செசன்ஸ் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படச் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

மூன்றாவதாக, என்.ஐ.ஏ-வால் விசாரிக்கத் தகுந்த குற்றங்களின் பட்டியலில் புதியதாக பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தல், கள்ள நோட்டு அடித்தல், (இந்திய தண்டனைச் சட்டம் 370, 370A (1860)) ; தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் (ஆயுதச்சட்டம் (1959) பிரிவு 25 [1AA] ; இணையக் குற்றங்கள் (தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 66F) ; வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் (2000) ஆகிய பிரிவுகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் குற்றப்பட்டியல்களில் சேர்த்துள்ளது பாஜக அரசு.

புதிய குற்றப் பிரிவுகளை உள்ளே சேர்த்ததன் மூலம் பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.

குறிப்பாக ஆயுதம் தயாரித்தல் – விற்பனை செய்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளைச் சேர்த்திருப்பதைப் பார்க்கையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ சாத்வி பிரக்யா சிங்கை விடுவித்தது தான் நமது நினைவுக்கு வருகிறது.

இன்று ஆயுதத் தயாரிப்பு, வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து சிக்கியிருப்பது யார்? சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல்கள்தான் இத்தகைய வழக்குகளில் கைதாகியிருக்கின்றனர்.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்களைக் கொன்ற சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல், தற்போது மாநில அரசுகள் அமைத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவின் வளையத்திற்குள் சிக்கியிருக்கின்றன. இந்த சட்டத் திருத்தத்தின் படி இந்தக் கிரிமினல் கும்பல்களை விசாரிக்கும் அதிகாரமும் இனி என்.ஐ.ஏ-விடமே ஒப்படைக்கப் படலாம்.

பின்னர் நடக்கவிருப்பது நாம் அறியாததல்ல. சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் போல இந்தக் கும்பலும் என்.ஐ.ஏ-வின் உதவியுடனும் சிறப்பு நீதிமன்றத்தின் உதவியுடனும் விடுதலை செய்யப்பட்டு, எம்.பி சீட்டோ, எம்.எல்.ஏ. சீட்டோ கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படலாம்.

நாடாளுமன்றத்தில் தனது உரையில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைகள் குறித்தெல்லாம் குரல் எழுப்பிய திமுக-வின் நாடாளுமன்றக் கொறடா ஆ.ராசா அவர்கள், இந்த சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துவது கண்டிக்கத் தக்கது.

அடுத்ததாக இணையக் குற்றப் பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் இந்தப் பிரிவே பொத்தாம் பொதுவாக பின்வருமாறுதான் ஆரம்பிக்கிறது. “with intent to threaten the unity, integrity, security or sovereignty of India” அதாவது “இந்தியாவின் ஒற்றுமைக்கு, ஒருங்கிணைந்த தன்மைக்கு, பாதுகாப்புக்கு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடன்..” இணையத்தில் எழுதினால் இனிமேல் என்.ஐ.ஏ. பிடித்துக் கொண்டுபோய் உள்ளே தள்ளும் என்பதுதான் அதன் பொருள்.

இனி திமுக-வின் ஐ.டி பிரிவினர் திராவிடம் 2.0 என்றோ, இந்தியைப் புறக்கணிப்போம் என்றோ டிவிட்டரிலும், முகநூலிலும் பதிவிட்டாலே போதும், என்.ஐ.ஏ கைது செய்ய முகாந்திரம் இருக்கிறது. ஏனெனில், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த தன்மைக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் இருக்கிறது அல்லவா ?

மோடி அமித்ஷா கும்பல் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறித்து பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆ.ராசா நாடாளுமன்றத்தில், “நாட்டில் சிவில் சட்டங்களை தவிர, எல்லா கிரிமினல் சட்டங்களும் மதச்சார்பற்றவைகளாகவே இருக்கின்றன; எனவே, இச்சட்டத்தை மதக் கண்ணோட்டத்தோடு அரசு அணுகக்கூடாது.” என்று பேசியதாக, தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிரிமினல் சட்டங்கள் மதச்சார்பற்றதாக இருக்கலாம். அதனை நடைமுறைப்படுத்தும் இடத்திலும், கண்காணிக்கும் இடத்திலும் காவிக் கிரிமினல் கும்பல் அல்லவா இருக்கிறது?

மேலும் இச்சட்டத்தின் படி ஒருவர் மீது ஐயம் இருந்தாலே போதும் கைது செய்து நெடுங்காலம் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் எப்படி கைது செய்யப்பட்டார், யார் சொல்லி கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் முதல் தகவல் அறிக்கையில் கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விசாரணை மூடுண்ட நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கும் இச்சட்டம் உதவுகிறது. ஒருவர் ஒரு பென்டிரைவ் வைத்திருந்தார் அதில் இந்தியாவிற்கு எதிரான முழக்கம் இருந்தது என்று கூட அவரைக் கைது செய்ய முடியும். இவையெல்லாம் இச்சட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் அம்சங்கள்.

குறிப்பாக முஸ்லீம் மக்களை கேட்பார் கேள்வியின்றி கைது செய்ய இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தடா, பொடா போல இச்சட்டமும் முஸ்லீம்களோடு அரசியல் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து பழிவாங்க பாஜக அரசிற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கூடவே என்.ஐ.ஏ சட்டப்படி பெரும்பாலான வழக்குகளில் அப்பாவிகள்தான் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கிறது. இந்துமதவெறியர்கள் மட்டும் என்.ஐ.ஏ விசாரிக்கும் போது விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே நடப்பது போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அதற்கான சட்டப் பாதுகாப்பை, இந்த சட்டமும் அதன் திருத்தங்களும் தருகின்றன.

இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பேசினாலும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க, பிஎஸ்பி, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இச்சட்ட திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்கின்றன. சிறுபான்மையினருக்கு தமது கட்சிகள் கேடயமாக பாதுகாப்பு அளிக்கும் என இக்கட்சிகள் கூறினாலும் இச்சட்டம் முஸ்லீம்களை குறிவைத்து தாக்குவதையும், இந்துமதவெறிக் குற்றவாளிகளை விடுதலை செய்வதையும் ஏற்கெனவே செய்து வருகிறது.

வாக்கரசியலைத் தாண்டி இச்சட்டத்தின் திருத்தம் மட்டுமல்ல இச்சட்டத்தையே ரத்து செய்யுமாறு போராடுவதற்கு முற்போக்கு அரசியல் உலகம் முயலவேண்டும். ஏனெனில் இச்சட்டத்தின் மூலம் பாஜகவை எதிர்த்து யாரும் பேச முடியாது எனும் நிலையை இச்சட்டத் திருத்தம் ஏற்படுத்துகிறது.


நந்தன்

செய்தி ஆதாரம் :  இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க