நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ஐ ஒட்டி சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை மோடி அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் திட்டமிட்டு மேற்கொண்டன. இதன்மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிவருடியான சாவர்க்கரை ‘வீர் சாவர்க்கராக’ மாற்றும் பிரச்சாரத்தை காவி கும்பல் நாடு முழுவதும் வீச்சாகக் கொண்டு சென்றது.

நமது நாட்டின் 75-வது ‘சுதந்திரத் தினத்தன்று’ விடுதலைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றியபோது, அதில் சாவர்க்கரையும் இணைத்துப் பேசினார். அன்றைய தினம், ‘சுதந்திர தின’ விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சாவர்க்கரை முன்னிறுத்தும் செயல்கள் அரங்கேறின.

இதுபோலவே, காவி கும்பல் ஆளும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரத்தில், படேல், காந்தி, ஜான்சி ராணி, திலகர் வரிசையில் சாவர்க்கருடைய படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் படம் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, “நேருவை அவமதித்ததற்காக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தங்கள் நாட்டின் முதல் பிரதமரை இழிவுபடுத்தும் எவரையும் கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார். இதற்காக, சித்தராமையா மீது முட்டையை வீசி தாக்குதலை நடத்தியது சங்கப் பரிவார கும்பல்.

படிக்க : சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

கர்நாடகாவின் பல இடங்களில் சாவர்க்கர் படம் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டன. ஷிவமோகா நகரில் இருக்கும் பள்ளிவாசலை ஒட்டிய ஷாப்பிங் மால் ஒன்றில் இந்துத்துவ அமைப்புகளால் சாவர்க்கர் படத்துடன்கூடிய பேனர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் சிலர் சாவர்க்கர் படம் கொண்ட பேனருக்கு பதிலாக, திப்பு சுல்தான் புகைப்படத்தை வைக்க முயன்றனர். அப்போது காவி கும்பல், அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை நடத்தியது. காவி கும்பலுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் தீவிரமடைந்ததை ஒட்டி, கூட்டத்தைக் கலைக்க போலீசு தடியடி நடத்தியது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் படத்தை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூரு, உடுப்பி, ஷிவமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை சற்றும் எதிர்பாராத ஆளும் பா.ஜ.க. அரசு, போராட்டங்களைத் தடுக்கும் வகையில், மங்களூரு, ஹிவமோகா பகுதிகளில் ஆகஸ்ட் 18 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறை செலுத்தியது.

ஊரடங்குக்குப் பிறகு, கர்நாடக பா.ஜ.க. சார்பில், “சாவர்க்கர் ரத யாத்திரை” என்ற பெயரில் ஆகஸ்ட் 23 முதல் 31 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. ரத யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த எடியூரப்பா “போராடுபவர்களுக்கு சாவர்க்கரின் சித்தாந்தம் மற்றும் தியாகத்தைக் கொண்டு போய் சேர்ப்பது நமது கடமையாகும். ரத யாத்திரை தேசவிரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

இப்படி, கர்நாடகாவில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை கர்நாடக பா.ஜ.க. அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், கடற்கரை சாலையில் ‘சுதந்திர தின’ விழாவையொட்டி அமைக்கப்பட்ட தியாகிகள் சுவரில், தேச விடுதலைக்காகப் போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயர்களுடன் சாவர்க்கர் பெயரும் சேர்த்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இது குறித்துப் பேட்டியளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “சாவர்க்கரை எதிர்ப்போருக்கு விடுதலைப் போராட்ட வரலாறு தெரியாது. சுதந்திரத்துக்காக ஒரு சிறிய கல்லை எடுத்துப் போட்டாலும் அவர் சுதந்திரப் போராட்ட வீரர்தான். வீர சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை எந்த சபையிலும் அழுத்தமாக என்னால் கூறமுடியும்” என்றார்.

இதேபோல், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் ஆகஸ்டு 15-ஐ ஒட்டி வெளியிடப்பட்ட இ-போஸ்டரில் நேருவின் படம் இல்லாமல் சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது.

இதுமட்டுமல்ல, தற்போது கேரளாவில் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனரில்கூட சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரசு தலைவர்கள், அவசரவசரமாக காந்தியின் படத்தை வைத்து சாவர்க்கர் படத்தை மறைத்தனர். “விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்று இணையதளத்தில் தேடினாலே சாவர்க்கர் படமும் வரும் வகையில், காவிக் கும்பலின் ஐ.டி. பிரிவு சதி செய்துள்ளது.

