றிவுஜீவித்தனம் என நம்பிக்கொள்ளும் முரட்டு முட்டாள்தனம்தான் லிபரல்வாதம். சமீபத்திய ஹிஜாப் பிரச்சினையில் ஒரு லிபரல் அறிவுஜீவி (வார்த்தை விரயம்) ‘ஹிஜாப்பும் தவறுதான் ஆனால்’ என ஒரு பதிவு எழுதி இருக்கிறார். இவர் சார்ந்த கூட்டத்துக்குக் குட்டையை குழப்பும் வேலை தவிர வேறு எதுவும் இருந்ததில்லை.

‘தலித் தலைவர்கள் தொடங்கி இலங்கை விவகாரம் வரை இவர்களின் இணையக் குழப்பங்கள் கழகத்துக்குதான் கெட்ட பெயர் பெற்றுத் தருகிறது என முதல்வர் ஸ்டாலினே கடிந்து கொண்டிருப்பதால் இஸ்லாமியர் பக்கம் வந்து குதறி வைத்திருக்கின்றனர்.

இந்த ‘I love you but as a friend’ ரக நட்ட நடுத்தனம் சரியா?

‘யூனிபார்ம்கள் போடச் சொல்வதே எல்லாரும் ஒன்று போல் இருக்கத்தான். அப்படி இருக்க ஹிஜாப் என்ன நியாயம்’ என்கிற கேள்வி சரியாகவே தோன்றக் கூடிய கேள்வி. ஆனால் சரியான கேள்வி அல்ல.

படிக்க :

பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !

மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா

கடவுள் நம்பிக்கையைப் பெரியார் எதிர்த்தார். அதற்குக் காரணமாக மதம் இருந்தது. பார்ப்பனியம் இருந்தது. பெண்ணடிமைத்தனம் இருந்தது. ஆணாதிக்கம் இருந்தது. ஆனால் அவர்தான் ஆலய நுழைவுக்கும் போராடினார்.

இன்றும் பாஜக, ‘நாத்திகர்களுக்கு ஏன் கருவறை பற்றி கவலை’ எனக் கூவும். இதுவும் பார்ப்பதற்கு சரியாகவே தோன்றக் கூடிய கேள்விதான். ஆனால் சரியானது அல்ல.
இத்தகைய பைனரிக் கேள்விகளை பார்ப்பன ஆதிக்க வெறிக் கூட்டம்தான் செய்து வந்தது. ‘இஸ்லாமியர்களுக்கு நாடு உண்டு, இந்துக்களுக்கு வேண்டாமா?’, ‘சிறுபான்மையினருக்கு அதிகம் அக்கறை காட்டுவது மதச்சார்பின்மை அல்ல’ என்பதெல்லாம் பைனரி தன்மையுடன் உருவாக்கப்பட்ட, பார்த்ததும் சரியெனத் தோன்ற வைக்கக் கூடிய கருத்தாடல்கள். இவற்றைப் போல்தான் ‘ஹிஜாப்புக்கு ஆதரவானவர்கள் இல்லை. ஆனால்’ என்கிற பத்திகளும்.

சீருடை முறைக்கு வரலாற்றில் எந்த அரசும் காரணமாக இருக்கவில்லை. 1552-ம் ஆண்டில் பிரிட்டனில் க்ரைஸ்ட் ஹாஸ்பிட்டல் முதலிய தொண்டு நிறுவனப் பள்ளிகள்தாம் சீருடை வழக்கத்தை அறிமுகப்படுத்தின. பெரும்பாலும் அவை ஏழைகள், அநாதைகள் முதலிய குழந்தைகளையே பள்ளியில் சேர்த்தன. எனவே அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடக் கூடாது என்பதற்கும் தொண்டுக்கான அடையாளமாகவும்தான் சீருடை உருவானது.

சீருடையின் முக்கியத்துவத்துக்காக போராடி உயிரை விடத் தயாராக இருக்கும் சங்கிகள், அந்தச் சீருடை முறைக்கே கிறிஸ்துவத் தொண்டு நிறுவனம்தான் தொடக்கம் எனத் தெரிந்தால் யார் தொண்டையைக் கடிப்பார்களோ?

