கேள்வி: //என் வீட்டில் உள்ள பெண்களை பார்த்து, பெண்களை முடக்குவதற்கான ஏற்பாடாகத் தான் பூச்சூடுதல், நகையணிதல், பொட்டு வைத்தால், தாலி அணிதல் ஆணாதிக்க சமூகத்தால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்கிறேன். என்னைத் தான் ஏளனமாக பார்க்கின்றனர். நான் என்ன செய்து அவர்களை மாற்றுவது?//

– துழாயன்

ன்புள்ள துழாயன்,

வெறும் கருத்து உரையாடலில் பெண்களை மாற்றி விட முடியாதது மட்டுமல்ல, அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும். சராசரி வாழ்வில் அதாவது ஆணாதிக்க சமூகத்தில் அடிமையாக வாழும் பெண்களிடம் எடுத்த எடுப்பிலேயே அப்படி பேசுவது பலனளிக்காது. பெண்களின் அடிமைத்தனத்தை பேணிப் பாதுகாப்பது குடும்பமும், சொந்த பந்த உறவுகளும்தான். அதை உறுதி செய்யும் வண்ணமே பெண்கள் பார்க்கும் சீரியல்களும், பார்ப்பனிய சமூகத்தின் மரபு – சம்பரதாயங்கள் – சடங்குகள் இருக்கின்றன. ஆக வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களை அவர்களே விரும்பி ஏற்கச் செய்யும் அடிமைத்தனம் செல்வாக்கு செலுத்துகிறது. பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு முன்னர் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?

Makeup அலங்காரம்
மாதிரிப் படம்

முதலில் பெண்களை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து வரவேண்டும். அது ஒரு பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ, இல்லை ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம். இவற்றில் அவரது சிறு உலகிற்கு வெளியே உள்ள பெரிய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்படும். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பிரச்சினைகள் சில அவளது கண்பார்வைக்கு கொண்டு செல்லப்படும். முக்கியமாக இத்தகைய சமூகப் பிரச்சினைக்கு கவலை கொண்டு இப்படி சிலர் வாழ்கிறார்களே என்ற உண்மையும் கவனத்திற்கு வரும்.

இதற்கு அடுத்தபடியாக சாதி மறுப்பு – புரட்சிகரத் திருமணங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே தாலி, அலங்காரங்கள் இன்றி எளிமையாக நடக்கும் திருமண நிகழ்வும், பெண்ணடிமைத்தனம் – ஆணாதிக்கம் குறித்து பேசப்படும் உரைகளும், மணமக்கள் ஏற்கும் உறுதி மொழியும் பெண்களது அக உலகை விசாலமாக்கி அசை போடவைக்கும்.

நமக்குத் தெரிந்து இத்தகைய திருமண விழாவிற்கு வரும் புதிய பெண்கள் இந்த சுயமரியாதை திருமண முறைகளை விரும்புவதும், தங்களுடைய வாழ்விலும் அது போன்று நடக்காதா என்றும் யோசிக்கிறார்கள். சமூகத்தில் சகல சம்பரதாயங்களோடு நடக்கும் திருமணங்கள் அதே சம்பரதாயங்கள், சீர்வரிசைகளால் நின்று போவதோ, சண்டை நடப்பதோ குறித்து இந்த தருணத்தில் அவர்கள் சீர் தூக்கி பார்க்கிறார்கள்.

படிக்க:
பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !
♦ கேள்வி பதில் : நாடு தழுவிய கட்சி சாத்தியமா – தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன் ?

இன்னும் நமது சமூகத்தில் கைம்பெண்களுக்கு பூ, பொட்டு அழித்து, தாலி அகற்றும் சடங்குகள் நடக்கின்றன. மாதவிடாய் காலத்தில் அலங்காரம் அதிகம் செய்யக் கூடாது, கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதும் பின்பற்றப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பேச வேண்டும். பெரியார், இதர முற்போக்கு நூல்களை படிக்க ஆர்வமேற்படுத்துதல் ஆகியவையும் அவசியம். இதையே விரும்பிப் படிக்கும் வண்ணம் நாவல்களையும் படிக்கத் தரலாம்.

Women-protest
முதலில் பெண்களை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து வரவேண்டும். அது ஒரு பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ, இல்லை ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம்.

இறுதியாக நீங்கள் ஒரு இயக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்தால் உங்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். இங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன பிரச்சினை, இந்த சமூகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி ஒரு துவக்கம் இருக்கும். அது அடிமைத்தனம் என்ற ஆயுள் சிறையை விட்டொழித்து சமூக சுதந்திரவெளியில் ஒரு ஒளியூட்டும் ஆளுமையாக மாறுவதற்கு வழி அமைத்துத் தரும்.

பெண்களுடன் நேரம் ஒதுக்கி அரசியல் சமூக பண்பாட்டு பிரச்சினைகளை அறிமுகப்படுத்தி விவாதிக்க வேண்டும். இதன் போக்கில் அலங்காரங்கள் எனும் வெற்று ஜோடனைகள் தானாகவே துறந்து தனது ஆளுமை எது என ஒரு பெண் விரும்பி தரிக்க முடியும். இந்த நீண்ட நிகழ்ச்சிப் போக்கிற்கு ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம். பொறுமையுடன் முயலுங்கள்!

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க