கில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலத் துணைத்தலைவராக பதவிவகித்த இ.எம்.ஜோசப் அவர்கள், ”சங்க முரசு” இதழுக்காக எழுதிய பொருளாதாரம் தொடர்பான தொடர் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பணவீக்கம், விலைவாசி மற்றும் அதன் தொடர்பான அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், எரிபொருள் விலை உயர்வு, விவசாயம், முன்பேர வர்த்தகம், உணவு உரிமை, பொது விநியோகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.

ணவீக்கம் (Inflation) என்பது வேறு; பணவீக்க விகிதம் (Rate of Inflation) என்பது வேறு. முதலில் பணவீக்க விகிதம் குறித்துப் பார்ப்போம். ஏனெனில், இதுதான் ஊடகங்கள் அவ்வப்போது நமக்குத் தரும் தகவல். பண்டங்கள் மற்றும் சேவைகளின் (Goods and Services) விலை குறித்த விலைவாசிப் புள்ளி பற்றி நமக்குத் தெரியும். பணவீக்க விகிதம் என்பது அப்புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்த சதவீதமேயாகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஆண்டின் குறிப்பிட்ட காலத்தின் பணவீக்க விகிதம் என்பது, அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலத்தில் இருந்த விலைவாசிகளுடனான ஒப்பீட்டுச் சதவீதமேயாகும்.

பணவீக்க விகிதம் குறைகிறது என்றால், கண்டிப்பாக குறைகிறது என அடித்துக் கூற முடியாது. விலைகள் ஏறும் வேகம் குறைகிறது என்பதே நேரடி அர்த்தம். ஒரு சிறிய எடுத்துக்காட்டு. ஊரிலிருந்து பாத யாத்திரையாகச் செல்லும் ஒருவர் முதல் நாளில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நடக்கிறார். அதற்கு அடுத்த நாள் நடை வேகம் 7 கிலோ மீட்டர் எனக் குறைகிறது. அதற்கு அடுத்த நாள் 3 கிலோ மீட்டர் என மேலும் குறைகிறது. வேகம் இவ்வாறு தொடர்ந்து குறைந்தாலும், அவர் மூன்று நாட்களின் முடிவில் 20 கிலோ மீட்டர் கடந்து விட்டார். பணவீக்க விகிதமும் அது போன்றது தான். விலை ஏறும் வேகம் குறைந்தாலும், மொத்தத்தில் விலை ஏற்றம் அதிகமாகி விடுகிறது.

ஒரு சில வேளைகளில் சில பண்டங்களின் விலைகள் உண்மையில் குறையவும் கூடும். ஒட்டு மொத்தத்தில் அனைத்துப் பண்டங்களின் விலைகளும் குறையும் அரிய சந்தர்ப்பங்களில் அது எதிர்மறைப் பணவீக்கம் (Negative inflation) என்று அழைக்கப்படுகிறது. முந்தைய ஆண்டின் (Base year) விலைவாசிகளோடு ஒப்பீடு என்பதால், குறிப்பிட்ட ஆண்டின் பணவீக்க விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், முந்தைய ஆண்டின் விலை நிலவரங்களைப் பொறுத்தே அமையும். இது அடிப்படை ஆண்டின் விளைவு (Base year effect) என அழைக்கப்படுகிறது.

நமது நாட்டில் பணவீக்க விகிதம் மொத்த விலைப்புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது சரியல்ல. வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் இது சில்லறை விலைப் புள்ளிகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையே நுகர்வோர் கொடுக்கும் விலை என்பதால், அதுவே பணவீக்கத்தினை பிரதிபலிக்கும் சரியான அடிப்படையாக இருக்க முடியும்.

சரி, பணவீக்கம் எவ்வாறு ஏற்படுகிறது? மக்கள் மத்தியிலிருக்கும் பணப்புழக்கம் (Broad money) அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் கிராக்கி (Demand) அதிகரிக்கிறது. அதன் காரணமாக விலைகள் உயருகின்றன. இது கிராக்கியினால் ஈர்க்கப்படும் பணவீக்கம் (Demand pull Inflation) எனப்படுகிறது. அதே வேளையில், இடுபொருள் விலை உயர்வு, வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பண்ட உற்பத்திச் செலவு (Cost) அதிகரித்து அதனாலும் விலைகள் உயரக்கூடும். இது செலவினால் உந்தப்படும் பணவீக்கம் (Cost-push Inflation) எனப்படுகிறது. இது தவிர, சில பண்டங்களின் / சேவையில் அளிப்பில் ஏற்படும் தட்டுப்பாடுகள் (Supply Constraints) காரணமாகவும், ஆங்காங்கு விலை உயர்வு ஏற்படக்கூடும். பொதுவாக இவைதான் பணவீக்கத்தின் அடிப்படை நாம் இப்போது விவாதித்த அனைத்துமே விலை வீக்கம் (Price Inflation) குறித்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (நூலிலிருந்து பக்.7-8)

…. பணவீக்கம் என்றாலே அனைத்துப் பண்டங்களின் விலை உயர்வு என்பதுபோல, இன்றைய பணவாதப் (Monetarists) பொருளியல் வல்லுனர்கள் பேசி வருகின்றனர். அதே போன்று, பணவீக்க விகிதம் குறைந்து விட்டாலே, பணவீக்கத்திற்கு முந்தைய வாங்கும் சக்தியினை மக்கள் மீண்டும் பெற்று விடுவது போன்ற ஒரு பிரமையினையும் அவர்கள் தோற்றுவிக்கின்றனர். ஆனால், எதார்த்தத்தில் என்ன நடக்கிறது?

