ப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அது தொடர்பான விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
அமெரிக்க விமானம் ஒன்று தனது ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. அதைச் சுற்றி பெருங்கூட்டம் விமானத்தோடு சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் ஓடுகிறார்கள். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து விமானத்திற்கு வெளியே இருக்கும் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். விமானம் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து இரண்டு பேர் கீழே விழுந்து உடல் சிதறி இறந்து போன காணொலி மனதை பதைக்கச் செய்கிறது.
“அமெரிக்கா எங்களை கைவிட்டுவிட்டது” ” உலக நாடுகள் எங்களை கைவிட்டு விட்டன ” போன்ற குரல்கள் ஆப்கானியர்களிடம் இருந்து வந்துகொண்டே இருக்கின்றன. இனி என்ன ஆகுமோ நம்முடைய எதிர்காலம் என்பது நினைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கானிய மக்கள். அமெரிக்காவை நம்பினால் என்ன கதி கிடைக்கும் என்பதை ஆப்கான் மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
“தாலிபான்கள் எவ்வளவு கொடுமையானவர்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் எப்படியெல்லாம் ஓடுகிறார்கள் பாருங்கள்! என்று கூறி கொண்டிருப்பவர்களில் பலர் உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவ அடக்குமுறை ஆட்சியை நியாயப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்; அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பவர்களே. உத்திரபிரதேசத்தில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதைத்தான் அன்று தாலிபான்களும் ஆப்கானிஸ்தானில் செய்தனர். இனிமேலும் செய்யப்போகின்றனர்.

படிக்க:
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !

மத அடிப்படைவாதிகளால் தாலிபான்களின் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் பேரழிவுகள் எல்லாமே உண்மைதான். ஆனால், அமெரிக்கா நடத்திய 20 ஆண்டுகால பொம்மை ஆட்சியில், சிறு சிறு சீர்திருத்தங்களைத் தவிர மக்களின் வாழ்நிலை பெரியதாக எதுவும் மாறவில்லை. மாறாக வறுமையில் அதிகமாகவே பாதிக்கப் பட்டிருந்தார்கள் மக்கள்.
தாலிபான் ஆட்சி எப்படி இருக்கும் என்று யாராவது கேட்டால், இந்தியாவில் மோடி நடத்தும் ஆட்சியை தைரியமாக நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆப்கானை இதற்கு முன்னர் ஆட்சி செய்த முகமது கனி ஆட்சியை காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடலாம்;  2001-க்கு முந்தைய தாலிபான்களின் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சராக மோடியின் குஜராத் ஆட்சியை கூறலாம். அவ்வளவுதான்.
சங்கிகளும், பல நடுநிலைவாதிகளும் இந்தியாவில் அனைத்து உரிமைகளும் கிடைத்து கொண்டிருப்பதைப் போல ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனத்தை பற்றி நமக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஏழாண்டுகளில் பசுவை கடத்தினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி நடுரோட்டில் பட்டப் பகலில் நடத்தப்பட்ட எக்கச்சக்கமான கும்பல் படுகொலைகளையும் கும்பல் தாக்குதல்களையும் வட இந்தியாவின் பசு வளைய மாநிலங்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசியவர்களை நடுரோட்டில் கட்டி வைத்து கல்லால் அடித்துக் கொன்றதுதான் 2001-ம் ஆண்டுக்கு முந்தைய தாலிபான் ஆட்சி. இந்தியாவில் நடக்கும் பாஜகவின் பாசிச ஆட்சிக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே நடைபெற்ற தாலிபான் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ?
சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த கயவனை விடுவிக்கக் கோரி ஊர்வலம் போன இந்திய தாலிபான் கும்பல் தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ்.
சிறு வயது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் தந்தையை பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள். புர்கா போடாத பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்ததுதான் தாலிபான்களின் முந்தைய வரலாறு.
காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து பாலியல் வன்முறை செய்து கொலை செய்தார்கள் – குற்றவாளிகளுக்கு தேசியக்கொடியோடு ஆதரவு ஊர்வலம் நடத்தினார்கள். குஜராத் கலவரத்தில் 8 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொன்று அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்தார்கள். தாலிபான்கள் தமது ஆட்சிக் காலத்தில் பல இடங்களில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். பெண்களின் கல்வியை மறுத்திருக்கிறார்கள்.
தாலிபான்கள் செய்துவந்த கொடூரங்களையே வேறு வடிவத்தில் இந்துத்துவவாதிகள் அன்றாடம் செய்து வருவதை அன்றாடம் கடந்து போகும்  இந்தியாதான், தாலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் ஆப்கானிஸ்தான் இருப்பது குறித்து வருத்தப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் சிலையை இடித்த தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என்றால், இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதியை கரசேவை நடத்தி இடித்த கிரிமினல்கள் மட்டும் எப்படி தேசபக்தர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் ?
000
ஒரு கும்பல் தாலிபான் அச்சுறுத்தல்களைக் காட்டி, இந்தியாவில் இந்துத்துவ ஆதரவையும், முசுலீம் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டிருக்க, மற்றொரு கும்பலோ, தாலிபான்களுக்கு புனிதர் பட்டம் சூட்ட முயற்சிக்கிறது.
இந்த முறை ஆப்கானை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர், “பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும் படிப்பதற்கும் எவ்வித இடையூறும் செய்ய மாட்டோம். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு பெண்கள் அனைத்து பணிகளிலும் ஈடுபடலாம். அந்நிய நாட்டு நிறுவனங்களையோ பொருட்களையோ தாக்க மாட்டோம் ” என்று கூறியிருக்கிறார்.
எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவு செய்கிறார் “தாலிபான் என்பது கெட்ட வார்த்தை அல்ல; தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருள் ” என்கிறார்.
வேறு சிலரோ, “தாலிபான்கள் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள் ” , “தாலிபான்களை பற்றி பொய்யான தகவல் பரப்பப்படுகிறது, அவர்களை அங்கீகரிக்க வேண்டும்” என்று பேசுகின்றனர்.

படிக்க :
♦ “போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

♦ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

சமீபத்தில் தாலிபான்களிடம் பின்வரும் கேள்வியை ஒரு பெண் செய்தியாளர் எழுப்புகிறார். “அரசாங்க தலைமைப் பதவிக்கு பெண்கள் தெரிவு செய்யப்படுவார்களா?”
இந்தக் கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்திருத்திருக்கிறார்கள் தாலிபான்கள். பிறகு சுதாரித்துக்கொண்டு இஸ்லாமிற்கு உட்பட்ட வகையில் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், மத சிறுபான்மையினர், பெண்களுக்கு வரையரறுக்கப்பட்ட சுதந்திரம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
தாலிபான்களிடன் ‘முதிர்ச்சியை’ கண்ட அனைவரும், “முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்கமுடியாது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதையும், தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் பெண்களின் நிலை குறித்துப் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். மோகன் பாகவத்தின் இந்தக் கருத்து ‘முதிர்ச்சி’யைக் காட்டுகிறது என்று நம்பினால், தாலிபான்கள் சொல்வதையும் அவர்கள் நம்பட்டும்.
தாலிபான்கள் பெண்களின் கல்விக்கும் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்று நம்புவதற்கு இதுவரை எந்த அடிப்படையும் இல்லை. இசுலாமிய அடிப்படைவாதத்தை தலையில் வைத்து ஆட்சி செய்யும் கும்பலாகவே தாலிபான் இருந்துவருகிறது.
