இந்திய வரலாற்றில், விடுதலைக்காகவும் ,சமத்துவத்துக்காகவும் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகள் பற்றிய செய்திகளை ஏடுகளில் காண்பது அரிதாக இருக்கிறது. காரணம் அவை முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. அதுவும் தமிழில் அது பற்றிய நூல்களும் அதிகளவு வெளிவரவில்லை. அப்படியே வந்தாலும் சிலவற்றைத் தவிர பலவும் அரைத்த மாவையே அரைத்தனவே தவிர மறைக்கப்பட்ட வரலாற்று சுரங்கங்களை தோண்டித் துருவிய சான்றுகளோடு வெளிவரவில்லை.
இந்த நிலையில் முனைவர் மு.இனியவன் எழுதிய ”பீமா கோரேகான் -பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு” என்ற வரலாற்று நூல், கள ஆய்வுகளோடும் வரலாற்றுத் தரவுகளோடும் வெளிவந்திருப்பது மகிழ்வைத் தருகிறது.
பதினோரு தலைப்புகளில் 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலை கோவையைச் சேர்ந்த அறிவாயுதம் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூல் சிறியதுதான். ஆனால் கனமானது. நூலாசிரியரின் கடின உழைப்பை ஓவ்வொரு பக்கத்திலும் உணரலாம். தொடக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் சரளமான நடையில் பயணிக்கிற இந்நூல் புதிய புதிய பல்வேறு வரலாற்று செய்திகளை நம் முன் பரிமாறிச் செல்கிறது.
படிக்க :
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்
♦ வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்
மகாராஷ்டிரா மாநிலம் பூனா மாவட்டத்தில் பீமா என்கிற ஆற்றின் கரையில் அமைத்துள்ள கோரேகான் என்ற சிற்றூர் பற்றி பலரும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் 2018-ல் பீமா கோரேகானின் 200-வது ஆண்டு நினைவு தினத்தன்று (01-01-2018) லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் இடதுசாரிகளும் முற்போக்குவாதிகளும் கோரேகானை நோக்கி அணி திரண்டபோது அதை தாங்கிக் கொள்ள முடியாத மதவெறியர்களான, சங் பரிவாரங்கள் நடத்திய திட்டமிட்ட வன்முறையைக் காரணம் காட்டி இடதுசாரிகள், முற்போக்காளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரின் மீதும் அரசின் தேசதுரோக வழக்கு பாய்ந்த பின் கோரேகான் எல்லோரும் அறிந்த பெயராக மாறியது மட்டுமல்ல அதன் வரலாறு என்ன என்கிற தேடுதலும் அதிகரித்தது. அந்த கோரேகான் வரலாற்று சுவடுகளை தேடியவர்களில் இந்நூலின் ஆசிரியரும் ஒருவர் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.
மராட்டிய மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்கள் காலம் காலமாக தொடுத்த தீண்டாமை கொடுமைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவம் ஆடினாலும், பேஷ்வாக்களின் தலைநகரான பூனாவில் அவர்களின் வாழ்வியலில் உளவியல் ரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் அடக்குமுறைகள் உச்சத்தைத் தொட்டன.
பூனாவின் தெருக்களில் தீண்டத்தகாதவர்களான மகர்கள் நடக்கும் போது அவர்களது காலடிப்பட்ட இடத்தின் தீட்டை பெருக்கி சுத்தப்படுத்த துடைப்பத்தை இடுப்பிலும்,, எச்சிலை துப்ப குவளையை கழுத்திலும் கட்டிக் கொண்டே செல்ல வேண்டும். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள கையில் கருப்பு சரடு அணிந்திருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்கள் தெருக்களுக்குள் நுழைந்து விட முடியாது. காலையிலும் மாலையிலும், நீண்ட நிழல் ஏற்படும் நேரங்களில் அவர்கள் நடமாட முடியாது. ஏனெனில் அவர்களது நீண்ட நிழல்கள் தங்கள் மீது பட்டு தீட்டாகி விடும். எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் நடமாட உரிமையில்லை.
புதிய கோட்டைகள் கட்ட மகர்களை உயிரோடு நரபலி இட்டனர். சிறு தவறுக்கும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை தலை மட்டும் மண்ணில் தெரிய புதைத்து யானையை கொண்டு தலையை இடரச் செய்யும் நிகழ்வின் கொலைக்களமாக பேஷ்வாக்களின் அரண்மனை முற்றம் திகழ்ந்தது.
