அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 03

பாடவேளையின் போது குழந்தையின் வாழ்க்கையைத் தொடரும் கோட்பாடு

குழந்தை தன் மனப்பதிவுகளை, இன்ப துன்பங்களைப் பள்ளிக்கு வெளியே வைத்து விட்டு, படிக்க வேண்டுமென்ற தூய எண்ணத்தோடு வர முடியாது. எனவே, தான் குழந்தைக்கு படிப்பு சொல்லித் தர ஆரம்பிக்கும் போது, அந்த நிமிடம் முதல் குழந்தை தன் இன்ப துன்பங்களை மறந்து விடுவான் என்றோ, பால்கனியிலோ கொட்டடியிலோ உள்ள சைக்கிளில் சவாரி செய்யும் கற்பனையை விட்டு விடுவான் என்றோ, நேற்று குடும்பத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவிலிருந்து அகற்றியிருப்பான் என்றோ, பையில் உள்ள போர் வீரன் பொம்மையை விட்டு எண்ணத்தை அகற்றுவான் என்றோ, நேற்று தாத்தா சொன்ன சுவாரசியமான கதையை முற்றிலும் மறந்து விடுவான் என்றோ எந்த ஒரு ஆசிரியரும் ஒருபோதும் நினைக்க வேண்டாம். இவையெல்லாம் குழந்தையின் வாழ்க்கை.

சம்பவங்கள், மனப்பதிவுகள், இன்ப துன்பங்களைத் தற்காலிகமாக மறக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் மறந்து விட்டு, வேறு எதையாவது ஒன்றை அறிவதில் முழுக்க முழுக்க ஈடுபடுவது என்பது எளிய காரியமல்ல. என் அன்பு சக ஆசிரியரே! குழந்தையின் கையிலிருந்து போர் வீரன் பொம்மையை ஏன் பிடுங்க வேண்டும்? அவன் அதை வைத்துக் கொண்டு பாடவேளையின் போது விளையாடக் கூடாது என்பதற்காகவா? அதன் அதிக கவனமுள்ளவனாகி, சிந்தனையை ஒருமுனைப்படுத்த வேண்டும் என்பதற்காகவா? இது நல்ல எண்ணம் தான் என்பதில் சந்தேகமில்லை, அந்தப் போர் வீரன் பொம்மையைக் குழந்தையிடமிருந்து பிடுங்குவதிலும் எவ்விதக் கஷ்டமும் இருக்காது, புருவத்தை உயர்த்தி, “அதை என்னிடம் தா” என்றோ, இதைப் போன்று வேறு எதையாவது சொன்னாலே போதும். ஆனால் அப்பொம்மையைப் பிடுங்குவதால் உண்டான ஏமாற்றத்தை, இதைப் பற்றிய கவலையை இதே போல் வெற்றிகரமாக அவன் தலையிலிருந்து வெளித்தள்ள முடியுமா! இதைப் பற்றி யோசிப்போம்!

ஒரு வேளை நாம் இப்படியெல்லாம் செய்திருக்க வேண்டாமோ? அந்தப் பொம்மை குழந்தையின் பையிலேயே இருக்கட்டும், அவன் கற்பனையில் சைக்கிள் சவாரி செய்யட்டும், நேற்று தாத்தா சொன்ன கதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கட்டும்! ஒவ்வொரு குழந்தையும் தன் முழு வாழ்க்கையோடு பள்ளிக்கு வரட்டும். அவர்கள் மனதில் உள்ளதை என்னுடன் – தங்கள் ஆசிரியருடன் – பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வேன்.

அப்போது, பாடவேளையின் போது (அது எந்தப் பாடமாக இருந்தாலும் சரி) இலிக்கோ நேரடியாகத் தன் பையிலிருந்து போர் வீரன் பொம்மையை எடுப்பான். நான் அவனைப் பெரிதும் சுவாரசியமாகப் பார்ப்பேன். “எவ்வளவு நன்றாக உள்ளது! உன்னிடம் இது மாதிரி ஒரு பொம்மைதான் உள்ளதா? வேறு இருக்கிறதா? வேண்டாம், அதை எனக்குப் பரிசளிக்காதே! உன்னிடமுள்ள போர் வீரன் பொம்மைகள் எல்லாவற்றையும் கொண்டு வா. இவற்றோடு விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்!” இலிக்கோவிற்குத் திருப்தியாக இருக்கும், நாளையே அவன் தன் போர் வீரன் பொம்மைகள் எல்லாவற்றையும் கொண்டு வருவான். நான் இதற்கேற்ற ஒரு கதையைக் கண்டுபிடித்து எல்லோருக்கும் சொல்வேன்.

கீகா, தன் அப்பா அலுவல் பயணத்திலிருந்து திரும்பியதாகச் சொல்லி என்னை சந்தோஷப்படுத்துவான். “அவர் எனக்கு ஏதோ பரிசு கொண்டு வந்தார், ஆனால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. அவர் களைத்துப் போயிருந்தார், பெட்டியைத் திறக்கவும் என்ன பரிசு என்று சொல்லவும் விரும்பவில்லை. ‘இது என் ரகசியம்’ என்றார் அப்பா. பள்ளியிலிருந்து திரும்பியதும் அப்பா என்ன கொண்டு வந்தாரென அறிவேன்.”

