அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 34

டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள்

அ.அனிக்கின்

ண்டனில் டிஃபோ வழக்கமாகப் போகின்ற அதே சிற்றுண்டி விடுதிகளுக்கும் புத்தகக் கடைகளுக்கும் இன்னொரு கவர்ச்சிகரமான நபர் வருவதுண்டு. அவர் பெயர் டாக்டர் பெர்னார்டு மான்டெவில். அவர் வைத்தியம் செய்யாத மருத்துவர், ஏழைகள் வசிக்கும் பகுதியில் குடியிருந்தவர், நண்பர்களோடு ஆனந்தமாகப் பொழுதுபோக்குவதில் ஆசை கொண்டவர். மற்றவர்கள் விரும்ப முடியாத புகழ் அவருக்குக் கிடைத்திருந்தது. மது பானங்களின் உபயோகத்தை ஆதரித்துப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதற்காக மதுத் தயாரிப்பவர்கள் அவருக்கு வாடிக்கையாகப் பணம் கொடுத்து வந்தார்கள், முக்கியமாக அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவர் உயிர் வாழ்ந்தாரென்று சொல்லப்பட்டது .

பெர்னார்டு மான்டெவில் ஹாலந்து நாட்டில் 1670-ம் வருடத்தில் பிறந்தார். 1691-ம் வருடத்தில் லெய்டென் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் இங்கிலாந்துக்குப் போனார். அவர் திருமணம் செய்து கொண்டார், அங்கேயே லண்டனில் தங்கினார், இங்கிலாந்துக் குடியுரிமையைப் பெற்றார்; அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான விவரங்கள் தெரியவில்லை. 1733-ம் வருடத்தில் அங்கேயே மரண மடைந்தார்.

அவர் தத்துவஞானி, எழுத்தாளர் என்ற வகையில் அடைந்த புகழுக்கு ஒரு புத்தகமே காரணமாக இருக்கிறது. 1705-ம் வருடத்தில் முணுமுணுக்கும் தேன்கூடு அல்லது நேர்மையாக மாறிய போக்கிரிகள் என்ற தலைப்புள்ள சிறு கவிதை நூலை ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டார். கவிதை சாதாரணமாகவே இருந்தது; அந்த நூல் அதிகமான கவனத்தைப் பெறவில்லை. 1714-ம் வருடத்தில் அந்தக் கவிதையோடு நீண்ட கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார். அந்தப் புத்தகத்துக்கு தேனீக்களின் கதை அல்லது தனிப்பட்ட தீயொழுக்கம் – பொதுஜன அனுகூலம் என்ற தலைப்பைக் கொடுத்திருந்தார். இந்தத் தலைப்பில் தான் அந்தப் புத்தகம் பிரபலமாயிற்று.

Bernard_Mandeville
டாக்டர் பெர்னார்டு மான்டெவில்

ஆனால் இந்தப் பதிப்பும் கூட அதிகமான கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. 1723-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் புதிய பதிப்பை சமூகத்தின் இயல்பைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி என்ற ஆர்ப்பாட்டமான துணைத் தலைப்போடு வெளியிட்டார். இதுவரை மான்டெவில் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விளைவு இப்பொழுது ஏற்பட்டது. மிடில் செக்ஸ் பிராந்தியத்தின் நீதிபதி அந்தப் புத்தகம் ‘சமுதாயத்துக்குக் கேடானது’ என்று கருத்துத் தெரிவித்தார்; பத்திரிகைகளில் இப்புத்தகத்தைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களில் மான்டெவில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அவருடைய வாழ்நாளிலேயே அந்தப் புத்தகத்துக்கு ஐந்து பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. 1729-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த பொழுது இரண்டு நூற்றாண்டுக் காலம் இலக்கியத்தில் மான்டெவிலைப் பற்றி வெளிவந்திருக்கும் குறிப்புகளின் நீண்ட பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. அவரைப் பற்றி மார்க்ஸ், ஆடம் ஸ்மித், வால்டேர், மெக்காலே, மால்தஸ், கெய்ன்ஸ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில், குறிப்பாக ஸ்மித், மால்தஸ் ஆகியோர் மீது (இருவருமே அவரை நயமில்லாதவர், நன்மையில் நம்பிக்கையற்றவர் என்று சொல்லி ஒதுக்கியது வேடிக்கையானதே) மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தத் தாக்கம் முக்கியமான இனங்களைப் பற்றிய (மதிப்பு, மூலதனம், லாபம், இதரவை) விளக்கத்தில் ஏற்படவில்லை, ஆனால் மூலச் சிறப்புடைய மரபுக்கு ஆதாரமாக இருந்த அடிப்படையான தத்துவஞான அணுகுமுறையில் இந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது.