இவ்வாறாக காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த மண்ணின் பூர்வக் குடிகளான மகர்கள், வீறுகொண்டு எழுந்து பேஷ்வாக்களை பீமா கோரேகான் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் வெற்றி கொண்டு பழி தீர்த்ததையும், அதன் பின்னே உள்ள வரலாற்றையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய படைப்பிரிவான மகர் படைப் பிரிவுக்கும், மராட்டிய பார்ப்பன பேஷ்வா படைக்கும் நடைபெற்ற யுத்தமே இந்நூலின் மையம் என்றாலும், மராட்டியத்தின் வரலாறு, சத்ரபதி சிவாஜியின் எழுச்சி, அதில் மகர்கள் வகித்த பங்கு, பின்னர் சிவாஜி பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு, பார்ப்பன பேஷ்வாக்களின் கொடுமையான ஆட்சி, அதில் ஒடுக்கப்பட்ட மக்களாகிய மகர், மாங், மாதாரி, மாதிகா, சாமர், ஆகியோர் அடைந்த இன்னல்கள், இழிவுகள் நிறைந்த துன்பியல் வாழ்நிலைகள் மற்றும் கோரேகானை வரலாற்றிலிருந்து தூக்கி எறியத்துடிக்கும் பார்ப்பன இந்துத்துவா சக்திகள், அதற்கு துணை நிற்கும் அரசின் வன்மங்கள் என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளுக்குள் இந்நூல் பயணிக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால்பதித்த பின் நடந்த யுத்தங்கள் ஏராளம். அதன் 200 ஆண்டு கால வரலாறு முழுவதும் யுத்தங்களால் நிரம்பி வழிந்துள்ளன. ஆனால் 1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது. பல நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதும் அதுதான்.
பேஸ்வாக்களால் இழிவும் அவமானமும்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாகிய மகர்களை இந்த போர்க்களம் ஸ்பார்ட்டகஸ்களாக உருமாற்றியது. ஒரு சிறிய படை பல மடங்கு பலமுடைய பேஸ்வாக்களை வென்று புதிய வரலாறு படைத்தது. எப்பொழுதாவது நடக்கும் அரிதினும் அரிதான வரலாற்று நிகழ்வு இது.
பீமா கோரேகானின் போர்க்களக் காட்சிகளை நூலாசிரியர் விவரிக்கும் விதம் அழகும் சுவையும் நிரம்பியது. இரு படைப் பிரிவுகளின் தளபதிகளும், வகுக்கும் போர் உத்திகள், களநிலவரம், படைகளின் அணிவகுப்பு என ஓவ்வொரு காட்சியையும் ஆசிரியர் எழுத்தில் வடித்துக் காட்டி போர்க்களத்திற்குள் வாசகர்களையும் இழுத்து செல்கிறார். ஒரு போர் வீரனாக நம்மையும் நிறுத்துகிறார்.
படிக்க :
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
கோரேகான் அருகே பீமா ஆற்றங்கரையை கிழக்கிந்திய கம்பெனியின் படை கடந்து விட்டால் அது நேராக பூனா சென்று நகர பாதுகாப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொள்ளும். எனவே அதை தடுத்து, தாக்கி அழிக்க வேண்டும் என்பது பேஸ்வாக்களின் திட்டமாக இருந்தது.
எனவே “பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தலைமையில் 20,000 குதிரைப் படைப் பிரிவினரும், 8000 காலாட்படையினரும் பீமா கோரேகானிலிருந்து 2 கி.மீ. தூரம் தள்ளியிருந்த மலைக்குன்றில் முகாமிட்டிருந்தனர். மறுபுறத்தில் கிழக்கிந்திய படையணியின், சுமார் 500 காலட்படைப் பிரிவினரும், 300 குதிரைப்படை வீரர்களும் கேப்டன் ஸ்டாண்டன் தலைமையில் இருந்தனர்”. “காலட்படைப் பிரிவில் மகர்களே அதிகளவில் இருந்தனர்”
போர் உச்சக்கட்டத்தை அடைந்தபொழுது பேஷ்வா படை வீரர்கள், அதிக அளவில் இருந்ததால் சுழற்சி முறையில் அவர்களால் ஓய்வு எடுக்க முடிந்தது. படைகளுக்கு முறையான உணவும்,ஓய்வும் கிட்டியது. அதேவேளையில் ஆங்கிலேய படைப் பிரிவு எண்ணிக்கையில் மிகவும் சிறியதாக இருந்தது. ஏற்கெனவே ஒரு யுத்தக் களத்தில் வெற்றி பெற்று பூனாவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்ததால் உடலளவில் அது களைப்புற்றும் இருந்தது.
