இடிக்கப்படும் வீடுகள் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர்! பரிபோவது வாழ்விடமா.? வாழ்க்கையா..?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் உழைக்கும் மக்களின் பகுதிகளை ரயில்வேக்கு சொந்தமான பகுதி என டிசம்பர் 2022 அன்று அறிவித்தது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம். ஒரு வார காலத்திற்குள் அனைவரும் வெளியேறுமாறும் தவறினால் வலுகட்டாயமாக அகற்றப்படுவார்கள் என்றும் செய்தித்தாள் மூலம் அறிவித்து மக்களை அச்சுறுத்துகிறது ரயில்வே நிர்வாகம்.
இப்பகுதியில் வாழும் 50,000-க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களில் 4,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கும் மேலாக இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக வீட்டுவரி, தண்ணீர் வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்தி வருகின்றனர். தீடிரென்று ரயில்வே நிர்வாகம் ஒருவரைபடத்தை காண்பித்து இந்த பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காலங்காலமாக குடியிருக்கும் மக்கள் தங்களிடம் உள்ள பல்வேறு ஆவணங்களை சமர்பித்த போதும் ஏற்றுக்கொள்ள மறுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
படிக்க: முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
ரயில்வே நிர்வாகம் கூறியபடி, “நிலம் அவர்களுக்கு சொந்தம் என்றால் ஏன் இவ்வளவு காலம் குடியமர்த்தி எங்களிடம் வரி பெற்றுக்கொண்டீர்கள்” என அரசை நோக்கி அம்மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதுபோக ஹல்த்வானி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் பாதையை ஒட்டிய பகுதியில் 29 ஏக்கர் நிலத்திற்கு ரயில்வே நிர்வாகம் உரிமை கோரியிருந்தது. ஆனால் தற்போது செய்தித்தாள் அறிவிப்பில் 78 ஏக்கர் பரப்பளவில் உள்ள அனைவரும் வெளியேற்றவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் இந்நிலத்திற்கு உரிமைக் கொண்டாடியபோது உத்தரகாண்ட் மாநில அரசு, ஒரு பிரமாணப்பத்திரம் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் “நசுல் சொத்து” என்று 2016-ல் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் பொருள் நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதே. ஆனால், தற்போது அந்த சொத்து ரயில்வேக்கு சொந்தமானது என்றும், அதில் எந்த மாற்று கருத்தும் அரசுக்கு இல்லை என்றும் கூறி மக்களை விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து 4,365 குடும்பங்களுக்கு ரயில்வே நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
“இந்த குளிர்காலத்தில் எங்களை உடனே வெளியேற சொல்வது மனித தன்மையற்ற செயல்; குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதுபோக இப்பகுதியை சுற்றியுள்ள சிறு வணிகர்களிடத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தோம். எனவே அரசு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு திட்டமும் இல்லாமல் எங்களை வெளியேற்றினால் அது எங்களை நரகத்தில் தள்ளிவிடுவதாகத்தான் இருக்கும்” என மனவேதனையடைந்தனர் அப்பகுதி மக்கள்.
படிக்க: சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஜனவரி 5 ஆம் தேதியன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், மாநில அரசையும், ரயில்வே துறையையும் நடைமுறை தீர்வை(practical solution) பற்றிய பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நைனிடால் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ.க கட்சி தோல்வியடைந்த ஒரே சட்டமன்றத் தொகுதி ஹல்த்வானி என்பது குறிப்பிடத்தக்ககது.
ஒட்டுமொத்த இந்தியாவையே ஆக்கிரமித்திருக்கும் அதானி – அம்பானியை விட்டுவிட்டு, இஸ்லாமிய மக்களை வேட்டையாட உத்தரவிடுகிறது உத்தரகாண்ட் நீதிமன்றம்.
இஸ்லாமிய மக்கள் போராடினாலும் சரி போராடாவிட்டாலும் சரி பாசிஸ்டுகளின் துப்பாக்கிகள் எப்போதும் அவர்களையே குறிவைக்கின்றன. புல்டவுசர் நீதியில் துவங்கி ’ஆக்கரமிப்பு அகற்றம்’ வரை இஸ்லாமியர்கள் வாழ்க்கை காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளால் சுறையாடப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
டேவிட்