மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !

அதிமுக - திமுக அரசுகளிடம் மாறி மாறி கெஞ்சுவதில் எந்த பயனுமில்லை. தொழிலாளர் தங்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, சமரசமின்றி தொடர் போராட்டம் நடத்துவதன் மூலமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

துரையில் கடந்த மே 10 அன்று 600-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினக் கூலி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.625 ஊதியம் வழங்க வேண்டும் (தினக்கூலி அடிப்படையில் ரூ.250 வரை தற்போது வழங்கப்படுகிறது), கொரோனா காலத்தில் முன்களப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15,000 நிவாரண உதவியை உடனடியாக வழங்கிட வேண்டும். விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியின் போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்பவும் பணியில் அமர்த்துவதாகவும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குவதாகவும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது மதுரை மாநகராட்சி நிர்வாகம் 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கி இருப்பதாகவும், 1999-க்கு பின் யாரையும் சரிவர பணிநிரந்தரம் செய்வதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரூ.15,000 – ரூ.16,000 மாத ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த தொழிலாளர்களின் சம்பளம் தற்போது ரூ.10,000ஆக (பிஎஃப் வேறு இல்லை) குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் கூறினார்கள்.
படிக்க :
சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிப்போம் !
பெத்தேல் நகர் : உழைக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு!
பேட்டரி வண்டியில் குப்பை சேகரிக்க செல்வோர் தினசரி 250 – 300 கிலோ வரை காய்கறி குப்பையை சேகரிக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். இதுவே டாடா ஏசி என்றால் 500 கிலோ இலக்காக மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குப்பையை சேகரிக்கும் போதே காய்கறி குப்பையை தனியாக பிரித்து வேறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முறையாக கையுறைகள் கூட வழங்கப்படுவதில்லை.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, 389 தினக் கூலித் தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி உயர் நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இதை நடைமுறைப் படுத்தவில்லை. இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்லவிருப்பதாக செய்திகள் கசிகின்றன என்று அரசை சாடுகிறார்கள்.
ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பணப்பலன்களும் முறையாக வழங்கப்படுவதில்லை. பலமுறை அலைந்து திரிந்த பின் தவணைமுறையில் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் சுய மரியாதையுடன் நடத்தப் படுவதில்லை. அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை; முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணியை விட்டு நீக்கி விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இவ்வளவு பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில், அரசின் கவனமோ தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாலையில் யோகா பயிற்சி அளிப்பதில் இருக்கிறது.

This slideshow requires JavaScript.

தூய்மைப் பணியாளர்கள் மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-ஐ நேரடியாக குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகத்தை முறைபடுத்துவதாக கூறிக்கொண்டு தொழிலாளர் விரோதமாக நடந்து கொள்வதாகக் கூறுகின்றனர்.
ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கே கான்ட்ராக்ட்கள் சப்-கான்ட்ராக்ட்கள் வழங்கப்படுவதாகவும், இந்த கான்ட்ராக்டர்கள் தொழிலாளர்களை சுரண்டும் போது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அமைதியாக இருந்து விடுகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூக்குரலிடுவதும், ஆளுங்கட்சியான பின்பு பெட்டிப்பாம்பாக அடங்கிக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. (ஒப்பந்த முறை என்பது தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதாக இருக்கிறது)
ஒப்பந்த முறையை விடுத்து நிரந்தரமாக மட்டுமே தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்; பணிக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட அனைத்து உபகரணங்களையும் அரசு முறையாக வழங்கிட வேண்டும்; சரியான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு முறையாக வழங்கப்படல் வேண்டும்.
அதிமுக – திமுக அரசாங்கங்களிடம் மாறி மாறி கெஞ்சி கூத்தாடி எந்த பயனும் இல்லை. தொழிலாளர் தங்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, சமரசமின்றி ஒரு தொடர் போராட்டத்தை நடத்துவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
வினவு செய்தியாளர்
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க