சாவர்க்கர் பிரச்சாரத்திற்கு தமிழகமும் தப்பவில்லை. அகில பாரத இந்து மகாசபா சார்பில் “சுதந்திரத்தின் தந்தை வீர சாவர்க்கர்” என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை ‘சுதந்திர தின விழா’ பள்ளிகளில் கொண்டாடப்பட்டால் காந்தி, நேரு, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களின் வேடம்தான் பிள்ளைகளுக்குப் போட்டு அனுப்பப்படும். ஆனால், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சாவர்க்கர் போல வேடமிட்டு வந்தது, ஒரு குழந்தை. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த போதும், பள்ளி நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந்த நிகழ்வுகளில் மட்டுமல்ல, பாடப்புத்தகங்களில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை கர்நாடக பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், “சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை நீக்க வேண்டும் என குரல் கொடுத்த போது, இந்த புத்தகத்தை வடிவமைத்த குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா என்பவர்  “இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை. இந்தப் புலமை நயத்தை சிலரால் புரிந்துகொண்டு ரசிக்கத் தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று திமிராகப் பதிலளித்தார்.

***

மோடி அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் வரலாற்றைக் காவிமயமாக்கும் நோக்கத்தில், ஒருபுறம், உண்மையான விடுதலைப் போராட்ட, பார்ப்பன எதிர்ப்பு மரபை இருட்டடிப்பு செய்கின்றன; திரித்துப் புரட்டுகின்றன. மற்றொருபுறம், பொய்யான கற்பனைக் கதைகளை வரலாற்றாக்க முயற்சிக்கின்றன. பொய்யான கற்பனைக் கதைகளை வரலாற்றாக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகக் காட்டும் முயற்சியாகும்.

இதற்காக, மோடி அரசும் பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாயா போன்றவர்களின் பெயர்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் பேருந்து நிலையம், ரயில்நிலையம், விமானநிலையம் போன்ற பொது இடங்களுக்குச் சூட்டின. இதன் தொடர்ச்சியாக, அவர்களை வரலாற்று நாயகர்களாக ஒளிவட்டமிடுவதற்கான நடவடிக்கைகள்தான், ஆகஸ்டு 15-ஐ ஒட்டி மேற்கொள்ளப்பட்ட மேலே விவரிக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

***

சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகமிழைத்த வரலாற்றைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-க்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. தற்போது இவர்களால் முன்னிறுத்தப்படும் சாவர்க்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, தன்னுடைய விடுதலைக்காக மண்டியிட்டவர்; விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வரலாறு அனைத்தும் துரோக வரலாறுதான். விடுதலைப் போராட்டத்தில் இந்த கும்பல் எந்தவித நேர்மறை பங்கையும் ஆற்றியதில்லை.

படிக்க : கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!

இப்படி இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட சங்கப் பரிவாரக் கும்பலுக்கு, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான வரலாறு தேவைப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில், முதன்மையான பங்காற்றியது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பொய்யாக சித்தரிப்பதன் மூலம், விடுதலைப் போராட்டப் பாரம்பரியமிக்க, மதிக்கத்தக்க ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்-ஐ முன்னிறுத்துகிறது.

தங்களது இந்துத்துவ சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவும், பார்ப்பன, கார்ப்பரேட் அடிமைத்தனத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு இந்துராஷ்டிரத்தில் ஐக்கியப்பட வைப்பதற்கும் இவ்வாறான கற்பனைத் தலைவர்களையும் கற்பனைக் கதைகளையும் உருவாக்குகிறது. இதன்மூலம், வரலாற்றைப் பற்றி ஏதும் அறியாத பாமர மக்களை எளிதில் இந்தக் கற்பனைக் கதைகளுக்கு ஆட்படுத்திவிடலாம் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பெருங்கனவாகும். ஆனால், இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறி, சித்தர்கள், அம்பேத்கர் – பெரியார் – பூலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், பகத்சிங், திப்பு சுல்தான், வ.உ.சி., கட்டபொம்மன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய மரபையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு உழைக்கும் மக்களின் தனியார்மய – தாராளமய – உலகமய எதிர்ப்புப் போராட்ட மரபையும் கொண்ட நமது நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் இந்த கற்பனைப் புரட்டுகளை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.


மதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க