பெரியார் – நாம் மாடியில் இல்லை கீழே நிற்கிறோம் !

ரு மாதம் இருக்கும். மகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன சந்தியில் கடும் வாகன நெருக்கடி நாலா பக்கமும் முட்டிக் கொண்டு எங்கும் நகர முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தது. அந்த சத்தங்களுக்கு மத்தியில் மிக தெளிவாக ஒரு குரல் கேட்டது “ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா டேய்” என்று ஒருவர் அனைவருக்கும் கேட்கும் படி கத்தினார். மீண்டும் ஒரு முறைச் சொன்னார்.

உடனே கடவுள் வாசகம் எழுதிய ஆட்டோவில் இருந்து இறங்கிய சாரதி ஒருவர் வாகங்களை ஒழுங்கு படுத்தத் துவங்கினார். மேலும் சிலர் வந்தார்கள். ஒரு குறுகிய நேரத்தில் அந்த நெருக்கடியில் சிக்கிய அனைவருமே தங்களை மனிதர்களாக உணர்ந்திருப்பார்கள் போலும், வாகனங்கள் நகரத்துவங்கியது. நான் அந்த மனிதரைக் கண்ணுற்றேன். அவர் ரொம்ப சாதாரண மனிதராக இருந்தார். படிப்பறிவு இல்லாத பாமரன் போல இருந்தார். நான் இறங்கி டிராபிக் எதையும் சரி செய்யவில்லை அச்சூழலை பயன்படுத்தி வெளியேறி வந்து விட்டேன்.

பெரியார் 90 ஆண்டுகாலம் தமிழ் மக்களின் சிந்தனையோட்டங்களில் ஊடுறுவியவர். மதம், கடவுள் நம்பிக்கை, சாஸ்திரங்கள் என்பதோடு அடிமைத்தனத்தை இயல்பாக ஏற்றுக் கொண்ட மக்களிடம் அதற்கான காரணத்தை ஒளிவு மறைவு இல்லாமல் போதித்தார். அதில் தமிழக மக்களின் பொருளாதார நலன், சமூக நீதி, பெண் விடுதலை, சுகாதாரம், வாழ்க்கை விழுமியங்கள் என நாம் விரும்பும் விஷயங்களும், உண்டு நாம் விரும்பாத விஷயங்களும் உண்டு.

ஆனால், தமிழகத்தில் இன்று வரை வாழும் பெரும்பான்மை மக்களுக்கு பெரியாரைப் பற்றியும் தெரியும் ரஜினியைப் பற்றியும் தெரியும். அதில் பெரியார் பற்றிய எண்ணங்கள் உயர்வானதாகவும், ரஜினி பற்றிய எண்ணங்கள் சாதாரணமானதாவும் இருக்கும்.

ஏதோ ஒரு வகையில் பெரியாரை அனைத்து விதமான வலதுசாரிகளுமே எதிர்த்துத்தான் வருகிறார்கள். காரணம் கருத்தியல் ரீதியாக அவர் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை முன்னிறுத்தினார். கடவுளை கற்பனை என்றார்.

இந்து மதம் பற்றிய அவரது வியாக்கினாங்கள் அனைத்துமே ஒளிவு மறைவின்றி மக்கள் முன்னால் வைக்கப்பட்டவை. தனக்கு எழுந்த எதிர்ப்புகளை அவர் தன் சுவைகூடிய அரசியல் நகையுடனே எதிர்கொண்டார். இதில் மறைக்கவோ மறுக்கவோ எதுவும் இல்லை. ஆனால், சேலம் நடவாத நிகழ்வை நடந்ததாக கூறும் போதுதான் அது சர்ச்சையாகிறது.

படிக்க :
முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !
♦ தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21

பெரியார் பேசியதில் சரிபாதி விஷயங்கள் அரசின் திட்டமாக இருப்பதுதான் அவரது வெற்றி. அந்த திட்டங்கள் ஏழைப் பெண்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, கீழ் மட்ட தொழிலாளர்களுக்கு பயன்படும் திட்டங்களாக உள்ளது. பெரியார் செல்வப்பெருந்தகை மாளிகையில் வாழ்ந்த செல்வந்தர். ஆனால், அவர் ஏழைகளை மாடியில் இருந்து பார்க்கவில்லை கீழே இறங்கி வந்து கீழிருந்து பார்த்தார். அந்த பார்வையில் இருந்துதான் . அவரது கருத்துக்கள் பிறந்தன. அதனால் ஆதாயம் அடைந்த பெருங்கூட்டம் ஒன்று அவரை ஒரு புள்ளியில் இணைத்துப் பார்த்து பெரியாரோடு தன்னை இணைத்துக் கொள்கிறது.

அதில் ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது. இன்னும் அந்த நிலை அப்படியே தொடர்கிறது. இதற்கு பிரதானக்காரணம் இணையப்பரவல். (இது விரிவாக எழுத வேண்டிய விஷயம் தமிழ் இணையவரலாறு எழுதப்படும் போது இவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்)

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பெரியார் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பலவீனமாகியிருக்கிறது. தாக்குதல் நிலையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். ரஷ்ய ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின்னர் உலகம் முழுக்க ஏற்பட்ட மாற்றத்தில் துவங்கி உலகம் முழுக்க வலதுசாரிகளின் எழுச்சியோடு இந்தியாவில் சங்கிகளின் கருத்தியல், அதிகார எழுச்சியையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் இதனுடைய வீச்சை நாம் காண முடியும். ஆனால், இங்கு நாம் கவனிக்க வேண்டியது. பாபர் மசூதியை இடித்தார்கள் லட்சம் பேர் கலவரங்களில் கொல்லப்பட்ட போது அவர்கள் மகிழ்ச்சிக்கூத்தாடினார்கள். பெரியார் பேசி எங்கும் ஒரு கலவரமோ, தாக்குதலோ இல்லை. ஆனால், ஹெச்.ராஜா பேசி இந்த மண்ணில் வன்முறை விதைகள் உருவாகி இருப்பது வரலாறு

அவர்களுக்கு அந்த கவலையில்லை. பெரியார் தொண்டர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் அப்படி இல்லை எங்கேனும் கவலரம் வந்து விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும், காரணம் நாம் மாடியில் இல்லை. கீழே நிற்கிறோம்.

உலகம் முழுக்க வலதுசாரிகளின் எழுச்சி இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கலாம். அல்லது எங்கேனும் ஒரு வசந்தம் நீடித்து நம்மை புதிய வாழ்வினுள் அழைத்துச் செல்லலாம். என்றாலும் பெரியாருக்கும் தமிழக மக்களுக்குமான உறவு நிலை என்ன என்பதை தமிழக மக்களுடன் பெரியார் இயக்கங்கள் எளிய மொழியில் பேசத்துவங்க வேண்டும்!

நன்றி : ஃபேஸ்புக்கில் அருள் எழிலன்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க