ருக்கலைப்பு செய்து லேப்ரோஸ்கோப்பி குடும்பக் கட்டுப்பாடு செய்ய அனுமதிக்கப்பட்டார் ஒரு பெண். கருக்கலைப்புக்கான மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் அவரைத் தவிர வேறு அவர் உறவினர்கள் யாருமே மருத்துவமனையில் இல்லை.

சட்டப்படி கருக்கலைப்பு செய்யவோ குடும்பக் கட்டுப்பாடு செய்யவோ கணவரின் அனுமதி தேவையில்லை. அது எங்கள் செவிலியர்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் சில நேரங்களில் வடிவேலு மாதிரி (எங்கே என் உறவினர் என்று சுடுகாட்டில் வந்து சத்தம் போட்டு சாம்பல் அள்ளி பூசுவாரே) எல்லாம் முடிந்த பிறகு கணவர் வந்து சண்டைக்கு வருவார். அதனால் உறவினரின் கையொப்பம் வாங்கி வைக்கிறார்கள் செவிலியர்கள். நான் அவ்விடத்தில் இருந்தால் உறவினர் கையொப்பம் எல்லாம் வாங்கவே மாட்டேன்.

இப்பெண்ணிற்கான அறுவைச் சிகிச்சைக்காக நான் அறுவை அரங்கம் சென்றதும் ஒரு செவிலியர் பதறிக்கொண்டு ஓடிவந்தார் என்னிடம். “மேடம் அவர் கணவர் இப்பவரை வரல மேடம்” என்றார். ”கணவர் எதுக்கு இதுக்கு, சட்டமே கணவர் தேவையில்லை எனும் போது நீங்கள் ஏன் அந்த கணவருக்காக காத்து இருக்கீங்க, அதுவும் மனைவிக்கு இன்று அறுவைச் சிகிச்சை எனத் தெரிந்தும் மருத்துவமனை பக்கம் எட்டிப் பார்க்காத கணவரெல்லாம் ஒரு ஆளா, யாரும் தேவையில்லை எனக்கு, அப்பெண் மட்டும் கையொப்பம் போட்டால் போதும், நான் அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து நுண்துளை (laparoscopic sterilisation) குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வேன்” என்று சொல்லி அப்பெண் போட்ட ஒற்றைக் கையெழுத்து கொண்டு கருக்கலைப்பும் நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்தேன்.

சட்டமே கணவர் தேவையில்லை என்ற பின்னும் நாம் ஏன் கணவருக்கு அங்கே முக்கியத்துவம் கொடுக்கனும்? இப்படி கொடுக்கும் முக்கியத்துவங்களால் நாளடைவில் ஆம்பள கையெழுத்து போட்டால்தான் பொம்பள அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை வந்துவிடும். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

பெண்களே… தேவையற்ற கர்ப்பம் எனில் அரசு மருத்துவமனையை நாடவும். கருக்கலைப்பும் குடும்பக் கட்டுப்பாடும் இலவசமாக செய்யப்படுகிறது. இரகசியம் காக்கப்படுகிறது.

படிக்க:
பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்
♦ சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

ஆண்களே…. பெண்களை மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்ய நிர்பந்திக்க கூடாது. நீங்களும் முன்வர வேண்டும். ஆண்களும் வாசக்டமி செய்ய முன்வர வேண்டும். அம்பேத்கரையும் பெரியாரையும் பேசிக்கொண்டே பெண்ணுரிமை பேசும் ஆண்கள் கூட வாசக்டமி செய்ய முன்வருவதில்லை. எவ்வித தயக்கமும் இதில் தேவையில்லை. வாசக்டமி செய்வதற்கு உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வாசக்டமி செய்வதால் கணவன் மனைவி உறவிலும் பாதிப்பு வராது.

நம் பகுதியில் வாசக்டமி செய்யவோ, பெண்களுக்கான நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவோ விரும்புகிறவர்கள் நமது பொன்னேரி அரசு மருத்துவமனையில் வந்து தலைமை மருத்துவரையோ அல்லது பிரசவ பகுதியில் உள்ள மருத்துவர்களையோ நாடவும்.

ஃபேஸ்புக்கில் 25.11.2019 அன்று வெளியிடப்பட்ட பதிவு.

♦ ♦ ♦

வாசக்டமி

த்தியின்றி இரத்தமின்றி ஒரு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை (நிரந்தர) செய்யமுடியுமென்றால் அது ஆண்களுக்கு செய்யப்படும் வாசக்டமி தான். கத்தியில்லாமல் இரத்தம் இல்லாமல் பெண்களுக்கு இதை செய்ய முடியாது. பெண்கள் ஏதோ பயந்து நடுங்குபவர்கள் போலவும் ஆண்கள்தான் ஏதோ தைரியசாலிகள் போலவும் கட்டுக்கதைகள் நிறைய இருக்கிறது நம் சமூகத்தில். தைரியசாலி என்பான், முற்போக்குவாதி என்பான், ஆனால் மனைவியை அனுப்புவான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு.  ஆனால் தான் வரமாட்டான்.

இன்று மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 நபர்களுக்கு வாசக்டமி செய்யப்பட்டது. அனைவருமே தன்னார்வத்தோடு வந்தவர்கள். காலையில் வந்தார்கள். வாசக்டமி முடித்து மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கே போய்விட்டார்கள். அவ்வளவு எளிதான ஒரு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை தான் வாசக்டமி. இன்று நான் மற்றும் இரு ஆண் மருத்துவர்கள் (Dr.Maheswar, Dr.Madhan) மூவரும் இணைந்து இந்த 15 நபர்களுக்கும் இச்சிகிச்சை அளித்தோம்.

முகநூலைத் திறந்தாலே முற்போக்கு சிந்தனைகள்தான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இதில் மட்டும் தொய்வு ஏன்? வாசக்டமி செய்தால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது என்று நினைப்பதும் ஓர் மூடநம்பிக்கை தான். வெற்றிகரமாக இன்றைய பணியினை நிறைவு செய்த போது குரூப் போட்டோ எடுக்கலாம் வாங்க என மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்கள் அழைத்தனர். அருமையான புகைப்படம் இது. மருத்துவமனையின் வெளித் தோற்றம் மட்டுமல்ல மருத்துவமனையின் உள் தோற்றமும் அவ்வளவு சுத்தமாக பசுமையாக பராமரிக்கப்படுகிறது. உள்ளே அப்பல்லோ ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு என சிலர் சொல்வதையும் இன்று கேட்டேன். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பயணம் இதேபோல் என்றும் தொடரட்டும்.

படிக்க:
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?
♦ நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்

அனு நீ DGO தானே, உனக்கு எதுக்கு வாசக்டமி, நீ சிசேரியன் பண்ணு, பெண்களுக்கு கு.க. பண்ணு, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய், லேப்ராஸ்கோபி கு.க. செய் பெண்களுக்கு, இதையெல்லாம் நீ செய்கிறாய், இதுவே போதும் என்று என்னை ஒதுக்காமல் வாசக்டமி செய்யவும் என்னை தயார்படுத்திய எங்கள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஃபேஸ்புக்கில் 04.12.2019 அன்று வெளியிடப்பட்ட பதிவு.

நன்றி : ஃபேஸ்புக்கில் மருத்துவர் அனுரத்னா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க