கேள்வி: //ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தகத்தில்.. பங்கின் விலை மற்றும் பொருளின் விலை ஏற்றம் இறக்கம் நொடிக்கு நொடி மாறுகிறது. இது எப்படி…?

பங்குச்சந்தை வர்த்தகத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தம் இருக்கிறதா..?

பங்குகளின் (equity) விலை பொருட்களின் (commodity) விலை ஏற்றம் இறக்கத்திற்கு எப்படி சாத்தியமாகும்..?//

– எம். ஃப்ராங்கிளின்

ன்புள்ள ஃப்ராங்கிளின்,

இந்தியாவில் இரண்டு பங்குச் சந்தைகள் இருக்கின்றன. மும்பை தலால் தெருவில் இருக்கும் மும்பை பங்குச் சந்தை 1875-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகும். தற்போது உலக அளவில் பத்தாவது பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மும்பையில் இருக்கும் தேசியப் பங்குச் சந்தை 1993-ம் ஆண்டு துவங்கப்பட்டது. நவீனவசதிகளுடன் வர்த்தகம் செய்யும் இந்தச் சந்தை உலகின் பதினோராவது பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Share-Marketஇரண்டு பங்குச் சந்தைகளிலும் சுமார் நான்காயிரம் நிறுவனங்கள் வர்த்தகம் புரிகின்றன. இவை இந்திய மொத்த உள்நாட்டு வருமானத்தில் நான்கு சதவீதத்தையே கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களது அனைத்து மதிப்பையும் சேர்த்தால் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12-14 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்கிறார் ஒரு ஆய்வாளர். மற்றபடி பெரும்பான்மையான மொத்த உள்நாட்டு வருமானம் முறைசாரா தொழில்கள் மூலமே வருகிறது.

இரண்டு பங்குச் சந்தைகளில் துறைவாரியாக முக்கிமாக கருதப்படும் நிறுவனங்கள் பட்டியல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும். இவற்றின் பங்குகள் வர்த்தகம் ஒரு நாளில் எவ்வாறு என்பதைப் பொறுத்து பங்குச் சந்தையின் குறியீட்டெண் மதிப்பிடப்படுகிறது. இதை வைத்து பங்குச் சந்தையின் வர்த்தகப் போக்கை மதிப்பிடுகிறார்கள். அதாவது பங்குச் சந்தை குறியீட்டெண் அதிகரிக்கிறது, குறைகிறது என்பது இப்படித்தான்.

“எக்னாமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகை மதிப்பீட்டின் படி இந்தியாவில் ஆறு கோடிப்பேர் தங்களது சேமிப்பை பங்கு வர்த்தகத்திலும், பரஸ்பர நிதியங்களிலும் முதலீடு செய்கின்றனர். பிமால் ஜாலன் கமிட்டி அறிக்கையின் படி இந்திய மக்கள் தொகையில் 1.3% நபர்களே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது அமெரிக்காவில் 27% ஆகவும், சீனாவில் 10% ஆகவும் இருக்கிறது.

சரி, பங்குச் சந்தையில் பங்குகளின் விலை நொடிக்கு நொடி எப்படி மாறுகிறது?

பங்குச் சந்தையில் நிறுவனங்கள் முக மதிப்போடு பங்குகளை வெளியிடுகின்றன. சான்றாக டாடா நிறுவனம் தனது பங்கு விலையின் முக மதிப்பை ரூ. 10 என்று 1995 -ல் வெளியிட்டிருக்கிறது என்று வைப்போம். இன்றைக்கு அந்த பங்கின் விலை ரூ.100 -ஆக மாறியிருக்கிறது. அதாவது தொடர்ந்து அந்த பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ரூ.100-ஆக உயர்ந்திருக்கிறது. சரி, இன்னும் சில மாதங்களில் அது 125-ஆக மாறும் என எதிர்பார்த்து இன்று சிலர் அதை ரூ.100 கொடுத்து வாங்குகிறார்கள்.

