Saturday, February 15, 2025
முகப்புசெய்திஇந்தியாஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !

ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !

உடல்கூறாய்வின்படி அன்சாரி ‘மாரடைப்பால்’ இறந்ததாகவும் ‘திட்டமிட்ட கொலை தொடர்பான வழக்கு இல்லை’ எனவும் கூறி கொலை குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது ஜார்க்கண்ட் போலீசு.

-

ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் மீதான கொலை குற்றச்சாட்டை கைவிட்டது போலீசு !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ காவி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட 22 வயதான தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேர் மீதான கொலை குற்றச்சாட்டை கைவிட்டுள்ளது போலீசு.

இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதியப்பட்ட நிலையில், இறுதி உடல்கூறாய்வின்படி அன்சாரி ‘மாரடைப்பால்’ இறந்ததாகவும் ‘திட்டமிட்ட கொலை தொடர்பான வழக்கு இல்லை’ எனவும் கூறி கொலை குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது ஜார்க்கண்ட் போலீசு.

Tabrez Ansari“ஐபிசி பிரிவு 304 -ன் கீழ் இரண்டு காரணங்களுக்காக நாங்கள் வழக்கு பதிந்தோம். ஒன்று அன்சாரி அந்த இடத்தில் இறக்கவில்லை. அன்சாரியை கொல்லும் எண்ணம் கிராமத்தினருக்கு இல்லை. இரண்டு இறுதி உடல்கூராய்வு அறிக்கையில் அன்சாரி மாரடைப்பு காரணமாகத்தான் இறந்தார் என்கிறது. தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு ஆபத்தானதாக இல்லை எனவும் கூறியது. உடல்கூராய்வு மீதான இரண்டாவது கருத்தாக தலையில் ஏற்பட்ட காயமும் மாரட்டைப்புமே அன்சாரியின் மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டது” என்கிறார் போலீசு அதிகாரி ஒருவர்.

கடந்த ஜூன் 18-ம் தேதி, திருட்டு குற்றம்சாட்டி தாத்கிதா என்ற கிராமத்தினர் அன்சாரியை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். அவர் முசுலீம் என்ற காரணத்துக்காக தாக்கும்போது அவரை ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ என முழக்கமிடச்சொல்லி தாக்கியது அந்தக் கும்பல்.

ஒரு நாள் முழுவதும் கட்டிவைத்து அடித்த அந்த கும்பலிடமிருந்து அவரை அழைத்துச் சென்ற போலீசு, அவர் மீது திருட்டு வழக்கை பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தது. தலையில் பலமாக அடிபட்டபோதும் மருத்துவமனைக்கு சிகிச்சையளிக்க அவர் அழைத்துச் செல்லப்படவில்லை.

நான்கு நாட்கள் கழித்து, அன்சாரியின் நிலைமை மோசமடைவதை உணர்ந்த போலீசு, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அங்கே தலையில் மோசமாக தாக்கப்பட்டதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பலனில்லாமல் அவர் இறந்தார். ஜூன் 25-ம் தேதி அன்சாரியின் உடலை கூராய்வு செய்த மருத்துவர், தலையில் அடிபட்டதன் காரணமாக மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவர் இறந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

படிக்க:
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
♦ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !

“வலது ஃப்ரண்டோபாரிட்டல் பகுதியில் காயம் இருந்தது… இது தலையிலிருந்து ரத்தம் வெளியேற அல்லது கசிவுக்கு வழிவகுத்தது. இது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம்” என சாதர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பரியால் மரி கூறியிருந்தார். அந்த நேரத்தில் உடல்கூராய்வு அறிக்கை வெளியிடாமல் இறுதி கருத்துக்காக நிறுத்தி வைத்திருந்தது மருத்துவக்குழு.

மருத்துவக்குழு உடல்கூராய்வு அறிக்கை வெளியிட்ட நிலையில் அதை வைத்து கொலைக் குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது போலீசு. இராஜஸ்தானில் காவி கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட பெஹ்லுகான் வழக்கிலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறிய உடல்கூராய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்.

அந்த வழக்கிலாவது கொலைக் கும்பல் நீதிமன்றம் வரை சென்றது, அதையும்கூட செய்யாமல் ஆரம்பத்திலேயே ‘தீர்ப்பு’ வழங்கிவிட்டது ஜார்க்கண்ட் போலீசு. கும்பல் கொலையின் நியதிப்படியே அனைத்தும் நடக்கிறது. காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் அனைத்துமே கும்பல் கொலைகளில் கூட்டாளிகளாக இருக்கும்போது யாரிடம் போய் நீதிகேட்பது?


கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க