படிக்க:
கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

”தனிப்பட்ட தீயொழுக்கம் பொதுஜன அனுகூலம்” என்ற சொற்றொடரில் மான்டெவிலின் முக்கியமான புதிர் அடங்கியிருந்தது. இதில் “தீயொழுக்கம்” என்பதற்குப் பதில் ஸ்மித்தின் பிரபலமான “சுயலாபம்” என்ற சொல்லை உபயோகித்துப் பாருங்கள். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றிய ஸ்மித்தின் முக்கியமான கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய சுயலாபத்தை அறிவோடு தேட அனுமதிக்கப்பட்டால், மொத்த சமூகமும் தழைத்துச் செழிப்பதை அது ஊக்குவிக்கும், அதன் செல்வத்தைப் பெருக்கும். அறநெறிச் சிந்தனைகளின் தத்துவம் என்ற புத்தகத்தில் ஸ்மித் மான்டெவிலைப் பின்வருமாறு குறை கூறினார்: தேனீக்களின் கதையின் ஆசிரியர் எல்லா விதமான தன் முனைப்பான முயற்சிகளையும் செயல்களையும் ”தீயொழுக்கம்’ என்று கூறுவது மட்டும் தவறானதாகும். உதாரணமாக, சுயலாபத்தைத் தீயொழுக்கம் என்று கூற முடியாது.

ஆனால் பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றுக்கு மான்டெவிலின் முக்கியத்துவம் இதனோடு நின்றுவிடவில்லை. அவருடைய அங்கதக் கவிதையில் அவர் முதலாளித்துவ சமூகத்தைக் கடித்து விடுவது போல விமரிசனம் செய்தார்; அதன் அடிப்படையான தீயொழுக்கங்களில் சிலவற்றை முதலில் கண்டுபிடித்தவர்களில் அவரும் ஒருவர். இது தான் அவருடைய “ஒழுக்கஞ்சாராத் தன்மை” என்று சொல்லப் படுவதாகும். மார்க்ஸ் அவரை “நேர்மையும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர்”(1)  என்று கூறுகிறார்.

தேன்கூடு என்பது மனித சமூகம்; அதை மான்டெவில் காலத்திய முதலாளித்துவ இங்கிலாந்து என்றும் சொல்லலாம். அவருடைய கற்பனைக் கதையின் முதற்பகுதியில் இங்கிலாந்தைப் பற்றி ஏளனம் செய்து எழுதியிருப்பது ஸ்விப்ட் போன்ற மாபெரும் எழுத்தாளரை நினைவுபடுத்துகிறது. அந்த சமூகம் அதிலுள்ள தீயொழுக்கங்கள், குறைகள், குற்றங்கள் முதலியவற்றின் காரணத்தினால் தான் இருக்க முடிகிறது. தழைத்துச் செழிக்க முடிகிறது என்பது அவருடைய கற்பனைக் கதையின் மூலக் கருத்தாகும். இந்த சமூகம் “செழிப்போடு” இருப்பதற்குக் காரணம் கோடிக்கணக்கான மக்கள். அவர்கள்

….. அரிவாளும் மண்வெட்டியும்
தூக்கிப் பாடுபடுமாறு
ஆயுள்வரை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றோடு இன்னும் பல் வகையான
கடின உழைப்பும் அவர்கள்
செய்தே தீர வேண்டும்.
கடைகெட்டவர்கள் தினமும்
வியர்வை வழியப் பாடுபட்டு
ஒரு வேளை உணவுக்காக
உடலையும் பலத்தையும்
அழித்துச் சாகிறார்கள்….(2)  

பணக்காரர்கள் சுகத்தையும் வசதிகளையும் விரும்புவதால், நாகரிகம் ஒப்பனை, கற்பனை, வீண் பெருமை முதலியவற்றுக்காகப் பல விதமான பொருள்களையும் வாங்குவதில் வீணாகப் பணத்தைச் செலவழிப்பதால் அவர்கள் இவ்விதம் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த சமூகத்துக்குப் பேராசையுள்ள வக்கீல்கள், போலி மருத்துவர்கள், சோம்பேறித்தனமும் முட்டாள்தனமும் கொண்ட மதகுருக்கள், போர்த் தினவு கொண்ட தளபதிகள், குற்றவாளிகளும் கூட அவசியமானவர்கள். ஏன்? அவர்களுடைய நடவடிக்கைகள் பல விதமான பொருள்களையும் சேவைகளையும் – அவசியமாக்குகின்றன; அதனால் உழைப்பு ஆர்வமும் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் திறமையும் செயலூக்கமும் முன்னேற்றமடைகின்றன.

mandeville-the-Fable-of-the-bees
டாக்டர் பெர்னார்டு மான்டெவில் நூலின் முகப்பு.

