‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்து நீண்டகாலம் ஒடுக்க முடியாது என்பதற்கு ஈரானியப் பெண்களின் போராட்டமே சான்று.

டந்த மூன்று மாதங்களாக ஈரானில் ஒழுக்கநெறி போலீஸ் படைக்கு (Morality Police) எதிராக ஈரானிய மக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருகின்றனர். அதன் எதிரொலியாக நேற்று (05-12-2022) அந்நாட்டு அரசு ஒழுக்கநெறி போலீசை கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கான அம்மக்களின் போர்க்குணம்மிக்க போராட்டத்துக்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஹிஜாப்பை சரியாக அணியாததாக கூறி ஈரானிய குண்டர் படையான ‘ஒழுக்கநெறி’ போலீசால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாசா அமினி துன்புறுத்தி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்ததை நாம் அனைவரும் அறிவோம். இப்போராட்டத்தில் பெண்கள் மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஈரான் அணியினர் தங்களது நாட்டு தேசிய கீதத்தை புறக்கணித்து பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேலும், பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களும் ஈரான் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

படிக்க : ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !

ஈரான் மக்களின் இப்போராட்டத்தில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் போலீசு மற்றும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இருப்பினும் அம்மக்களின் தளராத போராட்ட உறுதியின் காரணமாக தற்போது ‘ஒழுக்க நெறி’ போலீஸ் படை அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளது.

0-0-0

2006-ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமிய பிற்போக்கு அரசால், இஸ்லாமிய மத அடிப்படையில் மக்கள் உடை அணிவதைக் கண்காணிப்பதற்கு “காஸ்த் எர்ஷாத்” என்கிற ஒழுக்கநெறி போலீசு உருவாக்கப்பட்டது. இந்த ஒழுக்கநெறி போலீசு எந்நேரமும் தெருக்களில் ரோந்து சென்று கொண்டிருக்கும்; அப்போது, இஸ்லாமிய மத அடிப்படைக்கு மாறாக உடை அணிந்தவர்களைக் கைது செய்து, மத போதனை அளிக்கும் கூடங்களுக்கு அழைத்துச் சென்று கட்டாய மத போதனை வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்யும்; அதன் பின்னர் இஸ்லாமிய மத அடிப்படையில் உடை அணிவதை ஏற்றுக்கொண்டு உடையை அங்கேயே மாற்றிக்கொண்டால் மட்டுமே அங்கிருந்து விடுவிக்கும்.

ஒன்பது வயது சிறுமி முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஈரானிய சட்டம். ஆண் பெண் இருபாலருக்கும் உடைக் கட்டுப்பாடுகள் இருந்த போதும் இப்படை, நீண்டகாலமாக பெண்களையே கட்டுப்படுத்தி வந்தது. மேலும், உடைக் கட்டுப்பாடு என்று சொல்லப்பட்டாலும் ஹிஜாப்பை எந்த வகையில் அணிய வேண்டும் என்று தெளிவாக எந்த சட்டங்களிலும் வரையறுக்கப்படவில்லை. இதனால், ஒழுக்கநெறி போலீசாரின் ஆணாதிக்க மனோபாவத்திற்கேற்ப ஈரானிய பெண்கள் அனுதினமும் ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்தனர். இது ஈரானிய பெண்கள், மாணவர்கள், மாணிவிகளுக்கு கடுமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.

மற்றொருபுறம், ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல் எரிவாயுப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, உயர்ந்தக் கல்வி கட்டணம், வறுமை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அந்நாட்டின் மக்கள் நடத்தி வருகின்றனர். இவ்வாறான பல போராட்டங்களை ஒடுக்கும் வகையில், ஈரானிய அரசு கடுமையான அடக்குமுறைகளை செலுத்தியுள்ளது; துப்பாக்கிச் சூடுகளை நடத்தி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இவையெல்லாம், இந்த அரசின் மீதான மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்து வந்தது.

இப்படி பல ஆண்டுகளாக ஈரானிய மக்களிடம் கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு உணர்வானது மாசா அமினியின் படுகொலையால் ஒடுக்குமுறையாளர்களை சுட்டெரிக்க களம் கண்டது. “எங்களின் ஹிஜாப்பிலும் முடியிலும் தான் உன் மத நம்பிக்கை புதைந்து இருக்கிறதென்றால் அதை நீயே வைத்துக் கொள்” என்று பெண்கள் மத குருமார்களின் முகத்தில் ஹிஜாபை வீசி எறிந்தனர். போலீசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக அச்சமின்றி போரிட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் தியாகியாகினர். அந்த மாபெரும் மக்கள் போராட்டமே, இன்று ஒழுக்கநெறி போலீசைக் கலைக்கப்பட்ட இந்த வெற்றியை சாதித்துள்ளது.

படிக்க : தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான மக்களின் உணர்வானது என்றைக்கும் மங்கிவிடாது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்து நீண்டகாலம் ஒடுக்க முடியாது என்பதற்கு ஈரானியப் பெண்களின் போராட்டமே சான்று. சில மாதங்களுக்கு முன்னதாக ஆப்கானிலும் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.

நமது நாட்டிலும், பசுப் பாதுகாவலர்கள், கலாச்சாரப் படை என்ற பெயரில் காவி பாசிச குண்டர் படைகள் செயல்பட்டு வருகின்றன. உ.பி., கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற காவி பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் மீது பல்வேறு கலாச்சார தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அம்பானி, அதானி, டாடா போன்ற கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு நாட்டை பட்டவர்த்தனமாக திறந்துவிட்டு, அதற்கெதிராகப் போராடும் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலும் இந்துராஷ்டிரத்தை நிறுவும் நோக்கத்திலும் காவி பாசிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஜனநாயத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் உழைக்கும் மக்களே, இதோ நம் சமகாலத்திய முன்னோடிகளாக ஈரானியப் பெண்கள் திகழ்கிறார்கள்! அவர்கள் ஏற்றிய நெருப்பை நாமும் ஏந்துவோம்! காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராக களம் காண்போம்!

இசை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க