எல்லாப் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்தாலும், உழைப்புச் சக்தியின் விலை, அதாவது ஊதியம் மட்டும் அப்படியே தானாக உயர்ந்து விடுவதில்லை என்பது இங்கே மறைக்கப்படுகிறது. பணவீக்கக் காலத்தில், விலைப் புள்ளிகளுடன் இணைந்த ஊதியம் மட்டுமே உயர்வதற்கான சாத்தியம் கொண்டது. நம் நாட்டில், 93% வரை முறைசாராத் துறை எனும் போது, ஊதியம் எப்படி தானாகவே உயரும்?

எல்லாப் பண்டங்களின் விலையும் 10% உயர்கின்றன. அதே போன்று 10% உயர்கிறது என்றால், அதில் பிரச்சினை என்ன இருக்க முடியும்? மாறாக, அனைத்துப் பண்டங்களின் விலைகளும் 5% உயர்கின்றன. ஆனால், கூலி மட்டும் உயரவில்லை எனில், இந்த 5 சதவீதப் பணவீக்கம், 10 சதவீதப் பணவீக்கத்தினை விட மோசமானது. இதுதானே உண்மையில் பிரச்சினையாக இருக்க முடியும்?

உழைப்புச் சக்தியின் விலை (ஊதியம்) தவிர மற்ற அனைத்து பண்டங்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பிலான விலைகள் உயரும் சூழ்நிலையே பணவீக்கம் என்பதன் உண்மையான விளக்கம். பணவீக்க விகிதம் குறைந்தாலும், அதாவது, விலையேற்றத்தின் வேகம் குறைந்தாலும், பணவீக்கத்திற்கு முன்பிருந்த பொதுவான விலைகளின் அளவிற்கும், கூலியின் அளவிற்கும் ஏற்கனவே இருந்த இடைவெளி குறைவதில்லை; மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறது. அதாவது, உழைப்பாளிகளின் கூலியாக இருந்த ஒரு பகுதிச் செல்வம், முதலாளிகளின் இலாபமாக கைமாற்றிக் கொடுக்கப்படுகிறது. எனவேதான், ஜான் மேனார்ட் கீன்ஸ், பணவீக்கத்தினை, இலாப வீக்கம் (Profit inflation) என்றே குறிப்பிட்டார், என்ன செய்ய வேண்டும்?

படிக்க:
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !

பணவீக்கத்தில் மிக முக்கிய அம்சம் உணவுப் பண்டங்கள் குறித்ததே அப்படியானால், என்ன செய்ய வேண்டும்? இதுதான் கேள்வி என்றால், உருவாகி இருக்கும் கிராக்கியின் அளவிற்கு உற்பத்தியினைப் பெருக்க வேண்டும் என்பதே நமது எளிமையான பதிலாக இருக்க முடியும். ஆனால், முதலாளித்துவம் அதைச் செய்யாது. விவசாய உற்பத்திக்குத் தேவையான நிலம் முதலாளிகளின் கைகளில் இல்லை. பூர்வ குடியினரை (செவ்விந்தியர்களை) விரட்டி அடித்து முதலாளிகள் ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலம் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனவே, அங்கு விவசாய விரிவாக்கத்தின் மூலம் பணவீக்கத்தினைச் சரிசெய்து விட முடியும்.

ஆனால், எந்த நாடுகளில் எல்லாம், விவசாயம் நீடித்து நிலை பெற்றுவிட்ட விவசாயிகளின் தளமாக (Peasant Agriculture) இருக்கிறதோ , அங்கு முதலாளித்துவம் விவசாயிகளுடன் கொண்டிருப்பது ஒரு வகையான வர்த்தக உறவுதான். இந்தியாவிலும் அதுவே நிலைமை எனவே, விவசாய விரிவாக்க வேலையினை முதலாளித்துவம் கையில் எடுப்பதில்லை, ”விவசாயத்தினை மேம்படுத்தும் வேலையினை முதலாளித்துவம் செய்யுமானால், அது முதலாளித்துவமே அல்ல” என மாமேதை லெனின் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். விவசாயிகளை அவர்களது நிலத்திலிருந்தும், அவர்களது உற்பத்தி உடைமைகளிலுமிருந்தும், பிரித்தெடுத்து வெளியேற்றுவது முதலாளித்துவத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஒன்று என்பதை மறந்துவிடக் கூடாது. (நூலிலிருந்து பக்.60-62)

நூல் : பணவீக்கம் என்றால் என்ன ?
ஆசிரியர் : இ.எம். ஜோசப்

வெளியீடு : காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், சேலம் – உடன் இணைந்து
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 , 2433 9024.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam | marinabooks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க