எனவே இந்த சமூகத்தில் ”இன்பம் கோடி ஏழைகளுக்கு வேலை தந்தது; இன்னொரு கோடிக்கு கர்வம் வேலை தந்தது; அங்கே பொறாமையும் பெருமையும் தொழில் அமைச்சர்கள்; உணவு, சாமான்கள், உடைகளில் நிலைத்த மடமையும் நிலையில்லாமையும் அவர்கள் பெற்ற குழந்தைகள்; வினோதமான ஏளனத்துக்கு உரிய தீயொழுக்கம் வர்த்தகத்தை இயக்கும் சக்கரம் ஆயிற்று.”(3)

(இங்கே ஒரு உதாரணத்தை நினைவுபடுத்தாமலிருக்க முடியவில்லை. அமெரிக்காவில் மோட்டார் கம்பெனிகள் வருடந்தோறும் புதுரகமான கார்களை உற்பத்தி செய்கின்றன. அதற்குத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் எந்தக் காரணமும் கிடையாது. கார்களை வைத்திருப்பவர்களிடமுள்ள வீண் பெருமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் எந்த விதத்திலாவது விற்பனையை அதிகரிப்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். மான்டெவில் கூறுவது உண்மை, மக்களுடைய “நிலையற்ற தன்மையாலும்” மற்ற பலவீனங்களாலுமே எங்களுடைய தொழில் அமோகமாக முன்னேறியுள்ளது, இந்த பலவீனங்களை நாங்கள் வேண்டுமென்றே ஊக்குவிக்கிறோம் என்று இந்தக் கம்பெனிகளின் இயக்குநர்கள் ஒத்துக் கொள்வது சாத்தியமே.)

ஆனால் தேன் கூட்டில் தீயொழுக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தேனீக்கள் முணுமுணுக்கின்றன. அவர்களுடைய புகார்களைக் கேட்டு அலுத்துப் போன ஜூபிடர் கடவுள் திடீரென்று தீயொழுக்கத்தை அகற்றிவிடுகிறார், தேனீக்களிடம் நற்பண்புகளை ஏற்படுத்துகிறார். ஆடம்பரச் செலவு போய் சிக்கனம் வருகிறது. இன்பம் மறைகிறது; சாதாரணமான இயற்கைத் தேவை களைத் தவிர வேறு விதமான நுகர்வு நின்றுவிடுகிறது. அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்கின்ற தொழில்கள் ஒழிக்கப்படுகின்றன. குறுகிய இன வெறி, பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் ஆசை ஆகியவற்றிலிருந்து விடு விக்கப்பட்டபிறகு ”அவர்களுடைய துருப்புகள் வெளிநாடுகளில் இல்லை; யுத்தங்களால் கிடைக்கும் அந்நியர்கள் பாராட்டையும் போலியான பெருமையையும் பார்த்துச் சிரிக்கிறார்கள்.” (4) 

சுருக்கமாகச் சொல்வதென்றால் மனித சமூகத்தின் வழக்கமான, ஆரோக்கியமான கோட்பாடுகள் அங்கே நிலவுகின்றன. ஆனால், என்ன பயங்கரம்! இது தான் அந்த சமூகத்தைச் சீர்குலைக்கிறது, அழிவை ஏற்படுத்துகிறது. மான்டெவில் இதைக் கவிதையில் வர்ணிக்கிறார்:

அழகான தேன் கூட்டைப் பாருங்கள்; அங்கே
நேர்மை இருப்பின் வர்த்தகம் அழிந்து போகும்.
வருடந்தோறும் அதிகமாகப் பணத்தை விரயமாக்கிய
வசதிகள் மறைந்தன; அவற்றைச் செய்து
பிழைத்த எண்ணற்ற ஏழைகளும் தவித்தார்கள்;
எங்கே போவார்கள்; என் செய்வார்கள்?
அத்தனை தொழில்களிலும் முன்பே நெருக்கடி;
கட்டிடத் தொழில் அநேகமாக அழிந்தது;
திறமை மிக்க கைவினைஞர்களுக்கு வேலையில்லை; அதுபோல
ஓவியர்களைப் புகழ்வதற்கு ஒருவருமில்லை ; பிரபலமான
கட்டிடக்கலைஞர்கள் சிற்பிகள் அனைவருக்கும் வேலை
யில்லை.
அவர்கள் உயிர் பிழைக்கவும் வழியில்லை.(5)