படிக்க :
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
♦ பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

ஆனால் இன்னும் சில நாட்களில் அது விலை உயர்வுக்கு பதில் ரூ.90 ஆக குறைந்திருக்கிறது. அப்படி எனில் அதை நூறு ரூபாய்க்கு வாங்கியவர்கள் பங்கு ஒன்றுக்கு பத்து நட்டமடைகிறார்கள். தொடர்ந்து அது நட்டமடையும் என எதிர்பார்த்து ஒருவர் தன்னிடம் உள்ள 100 டாடா பங்குகளையும் விற்றுவிட்டால் அவர் ரூ.1000 நட்டமடைகிறார். இல்லை இன்னும் சில நாட்களில் பங்கு விலை சீராகி உயரும் என நினைத்து அவர் அப்படியே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அவர் நினைத்தபடி சில மாதங்களில் பங்குகள் ரூ.140 என உயர்ந்து அவர் விற்றால் ரூ.4000 ரூபாய் இலாபம் அடைகிறார். இவை அனைத்தும் பேப்பரில் நடக்கும் பரிவர்த்தனை மட்டுமே. ஒருவர் பங்குச் சந்தையிலிருந்து அடியோடு வெளியேறாத வரைக்கும் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டலில் மட்டும் நடக்கும்.

பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள்தான் மேற்சொன்னவாறு பரஸ்பர நிதியங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் 6 கோடி பேர். ஆனால் பங்குச் சந்தையில் பெரும் வர்த்தகத்தை அன்னிய நிதி நிறுவனங்கள் செய்கின்றன. இவர்கள் தினசரி இலட்சக்கணக்கான பங்குகளை வாங்குவார்கள், விற்பார்கள். சில நேரங்களில் நிறுவனங்களே தமது பினாமிகள் மூலம் பங்குகளை அதிகம் வாங்கி செயற்கையாக விலையை உயர்த்த  முயற்சி செய்யும். இதனால் காலையில் பங்குகள் விலை உயர்வது போன்று தோன்றி நாம் வாங்குவோம். மாலையில் அதன் விலை வீழும். அப்போது வீழ்ந்த விலைக்கு விற்க நினைத்தால் அது நமக்கு நட்டம். இல்லை நாளை உயரும் என எதிர்பார்த்து விற்காமலும் வைத்திருக்கலாம்.

stocks-market

மொத்தத்தில் பங்குச் சந்தையின் இயக்கம் என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். அதற்கும் நிஜமான பொருளாதாரத்திற்கும் சம்பந்தமில்லை. இதில் ஒரு பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை இல்லை. ஏனெனில் உயர்ந்து கொண்டே இருந்தால் அதை யார் தொடர்ந்து வாங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறது. புதுப்புது முதலீட்டாளர்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் போதுதான் அந்த செயற்கையான உயர்வு சாத்தியம். இது மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றதுதான். நம் நாட்டில் 130 கோடிப் பேர்களும் கற்பனையாக பங்குச் சந்தையில் சேர்ந்து விட்டால் அடுத்து பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இல்லை. இந்நிலையில்தான் இருக்கும் சிறு முதலீட்டு பங்குதாரர்களை ஏமாற்றி அன்னிய நிதி நிறுவனங்கள் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ விளையாடுகின்றன. அவர்கள் நொடிக்கு சில பல மில்லியன் டாலர்களை முதலீடும் செய்வார்கள், திரும்ப எடுக்கவும் செய்கிறார்கள்.

எனவே பங்குச் சந்தையில் ஒருவர் இலாபமடைகிறார் என்றால் அதன் பொருள் இன்னொருவர் நட்டமடைகிறார் என்பதே. பங்குச் சந்தை முகவர்களிடம் கேட்டால் முதலில் குறைவான முதலீடுகளைச் செய்யுங்கள், பங்குகளை தவிர்த்து விட்டு பரஸ்பர நிதியங்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள், பங்குகளில் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். எப்படி இருந்தாலும் இலாபம் என்றால் நட்டம் என்பது இருந்தே தீரும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
♦ தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

இது போக ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, அவர்களது பொருட்களின் வர்த்தகம், புதிய பொருளை சந்தைப்படுத்துவது, மத்திய அரசின் நிதிக் கொள்கை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவை இரண்டாம் பட்சக் காரணங்கள் மட்டுமே. அதே போன்று உலக அளவில் அரசியல் மாறுபாடு, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் இவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால்தான் நொடிக்கு நொடி பங்குகளின் விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கும் விலைவாசி உயர்விற்கும் நேரடித் தொடர்பில்லை. விலைவாசி உயர்விற்கு அரசின் வரிக் கொள்கை, கச்சா எண்ணைய் விலை உயர்வு, மையப்படுத்தப்படாத உற்பத்தி, முதலாளித்துவ நெருக்கடி, பணவீக்கம், வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணங்கள் காரணமாக இருக்கின்றன.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்