ஆர்.எஸ்.எஸ். தமது இந்துத்துவ அடிப்படைவாதக் கருத்துக்களை கையில் வைத்துக் கொண்டே, இந்தியாவை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக மாற்ற பாஜக மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறதோ, அதே போலத் தான் தாலிபான்களும். தமது இசுலாமிய அடிப்படைவாதக் கொள்கைகளை வைத்துக் கொண்டே ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு ஆப்கானைக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
தாலிபான்களுடன் சீனா பேச்சுவார்த்தை
இந்தியாவில் எப்படி, ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் எழாத வகையில் இந்துத்துவ அடிப்படைவாத சித்தாந்தமான பார்ப்பனியம் மக்களை ஒடுக்கி வைத்திருக்கிறதோ, அதே போலத்தான் ஆப்கானிலும் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முடக்கும் வகையில் தாலிபான்களின் இசுலாமிய அடிப்படைவாதம் முக்கியப் பங்காற்றும்.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை நாடுகள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமெரிக்கா தாலிபான்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது.
இப்படி ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்க மாட்டோம் என்ற வகையில் அனைத்து நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான், சீனாவுடனான சில்க் சாலைக்கான ஒப்புதலும், அந்நிய மூலதனங்களுக்கு பாதுகாப்பு என்ற தாலிபான்களின் அறிவிப்பும்.
சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஆப்கான் புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகும். அதனால்தான் ஆப்கானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல ஏகாதிபத்தியங்கள் இதற்கு முன்னால் முயற்சித்துள்ளன.
ஆனால் துரதிர்ஸ்டவசமான ஒன்று என்னவெனில், எந்த நாடும் இதுவரை ஆப்கானை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர iஇதுவரை முடியவில்லை. பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கடுமையான பின்னடைவை சந்தித்து வெளியேறியிருக்கின்றன.
ஆப்கான் மக்களின் ஜனநாயக வளர்ச்சியினை கருவறுத்த ஏகாதிபத்திய வரலாறு!
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஆப்கான், புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களுக்குப் பின்னரும் பிரிட்டிஷ் வசமே பெரும்பான்மையான ஆப்கான் பகுதிகள் இருந்தன. 1919-ல் அரசர் `அமனுல்லா கான்’ பதவியேற்ற உடன் சோவியத் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டினர், இதன் விளைவாகவே ஆப்கான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறியது.
1921 முதல் 1929 வரையிலான காலகட்டத்தில்,பொருளாதார உட்கட்டமைப்புத் திட்டங்கள், நீர் ஆதாரத் திட்டங்கள், மின் நிலையங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு என சோவியத் யூனியன் ஆப்கானுக்கு எண்ணற்ற பல உதவிகளைச் செய்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சோவியத் யூனிய்னுக்கு சென்று படித்தனர். காபூலில் இருந்த அறிவியல் மற்றும் கலச்சார மையமானது சோவியத் யூனியனின் அன்புப் பரிசாகும். அந்த மையம் அமெரிக்க ஆதரவு முஜாகிதீன்களால் பின்னர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அக் காலகட்டம், பழமைவாதத்தின் பிடியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி ஆப்கான் பயணித்ததற்கான முதல் படி. அதனை உடைத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
ஆப்கானில் இருந்த பழமைவாதிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களைத் தூண்டிவிட்டது,  பிரிட்டிஷ் அரசு. 1929-க்குப்பின்னர் பிற்போக்கு சக்திகளின் நெருக்கடியால் அமனுல்லா கான் பதவி விலகினார். இதனால் பாதிக்கப்பட்ட ஆப்கான் – சோவியத் உறவு, சிறிது காலத்திற்குப் பின்னர் மீண்டும் படிப்படியாக வளர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் பெரும் பொறியிலாளர்கள், புவியிலாளர்களை உருவாக்கிய காபூல் பல்தொழில்நுட்பப் பயிலகம் (பாலிடெக்னிக்) 1960-களில் சோவியத் ரசியாவின் உதவியுடன் கட்டப்பட்டதாகும். 1920-க்கு பின்னால், சோவியத் யூனியனுடனான உறவுகளால் மேம்பட்டிருந்த ஆப்கான் அரசியலின் தொடர்ச்சியாகவே அங்கு மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானது.
