“உங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை என அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை உயிரோடு வாழவிடுங்கள் மீறி எங்கள் நிலம் தான் வேண்டுமென்றால் எங்கள் அனைவரையும் கொலைசெய்துவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய இடத்தை அதன்பிறகு நாங்கள் எப்படி கேட்கப் போகிறோம். ஆனால் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இந்த இடத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என கண்ணீர் வடிய கூறுகின்றனர் சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள்.
2013 – 2014 ஆம் ஆண்டு I.H சேகர் என்ற நபர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் என்பது சதுப்பு நிலப்பகுதி எனவும் அந்தப் பகுதியை மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர் என்றும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதுப்பு நிலப்பகுதியை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தச் செய்தியை அறிந்த பெத்தேல் நகர் மக்கள் தங்களுடைய எல்லா ஆவணங்களையும் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அதை ஆய்வு செய்த கலெக்டர் இது மக்கள் வாழத் தகுந்த பகுதிதான் என 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆய்வின்படி அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டுமென நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை முறைப்படி நடைமுறைபடுத்தாத அரசு அதிகாரிகளால் மீண்டும் 2019 ஆம் ஆண்டு இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்ததது.
படிக்க :
♦ தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
♦ அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !
வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தையும் அகற்ற தீர்ப்பளித்தார். எனினும் இதை அதிகாரிகள் முறைமையாக செயல்படுத்தவில்லையென நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 28, ஜனவரி 2022 அன்று சேகர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே ஜனவரி 26 அதிகாலை அதிகாரிகள் பெத்தேல் நகருக்குள் வந்து மூன்று நாட்களில் அனைத்து வீடுகளையும் உடனடியாக காலிசெய்யச் சொல்லி வீடுவீடாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மீண்டும் ஜனவரி 31 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் பெத்தேல் நகர் பகுதி சதுப்பு நிலப் பகுதியில்லை என்றும், அது மேய்கால் பொறம்போக்கு பகுதி என்றும் தீர்ப்பளித்து இந்த வழக்கை மீண்டும் பிப்ரவரி 8,9 க்கு மாற்றி வைத்துள்ளது, உயர் நீதிமன்றம்.
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பிப்ரவரி 4 மாலை மாற்று வீடு கோரும் பெத்தேல் நகர் மக்களுக்கு உடனடியாக வேறு பகுதிகளில் வீடு கொடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது தமிழ் நாடு அரசு.
பெத்தேல் நகர் என்பது 52 தெருக்களை உள்ளடக்கிய பெரும் பகுதி. 10,000 க்கு மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர், 24 தெருக்களை உள்ளடக்கிய வடக்கு பெத்தேல் நகர், மற்றும் 25 க்கும் மேற்பட்ட தெருக்களை உள்ளடக்கிய தெற்கு பெத்தேல் நகர் என இரு பிரிவாக உள்ளது. இரண்டிற்கும் தனித்தனி ரேஷன் கடைகளும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் தொட்டிகள் என அனைத்தும் அரசால் செய்து தரப்பட்டுள்ளது.
பெத்தேல் நகரில் 5000 ரேஷன் அட்டை குடும்பங்களையும், 10000-க்கும் மேற்பட்ட மக்களையும் உடனடியாக காலிசெய்யச் சொல்வது என்பது மக்களை உயிரோடு மண்ணில் புதைப்பதற்கு சமம். ஒரு வாரத்திற்கு முன்பு எந்த அறிவிப்பும் இல்லாமல் அரசு அதிகாரிகள் அங்குள்ள கடைகள் அனைத்தையும் சீல் வைத்து மின்சாரத்தை துண்டித்துள்ளனர். கல்லூரி, பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரத்தை தூண்டிக்காமல் மூன்று மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது அரசு. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தங்களுடைய அடிப்படைக்கு தேவையான பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மருந்துக் கடைகளைக் கூட மூடியுள்ளனர். மருத்து வாங்க வழியில்லாமல் தினம் 1 கிலோமீட்டர் நடந்து சென்று வருகின்றனர் மக்கள்.
அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல், வழக்கு வந்த நாள் முதல் தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார்கள் பெத்தேல் நகர் மக்கள்.
பெத்தேல் நகரில் நீண்ட நாட்களாக வசிக்கும் முசுலீம் பெண் ஒருவரைச் சந்தித்து பேசியபோது “நாங்கள் 15 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கிறோம். 2006 முதல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வரி கட்டுகிறோம். கடந்த 4 ஆண்டுகள் எங்களிடம் அவர்கள் வரி கேட்கவில்லை. அது ஏன் என இப்போதுதான் புரிகிறது. எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறார்கள். ஆனால் அதற்கு கூட எங்களுக்கு அர்த்தம் சரியாக தெரியாது. விலை குறைவு என்பதால் தான் நாங்கள் இங்கு இடம் வாங்கினோம் இல்லை என்றால் வேறு நகர்ப்புற பகுதியில் நல்ல இடம் வாங்கியிருப்போம்.
