பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தோழர் ராமலிங்கம் வரவேற்புறை நிகழ்த்தினார். அவர் தன்னுடைய வரவேற்புறையில் “பெரியார் என்றாலே பார்ப்பன கும்பலுக்கு அச்சம்தான். அந்த அச்சத்தின் காரணத்தை தெரிந்துகொள்ளத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரை சென்ட்ரல் தியேட்டர் சுற்றி உள்ள கடைகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிதி தராதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுமளவிற்கு சங் பரிவாரங்கள் வளர்ந்துள்ள இந்த நிலையில் நாம் பெரியாரின் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் தன்னுடைய தலைமையுரையில் “தேசிய கல்வி கொள்கை என்கின்ற பெயரில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது, அமித்ஷா இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழி என்கிறார்.

நம் கண்ணுக்கு எதிரிலேயே மக்களின் சேமிப்பான 1.75 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிலிருந்து பல்வந்தமாக பெற்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கிறார்கள். ஒரே நாடு – ஒரே ரேசன் கார்ட் என்ற பெயரில் குறைந்தபட்ச உணவு பாதுகாப்பும் மக்களுக்கு மறுக்கிறார்கள். கேட்டால் நாட்டின் வளர்ச்சிக்காக என்கிறார்கள். தேசத்தை பற்றி பேசும் இவர்களுடைய யோக்கியதை என்ன?

வெள்ளையர்களுக்கு எதிராக தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர் மாட்டிற்கு புல்லு வெட்டும் போராட்டம் செய்யபோகிறோம் என்றவர். எனவே இத்தகைய பாசிச கும்பலை முறியடிக்க வேண்டும் என்றால் அது பெரியாரின் துணையோடுதான் முடியும்” என்று பேசினார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !
♦ கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அடுத்ததாக பேசிய சமநீதி வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் கனகவேல் அவர்கள் “நாம் ஒருவரை சந்தித்தவுடன் கூறும் வணக்கம் என்ற சொல்லின் வரலாறையே பெரியாரின் வரலாற்றோடுதான் நாம் பார்க்கமுடியும். நமஸ்காரம் என்றும், கும்புடுறேன் சாமி என்றும் சாதி ஆதிக்கத்தில் மூழ்கியிருந்த இந்த சமூகத்தை ஒவ்வொரு செங்கலாக உடைதெறிந்து இந்த சமூகத்தை மாற்றிக்காட்டியவர். அவர் செய்யாத போராட்டங்களே கிடையாது.

சாதி ஒழிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாடு தமிழருக்கே போராட்டம், பெண் விடுதலை, கள்ளுக்கடை போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம், கோவில் நுழைவு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் என்று எண்ணிலடங்காத போராட்டம். அதில் குறிப்பாக இரண்டு விசயத்தை குறிப்பிடலாம். முதலாவது பெண்களை அரசியல் படுத்துவது என்பதை தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கியவர். இரண்டாவது புனிதம், புனிதமானவர் என்று எதைக் கண்டும் அஞ்சாதவர்.

தேச தந்தை என்று காந்தியை இந்த நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது காந்தி ஒழிய வேண்டும் என்று வெளிப்படையாக அம்பேத்கருக்கு வட்ட மேஜை மாநாட்டின் இரட்டை வாக்குரிமை பிரச்சினையின் போது தந்தி அடித்து ஆதரவு தெரிவித்த ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டும்தான். எனவேதான் அம்பேத்கரையும், பகத்சிங்கையும் செரிக்க முடிந்த ஆர்.எஸ்.எஸ்-ஸால் பெரியாரை நெருங்க முடியவில்லை. எனவே இந்துத்துவ கும்பல்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் நாம் பெரியாரைத்தான் உயர்த்தி பிடிக்கவேண்டும்” என்று பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக சிறப்புறையாற்றிய நிஜ நாடக இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் பேசுகையில்

“யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார் அவர்கள்” என உணர்ச்சிமயமாக‌ கண்ணீர் மல்க கூறினார். “பெரியாரியத்தை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அனைத்து வித பாகுபாடுகளையும் ஒழிப்பதுதான். அவரை போல் இதுவரை இந்தியநாடு ஒரு வலிமையான தலைவரை பார்த்ததில்லை. அவர் உங்கள் கட்சியின் நோக்கம் என்ன என்று கேட்ட போது காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்று ஒழிக்க வேண்டியதை மட்டுமே லட்சியமாக கொண்ட தலைவர் தந்தை பெரியார்” என்று பேசினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய AIBSNLAE -யின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் பேசும் போது “செப்டம்பர் 17 தான் மோடிக்கும் பிறந்த நாளாம். செப்டம்பர் 17-ல் பிறந்தவர்கள் எல்லாம் பெரியாரை போல் வாழ்ந்து விட முடியுமா? பெரியாரின் வாழ்க்கை அப்படிப்பட்டது. வெறும் 3-ம் வகுப்பு படித்தவர் என்று நாம் பேசுகிறோம். ஆனால் வட்ட மேஜை மநாடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஆகிய விசயத்தில் மிக பெரிய ஆய்வாளராக பட்டம் பெற்றவரான அம்பேத்கருக்கே ஆலோசனை சொல்லும் அளவிற்கு புத்தி கூர்மையோடு இருந்தார்.

அவர் அயோத்திதாசரிடமிருந்தும் ரெட்டைமலை சீனிவாசனிடமிருந்தும் தன்னுடைய கருத்தின் சாராம்சத்தை பெற்றார். தான் எடுத்து கொண்ட பொறுப்புகளில் எல்லாம் ஆழமாக ஊன்றி நின்று செயல்பட்டவர். காங்கிரசில் சேர்ந்த போது கூட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்மொழிவதையே நோக்கமாக செயல்பட்டவர். அதில் இருந்து வந்த பிரச்சினைதான் சேரன்மாகாதேவி குருகுல பிரச்சினை. இந்த உலகம் புனிதம் என்று சொன்னதை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தவர். சாதி ஆதிக்க சமூகமாக இருந்ததை மாற்றுவதற்கு தன் காலம் முழுவதும் உழைத்தவர் பெரியார். இன்று நம்முடைய தினசரி மாமூல் வாழ்க்கையை தினம் ஒரு சட்டத்தை போட்டு மாற்றிவிட துடிக்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது நமக்கு பெரியார் அவசியமாகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேரும் போது ஏராளமான கவுரவ பதவிகளை வகித்து வந்தவர். அப்படிப்பட்ட மிக பெரிய மிட்டா மிராசு குடும்பத்தை சேர்ந்தவர். அத்தனை கவுரவ பதவிகளையும் ஒரே நாளில் ராஜினாமா செய்துவிட்டுத்தான் காங்கிரசில் சேருகிறார். அந்தளவிற்கு பொது நன்மைக்காக தியாகம் செய்யக்கூடியவராக இருந்தார். ஆனால் பெரியார் வழியில் வந்தவர்கள் பெரியாரை போல் இருக்கவில்லை. எனவே நமக்கு மீண்டும் ஒரு பெரியார் தேவைபடுகிறார்” என சூளுரைத்தார்.

இறுதியாக ம.க.இ.க தோழர் முத்தையா அவர்களின் நன்றியுரை உடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்