1973-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் வலதுசாரியினர் மற்றும் அமெரிக்காவால் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட ஜாகீர் ஷா ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவி இறக்கப்பட்டார். அச்சமயத்தில் சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருந்த ரசியாவின் ஆதரவு பெற்ற பிடிபி கட்சி ஆட்சியில் இருக்கும் போது, கல்வி, மருத்துவம், சுகாதாரம், இருப்பிடம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியது. மிகவும் ஒடுக்கப்பட்ட இனங்கள், மத சிறுபான்மையினருக்கு சம உரிமையும் பழமைவாதப்பிடியில் இருந்து மீள பெண்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்பட்டது.
1980 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் ஆப்கானுக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அங்கு தான் கண்டதை விவரிக்கிறார். ”பெண்கள் கூட்டுறவு தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் முதல்முறையாக தங்களுடைய கௌரவமான வாழ்விற்காக சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வயது வந்த ஆண்களும் பெண்களும் ஒரு சேரப் படித்துக் கொண்டிருந்தார்கள். தொழில்முறையாளர்களாக பெண்கள் பலர் அரசின் உச்சபட்ச பொறுப்பிலிருந்தார்கள். குறிப்பாக அக்காலக்கட்டத்தில் கல்வி அமைச்சரே ஒரு பெண்ணாக இருந்தார்.”
“மிகவும் வறிய நிலைமையில் இருக்கும் குடும்பங்கள் கூட மருத்துவரை பார்க்கவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார்கள் . நிலச் சீர்திருத்த முறை அங்கேயே தொடங்கியிருந்தது. ஆர்வமுடன் விவசாயிகள் கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்யத் தொடங்கியிருந்தார்கள். விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. உத்திரவாதமான வாழ்க்கையை நோக்கி மக்கள் பயணம் செய்ய தொடங்கியிருந்தார்கள். பொருளாதாரத்திலும் சமூக நீதியிலும் ஆப்கானிஸ்தான் வெகுவாக முன்னேறி இருந்தது. மருத்துவம், சுரங்கம், வேளாண்மை, கல்வியின் என அனைத்திலும் முன்னேறி வந்து இருந்தது”

படிக்க :
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !

இந்தக் காலகட்டத்தில் தான், கிராமப்புறங்களில் முஜாஹிதீன்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவோடு வளர்ந்து கொண்டிருந்தார்கள். அமெரிக்கா பழமைவாத நிலவுடைமையாளர்களுடன் இணைந்து முஜாகிதீன்களை வளர்த்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களுடன் முஜாஹிதீன்கள் களத்தில் இருந்தார்கள். 1970-களின் பிற்பகுதியில் முஜாஹிதீன்களின் தாக்குதல்கள் அதிகமாகவே, அதைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் சமூக ஏகாதிபத்தியமாகிப் போயிருந்த சோவியத் ரசியா தனது இராணுவத்தை இறக்கியது. 1977-ல் தொடங்கிய அந்தப் போர், 1989-ல் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை இழந்து ரசியா வெளியேறியதோடு முடிவுக்கு வந்தது.
அதை கம்யூனிசத்தின் தோல்வி என்று வல்லரசு நாடுகள் கொண்டாடின. அது அமெரிக்காவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. அப்போது மேற்கத்திய ஊடகங்களில் மிகப்பெரிய போராளியாக பின்லேடன் வர்ணிக்கப்பட்டார். இப்போது போலவே அப்போதும் தனது வேலை முடித்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டது.
1992-ம் ஆண்டு சமூக ஏகாதிபத்திய ரசியாவின் ஆசிபெற்ற அதிபர் நச்யிபுல்லா வீழ்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து முஜாகிதீன்களில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளுக்கிடையே போர்கள் நடைபெற உச்சகட்டமாக 1994-ம் ஆண்டு 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காபுலில் கொலை செய்யப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் எழுச்சி பெற்ற தலிபான் அமைப்பு 1996-ல் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியது.
