PP Letter head

நாள் 16-9-2019

பத்திரிகைச் செய்தி

ன்புடையீர் வணக்கம் !

கடந்த 12-9-2019 அன்று சிதம்பரம் நடராசர் கோவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நட்சத்திர ஓட்டல் போல் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு தனியார் திருமணம்  நடந்துள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகை தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது. இதனால் மக்கள் தீட்சிதர்கள் மீது ஆத்திரம் கொண்டதுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக திருமணங்கள் நடராசர் கோவில் உள்ளே வடக்கு கோபுரம் அருகில் பாண்டியனார் சன்னதியில்தான் நடைபெறும். தீட்சிதர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள், என்பதுதான் கடந்தகால வரலாறு.

நடராசர் நின்று தரிசனம் தரும் இடத்தில் எப்படி ஆடம்பர திருமணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதித்தார்கள் என்பதுதான் சிதம்பரம் பக்தர்களின் ஆதங்கம். தொடர்ந்து பத்திரிக்கைகளில் கண்டனங்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் கண்துடைப்பாக பொது தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதர் இரு நாட்கள் கழித்து, “சம்பந்தபட்ட தீட்சதர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணம் நடத்த ஏற்பாடு செய்த கட்டளை தீட்சிதரான பட்டு தீட்சிதரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்ததுடன் ஆயிரத்து ஒரு ரூபாய் அபாராதம் விதித்துள்ளோம்” என அறிவித்தார். இது தமிழக அரசையும், தமிழக மக்களையும் முட்டாளாக்கும் செயல் ஆகும்.

சிவலோகத்திலிருந்து சிவனோடு முவாயிரம் தீட்சிதர்கள் வந்த கதையில் தற்போது சுமார் 450 தீட்சிதர்கள் உள்ளனர். நடந்த ஆடம்பர ஆயிரங்கால் திருமணத்திற்கு கையூட்டாக தீட்சிதர்கள் அனைவரும் தங்கம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என தொழிலதிபர்களிடம் பெற்றுள்ளனர். அர்த்தசாம பூசைக்கு பிறகு இரவில் கோவில் சாத்தப்படும். வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக இரவில் வெளியூர் ஆட்களை வைத்து ஆயிரம்கால் மண்டபம் முழுவதும் கண்கவரும் ஆடம்பர மின் விளக்குகள், வண்ண சீலைகள், பிரமிப்பூட்டும் மலர் அலங்காரம். அலங்கரிக்கப்பட்ட சேர்கள், என ஐந்து நட்சத்திர விடுதி போல ஜொலிக்க ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர்.

படிக்க:
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

பொற்கூரைமீது ஏறி அலங்கரித்துள்ளனர். திருமணத்திற்கு காலணிகளுடன் செல்வ சீமான்கள் நடந்து சென்றுள்ளனர். பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியே வந்த பிறகுதான் தீட்சிதர்களின் இந்த அநியாயம் தெரிய வந்தது.

திருமணம், சிவகாசி தொழிலதிபர் ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் உரிமையாளர்  ராஜரத்தினம் – பத்மா தம்பதியரின் குமாரத்தி சிவகாமி மணமகள். சென்னை ரத்னா ஸ்டோர் உரிமையாளர் சிவசங்கர் – வாசுகி குமாரன் சித்தார்த்தன் மணமகன். இத்திருமணத்திற்காக கைமாறியது பல லட்சங்களா? பல கோடிகளா என்ற இந்த சிதம்பர ரகசியத்தையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் தமிழில் பாடியதை தீட்டு என்ற தீட்சிதர்கள் கும்பல், கோவிலை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கிறது.

சிவனடியார் ஆறுமுகசாமி 2000-ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள், பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை. தில்லை நடராசன் மட்டுமல்ல, சிதம்பரம் கோவிலே எங்கள் சொத்து என்ற தீட்சிதர்களின் இருமாப்புதான். அரசும் நீதிமன்றமும் நாங்கள் ஆட்டுவித்தால் ஆடும் என்ற ஆணவம்தான் காரணம்.

சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பல ஆண்டுகளாக தூங்கி கிடந்த நடராசர் கோவில் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கொண்டு வந்தோம். நீதிபதி பானுமதி அவர்கள் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார்.

ஆனால் கடைசி வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வில்லை. மாறாக தீட்சிதர்கள் உண்டியலில் எண்ணெய்யை ஊற்றினார்கள். ஆறுமுகசாமி பாட பல முறை இடையூறு செய்தார்கள். சுப்பிரமணிய சுவாமியை வழக்கில் நுழைத்தார்கள். வழக்கில் தீட்சிதர்களை எதிர்த்து வாதாடாமல் இருக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்கள். வடக்கே உள்ள விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலை சிதம்பரம் கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். கோவிலை அரசு நிர்வகிப்பது கூடாது என பிராமணர் சங்கத்தை வைத்து சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினர். பா.ஜ.க இல. கணேசனை பேச வைத்தார்கள். இவ்வாறு பல சூழ்ச்சிகளை செய்து தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை தங்கள் அனுபவ சொத்தாக அனுபவித்து வருகின்றனர் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க:
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !
♦ தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு ! கேலிப்படம்

தீட்சிதர்களுக்கு முதலில் சொத்துரிமை, பிறகுதான் தில்லை நடராசன், ஆன்மீகம், புனிதம், பக்தர்கள் எல்லாம். கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி சிக்கன் மட்டன் அருந்தினார்கள். பெண்களுடன் சல்லாபங்கள் செய்தார்கள். கோவில் உள்ளே மர்ம மரணங்கள் நடந்துள்ளது. விலை உயர்ந்த சாமி நகை களவு போனது. கோவில் சொத்தை முறைகேடாக விற்றது. கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டமல் பொய் கணக்கு எழுதி தங்களுக்குள் பிரித்து கொள்வது. வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானபடுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பல்வேறு புகார் மனுக்களை தொகுத்து அனுப்பியது. நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது. ஆனால் போலீசார் ஊத்தி மூடிவிட்டனர். ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகள் இன்னும் முடிவு காணமுடியாமல்  உள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பொய் பித்தலாட்டம் செய்யும் இப்படிப்பட்ட தீட்சிதர்களிடம்தான் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலும் நடராசரும் உள்ளார் என்பதை பக்தர்கள் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிதம்பரம் கோவில் போன்று அனைத்து கோவிலையும் பார்ப்பனர் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் பா.ஜ.க இந்து முன்னணி அமைப்புகள் போராடி வருகின்றனர். இதற்கு சாதாரண மக்களின் பக்தியை முகமூடியாக இந்துத்வா சக்திகள் பயன்படுத்துகின்றனர். பயமும் பக்தியும் கடவுள் மீது மட்டும் இருந்தால் போதும். மணியடிக்கும் பார்ப்பனரிடம் எதற்கு பயம் பக்தி. தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பிற கோவில்கள் போன்று தீட்சிதர்களும் ஊதியம் பெற்றுக் கொள்ளட்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் இருக்க கூடாது. அதற்கு சிதம்பரம் வாழ் மக்கள் முன்னணியாக போராடாமல் அது சாத்தியம் இல்லை.

தமிழக அரசே !

  • தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராசர் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்று!
  • கோவிலை வைத்து பல லட்சம் வசூல் செய்துவரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்து!
  • சிதம்பரம் நடராசர் கோவில் வருமானம், வரவு – செலவு மீது தணிக்கை நடத்து!
  • நடராசர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து ! அதன் மூலம் நடந்த பணபறிமாற்றத்தின் மீதும் நடவடிக்கை எடு!

தோழமையடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99626 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க