மிழகத்தின் சமூக வளர்ச்சிக் குறியீட்டெண்கள் அரோக்கியமாகவும், பிற இந்திய மாநிலங்களைக் காட்டிலும் மேம்பட்டதாகவும் இருப்பது இணைய விவாதங்களில் சுட்டிக்காட்டப்படுவது வழக்கம். குறிப்பாக வடக்கு vs தெற்கு விவாதம் எழும் போதோ, இந்தி Vs தமிழ் விவாதங்களின் போதோ தமிழ் இணையவாசிகள் பயன்படுத்தும் முதலும் கடைசியுமான ஆயுதம் இந்தப் புள்ளி விவரங்கள் தான். சுட்டிக்காட்டப்படும் மேற்படி புள்ளி விவரங்களில் உண்மை இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், புள்ளிவிவரங்கள் காட்டும் சித்திரத்தை நாம் இதுவரை நெருங்கிச் சென்று பார்த்ததில்லை.

ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்று தமிழகத்தில் குழந்தைப் பிறப்பில் ஆண் பெண் பால் விகிதாச்சாரம் குறித்த புள்ளிவிவரங்களை நெருக்கமாகச் சென்று ஆய்வு செய்கிறது. 2014 – 16 ஆண்டு வாக்கில் இந்திய அளவில் பால் விகிதாச்சாரம் 898 – அதாவது அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கும் 898 பெண் குழந்தைகள் பிறந்தன. இதே காலப்பகுதியில் தமிழகத்தின் விகிதாச்சாரம் 915. இந்தியாவின் பெரிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒப்பிடும் போது அப்போது நமக்கு ஒன்பதாம் இடம் கிடைத்தது.

மாதிரிப்படம்

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் நிலைமை ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது. 2018-19 ஆண்டில் தமிழகத்தின் பால் விகிதாச்சாரம் 931 என்கிறது தேசிய சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள மின்தரவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இந்த புள்ளி விவரத்தைக் கொண்டு நாம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியும். ஆனால் இதே புள்ளி விவரத்தை சற்றே நெருங்கிப் பார்த்தால் வேறு விதமான சித்திரம் கிடைகின்றது.

தொன்னூறாம் ஆண்டுகளின் துவக்கத்தில் நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதாச்சாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்யும் போக்கு இம்மாவட்டங்களில் உச்சத்தில் இருந்த சமயம் அது. இதனைத் தடுக்க மாநில அரசு தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் விழுப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தது. பட்டாதாரி பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் போன்றவை கணிசமாக பலனளித்தன. இதன் விளைவாக குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் பால் விகிதாச்சாரம் மெல்ல மெல்ல அதிகரித்தது.

படிக்க:
குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் !
♦ திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !

ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களை நுணுகிச் சென்று ஆராய்ந்தால் மாவட்டங்களுக்கு இடையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வான நிலைமை நிலவுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கிழக்கு மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கோயில்பட்டி, பரமக்குடி போன்ற மாவட்டங்களில் பால் விகிதாச்சாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு 914-ஆக இருந்த தஞ்சாவூரின் பால் விகிதாச்சாரம், 2017-ல் 950-ஆக உயர்ந்து பின் 2018-ல் 908-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே போல், கடலூர் மாவட்டத்தில் 2013-14 ஆண்டுகளில் 848-ஆக இருந்த பால் விகிதாச்சாரம், 2017-18 ஆண்டில் 926-ஆக உயர்ந்து பின் 2019ல் 917-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பால்விகிதாச்சாரம் சராசரிக்கு மேலும், வேறு சில மாவட்டங்கள் சராசரிக்கு கீழும் உள்ளது. “2016 – 2019 தரவுகளை பரிசீலிக்கும் போது பல மாட்டங்களில் பால் விகிதாச்சாரம் 900க்கும் கீழே இருப்பது தெரியவருகின்றது. மாவட்டங்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வான நிலைமைக்கு காரணம் கருவிலேயே பெண் சிசுக்களை கலைத்து விடுவதுதான்” என்கிறார் இத்துறை சார்ந்த வல்லுனரான சாபு ஜார்ஜ்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கருவிலேயே ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடிக்கும் போக்கு சேலம், நாமக்கல், மதுரை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து தற்போது கடலூர் அரியலூர் போன்ற பிற பின் தங்கிய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. கல்வியறிவும் நகரமயமாக்கமும் அதிகரித்துள்ள பகுதிகளில் பால் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளதும், பின்தங்கிய பகுதிகளில் குறைந்துள்ளதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பெண் சிசுக்களை கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கருவுறும் பெண்கள் குறித்த விவரங்களை அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவித்து பதிவு செய்து விடுகின்றன. அதே போல் கர்ப்பிணிகளின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத பரிசோதனை அறிக்கையும், கருவின் வளர்ச்சி நிலையும் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது. இதன் மூலம் யாரெல்லாம் இடையிலேயே கருவைக் கலைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய சாத்தியமாகின்றது.

படிக்க:
மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?
♦ இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

இன்னொரு பக்கம், சோதனை மையங்கள் கருவுற்ற குழந்தைகளின் பாலினத்தை அறிவதைத் தடுக்கும் சட்டங்களின் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act, 1994) தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இது போன்ற கண்காணிப்பு முறைகள் அனைத்தையும் தாண்டி பல சோதனை மையங்கள் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பெற்றோருக்குத் தெரிவிக்கின்றன – அதே போல் சட்ட விரோத கருக்கலைப்புகளும் நடந்து வருகின்றன என்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

சட்டங்களும், கண்காணிப்புகளும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனவே அன்றி தவறு நடப்பதற்கான மூலகாரணத்தை களைவதில்லை. இந்த புள்ளி விவரங்களின் மேல் கருத்து தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் “மக்களிடையே விழிப்புணர்வு இன்மை, கல்வியறிவில் பின் தங்கியிருப்பது” போன்ற காரணங்கள் களையப்பட வேண்டும் எனவும், இதற்கு அரசு முழுவீச்சில் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் தீர்வாக முன்வைக்கின்றனர்.

ஆனால், இது வெறுமனே “விழிப்புணர்வு” பிரச்சாரங்களின் மூலம் மட்டுமே களையப்படக் கூடிய பிரச்சினை இல்லை. மாறாக, பெண் குழந்தைகளை சுமையாக கருதும் பார்ப்பனிய கண்ணோட்டத்திற்கு எதிரான பிரச்சாரமாகவும், கலாச்சார போராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு சம வாய்ப்பும், பாதுகாப்பும், பொருளாதார சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களில் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதில்லை. பார்ப்பனிய விசம் கழுத்து வரை பரவியிருக்கும் இந்திய சமூகத்தில் நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது.

அரசின் கண்காணிப்பும், சட்டரீதியான கட்டுப்பாடுகளும் ஒருபுறம் இருக்க அதற்கு இணையாக கலாச்சார தளத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும் என்பதையே புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.


தமிழாக்கம் : சாக்கியன்
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க