தாலிபான் 2.0
1996 முதல் 2001 வரையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் இருந்த தலிபான்கள், பெண்கள் வேலைக்குச் செல்லவும் பணியில் இருக்கவும் தடை விதித்தனர். மேலும், ஒரு ஆண் பாதுகாவலர் இல்லாமல் வெளியே வரமுடியாத வகையில் அவர்கள் வீடுகளில் அடைக்கப்பட்டனர்.
அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அதற்கெதிராக பேசுபவர்கள் எழுதுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர். சிறுபான்மை மதத்தினரின் உரிமைகள் முற்றிலும் நசுக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள் நொறுக்கப்பட்டன. என்ன, இன்றைய இந்தியாவை நினைவுபடுத்துகிறதா இந்தச் சம்பவங்கள்? பிற்போக்குவாத, மத அடிப்படைவாதக் கும்பல்களின் ஆட்சியில் இவை அனைத்தும் பொதுவான அடிப்படையாகும்.
பொது இடத்தில் மரண தண்டனை மற்றும் கசையடி தண்டனைகள் ஆகியவை நடைமுறையில் இருந்தன. மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. இஸ்லாத்தின் கீழ் விரோதமாக பார்க்கப்பட்ட கலாச்சார கலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
2001 அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்ட பின்லேடனை பாதுகாத்தார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி, அமெரிக்கா ஆப்கான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது.  ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அந்தப் போர் நீடித்தது.
இந்த காலகட்டத்தில் ஆப்கானில் தனக்கேற்ற பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. தாலிபான்கள் மட்டுமல்ல பல்வேறு பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த பல போராளிகள் அமெரிக்காவின் நவீன காலனியாதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போரிட்டனர்.
தங்களால் உருவாக்கப்பட்ட தாலிபான்களை தங்களால் ஒழிக்கவே முடியாது என்ற நிலைமையிலேயே வேறுவழியின்றி ராணுவத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. தங்கள் மூலதனத்திற்கு எவ்வித ஊறும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்று வெளியேறியிருக்கிறது அமெரிக்கா.
ரஷ்யாவை வீழ்த்துவதற்காக பெரும் காட்டுமிராண்டிக் கூட்டத்திடம் ஆப்கான் மக்களை கொண்டு போய் தள்ளி விட்ட வேலையை அமெரிக்கா தான் செய்தது. எந்தக் கும்பலிடமிருந்து ‘கொடுங்கோல்’ ஆட்சியைப் பறித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக வருவதாகச் சொன்னதோ, அந்தக் காட்டுமிராண்டிக் கும்பலிடமே, பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை ஒப்படைத்திருக்கிறது.
ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதும், ஆப்கான் மக்களை உய்விப்பதும் தான் தமது முதல் கடமை என்று ஆக்கிரமிப்பின் போது பொய்ச் சவடால் அடித்த அமெரிக்கா, தான் உருவாக்கி வளர்த்த தாலிபான் கும்பலிடமே சரணடைந்து, “ஆப்கானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல” என்ற உண்மையை வேறு வழியே இல்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
தாலிபான்களைப் பொறுத்தவரையில் அந்நிய நாட்டினர் யாரும் பயப்பட வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றனர். இந்தியா தாம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை தொடரலாம் என்று அறிவித்துள்ளனர். அந்நிய நாட்டு மக்களுக்கு தங்கள் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
சவுதியை போன்று பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு உட்பட்டு மத அடிப்படைவாதத்தை மேற்கொள்வதற்கு தலிபான்கள் முடிவு செய்திருப்பதைத்தான் தாலிபான்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும் அவர்கள் தற்போது வெளியிடும் அறிவிப்புகளும் காட்டுகின்றன.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

♦ அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

பன்னாட்டு ஏகபோக மூலதனத்தை அனுமதிக்காத பட்சத்தில் மீண்டும் ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலில் உள்நாட்டுப் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் தாலிபான்கள் அறிவர். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்றாலும் கூட கார்ப்பரேட் ஆசி இல்லாமல் நடக்காது என்பதை அவர்களுக்கு பல்வேறு சுற்றுகளின் மூலம் பல நாட்டு அனுபவங்கள் கற்றுக் கொடுக்கின்றன.
ரசியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா என அன்னிய வல்லூறுகளின் பசிக்கு மீண்டும் மீண்டும் ஆப்கானை இரையாக்குவதற்கு தயாராகியிருக்கிறது தாலிபான் கும்பல். இதுதான் உண்மையில் தாலிபான்கள் பெற்ற முதிர்ச்சி.
1990-களின் நடுப்பகுதி வரையில் ‘சுதேசி’ எனப் பேசித் திரிந்த ஆர்.எஸ்.எஸ். / சங்க பரிவாரக் கும்பல், மறுகாலனியாக்கச் சூழலுக்கு ஏற்றவகையில் தனது சுதேசி வேடத்தை களைந்தெறிந்துவிட்டு, வாஜ்பாய் ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இந்தியாவை விருந்து வைத்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக் கொண்ட இந்தக் கும்பல், மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்குத் தகுந்தவாறு தம்மை தகவமைத்துக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இதைப் போலத்தான், 1996-2001 காலகட்டத்தில் மத அடிப்படைவாதத்தையும் அபின் பொருளாதாரத்தையுமே நம்பியிருந்த தாலிபான் கும்பல், இப்போது மறுகாலனியாக்கத்துக்கு தகுந்தவாறு தம்மை தகவமைத்துக் கொண்டது.
அமெரிக்காவின் படைகள் இருந்த வரையில், ஏகாதிபத்தியங்களுக்கு தொண்டூழியம் செய்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் முகமது கனி, தால்பான்கள் முற்றுகையிட்டதும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை எடுத்துக் கொண்டு தஜிகிஸ்தான் வழியாக தப்பி ஓடிவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் 20 ஆண்டுகால அமெரிக்க பொம்மை ஆட்சியின் லட்சணம்.
மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல் என்ற வகையில் தாலிபானுக்கும் முகமது கனிக்கும் வித்தியாசம் ஒருபோதும் இல்லை. ஒரே வித்தியாசம் மத அடிப்படைவாதத்தை தாலிபான் கும்பல் உயர்த்திப் பிடிப்பதுதான்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவில் கார்ப்பரேட் – காவி பாசிச நடவடிக்கைகளை மோடி தீவிரமாக அமல்படுத்தி கொண்டிருப்பது போல, ஆப்கானிஸ்தானில் கார்ப்பரேட் – இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்துவதை விரைவில் எதிர்பார்க்கலாம். அதைத் தான் அவர்களது சமீபத்திய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
தங்களது மூலதனத்திற்கு பாதிப்பில்லாத வரையில் எவ்வளவு பிற்போக்குத் தனத்தையும் ஆதரிக்க தயங்க மாட்டார்கள் ஏகாதிபத்தியவாதிகள். குஜராத்தின் நரவேட்டை நாயகனை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்த அமெரிக்கா, அதே மோடி பிரதமராவதற்கான வாய்ப்பிருப்பது தெரிந்ததும், புனிதர் பட்டம் கொடுத்து தனது நாட்டிற்குள் அனுமதித்துக் கொண்டதல்லவா?
மூலதனத்துக்குச் சேவை செய்யும் பட்சத்தில் இனி தாலிபான்களுக்கும் அந்தப் புனிதர் பட்டத்தைக் கொடுக்க உலக முதலாளித்துவம் தயாராகிவிட்டது !!

மருது
செய்தி ஆதாரம் :
People’s World