போர் உச்சத்தை தொட்ட நேரத்தில் ஓய்வின்றி போர்க்களத்தில் நின்ற அவர்களுக்கு போதுமான உணவும் நீரும் கிடைக்கவில்லை. தாகமும், பசியும் உயிரை வாட்ட தோல்வியின் விளிம்பில் நிற்கின்றனர். ஆங்கிலேய படையின் லெப்டினண்ட் சிஸ் ஹோம்மின் தலை பேஷ்வா படைகளால் துண்டிக்கப்பட்டவுடன், ஆங்கிலப்படையின் மனஉறுதி குலையத் தொடங்கியது.
…. சரணடைந்து விடலாம் என்ற முடிவை எடுக்க சொல்லி சில ஆங்கிலேய வீரர்கள் கேப்டன் ஸ்டாண்டனிடம் கோரிக்கை வைக்க, ஸ்டாண்டனும் மகர் படை வீரனான சித்நாக்கும், “எதிரிகளின் கைகளில் சிக்கினால் தலை துண்டாடப்படுவது உறுதி. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் சண்டையிட்ட தீர வேண்டும். நமது சக்தியை ஓன்று திரட்டி உயிர் உள்ள வரை போராடுவோம்; பேஸ்வா படையை வீழ்த்துவதே நமக்கு முக்கியம்” என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் ஆற்றிய உரை சோர்ந்திருத்த,நம்பிக்கை இழந்து கிடந்த படைப் பிரிவுகளுக்கு புத்துயிர் ஊட்டியது.
வீறு கொண்டெழுந்த மகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எதிரியின் குருதியில் கரைத்தனர் என்று அந்தக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்நூலின் ஆசிரியர் முனைவர் இனியவன்.
நூல் இத்துடன் நின்று விடவில்லை. பீமா கோரேகானின் வெற்றிகளை சீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பன இந்துத்துவவாதிகள் “அந்நியரான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையணியில் இணைந்து கொண்டு உள்நாட்டைச் சார்ந்த படையணியை [சாதி இந்துக்களின் பேஸ்வா படை] வீழ்த்தியதை எப்படி உள்நாட்டு மக்களின் வெற்றியாகக் கொண்டாடலாம். ஆங்கில ஆட்சி அமைய வழி வகுத்த ஆங்கிலோ மராட்டியப் போரை கொண்டாடுபவர்கள் எப்படி இந்தியர்கள் ஆவார்கள்?” என்று எழுப்பும் கேள்விகளுக்கு நெற்றியடி கொடுப்பதோடு பீமா கோரேகான் மீதான மோடி அரசின் வன்மத்தையும் தோலுரித்துக் காட்டுகிறார்.
இறுதியில் “ உங்களது பார்வையில், செயலில் சாதி தீண்டாமை இருக்கும் வரை சக மனிதனை சாதியின் பெயரால் நீங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் வரையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் வழியில், மார்க்சியப் பாதையில் விடுதலைக்கான ஆயிரம் ஆயிரம் பீமா கோரேகான் போரைச் சந்தித்து முழுமுனைப்போடு சாதியத்தை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று தனது நூலை நிறைவு செய்கிறார்.
ஒரு இலக்கோடு விரிந்த பார்வையோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல் முற்போக்கு தமிழர்கள் பலரையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.
நூல் ஆசிரியர் : முனைவர் மு.இனியவன்
வெளியீடு : அறிவாயுதம் பதிப்பகம்
நூல் கிடைக்குமிடம் : 1, சாஸ்திரி வீதி எண்-4, கல்லுரிபுதூர், கோவை -41
தொடர்புக்கு : 9487412854, 93842 99877
விலை : ரூ 120
நூல் மதிப்புரை : முரா. மீனாட்சி சுந்தரம்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். காலங்காலமாக நடந்து வரும் இக் கொடுமைகளை களைய ஒற்றுமை ஏற்படத்த வழிவகைகள் பற்றிய சிந்தனைகளை பதிவிட வேண்டுகிறேன்.