கோவிட் – 19 தடுப்பூசி போட்டு முடித்தபின்னர் சி... சட்டங்கள நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் மாதுவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழும் தாக்கூர் நகர் பகுதியில் தேர்தலுக்கான பேரணி ஒன்றில் பேசிய அமித்ஷா, சி... சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னர், அந்த மக்கள் இந்தியாவின் மரியாதைக்குரிய குடிமக்களாக கருதப்படுவர் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் தலையீட்டின் மூலமாக பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட போது, கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த மாதுவா சமூக இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். அப்படி வந்தவர்களில் பெரும்பான்மையினர் இந்தியக் குடிமக்களாகிவிட்ட நிலையில், குறிப்பான பிரிவு மக்கள் இன்னும் அகதிகளாக உள்ளனர்.

படிக்க :
♦ சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
♦ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !

இந்த சமூக மக்கள் சுமார் 30 சட்டமன்றத் தொகுதிகளில் செல்வாக்கு அதிகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மேற்கு வங்கம் முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். திரிணாமுல் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருந்த அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்தனர்.

முசுலீம் மக்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்குவதை நோக்கி முன்னெடுத்து வைத்திருந்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

இதனை உணர்ந்த மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு இறுதி முதல் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தமது போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது விவசாயிகள் போராட்டத்தை வன்முறை என்று காரணம் காட்டி எப்படி முடித்துவிட திட்டமிட்ட சதிகளை அரங்கேற்றியதோ, அதே போல அன்றைய சி... எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறையைத் தூண்டி அப்போராட்டங்களை முடக்கத் திட்டமிட்டது.

அவை அனைத்தும் பாஜக – சங்க பரிவாரக் கும்பலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை குறிப்பாக மாணவர்களின் எதிர்ப்பைக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து சில காலம் அடக்கி வாசித்த அமித்ஷா கும்பல் கடந்த 202-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று மிகப்பெரும் கலவரம் ஒன்றை டெல்லியில் அரங்கேற்றியது. இந்துத்துவக் கிரிமினல்களை களத்தில் இறக்கி ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியை கலவரக் காடாக்கியது.

தற்போது விவசாயிகள் போராட்டத்தில், சீன சதி, காலிஸ்தான் தீவிரவாதிகள் சதி என பீதியைக் கிளப்புவதும் போல அன்றும் ஐ.எஸ்..எஸ் சதி பாகிஸ்தான் சதி என பீதியைக் கிளப்பியது மோடி கும்பலும் ஊடகங்களும்.

தற்போது சி... சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா கூறியிருப்பதன் பின்னணியில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திலிருந்து கவனத்தைத் திருப்பும் வகையிலான ஒரு நடவடிக்கையே ஆகும்.

ஒன்றை மறக்கச் செய்ய புதிய ஒன்றைக் கிளப்பி விடுவது என்பது ஆளும் வர்க்கத்திற்கு புதியது அல்ல. இதற்கு சங்க பரிவாரக் கும்பலும் விதிவிலக்கல்ல. மோடி அரசின் இந்தச் சதியை முறியடிக்க ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.

வேளாண் சட்டத்துக்கான போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுக்கையில், இந்தியாவில் நாஜிக்களின் ஆட்சியை சட்டப் பூர்வமாக்கக் கொண்டுவரப்படும் சி... சட்டத்திற்கு எதிரான போராட்டத்தையும் விவசாயிகளோடு இணைந்து நடத்தும் போதுதான் பாசிசக் கும்பலை முறியடிக்க முடியும்.

மக்களைப் பிரிப்பதன் மூலம் வெற்றி பெற முயலும் பாசிசத்தை ஒன்றுபடுதலின் மூலமாகத்தான் வெற்றி கொள்ள முடியும்!

கர்ணன்

செய்தி ஆதாரம் :
The Wire

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க