“பிறகு என்ன என்று சொல்வாயா? அது விளையாட்டு சாமானாக இருந்தால் எங்களுக்கு விளையாடத் தருவாயா?”

ஏல்லா, நேற்று இரவு தனக்குத் தங்கை பிறந்ததாக மகிழ்ச்சியோடு அறிவிப்பாள். அப்பா மிகவும் பதட்டமாயிருந்தார், எல்லோரும் மகப்பேறுமனைக்குச் சென்றதால் அவள் மட்டும் வீட்டில் தனியே இருந்தாளாம். அவள் தூங்கி விட்டதால் அவளுக்கு என்ன நடந்ததென்று தெரியாது. இன்று காலை அப்பா, “உனக்குத் தங்கை பிறந்திருக்கிறாள்” என்றார்.

“அவளுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றீர்கள்?” என்று குழந்தைகள் கேட்பார்கள்.

“இன்னமும் யோசிக்கவில்லை.“

“ஏல்லாவின் தங்கைக்கு என்ன வாழ்த்து சொல்லலாம்?” என்று குழந்தைகளைக் கேட்பேன்.

“அவள் வளர்ந்து பெரியவளாகட்டும்!”

“அவள் அழகானவளாக, புத்திசாலியாக இருக்கட்டும்!”

“அன்பானவளாக, மென்மையானவளாக இருக்கட்டும்!”

“தன் பெற்றோர்களை நேசிக்கட்டும்!”

“தன் அக்காவையும் நேசிக்கட்டும்!”

“சொன்ன சொல்லைக் கேட்டு நடக்கட்டும்!”

“நன்றாகப் படிக்கட்டும்!”

“அவள் நம் வகுப்பில் படிக்கட்டும்!”

“ஏல்லா! உன் தங்கைக்கு எங்கள் நல் வாழ்த்துகளைச் சொல்!” என்று மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் முகம் சிவந்த சிறுமியிடம் கூறுவேன்.

ஏல்லா புன்முறுவல் செய்வாள்.

“அவளுக்குப் புரியாது, அவள் மிகச் சிறியவள்!…”

“நீ எல்லாவற்றையும் நினைவில் வைத்து, அவள் பெரியவளானதும், அவள் பிறந்த செய்தி இன்று நாம் அனைவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியளித்தது என்று சொல்!”

சூரிக்கோ, தன் தாத்தாவிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதாயும் அவசர மருத்துவ உதவியைக் கூப்பிட்டதாயும் கூறுவான். வீட்டில் யாருமே இரவு பூராவும் உறங்கவில்லை. “கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகி விடும்” என்று தாத்தா எல்லோரையும் சமாதானப்படுத்தினார். தன் தாத்தாவை அவன் எப்படி நேசிக்கிறான் என்று சூரிக்கோ கூறுவான். “அவர் மிகச் சிறப்பாகக் கதை சொல்லுவார். வேண்டுமானால் சொல்லுங்கள், அவருக்கு உடல்நிலை சரியானதும் அவரைப் பள்ளிக்கு அழைத்து வருவேன், அவர் எல்லோருக்கும் கதை சொல்வார்.” இன்று காலை தாத்தா தன்னை முத்தமிட்டதையும், அம்மா மீண்டும் அவசர மருத்துவ உதவி கோரி டெலிபோன் செய்ததையும் சூரிக்கோ நினைவு கூர்வான். என் முகத்திலும், மற்ற குழந்தைகளின் முகங்களிலும் சோகம் படரும். அவர் விரைவில் உடல் நலம் பெற எங்கள் வாழ்த்துகளை அவருக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொள்வோம், பள்ளிக்கு வந்து எங்களுக்குக் கதை சொல்லுமாறு அழைப்பு விடுப்போம், நாங்களே தயாரித்த பட அட்டைகளை அவருக்குப் பரிசாக அளிப்போம்.

படிக்க:
தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?

இலிக்கோ திருப்தியடைவான், கீகா அமைதியாவான், ஏல்லாவிற்கு மகிழ்ச்சி அதிகமாகும், சூரிக்கோ நிம்மதி அடைவான்.

இந்தப் பாடங்களில் இல்லாமல், குழந்தைகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையின் இந்த மூல ஊற்றுகளில் இல்லாமல் வேறெங்கே இரக்கம், மென்மை, கவனம், அனுதாபம், அன்பு, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்க முடியும்? இது இப்படியிருக்கும் பட்சத்தில் இந்த ஆசிரியரியல் இசையின் தாள நயங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மேன்மேலும் வலிமையாக ஒலிக்கும், பாடங்கள் இவர்களது வாழ்க்கையின் உட்பொருளாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க