PP Letter head

  • பாசனத்துக்கு 21,000 கன அடி, கடலுக்கு 26,756 கன அடி !
  • டெல்டா விவசாயிகளின் முதல் எதிரி எடப்பாடி அரசுதான் !!
  • கொள்ளைக் கும்பலிடம் சிக்கிச் சீரழியும் டெல்டா நீர்ப்பாசனம் !!!

பத்திரிகைச் செய்தி

காவிரி நீரில் தமிழக விவசாயிகளின் உரிமைக்கு மத்திய, கர்நாடக அரசுகள் தொடர்ந்து செய்யும் வஞ்சகத்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஒருபோக சாகுபடியைக்கூட உறுதியாகச் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் டெல்டா விவசாயிகள். இந்நிலையில் பெரும் மழையின் காரணமாக கர்நாடக அரசு திறந்துவிடும் உபரி நீரைக்கூட தேக்கி, சேமித்து பாசனத்திற்கு வழங்க எந்த அக்கறையும் காட்டாத எடப்பாடி அரசு பெருமளவு நீரைக்கடலில் கொட்டி விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கிறது.

கடந்த ஆண்டு முக்கொம்பு மேலணை உடைந்ததன் விளைவாக சுமார் 227 டிஎம்சி நீர் கடலில் கலந்து வீணானது. இவ்வாண்டும் , மேட்டூர் அணை நிரம்பியிருந்தும் விவசாயத்திற்கு நீர்விடாமல் கடந்த சில நாட்களாக 26,000 கன அடிக்கும் மேல் நீரை கொள்ளிடத்தில் திறந்து வீணடித்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதே இல்லை.

இவ்வாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒருமாதம் ஆன பின்னரும் தஞ்சையை அடுத்த அம்மாப்பேட்டை போன்ற பகுதிகளுக்குக்கூட இன்னும் தண்ணீர் போய்ச் சேரவில்லை.

காவிரி டெல்டா பாசனத்திற்கு அடிப்படை காவிரி, வெண்ணாறு , கல்லணைக்கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள்தான். இவற்றின் அதிகபட்ச நீர் எடுத்துச்செல்லும் திறன் முறையே 16461 கனஅடி, 13295 கனஅடி, 4500 கனஅடி. தற்போது போதுமான தண்ணீர் இருந்தும் காவிரி வெண்ணாற்றில் தலா 9,000 கனஅடி கல்லணைக் கால்வாயில் 3,000 கனஅடி என்று குறைவாகவே திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவை உயர்த்தினால் மட்டுமே பல பகுதிகளுக்கு நீர் போய்ச்சேரும். ஆனால் பொதுப்பணித்துறையோ, தற்போது திறப்பதைவிட கூடுதலாக நீரைத் திறந்தால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு மோசடியான காரணத்தைக்கூறி போதிய நீர் திறக்க மறுக்கிறது.

இது பொய் என்பதற்கு சான்று ; வெண்ணாற்றில் இயல்பான நீர்தாங்கும் திறன் 8,863 கியூசெக்ஸ். ஆனால் இப்போது விடப்படும் நீரின் அளவு 9,000 கியூசெக்ஸ். கரை உடையும் ஆபத்து என்றால் வெண்ணாறு உடையாதா? டெல்டா பாசன அமைப்புக்களை சீர்குலைத்துவிட்டு பழியை இயற்கை மீது சுமத்துகிறது எடப்பாடி அரசு.