படிக்க:
ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது; கிட்டங்கிகளில் சரக்குகள் குவிந்து கிடக்கின்றன; விலைகள் குறைகின்றன; வருமானம் குறைகிறது; கட்டிட வேலைகள் நிறுத்தப்படுகின்றன. எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா? பிறரைச் சுரண்டி வாழ்பவர்களும் யுத்த வெறியர்களும் வீண் செலவு செய்பவர்களும் போக்கிரிகளும் அந்த சமூகத்தில் வளப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன! – மான்டெவில் தன்னுடைய கருத்துக்களை விசித்திரமான முரணுரையின் வடிவத்தில் வெளியிட்டார் (அவருடைய கற்பனைக் கதையின் பின்னர் வருகின்ற உரைநடைப் பகுதியில் அவற்றை அதிகமான நிதானத்தோடு வெளியிட்டார்). இந்தக் கருத்துக்கள் இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் வெளிச்சத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுவாரசியமானவையாகும். அதிக முக்கியமான இரண்டு விவரங்களை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்.

mandeville-the-Fable-of-the-bees-political-economy-Sliderஎல்லா வர்க்கங்களும் வகுப்பினரும் (நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், அதிகாரிகள் ஆகியோர்) உற்பத்திக்கு உதவி செய்பவர்கள், பொருளாதார ரீதியாக அவசியமானவர்கள் என்ற கருத்தை மால்தசும் அவரைப் பின்பற்றியவர்களும் எடுத்துக் கொண்டனர். உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் அடங்கியுள்ள சிறு பிரசுரத்தில் மார்க்ஸ் இந்தக் கருத்தை எதிர்ப்பதற்கு மான்டெவிலின் கருத்துக்களையும் அவருடைய நடையையும் கூடப் பயன்படுத்துகிறார்.

அவர் பின்வருமாறு எழுதுகிறார் : “… சாத்தியமான ஒவ்வொரு வகைத் தொழிலுமே உற்பத்திக்கு உதவக் கூடியது என்பதை மான்டெவில் முன்பே காட்டினார். முதலாளித்துவ சமூகத்துக்கு ஆதரவாக வாதம்புரிகின்ற மழுப்பல் வாதிகளைக் காட்டிலும் மான்டெவில் அதிகமான நேர்மையும் முடிவில்லாத துணிச்சலும் கொண்டவர்.”(6)

அளவுக்கு மீறிய சிக்கனம் ஆபத்தை ஏற்படுத்தும்; உற்பத்திக்குப் பயன்படாத செலவு, எந்த வடிவத்திலுள்ள ஊதாரித்தனமும் தேவையையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குகின்றபடியால் அது நன்மை தருவது அவசியமானதும் கூட என்ற கருத்து நம் காலத்தில் கெய்ன்சினால் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஒரு கட்டளை விதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மான்டெவிலைத் (மால்தசையும் சேர்த்து) தன்னுடைய முன்னறிவிப்பாளர் என்று கருதினார்.

19-ம் நூற்றாண்டின் இறுதிக்கு வருகின்ற பொழுது முதலாளித்துவ அமைப்பில் எத்தகைய தீமையையும் பார்க்க மறுத்த முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மான்டெவில் ஒரு போலியான கெட்டிக்காரர், சூழ்ச்சியான வாதத் திறமை உடையவர் என்று கருதியது . ஆடம் ஸ்மித் சிக்கனத்தை தனிப்பட்ட வகையிலும் பொதுமுறையிலும் மிகப் பெரிய நற்பண்பாக உயர்த்தியதைக் குறை சொல்ல வேண்டும் என்று அவர்களில் ஒரு வருக்குக்கூடத் தோன்றவில்லை. 1929-33-ம் வருடங்களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியே முக்கியமான முதலாளித்துவப் பொருள்ளியலாளர்களை மான்டெவில் காட்டிய வழியில் சிந்திக்குமாறு செய்தது. மக்கள் சேமிக்க ஆரம்பித்தால் அவர்கள் பண்டங்களை வாங்க மாட்டார்கள்; அப்படியானால் “பயனுள்ள தேவை” குறைந்துவிடும்; மக்கள் தங்களுடைய பணத்தை எந்த நோக்கத்துக்காவது எவ்வழியிலாவது செலவழிக்குமாறு செய்ய வேண்டும்.

டாக்டர் மான்டெவிலின் முரணுரைகளுக்கு வயது இருநூற்றைம்பதாகிறது; ஆனால் அவர் தம்முடைய விமர்சனக் கண்ணோடு ஆராய்ந்த சமூகத்தைப் போலவே, அந்த முரணுரைகளும் இன்னும் உயிரோடிருக்கின்றன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, Capital, Vol. 1, Moscow, 1972, p. 577.
(2) B. Mandeville, The Fable of the Bees. Or, Private Vices, Public Benefits. With an Essay on Charity and Charity-Schools. And a Search into the Nature of Society, 5th edition, London, 1728, p. 3.
(3) B. Mandeville, op. cit., p. 10.
(4) Ibid., p. 18.
(5) Ibid., pp. 18-19.
(6) K. Marx, Theories of Surplus-Value, Part I, Moscow, 1969, p. 388.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க