அடையாளமாக சீருடை மாறியதன் விளைவாகத்தான் கல்வித்தளங்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அது வந்தது. காலவோட்டத்தில் மேலாண்மை பொறுப்புகளுக்கு சீருடை விலக்கு அளிக்கப்பட்டு, பிறகு அது பிற நிலைகளுக்கும் தொடர்ந்து, சீருடை என்கிற வழக்கம் இன்று நிறுவனங்களில் இல்லாமல் போய்விட்டது. எனினும் formals-தான் அணிய வேண்டும் என்பது போன்ற வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

அடையாளமாகத் தொடங்கிய சீருடை வழக்கம் அடுத்து ஒரு முக்கியமான இடத்தை அடைந்தது. Conformity! ஒரு இடத்தில் இருக்கும் விதிகளுக்கு அடிபணிந்து போகும் தன்மை. அதாவது விதி என்பதாலேயே அது எத்தகையதாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம்! இந்த இடத்தில்தான் ஆதிக்கம்-அடக்குமுறை என்பதற்கான ஆரம்பப் புள்ளி உருவாக்கப்படுகிறது. அரசின் ஆதிக்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக கேள்வி எழுப்பாமல் அடங்கிப் போகும் தன்மை குடும்பத்தைத் தாண்டி உருவாக்கப்படுவது முதலில் பள்ளிகளில்தான்.

எனவேதான் பள்ளி மாணவர்கள் சீருடையை ‘Tuck In’ செய்யாமல் செல்வதையும் தலையைக் கலைத்துக் கொள்வதையும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான புரட்சி நடவடிக்கையாக மேற்கொள்ளும் உளநிலை மாணவர்களிடம் உருவாகிறது. எத்தகைய ஒடுக்குமுறை, ஆதிக்கம், நிர்பந்தம் இருந்தாலும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கை இருந்தே தீரும்.

‘அனைவரும் ஒன்று என்பதற்கே சீருடை. பிறகு ஏன் ஹிஜாப்’ என்கின்றனர் சங்கிகள். ‘சரிதானே’ என லிபரல்கள் ஆமோதிக்கின்றனர். லிபரல்கள் பாவம், அறிவில்லாதவர்கள். சங்கிகளோ அறிவை நிராகரிப்பவர்கள். மேற்கண்ட அறிவுஜீவித்தனத்துக்கு இரையாகக் கூடிய வெகுமக்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.

சாதிக் கயிறு பழக்கம் எங்கிருக்கிறது, கல்வித்தளத்தில்தானே? திருநீறு, குங்குமம் வைக்காத ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் உண்டா? பள்ளிப் பாடங்களில் எத்தனை இந்து மதக் கடவுளர் பாடல்களும் கலாசாரமும் இருக்கின்றன? திருவாசகம், கம்ப ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன் கதைகள் என எத்தனை எத்தனை? சிறுபான்மையினருக்கு ஒப்புக்கென ஒரு ஒரு சீறாப்புராணம், ஒரு இயேசு காவியம் இருக்கும்.

படிக்க :

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

கடவுள் நம்பிக்கை மறுப்பு இருக்கலாம். ஆனால் எல்லா கடவுள் நம்பிக்கை மறுப்பும் ஒன்றல்ல. ஆதிக்கம் செலுத்தும் கடவுள் நம்பிக்கைக்கு, பிற கடவுளர் நம்பிக்கை எதிர்ப்பு ஆதரவாகவே நிற்கும்

எனவே எதுவும் பொதுவாக இருக்க முடியாது. நடுநிலையாகவும் யோசிக்க முடியாது. குறிப்பாக உரிமை என வரும்போது!

சமூகமே சமமற்று இருக்கும்போது நீதியில் சமத்துவம் எப்படி இருக்க முடியும்?
கல்வியே ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்போது கல்வித்தளத்தில் எப்படி நடுநிலை இருக்க முடியும்?

வழிபாட்டுத் தலமே தகர்க்கப்பட்ட நாட்டில் வழிபாட்டு உரிமை மட்டும் எப்படி நேர்கோட்டில் இருக்க முடியும்?

பார்ப்பனியம் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலத்தில் பொதுத்தன்மை யாருக்கு ஆதரவாக சென்று முடியும்? பாசிசத்துக்கான பல்லக்கு தூக்கிகள்தான் மேலே சொன்ன பைனரித்தன்மையும் நடுநிலையும்.

எச்சரிக்கை.. எச்சரிக்கை!

முகநூலில் : ராஜசங்கீதன்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க