கடந்த பல ஆண்டுகளாக வரைமுறையின்றி ஆற்றுமணலை அள்ளி ஆறுகள் ஆழமாகிவிட்டன. இன்னொருபுறம் பாசனக்கால்வாய்கள், ஏரிக்குளங்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து மேடாகி வருகின்றன. எனவே தண்ணீர்க் கால்வாய்களுக்கும் ஏரிகுளங்களுக்கும் பாய்வது தடைபடுகின்றது. இந்த உண்மையை மறைத்து கரை உடைந்துவிடும் எனப் பொய்யான காரணம் சொல்லி பாசனத்திற்குத் திறந்துவிடும் நீரைவிட அதிகமாக கடலில் கொட்டி வீணடிக்கிறது.(பாசனத்துக்கு 21,000 கன அடி, கடலுக்கு 26,756 கன அடி) ஜெயலலிதா காலத்திலிருந்து இன்றுவரை எடப்பாடி விடாமல் கைக்குள் வைத்துக்கொண்டு இருக்கும்துறை பொதுப்பணித்துறை. எடப்பாடிக்கு இத்துறை ஒரு தங்கச்சுரங்கம்.

இத்துறைக்கு ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை எடப்பாடி கும்பல் சூறையாடியதுதான் தமிழக பாசன அமைப்புக்கள் மோசமாக சீர்கெட்டதற்குக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28-ம் நாள் மேட்டூர் அணை மூடப்படும். அதன் பிறகு ஜூன் 12-ம் தேதிக்குள் ஆறு, ஏரி குளம் போன்ற நீராதாரங்களை தூர்வாரி மராமத்துப் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது பொதுப்பணித்துறையின் விதி. இதை இவர்கள் அமல்படுத்துவதே இல்லை.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
♦ கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

மாறாக ஜூன் மாதத்திற்குப்பிறகே நிதி ஒதுக்குகின்றனர். இவ்வாண்டு ஜூலை 8-ம் தேதிதான் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. எந்த வேலையும் செய்யாமல் நிதியை அதிமுக கும்பல் சுருட்டவே இந்த ஏற்பாடு. எந்த ஏரி, எந்த வாய்க்காலுக்கு எவ்வளவு நிதி தேவை என ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்வதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை. ஆனால் ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வளவு என்றல்லவா நிதி ஒதுக்குகிறார்கள். இது கொள்ளையடிப்பதற்கான முறையல்லவா?

மக்களே உருவாக்கிய குடிமராமத்து முறைய மீண்டும் கொண்டு வந்துவிட்டோமென பீற்றிக்கொள்ளும் எடப்பாடி அரசு. இதற்கென்று ஒதுக்கிய தொகை 2016 -17ல் ரூ 100 கோடி, 2017-2018ல் 331.69 கோடி, 2018 -2019ல் 499.69 கோடி ஆக இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தூர்வார ஒதுக்கிய தொகை ரூ 931.38 கோடி . 2500 கி.மீ. நீளக் கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்தார் எடப்பாடி. ஒருமாதமாகியும் கடைமடை உட்பட பலபகுதிகளுக்கு நீர்போய்ச் சேரவில்லையே ஏன்?

டெல்டா பாசனத்தின் முக்கிய ஆறாகிய வெண்ணாற்றின் சூழலை புனரமைத்து மேம்படுத்தும் திட்டத்திற்கென ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து ரூ 800 கோடி கடன் பெற்று சென்ற ஆண்டு செலவிடப்பட்டது.. இதனால் விளைந்த பயன் என்ன என்பது எடப்பாடிக்கே வெளிச்சம். இதே போல ரூ 2000 கோடியில் ஆசிய வளர்ச்சி வங்கிக்கடன் மூலம் கல்லணைக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தன் அதிகாரம் முடிவுக்கு வருவதற்குள் முழுதாக தமிழகத்தை மொட்டையடிப்பதுதான் எடப்பாடியின் திட்டம் போலும்.

எடப்பாடி கும்பலும் அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்த்து சட்ட விரோதமான முறையில் பாசன மேலாண்மையைக் கையாண்டு வருகின்றன. மராமத்து , நீர்ப்பங்கீடு ஆகியவற்றை விவசாயிகளின் கமிட்டி மூலம் செய்ய வகைசெய்யும் தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மைச் சட்டம் 2000 நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. (Tamilnadu Farmers Management of Irrigation System Act 2000). மாறாக அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றனர்.

எனவே பாசனத்திட்டங்களை சீராக்கி, நீரை சேமிக்க வழிகாணாமல் நீரை கடலில் கலக்க விடுவது கர்நாடகம் மேக்கேத்தாட்டு திட்டத்தை நிறைவேற்ற மறைமுகமாக உதவுவதாகவே அமையும். மேலும் எடப்பாடி அரசு அறிவித்துள்ள காவிரி உபரி நீரை சேமிக்க சேலம் மாவட்டத்தில் ஏரி வெட்டும் திட்டம் சிக்கலானதும் பல நூறுகோடி செலவு பிடிக்கக்கூடியது மட்டுமல்ல காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமையைப் பறிப்பதுமாகும்.

மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதி என்ற ஐயமும், அச்சமும் பரவலாக எழுந்து வருகிறது. கிடைக்கும் நீரை வீணாக்கி விட்டு, நீர் சிக்கனம் பற்றி அறிந்து வர எடப்பாடி இஸ்ரேல் செல்லவிருப்பது இந்த அச்சத்தை மேலும் அதிகமாக்குகிறது. டெல்டா விவசாயம் பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கியிருப்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன. அரசு, அதிகாரவர்க்கத்தின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தாமே தம் சொந்த செலவில் ஏரி குளங்களைத் தூர் வாரும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை சில தொலைக்காட்சிகளும் ஊக்குவிக்கின்றன. பார்வைக்கு இவை நல்ல முயற்சிகள் போன்று தோன்றலாம். ஆனால் விளைவு கொள்ளையர்கள் சுதந்திரமாகக் கொள்ளையிடவே வழிவகுக்கும்.

எனவே விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் பாசன மேலாண்மை முழுவதும் விவசாயிகள் கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மீது சுயேச்சையான அமைப்பு மூலம் விசாரணை நடத்தி அவர்களை தண்டிப்பதுடன் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் அனைவரும் இணைந்த மக்கள் போராட்டங்களே இன்றைய தேவை.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்
மாநிலப்பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

***

திருச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

கடைமடைக்கு வராத காவிரியை கடலுக்கு திருப்பி விடுகிறது எடப்பாடி அரசு! 
ஆற்று மணல் கொள்ளை !! தூர் வாரியதிலும் கொள்ளை !!!

“மன்றாடியது போதும் போராடுவோம் !” என்ற தலைப்பில் 16.09.2019 அன்று காலை 11.30 மணியளவில் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகம் வாயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக அலுவலகத்திற்கு சுப்பிரமணியபுரம் பேருந்து நிருத்ததிலிருந்து தோழர்கள் பேனர், முழக்க அட்டை, கொடி பிடித்து முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி நீர் கடலில் கலந்து ஆறு ஏரி வாய்க்கால் குளம் சீரழித்து விவசாயத்தை நாசமாக்காதே !

வெண்ணாற்றை சீரமைக்க 800 கோடி என்னாச்சு?
கல்லணை கால்வாய் சீரமைக்க 2000 கோடி என்னாச்சு?
சீரமைக்க வாங்கிய கடனை அதிகாரிகளும்,
எடப்பாடி கும்பலும் ஏப்பம் விட்டு அழிச்சாச்சு ..

என முழக்கமிட்ட தோழர்களை பகுதி மக்கள் அருகில் வந்து கவனித்தனர். செயலிழந்து போன பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகத்தை போலீசு கும்பல் பாதுகாத்து நின்றனர்.

எதாவது ‘செய்வோம்’ என போலீசு உடனே ஆர்ப்பாட்டத்தை முடிக்குமாறு நெருக்கடி தந்தது. மறுத்து அரை மணி நேரம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநகர செயலர் தோழர் வின்சென்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு ம.ப. சின்னத்துரை மற்றும் அரியூர் பகுதி விவசாயிகள் திரு. திருநாவுக்கரசு, திரு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன் பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம். தொடர்புக்கு : 94454 75157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க